'வரலாற்றிலேயே மிகப் பெரியது' - வெனிசுவேலாவுடன் டிரம்ப் அறிவித்த எண்ணெய் ஒப்பந்தத்தில் என்ன சர்ச்சை?


அந்த ஒப்பந்தத்தை "வரலாற்றிலேயே மிகப்பெரியது" என்று ட்ரம்ப் கொண்டாடினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஒப்பந்தத்தை "வரலாற்றிலேயே மிகப் பெரியது" என்று டிரம்ப் கொண்டாடினார்.
    • எழுதியவர், ஏஞ்சல் பெர்முடெஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) டொனால்ட் டிரம்ப் அறிவித்த வெனிசுவேலா உடனான எண்ணெய் ஒப்பந்தம், தென்னமெரிக்க நாடு தொடர்பாக அமெரிக்க அதிபர் மேற்கொண்டுள்ள மிகவும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஒன்று.

கடந்த 12 மாதங்களில் அமெரிக்க அதிபர் வெனிசுவேலா மீது கடல்சார் முற்றுகையை ஏற்படுத்தினார், அப்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். இறுதியில், ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அப்போது மதுரோவின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸை அந்த நாட்டின் இடைக்கால ஆட்சியாளராக அங்கீகரித்தார். இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியில் பார்க்கும்போது, இந்த எண்ணெய் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பதிவில், "வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை" தான் மேற்கொண்டுள்ளதாக அறிவித்தார். இதன் மூலம், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு எந்தச் செலவும் இல்லாமல், வெனிசுவேலாவின் நிரூபிக்கப்பட்ட 6,500 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பில் "பெரும்பான்மைக் கட்டுப்பாட்டை" அமெரிக்கா பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

சிறிது நேரத்திலேயே ரோட்ரிகஸும் இந்தத் தகவலை உறுதி செய்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நூறு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீடுகள் வரும் என்றும், வெனிசுவேலா அரசுக்கு சுமார் 209 பில்லியன் அமெரிக்க டாலர் வரி வருவாய் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, வெனிசுவேலாவின் பல்வேறு தரப்பினரும் இந்த ஒப்பந்தம் குறித்துக் கடுமையான விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பத் தொடங்கினர்.

இந்த ஒப்பந்தத்தை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவரான அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு எழுதிய செய்தியில், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் கென்னடி அரசு நிர்வாகப் பள்ளியில் (Kennedy School of Government) பேராசிரியராகவும், வெனிசுவேலா அரசின் தீவிர எதிர்ப்பாளராகவும் இருக்கும் பொருளாதார நிபுணர் ரிக்கார்டோ ஹாஸ்மன், இதைக் கடுமையாக விமர்சித்தார்.

"வெனிசுவேலா மக்களை விடுவிக்க அமெரிக்காவின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை ஒடுக்குவோருடன் கூட்டணி அமைக்க நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். அரசமைப்புச் சட்ட ஒழுங்கையும் ஜனநாயகத்தையும் முதலில் மீட்டெடுக்க அமெரிக்காவின் தலைமைத்துவத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சட்டவிரோதமானதும் ஒடுக்குமுறையானதுமான அரசுடன் அரசமைப்புக்கு முரணான ஒப்பந்தத்தைத் திணிக்க நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்" என்று ஹாஸ்மன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மறுபுறம், முற்றிலும் மாறுபட்ட அரசியல் கருத்தைக் கொண்டவரான ரஃபேல் ரமீரெஸ், ஹியூகோ சாவேஸ் ஆட்சியின் பெரும்பகுதி காலத்தில் அரசுக்குச் சொந்தமான PDVSA (வெனிசுவேலா நாட்டின் அரசுக்குச் சொந்தமான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்) தலைவராகவும் எண்ணெய்த் துறை அமைச்சராகவும் இருந்தவர். இந்த ஒப்பந்தம் "நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்காகவும், அமெரிக்காவின் புதிய காலனித்துவத்திற்கான கதவுகளைத் திறந்ததற்காகவும் வரலாற்றில் இடம்பெறும்" என்று கூறினார்.

"நாட்டின் பின்னால் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் தெளிவாக அரசமைப்புக்கு எதிரானது. நாட்டின் நிலப்பரப்பு மற்றும் எண்ணெய் மீதான கட்டுப்பாட்டை வெளிநாட்டு சக்தியிடம் ஒப்படைப்பதாக" அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார். இந்த எண்ணெய் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன, அது ஏன் இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பதை பிபிசி முண்டோ விளக்குகிறது.

வெனிசுவேலா எண்ணெய் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Reuters

இந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த ஒப்பந்தத்தின்படி, வெனிசுவேலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களின் பெரும்பான்மைக் கட்டுப்பாடு அமெரிக்காவிடம் செல்லும். இந்த எண்ணெய் வயல்களில் சுமார் 6,500 கோடி பீப்பாய் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு உள்ளது.

உலகிலேயே அதிக அளவு நிரூபிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பைக் கொண்ட நாடு வெனிசுவேலா. அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகமான EIA-வின் மதிப்பீடுபடி, வெனிசுவேலாவிடம் சுமார் 303 பில்லியன் பீப்பாய் எண்ணெய் கையிருப்பு உள்ளது. அதில் சுமார் 21.5%, இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறும் 6,500 கோடி பீப்பாய்கள்.

ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார நிபுணர் பிரான்சிஸ்கோ ரோட்ரிகஸ், இந்த ஒப்பந்தத்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஜுவான் விசென்டே கோமேஸ் சர்வாதிகாரியாக இருந்த காலத்தில் சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுவேலா எண்ணெயைச் சுரண்டிய விதத்துடன் ஒப்பிட்டார்.

"அதிபரே, உங்கள் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுவேலா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு வெறும் 3.22 அமெரிக்க டாலர் வரி வருவாயை மட்டுமே பெறும். இது தற்போதைய விலையில் 4.7% மட்டுமே. மேலும், ஜுவான் விசென்டே கோமேஸ் வழங்கிய உரிமங்களில் குறிப்பிடப்பட்டிருந்த உரிமைத் தொகையில் (royalty) பாதிக்கும் குறைவானது" என்று ரோட்ரிகஸ் வெள்ளிக்கிழமை இரவு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

சனிக்கிழமை இரவு தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர், இந்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது போலத் தோன்றினார். ஒப்பந்தம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள வெனிசுவேலா மக்களுக்கு உரிமை உள்ளதாகக் கூறிய அவர், புதிய விவரங்களையும் வெளியிட்டார். 17 முக்கிய எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு கையெழுத்திடப்பட்டு இருப்பதாகவும், தினசரி 15 லட்சம் பீப்பாய்களுக்கும் அதிகமான உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"வெனிசுவேலாவுக்கு எவ்வளவு கிடைக்கும்? ஒரு பீப்பாய் எண்ணெயின் விலையை 65 அமெரிக்க டாலராக கொண்டு கணக்கிட்டால், அது அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம், நமது நாட்டின் வருவாய் மொத்தம் 209.335 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும்" என்று அவர் கூறினார்.

சர்வதேச எண்ணெய் சந்தை

பட மூலாதாரம், Getty Images

"குறிப்பாகச் சொல்வதானால், உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் ஒவ்வொரு பீப்பாய் எண்ணெயில் இருந்தும் சுமார் 19 அமெரிக்க டாலர் நேரடியாக நாட்டுக்குள் வரும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தின் இலக்கு மட்டுமே என்றும், ரெப்சால், எனி, ஷெல், பிபி போன்ற சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்களின் மூலம் உற்பத்தி மேலும் அதிகரிக்குமென்றும் அவர் விளக்கினார்.

டெல்சி ரோட்ரிகஸின் கூற்றுப்படி, ஏற்கெனவே எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டும் இன்னும் மேம்படுத்தப்படாத 8 "பசுமைத் தொகுதிகளை" மேம்படுத்துவதே அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தின் நோக்கம். இவற்றில் குறைந்தபட்சம் 16% உரிமைத்தொகையும், 34% வருமான வரியும் விதிக்கப்படும். மேலும், வெனிசுவேலா தனது எண்ணெய் வளங்களின் உரிமையையும் இறையாண்மையையும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் கையிருப்பு இருப்பது மட்டும் போதாது என்று கூறிய இடைக்கால அதிபர், அந்த செல்வத்தை மக்களின் நலனாக மாற்ற "முதலீடு, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் திறன்" தேவை என்றும், இவற்றை அமெரிக்கா வழங்கும் என்றும் தெரிவித்தார்.

ஹூஸ்டனில் உள்ள ரைஸ் பல்கலைக் கழகத்தின் பேக்கர் இன்ஸ்டிட்யூட்டின் வெளிநாடு வாழ் கல்வியாளரான லூயிஸ் பச்செகோ, ரோட்ரிகஸ் முன்வைத்த இந்த வாதம் 1990களில் எண்ணெய்த் துறை தொடங்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட அதே வாதம் என்று பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

"அவர் ஆற்றிய உரை, அடிப்படையில் 1990களின் எண்ணெய்த் துறை தொடங்கப்பட்டது தொடர்பான உரையையே ஒத்திருக்கிறது. சாவேசின் சித்தாந்த அடிப்படையிலான தேசியவாதக் கொள்கைகள் நம்மை 35 ஆண்டுகள், அதாவது ஒரு முழு தலைமுறையை இழக்கச் செய்தன என்பதை இது ஒப்புக் கொள்வதாகும்" என்று பச்செகோ விமர்சித்தார்.

வெனிசுலாவின் எண்ணெய் துறையை மீட்டெடுக்கப் பல பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வெனிசுவேலாவின் எண்ணெய் துறையை மீட்டெடுக்கப் பல பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுகிறது

இந்த ஒப்பந்தம் மூலம் வெனிசுவேலாவுக்கு என்ன கிடைக்கும்?

உலகிலேயே அதிக அளவு நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் கையிருப்பைக் கொண்ட நாடாக இருந்தாலும், வெனிசுவேலாவின் எண்ணெய்த் துறை தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன் தினசரி 30 லட்சத்திற்கும் அதிகமான பீப்பாய்கள் என்ற சாதனை அளவில் இருந்த நாட்டின் எண்ணெய் உற்பத்தி, 2019ஆம் ஆண்டில் மிக மோசமான நிலையில் தினசரி சுமார் ஐந்து லட்சம் பீப்பாய்களாகக் குறைந்தது. இது 1950ஆம் ஆண்டுகளின் அளவுக்கு சமமானது.

பல ஆண்டுகளாக ஏற்பட்ட முதலீட்டுக் குறைவு, ஊழல், அரசியல்மயமாக்கல் ஆகியவற்றின் விளைவாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனுடன் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும் சேர்ந்துகொண்டன.

"சாவேஸின் ஆட்சி PDVSA-வையும், எண்ணெய்த் துறையையும், பொதுவாக வெனிசுவேலாவையும் அதன் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையில் முற்றிலும் சீரழித்துவிட்டது. சித்தாந்தம், ஊழல் மற்றும் திறமையின்மை மூலம் சாவேஸின் ஆட்சி அதை முற்றிலுமாக அழித்துவிட்டதாக" ஸ்மார்ட் திங்கர்ஸ் (SmartThinkers) என்ற அரசியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் ரிக்கார்டோ சுக்ரே பிபிசி முண்டோவிடம் கூறினார்.

கடந்த 1998ஆம் ஆண்டு இருந்ததைப் போல மீண்டும் தினசரி 30 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டுமெனில், சுமார் எட்டு ஆண்டுகளில் நூறு பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படும் என்று லூயிஸ் பச்செகோ மதிப்பிடுகிறார். டிரம்ப் மற்றும் டெல்சி ரோட்ரிகஸ் அறிவித்துள்ள ஒப்பந்தத்திலும் இதே அளவிலான முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு ஜனவரியில் மதுரோ கைது செய்யப்பட்டதற்குப் பிறகு, வெனிசுவேலாவின் எண்ணெய்த் துறையை மீட்டெடுப்பதில் முதலீடு செய்யுமாறு அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களை டிரம்ப் சந்தித்து வலியுறுத்தியபோதும் இதே நூறு பில்லியன் டாலர் தொகை குறிப்பிடப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அந்த முதலீடு இன்னும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. எனவே, டிரம்பின் சமீபத்திய ஒப்பந்தத்தை அது நடைமுறைப்படுத்துவதற்கான இரண்டாவது முயற்சியாக பச்செகோ கருதுகிறார். எவ்வாறாயினும், வெனிசுவேலாவின் எண்ணெய்த் துறையை மீட்டெடுத்து நவீனமயமாக்குவதற்கு, நாட்டிடம் இல்லாத பல பில்லியன் டாலர் முதலீடுகள் அவசியம் என்பதில் பொதுவான கருத்து நிலவுகிறது.

அந்த வகையில், இந்த முதலீடு உண்மையில் நடைமுறைக்கு வந்தால், அது வெனிசுவேலாவுக்கு கிடைக்கும் முதல் பெரிய பலனாக இருக்கும். இதனுடன், எண்ணெய்த் துறை நடவடிக்கைகள் வெனிசுவேலா பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கமும் இருக்கும்.

"எண்ணெய்த் துறையில் நூறு பில்லியன் டாலர் முதலீடு செய்தால், அதிகமான எம்பனாடாக்கள் (மாவில் இறைச்சி கலந்த உணவு), அதிக மின்சாரம், அதிக ஆடைகள் என எல்லாவற்றையும் விற்க முடியும். ஏனெனில், அது பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஊக்குவிப்பு விளைவை ஏற்படுத்தும். எனவே, அரசு பெறும் வருவாயைத் தாண்டி, எண்ணெய்த் துறையின் செயல்பாடு மட்டுமல்ல, அது பொருளாதாரத்தின் பிற துறைகளில் ஏற்படுத்தும் ஊக்குவிப்பு விளைவுதான் முக்கியம்" என்று பச்செகோ கூறுகிறார்.

வரலாற்று ரீதியாக, வெனிசுலா நாட்டின் பொருளாதாரம் எண்ணெய் வணிகத்தின் செயல்பாட்டைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரலாற்றுரீதியாக, வெனிசுவேலாவின் பொருளாதாரம் எண்ணெய் வணிகத்தின் செயல்பாட்டைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது

அமெரிக்காவுக்கு என்ன பலன்?

அமெரிக்கா அணுகலைப் பெறும் 6,500 கோடி பீப்பாய் வெனிசுவேலா எண்ணெய் கையிருப்பு, 2024ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவிடம் இருந்த நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் கான்டென்சேட் கையிருப்பான 4,600 கோடி பீப்பாய்களின் 141% ஆகும் என்று அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் (EIA) தெரிவித்துள்ளது. இந்த உண்மையையே டிரம்ப் ஒப்பந்தத்தை அறிவிக்கும்போது வலியுறுத்தினார்.

இந்த ஒப்பந்தம் "அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பை இரு மடங்குக்கும் மேலாக உயர்த்தும், நம் எண்ணெய் விநியோகத்தைப் பெருமளவு அதிகரிக்கும், மேலும் பல ஆண்டுகளுக்கு அனைத்து அமெரிக்கர்களுக்கும் பெட்ரோல் விலையை கணிசமாகக் குறைக்கும்" என்று அவர் கூறினார்.

அதேபோல, மார்கோ ரூபியோ தனது எக்ஸ் பக்கத்தில், இந்த ஒப்பந்தம் "நம் அரைக் கோளத்தில் நிலையான கையிருப்பையும் குறைந்த விலை எண்ணெயையும் உறுதி செய்வதுடன், அமெரிக்காவில் பெட்ரோல் விலையைக் குறைக்க உதவும்" என்று குறிப்பிட்டார்.

டிரம்ப் நிர்வாகத்திற்கு உடனடி பலன் கிடைக்கும் என்று ரிக்கார்டோ சுக்ரே கருதுகிறார். பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலை குறித்துக் கவலைப்படும் அமெரிக்க மக்களுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு செய்தியை அனுப்ப டிரம்புக்கு உதவும். குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு முன்பு இரானுடன் போர் தொடங்க டிரம்ப் முடிவு செய்த பின்னணியில் இது முக்கியமானது.

"இப்போது, அந்த விலைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் எரிசக்தி வளங்களின் விநியோகத்தைப் பொறுத்தவரை நீண்டகாலத் திட்டம் இருப்பதாக டிரம்ப் அந்த மக்களிடம் கூறுகிறார்" என்கிறார் சுக்ரே. எனவே, இவை நடுத்தர மற்றும் நீண்டகாலத் திட்டங்களாக இருந்தாலும், நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், "நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன், எதிர்காலத்தில் குறைந்த விலையில் எரிபொருள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்ற செய்தியை வாக்காளர்களிடம் டிரம்பால் கூற முடியும்."

இந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மற்றொரு பதிவில், அமெரிக்காவின் மூலோபாய தேசிய எண்ணெய் கையிருப்பை நிரப்ப வெனிசுவேலா எண்ணெயைப் பயன்படுத்தப் போவதாக டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க ஊடகங்களின் தகவல்படி, தற்போது அந்தக் கையிருப்பில் 30 கோடி பீப்பாய்களுக்கும் குறைவான எண்ணெயே உள்ளது. இது 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத அளவுக்குக் குறைவானது.

அமெரிக்காவின் புவிசார் அரசியல் நோக்கத்திற்கும் இந்த ஒப்பந்தம் நீண்டகால மூலோபாய பலனைக் கொடுக்கும் என்று சுக்ரே கருதுகிறார். ரஷ்யாவுடனும், குறிப்பாக சீனாவுடனும் போட்டியிடும் சூழலில், வெனிசுவேலாவின் மதிப்புமிக்க வளங்களுக்கான அமெரிக்காவின் அணுகலை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது. அமெரிக்கா தனது செல்வாக்குக்கு வெளியிலுள்ள சக்திகளின் தாக்கத்தில் இருந்து இந்த அரைக்கோளத்தைப் பாதுகாக்க உருவாக்க முனையும் "அமெரிக்காவின் கேடயம்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதை அவர் பார்க்கிறார்.

உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலைகள் குறித்து கவலைப்படும் குடிமக்களுக்கு டிரம்ப் உறுதியளிக்க விரும்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலைகள் குறித்துக் கவலைப்படும் குடிமக்களுக்கு டிரம்ப் உறுதியளிக்க விரும்புகிறார்

எதற்காக இவ்வளவு சர்ச்சை?

எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பான ஆரம்பக்கட்ட எதிர்மறை எதிர்வினைகள், டிரம்ப் மற்றும் டெல்சி ரோட்ரிகஸ் அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து நீண்டகாலமாக நிலவும் இரண்டு முக்கியக் கவலைகளுடன் தொடர்புடையவை:

அதாவது, வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் வெனிசுவேலாவின் இறையாண்மை இழப்பு.

இதற்கு மிக முக்கியமான உதாரணம், ஜனவரியில் வெனிசுவேலா எண்ணெய் விற்பனையையும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்துவதையும் டிரம்ப் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது. ஆனால் இன்று வரை எவ்வளவு எண்ணெய் விற்கப்பட்டது, எவ்வளவு பணம் கிடைத்தது, அந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து வெனிசுவேலா மக்களுக்குத் தெரியவில்லை.

அதேபோல், எண்ணெய் ஒப்பந்தமும் வெனிசுவேலா எந்தவிதமான பொது விவாதமும் முன்கூட்டியே இடம்பெறாமலேயே மக்களிடையே அறிவிக்கப்பட்டது. தேசிய நாடாளுமன்றத்தில்கூட இதுகுறித்து விவாதம் நடைபெறவில்லை. வெனிசுவேலா மக்களுக்கு முற்றிலும் எதுவும் தெரியாமலே இருந்தது. ஒப்பந்தம் வரவிருப்பதற்கான முன் அறிகுறிகளாக, சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்கள் மட்டுமே இருந்தன.

கடந்த ஒரு நூற்றாண்டாக வெனிசுவேலா பொருளாதாரத்தின் உயிர்நாடியாக எண்ணெய் வளம் இருந்து வருகிறது. அது அந்நாட்டு மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியாகவும் மாறியுள்ளது. எனவே, வெனிசுவேலாவின் கையிருப்பில் சுமார் 20% பிரதிநிதித்துவப்படுத்தும் எண்ணெய் வளங்களின் மீது அமெரிக்கா "பெரும்பான்மைக் கட்டுப்பாட்டை" பெறும் என்று டிரம்ப் அறிவித்தது அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதில் ஆச்சர்யமில்லை.

வெனிசுவேலாவில், நாட்டின் நிலத்தடியிலுள்ள இயற்கை வளங்கள் அரசுக்குச் சொந்தமானவை என்ற கருத்து பல நூற்றாண்டுகளாக வேரூன்றியுள்ளது. குறிப்பாக நாட்டில் எண்ணெய் வகித்துள்ள முக்கியப் பங்கின் காரணமாக, இந்த வளம் தங்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வு அந்நாட்டு மக்களிடையே பொதுவாக உள்ளது.

டிரம்ப் மற்றும் ரோட்ரிகஸ் ஆரம்பத்தில் வழங்கிய தகவல்கள் முழுமையாக இல்லாததும் மற்றொரு சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது. பிரான்சிஸ்கோ ரோட்ரிகஸ் கூறிய கணக்கை அடிப்படையாகக் கொண்டால், 6,500 கோடி பீப்பாய் எண்ணெய்க்கு பதிலாக வெனிசுவேலாவுக்கு 209 பில்லியன் டாலர் கிடைக்கிறது என்றால், ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு அந்த நாடு பெறுவது சுமார் 3.3 டாலர் மட்டுமே.

இதற்கிடையில், உலகளாவிய எண்ணெய் சந்தையில் விலையை நிர்ணயிக்கப் பயன்படும் ஓர் உயர்தரமான இலகுரக கச்சா எண்ணெயான மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) எனப்படும் முக்கிய கச்சா எண்ணெயின் விலை 80 அமெரிக்க டாலருக்கு மேல் உள்ளது. சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், டெல்சி ரோட்ரிகஸ் இந்தக் கணக்கீடு ஒரு பீப்பாய் எண்ணெயின் விலையை 65 டாலராக கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாக விளக்கினார். அதன்படி, வெனிசுவேலாவுக்கு ஒரு பீப்பாய்க்கு சுமார் 19 டாலர் கிடைக்கும்.

இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டால், வெனிசுவேலா பெறும் வருவாய் எண்ணெயின் விலையில் 29%-க்கும் சற்று அதிகமாக இருக்கும் என்று கணிக்க முடியும். லூயிஸ் பச்செகோ பிபிசி முண்டோவிடம் தெரிவித்ததன்படி, இதேபோன்ற ஒப்பந்தங்களுக்குப் பிற நாடுகள் பெறும் வருவாயுடன் ஒப்பிடும்போது இது குறைந்த அளவிலான வரம்புக்குள் வருகிறது.

அரசியல் ரீதியாகவும் இந்த ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுவேலாவின் முக்கிய நலன்களைப் பாதிக்கும் இவ்வளவு முக்கியமான ஒப்பந்தத்தை, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியாளரான டெல்சி ரோட்ரிகஸ் மேற்கொண்டிருக்க முடியாது என்று சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதிலும், நாட்டின் பின்னால் ரகசியமாக இந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருந்தால் அது இன்னும் பெரிய பிரச்னை என அவர்கள் கூறுகின்றனர்.

ரோட்ரிகஸின் இந்த சட்டபூர்வமான அங்கீகாரமின்மை எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தம் கேள்விக்கு உள்ளாகவோ அல்லது மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படவோ வழிவகுக்கலாம் என்று ஃப்ளோரிடா சர்வதேச பல்கலைக் கழகத்தின் ஜாக் டி. கார்டன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆய்வாளர் இம்டாட் ஓனர், பினான்சியல் டைம்ஸ்-க்கு தெரிவித்தார்.

சில இடங்களில் விமர்சனம் இன்னும் கடுமையாக இருந்தது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மரியா எல்விரா சலாசார் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் அறிக்கையை வெளியிட்டார். ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து டெல்சி ரோட்ரிகஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

"டெல்சி ரோட்ரிகஸும் மதுரோ ஆட்சியின் எஞ்சியிருப்பவர்களும் வெனிசுவேலாவின் எதிர்காலமாக இருக்க முடியாது. (...) ஒரு சர்வாதிகாரத்தின் கீழ் நீடித்த செழிப்பை உருவாக்க முடியாது. வெனிசுவேலாவின் எண்ணெய் சுதந்திரத்திற்கான கதவுகளைத் திறக்க வேண்டும்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதினார்.

ஹியூகோ சாவேஸின் ஆட்சிக்காலத்தில், வெனிசுலா ஒரு எண்ணெய் வள ஏற்றத்தைக் கண்டது; இந்த வாய்ப்பு லத்தீன் அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் தனது அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்தப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹியூகோ சாவேஸின் ஆட்சிக் காலத்தில், வெனிசுவேலா ஒரு எண்ணெய் வள ஏற்றத்தைக் கண்டது. இந்த வாய்ப்பு லத்தீன் அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் தனது அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்தப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

வாஷிங்டனை சேர்ந்த சிந்தனைக் குழுவான அட்லான்டிக் கவுன்சிலின் ஆய்வாளர் ஜெஃப் ராம்சே போன்றவர்கள், டிரம்ப் மற்றும் ரோட்ரிகஸ் அரசுகளுக்கு இடையிலான நீடித்த ஒத்துழைப்பு வெனிசுவேலாவில் அரசியல் மாற்றத்திற்கான வாய்ப்பில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"அமெரிக்கா தற்போதைய நிலைமையில் எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறதோ, படிப்படியான அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கான அதன் ஊக்கம் அவ்வளவு குறையும் என்பதே எனது கவலை. இப்போது பேச்சுவார்த்தைகள் முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ள நிலையில், 'நல்ல நிலையில் இருக்கும் ஒன்றை' ஏன் ஆபத்தில் ஆழ்த்த வேண்டும்?" என்று அவர் இந்த ஒப்பந்தம் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவும் இந்த ஒப்பந்தம் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ள மற்றொரு காரணம். டிரம்ப் மற்றும் டெல்சி ரோட்ரிகஸ் அரசுகளுக்கு இடையே நடைமுறை சார்ந்த, இரு தரப்புக்கும் வசதியான உறவு உருவாகி, அதை அரசியல் மாற்றத்திற்காக சீர்குலைக்க அமெரிக்கா விரும்பாத நிலை ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது.

ரிக்கார்டோ சுக்ரேவின் கருத்துப்படி, ரோட்ரிகஸின் உத்தி, குறைந்தபட்சம் தற்போதைய அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சிக் காலம் முடியும் 2031ஆம் ஆண்டு வரை அதிகாரத்தில் நீடிப்பதாக இருக்கலாம். மேலும், 2028ஆம் ஆண்டுக்கு முன்பாக வெனிசுவேலாவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் வாஷிங்டனுக்கு ஆர்வம் இல்லை என்றும் அவர் கருதுகிறார்.

"அடுத்த ஆண்டு அல்லது 2028ஆம் ஆண்டில் அவர் பதவியை விட்டு வெளியேறத் திட்டமிடவில்லை. சாவேசின் ஆதரவாளர்களும் அவரும் 2030ஆம் ஆண்டில் தேர்தலை நடத்துவது குறித்து சிந்தித்து வருகிறார்கள் என்று நான் நம்புகிறேன், அதற்கு முன்பு அல்ல" என்று அவர் கூறுகிறார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த ஒப்பந்தம் வெனிசுலாவில் அரசியல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுவதற்கு மாறாக, அதைத் தாமதப்படுத்தக்கூடும்.

இதனால், வெனிசுவேலா எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய அச்சங்களில் ஒன்றான அமெரிக்கா ஏதோவொரு காரணத்தால் அந்த நாட்டின் அரசியல் மாற்றத்தில் ஆர்வத்தை இழந்து, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு கைநழுவிவிடும் என்ற அச்சம் மேலும் அதிகரிக்கிறது.

இன்னொரு முக்கிய கவலை, இந்த எண்ணெய் வளங்களைச் சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் வருவாயை யார் நிர்வகிப்பார்கள், எவ்வாறு நிர்வகிப்பார்கள் என்பது குறித்த கேள்வியும் இதுவரை போதுமான அளவில் விவாதிக்கப்படவில்லை.

"இந்த வளங்களை யார் நிர்வகிப்பார்கள், எந்த நோக்கத்திற்காக நிர்வகிப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்" என்று லூயிஸ் பச்செகோ கூறுகிறார்.

"இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய எண்ணெய் வள அதிவேக வளர்ச்சியை ஏற்கெனவே வீணடித்த அதே நபர்களிடமே இந்தப் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மீண்டும் கொடுக்கப் போகிறார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு