நேஹா போரா – அபிஜீத் தீப்கே போராட்ட வியூகத்தில் என்ன வித்தியாசம்?

டெல்லியில் காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி, வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டார் 29 வயதான நேஹா போரா.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டெல்லியில் காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி, வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டார் 29 வயதான நேஹா போரா.

அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவரான இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, அக்டோபர் 10 முதல் டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.

தீப்கே தனது சகாக்களான சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோருடன் மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்தார். ஆனால், டெல்லி விமான நிலையத்தில் விமானத்திலேயே அவர் காவலில் எடுக்கப்பட்டார்.

மறுபுறம், ஜந்தர் மந்தரைச் சென்றடையப் போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் சனிக்கிழமை தடுத்தனர். அப்போது, அங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள டெல்லி ஹாட்டில் மீண்டும் ஒன்றுகூடுமாறு நேஹா போரா அழைப்பு விடுத்தார்.

அங்கு செல்வதற்கு முன்பு, எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் அவர், "இன்று டெல்லி ஹாட், ஜந்தர் மந்தராக மாறும்" என்று பதிவிட்டார்.

அதன்பிறகு, முழக்கங்களை எழுப்பியபடி அவர் முன்னேறிச் சென்றார். மற்றவர்களும் அவருடன் இணைந்துகொண்டனர்.

காவல்துறையினர் நேஹா போராவையும் பல சமூகச் செயற்பாட்டாளர்களையும் காவலில் எடுத்தனர். காவலில் இருந்தபோதும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

"நான் காவலில் இருக்கிறேன். காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டவர்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே போராட்டம் நடத்த வேண்டும்" என்று காணொளியில் அவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

காவல்துறையிடம் சிக்காமல் தப்பித்த நேஹா போரா

டெல்லியில் ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, கைது செய்யப்படுவதைத் தவிர்க்க ஓடும் நேஹா போரா.
படக்குறிப்பு, டெல்லியில் ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, கைது செய்யப்படுவதைத் தவிர்க்க ஓடும் நேஹா போரா.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த சில வாரங்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வாக்காளர் பட்டியல்களில் இருந்து 13 கோடிக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளதாகப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த எண்ணிக்கை ஜப்பானின் மக்கள்தொகையைவிட அதிகம்.

காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஞாயிற்றுக்கிழமை நேஹா போரா டெல்லி காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பிக்க முயன்றார்.

கனாட் பிளேஸ் பகுதியில் மக்கள் கூட்டத்துக்குள் உண்மையான நேஹா ஓடிச் சென்றபோது, ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியில் அவரைப் போன்ற தோற்றமுடைய மற்றொரு பெண் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

போராட்டப் பேரணியில் இணைந்த நேஹா ஓடினார். காவல்துறையினர் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் அவர்களிடம் சிக்காமல் தப்பித்தார். மீண்டும் ஓடினார். இறுதியில் காவல்துறையினர் அவரைப் பிடித்தனர்.

அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார், புன்னகைத்தார், முழக்கங்களை எழுப்பினார். பின்னர் காவல்துறையினர் அவரைப் பேருந்தில் ஏற்றினர். பேருந்துக்குள் இருந்தபடியே சமூக ஊடகத்தில் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

டெல்லியில் காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி, வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டார் 29 வயதான நேஹா போரா.

காவலில் வைத்தல், கைது நடவடிக்கை

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்கள், இனி இந்த இயக்கத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லப்போவதாகத் தெரிவித்தனர்.

"போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது" என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஷுதோஷ் ரங்கா கூறினார்.

காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், நேஹா போராவைப் போல அவர்களால் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முடியவில்லை.

காவலில் எடுக்கப்பட்ட பிறகு, நேஹா போரா மற்றொரு காணொளியை வெளியிட்டார்.

"இந்தப் பேருந்தில் நான்கு 'சிறைகள்' உள்ளன. மூச்சுவிடக்கூட இடமில்லை. காவலில் வைக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் சிறைச்சாலைகளாக மாற்றப்படுகின்றனவா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

''பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் "சாதாரண மக்களுக்கு எதிராகப் போர் நடத்துகின்றனர்" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

"ஞானேஷ் குமாரைக் காப்பாற்றுவதற்காக ஏன் இவ்வளவு வன்முறை?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து ஞானேஷ் குமார் விலக வேண்டும் என்ற தனது கோரிக்கையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையம், தன் மீது சுமத்தப்படும் ஒருதலைப்பட்சமான செயல்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

நேஹா போரா

ஞாயிற்றுக்கிழமை நேஹா போரா காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற காணொளி வெளியானதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர் ஒருவர் ஃபேஸ்புக்கில், "இந்தப் பெண் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியவில்லை! ஒவ்வொரு முறையும் அவரைத் தடுக்க முயலும்போதும், அவர் மீண்டும் போராட்டக் களத்துக்குத் திரும்பிவிடுகிறார்!" என்று எழுதினார்.

மற்றொருவர் எக்ஸ் தளத்தில், "கைது செய்யப்படுவது, விடுவிக்கப்படுவது, இடத்தை மாற்றுவது, இரவு முழுவதும் தலைமறைவாக இருப்பது, மறுநாள் காலையில் அதே உற்சாகத்துடன் வெளியே வருவது — என்ன ஆற்றல்!" என்று பதிவிட்டார்.

உத்தி குறித்த விவாதம்

உத்தி குறித்த விவாதம்

ஜூலை 21-ஆம் தேதி போராட்டக்காரர்களிடம் அபிஜீத் தீப்கே மன்னிப்புக் கோரினார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "எனது ஆதரவாளர்கள் அனைவரிடமும், குறிப்பாக ஆண் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். டெல்லி காவல்துறையின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்க நான் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

என்ன செய்திருக்கலாம் என்பது குறித்து தீப்கே விரிவாக விளக்கவில்லை. இருப்பினும், காவல்துறையினர் போராட்டக்காரர்களைத் தாக்கியபோது அபிஜீத் தீப்கே ஏன் கூட்டத்தில் காணப்படவில்லை என்று பலர் கேள்வி எழுப்பினர்.

காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவதை அரிதாகவே காண முடிகிறது.

அக்டோபர் 7-ஆம் தேதி, காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ் ஆகியோருடன் நேஹா போரா கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, அக்டோபர் 10-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அந்த நேரத்தில், சமூக ஊடகங்களில் நேஹா போரா, அபிஜீத் தீப்கேவைவிட முதிர்ச்சியுடன் செயல்படுவதாகப் பலர் கருத்துத் தெரிவித்தனர். இதைத் தீப்கேவும் ஏற்றுக்கொண்டார்.

ஆனால், இதற்குப் பதிலளித்த நேஹா, "ஒப்பீடு செய்வதைவிட ஒற்றுமைதான் முக்கியம்" என்று கூறினார்.

இருப்பினும், அக்டோபர் 10-ஆம் தேதி போராட்டத்துக்குப் பிறகு, நேஹா போரா திடீர் போராட்டங்களை முன்னெடுக்கும் உத்தியைக் கையாண்டு வருகிறார். அதேவேளையில், அபிஜீத் தீப்கேவும் அவரது சகாக்களும் தங்களது போராட்ட உத்திகள் குறித்து வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.

இதனால், நேஹாவைக் கைது செய்வதற்குக் காவல்துறையினர் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்களைக் காவல்துறையினர் எளிதில் கைது செய்ததைக் காண முடிந்தது.

நேஹா போரா - அபிஜீத் தீப்கே போராட்ட வியூகத்தில் என்ன வித்தியாசம்?

காக்ரோச் ஜனதா கட்சி தனது போராட்ட உத்திகளை வெளிப்படையாக அறிவித்து வருகிறது.

அக்டோபர் 11-ஆம் தேதி அக்கட்சி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், "தற்போது டெல்லியில் இருக்கும் அனைத்துக் 'கரப்பான்பூச்சிகளும்' அங்கேயே தங்கியிருக்க வேண்டும். அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்! டெல்லிக்கு வெளியே இருப்பவர்கள் வருவதற்காக மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டிருந்தது.

அக்கட்சி அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. எந்தச் சூழலிலும் இந்த இயக்கம் வன்முறையில் ஈடுபடாது என்றும் தெரிவித்துள்ளது.

அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் நாடாளுமன்ற வீதிக் காவல் நிலையத்துக்குச் சென்று, ஜந்தர் மந்தரில் அமைதிப் போராட்டம் நடத்துவதற்கான தேதியைக் கோரப்போவதாகக் கட்சி அறிவித்துள்ளது.

''டெல்லி காவல்துறை 24 மணி நேரத்துக்குள் தேதியைத் தெரிவிக்கலாம்; இல்லையெனில், தாங்களாகவே போராட்டத்துக்கான அழைப்பை விடுப்போம்'' என்றும் அக்கட்சி கூறியுள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு, அகில இந்திய மாணவர் சங்கத்துடனோ அல்லது நேஹா போராவுடனோ காக்ரோச் ஜனதா கட்சி ஆலோசனை நடத்தியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மூத்த பத்திரிகையாளர் நிகில் வாக்லே, "காக்ரோச் ஜனதா கட்சி, உச்ச நீதிமன்றத்தை நோக்கி ராகுல் காந்தி நடத்தும் பேரணியில் இணைய வேண்டும். குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியலை நிறுத்திவிட்டு, நேஹா போராவைப் போலப் போராடுங்கள்" என்று பதிவிட்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகத் திங்கள்கிழமை ராகுல் காந்தி பேரணி நடத்துகிறார். ஆனால், அதில் பங்கேற்பது குறித்து காக்ரோச் ஜனதா கட்சி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்கள் காவலில் எடுக்கப்பட்டபோது, ராகுல் காந்தி சென்னையில் இருந்தார்.

காக்ரோச் ஜனதா கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒருவிதமான இடைவெளி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு