நேபாள பேரழிவுக்கு சில நிபுணர்கள் ஏன் சீனாவை சுட்டிக்காட்டுகின்றனர்?

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு இயற்கைப் பேரழிவிற்கும் ஒரு காரணம் உண்டு. சில வேளைகளில் தெரியாமலும், சில வேளைகளில் தெரிந்தும் அந்தக் காரணங்களை மனிதர்களே உருவாக்குகிறார்கள்.
சீனாவுடனான எல்லையில் அமைந்துள்ள நேபாளப் பகுதிகளில் குடியிருப்புகளைச் சீரழித்த இந்தப் பெருவெள்ளம், இமயமலையில் மக்களை எதிர்கொள்ளும் அதிகரித்துவரும் அபாயங்களை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
காலநிலை மாற்றத்தால் இந்த மலைத்தொடர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்தப் பேரழிவு வெள்ளத்திற்கான காரணத்தை இவ்வளவு விரைவாக உறுதிப்படுத்த முடியாது. ஆனால் பேரழிவுக்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், திபெத்துக்கு அருகிலுள்ள லாங்டாங் லிருங் மலையின் வடபகுதியில் ஒரு பெரிய பாறைப் பகுதி சரிந்ததையும், அதன் மீது இருந்த மிகப்பெரிய பனிப்பாறைத் துண்டு உடைந்து கீழே விழுந்ததையும் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
விழுந்த பாறைகள் மற்றும் கோடிக்கணக்கான கன மீட்டர் பனிக் குவியல்களின் தாக்கம் ஆரம்பத்தில் நிலநடுக்கமாகக் கருதப்பட்டது. சில மதிப்பீடுகளின்படி, அதன் ஆற்றல் பனிப்பாறை பனியை உருகச் செய்தது. அதன் விளைவாக பாறைகள், சேறு மற்றும் நீர் அடங்கிய ஒரு மிகப்பெரிய அலை போடேகோஷி பள்ளத்தாக்கு வழியாக பல மைல்கள் தூரம் நேபாளத்தின் கீழ்பகுதிகளுக்கு பாய்ந்தது.
இந்தப் பேரழிவு, பனிப்பாறைகள் மற்றும் மலைச் சரிவுகளால் உருவாகும் அபாயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவை காலநிலை மாற்றத்தால் வேகமாக பாதிக்கப்படுகின்றன. சில நிபுணர்கள், சீனாவின் மிகப்பெரிய நீர்மின் திட்டங்கள் பேரழிவு அபாயத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என கவலைப்படுகின்றனர்.
சீனாவைப் பற்றிய கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
பிரம்மா செல்லானி, டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தில் வியூக ஆய்வுகள் பேராசிரியராகவும், பெர்லினில் உள்ள ராபர்ட் போஷ் அகாடமியில் ஆய்வாளராகவும் உள்ளார்.
அவர் 'வாட்டர்: ஏசியாஸ் நியூ பேட்டில் கிரவுண்ட்' என்ற புத்தகம் உள்ளிட்ட ஒன்பது புத்தகங்களின் ஆசிரியர் ஆவார்.
செல்லானியின் கருத்துப்படி, நேபாளத்தின் திரிசூலி மற்றும் போடேகோஷி பள்ளத்தாக்குகளில் பேரழிவை ஏற்படுத்திய இந்த திடீர் வெள்ளத்தை, இமயமலையில் நடந்த இன்னொரு சோக நிகழ்வாக மட்டும் பார்க்கக் கூடாது.
"இந்தச் சம்பவம் ஒரு இயற்கைப் பேரிடராகத் தொடங்கியது. திபெத் எல்லைக்கு அருகில் 5,200 மீட்டர் உயரத்தில், ஒரு மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. வேகமாக மாற்றப்பட்டுவரும் மலைப்பகுதியின் நிலப்பரப்புடன் மோதியபின், அது தொடர் பேரழிவுகளாக மாறியது" என நிக்கெய் ஏஷியாவில் செல்லானி எழுதினார்.
அவரின் கூற்றுப்படி, "கீழ்நோக்கிப் பாயும் போது இந்த வெள்ளம் ஏன் இவ்வளவு பேரழிவாக மாறியது என்பதுதான் முக்கியமான கேள்வி."
"இதற்கான பதில் சீனாவின் மேல்பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள், மாற்றப்பட்ட ஆற்றுப் பாதைகள் மற்றும் எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பின்மை ஆகியவற்றின் கூட்டு விளைவுகளில் உள்ளது. இவற்றில் எதுவும் பனிப்பாறை உடைந்ததற்குக் காரணமாக இல்லை. ஆனால் இவை அனைத்தும் சேர்ந்து அதன் தாக்கத்தை அதிகரித்திருக்கலாம்" என அவர் மேலும் எழுதுகிறார்.
"கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் அணைக்கட்டுகள், எல்லை வசதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பிற கட்டுமானப் பணிகளின் விரிவாக்கம் காரணமாக மேல்பகுதி பள்ளத்தாக்கின் சில பகுதிகள் குறுகியவையாக மாறிவிட்டன. கட்டுமான நடவடிக்கைகள் ஆற்றங்கரைகளை மையமாகக் கொண்டு நடந்துள்ளன. சாதாரண சூழலில் இத்திட்டங்கள் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு உதவுகின்றன. ஆனால் பெரிய வெள்ளநிலைகளில் அவையே அபாயத்தை அதிகரிக்கக்கூடும்" என்றும் அவர் கூறுகிறார்.
உண்மையில் என்ன நடந்தது?
கிரெனோபிள் பல்கலைக்கழகத்தின் நிலவடிவவியல் நிபுணர் கிறிஸ்டன் குக், சமீபத்திய செயற்கைக்கோள் படங்களின் ஆய்வு, லாங்டாங் லிருங் பகுதியில் பனிப்பாறையின் கீழ் இருந்த ஒரு பெரிய பாறைப் பகுதி சரிந்துவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறது என்றார்.
உயர் இமயமலையில் பாறைகள் இடம் பெயர்வது அசாதாரணம் அல்ல. "ஆனால் இந்தச் சம்பவத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், அது மிகப்பெரிய அளவில் நடந்தது. அதுவே இதை ஒரு பெரிய பேரழிவாக மாற்றியது" என்று அவர் பைனான்ஷியல் டைம்ஸிடம் தெரிவித்தார்.
பிரிட்டனின் டண்டீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி சைமன் குக், "தொங்கிக்கொண்டிருந்த பனிப்பாறையின் கடைசி பகுதியின் கீழ்பகுதி உடைந்து சுமார் 1,300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கிற்குள் விழுந்ததாகத் தெரிகிறது" என்றார்.
ஜூரிக் பல்கலைக்கழகத்தில் பேரிடர் அபாய ஆய்வாளரான சைமன் ஆலன், செயற்கைக்கோள் படங்களில் "ஒரு பெரிய பாறை மற்றும் பனித்துண்டு கீழே சரிந்தது தெளிவாகத் தெரிகிறது" என்றும் அது "பனி-பாறை பனிச்சரிவாக" கீழே வந்து பேரழிவு வெள்ளத்தை ஏற்படுத்தியது என்றும் கூறினார்.
இந்தச் சரிவு எவ்வளவு பெரியது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
ஆனால் நிலஅதிர்வு சிக்னல்களின் அடிப்படையில், 5 முதல் 10 கோடி கன மீட்டர் அளவிலான மண் மற்றும் பாறைகள் நிலத்தைத் தாக்கியிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
"இது மிகப்பெரிய நிகழ்வு. குறைந்தபட்சம் இந்தப் பகுதியில் இதைவிட பெரிய சம்பவத்தை நாம் பார்த்ததில்லை" என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் ஆரம்பத்தில் நேபாள-சீனா எல்லைப் பகுதியில் 4.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்தது. பின்னர் அதை 5.2 அளவிலான நிலச்சரிவாகத் திருத்தியது. "பனிப்பாறை சரிவும், அதன் பின் ஏற்பட்ட ஓட்டமும் இந்த நிலஅதிர்வு ஆற்றலை உருவாக்கின" என்று நிறுவனம் தெரிவித்தது.
திபெத்தில் சீனா என்ன செய்கிறது?

பட மூலாதாரம், Getty Images
சீனாவில் யார்லுங் சாங்போ ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை அமைக்கும் திட்டம் குறித்து நிபுணர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த ஆறு இந்தியாவிற்குள் நுழைந்த பின் பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது.
இந்த பெரிய அணைத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு அல்லது கீழ்ப்பகுதியில் வாழும் மக்களின் நீர்பகிர்விற்கு ஏற்படும் தாக்கம் பற்றிய கவலைகளை சீனா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
புதிய அணை, யார்லுங் சாங்போ ஆற்றை கட்டுப்படுத்தவோ அல்லது அதன் ஓட்டத்தை மாற்றவோ சீனாவுக்கு ஆற்றலை வழங்கக்கூடும் என அதிகாரிகளும் நிபுணர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட் 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், "திபெத் பீடபூமியின் நதிகளின் மீது கட்டுப்பாடு வைத்திருப்பது, இந்திய பொருளாதாரத்தின் மீது ஒரு வகையான கட்டுப்பாட்டை சீனாவுக்கு வழங்குகிறது" எனக் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அருணாசலப் பிரதேச முதல்வர் பேமா காண்டு, இந்த அணை முடிந்த பின் சியாங் மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் "பெருமளவில் வறண்டுபோகக்கூடும்" என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார்.
தெற்காசிய மற்றும் இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான ஸ்டாக்ஹோம் மைய தலைவர் ஜகந்நாத் பாண்டா, "மனிதர்களால் உருவாக்கப்படும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிலஅதிர்வு அபாயங்களுக்கும் பங்களிக்கக்கூடும்" என்று கூறினார்.
அவரின் கூற்றுப்படி, இந்த மெகா அணைத் திட்டம் நிலஅதிர்வு அபாயங்களையும் நிலச்சரிவுகளின் சாத்தியத்தையும் அதிகரிக்கக்கூடும்.
"இந்தத் திட்டத்தை சீனா மிகுந்த கவனத்துடன் மறுஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்தியா, நேபாளம் மற்றும் பிற இமயமலை நாடுகளுடன் அதிக வெளிப்படைத்தன்மை, தகவல் பகிர்வு மற்றும் உரையாடல் தேவை. இந்தப் பேரழிவு, கீழ்பகுதி ஆற்றங்கரை நாடுகளுடன் இந்த விஷயங்களை திறந்த மனதுடன் விவாதிப்பதன் முக்கியத்துவத்தை சீனாவுக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
சீனாவின் இலக்கு என்ன?
மனிதச் செயல்பாடுகள் இமயமலையை மேலும் ஆபத்தானதாக மாற்றி வருகின்றன என்று செல்லானி கருதுகிறார்.
"நீரின் ஓட்டத்தை மாற்றும் அணைகள், தடுப்பணைகள் மற்றும் மேல்பகுதியில் செய்யப்பட்ட பிற மாற்றங்கள், குறுகிய இமயமலைப் பள்ளத்தாக்குகளில் உள்ளூர் அளவில் தடைகளை உருவாக்கியுள்ளன" என அவர் நிக்கெய் ஏஷியாவில் எழுதியுள்ளார்.
"பனிச்சரிவால் உருவான வேகமான அலை இத்தடைகளுடன் மோதிய போது, தற்காலிகமாக நீர் தேங்கி பின்னர் மேலே வழிந்தோடியதால் இரண்டாவது வெள்ள அலைகள் உருவாகியிருக்கலாம். இதனால் கீழ்நோக்கி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது."
இமயமலைப் பகுதி உலகில் மிக அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். இந்திய மற்றும் யூரேஷிய நிலத்தட்டுகள் மோதிக்கொண்டிருப்பதால் இப்பகுதி இன்னும் பெரிய புவியியல் அழுத்தத்திற்குள் உள்ளது. அதனால் இது மிகவும் நிலையற்றதாக உள்ளது.
சீன அரசு, திபெத் மற்றும் அதன் இமயமலை எல்லைப் பகுதிகளை தனது தேசிய பாதுகாப்பு மற்றும் ஆற்றல் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாகக் கருதுகிறது.
சிஎன்என் வெளியிட்ட ஒரு செய்தியில், "இந்தப் பகுதியை பசுமை ஆற்றலின் மிகப்பெரிய மையமாக மாற்றுவதே சீனாவின் நோக்கம். இதில் 168 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமைக்கப்படும் ஒரு மிகப்பெரிய அணையும் அடங்கும். தற்போது அதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மனித பொறியியலின் இதுவரை இருந்த எல்லைகளையே அது சவாலுக்கு உட்படுத்தக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள ஸ்டிம்சன் சென்டரின் எரிசக்தி, நீர் மற்றும் நிலைத்தன்மை திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆஸ்டின் லார்ட்," 'நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை' ஏற்படும் எனக் கருதப்பட்ட வெள்ளங்களை நாம் "ஒவ்வொரு ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை, காண்கிறோம். காலநிலை சார்ந்த அபாயங்கள் நமது பாதுகாப்பின் எல்லைகளை நாம் மாற்றக்கூடிய திறனை விட மிக வேகமாக மாறி வருகின்றன" என்று சிஎன்என்னிடம் தெரிவித்தார்.
அவர் மேலும், "இத்தனை நிச்சயமற்ற சூழ்நிலைகளின் மத்தியில் நாம் இந்த பிரச்னைகளில் இணைந்து செயல்பட ஆரம்பிக்காவிட்டால் எந்த முன்னேற்றமும் இருக்காது. அடுத்த முறை நாம் இன்னும் மோசமாகப் பாதிக்கப்படுவோம்" என்றார்.
சமீப ஆண்டுகளில் அணை கட்டுமானத் தொழில்நுட்பத்தில் சீனா அடைந்த முன்னேற்றம், தூய்மையான ஆற்றல் மூலம் மின்சார அமைப்பை மாற்றும் முயற்சிகள், நிலக்கரியிலிருந்து விலகும் கொள்கைகள் மற்றும் சீனா-இந்தியா எல்லைத் தகராறுகள் ஆகியவை இந்தப் பகுதியில் மாற்றங்களை வேகப்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திபெத் சுற்றுச்சூழல், கலாசாரம் மற்றும் காலநிலை வரலாற்று ஆய்வாளர் ரூத் காம்பல், "மலைகளைப் பற்றிய பார்வை மாறிவிட்டது. முன்பு அவை பின்தங்கிய பகுதிகளாகவும் அல்லது இன அடிப்படையிலான அமைதியின்மைக்கு வாய்ப்புள்ள இடங்களாகவும் பார்க்கப்பட்டன. இப்போது அவை ஒரு வளமாகக் கருதப்படுகின்றன" என்று சிஎன்என்னிடம் கூறினார்.
யார்லுங் சாங்போ மெகா அணைத் திட்டத்தின் தரவுகள் மற்றும் வடிவமைப்பு தொடர்பான தகவல்களை இந்தியாவுடன் பகிராததற்காக சீனா முன்பும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
2017 எல்லை மோதல் சம்பவத்திற்குப் பிறகு, எல்லை தாண்டி பாயும் நதிகளின் நீர்வரத்து தொடர்பான தரவுகளை சீனா சில காலம் பகிர்வதை நிறுத்திவிட்டதாகவும் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் தகவல் பகிர்வில் வெளிப்படைத்தன்மை குறித்த விமர்சனங்களை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































