ஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி
- பதவி, பிபிசி ஃபியூச்சர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
உங்கள் வாய்க்குள் உங்களால் பார்க்கவே முடியாத ஓர் உலகம் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்களும் பிற நுண்ணுயிரிகளும் அங்கு வாழ்கின்றன. அவற்றில் சில பற்களைப் பாதிக்கின்றன, மற்றவை பற்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பல் துலக்குதல், பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல், வாயைக் கொப்பளிக்கும் திரவத்தைப் பயன்படுத்துவது ஆகியவை குறித்து நாம் அடிக்கடி பேசுகிறோம். ஆனால், நமது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு விஷயமும் உள்ளது. அது நமது உணவுமுறை.
அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது பற்களில் சொத்தை ஏற்பட வழிவகுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில், சர்க்கரை வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், அமில உற்பத்தியையும் அதிகரிக்கிறது.
ஆனால், நாம் எதைச் சாப்பிடக் கூடாது என்பது மட்டுமே முக்கியமல்ல. எதையெல்லாம் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ஆச்சரியமளிக்கும் வகையில், பழங்கள், தேநீர், பாலாடைக் கட்டி மற்றும் சில நொதிக்கப்பட்ட உணவுகளும் வாயில் வாழும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உதவியாக இருக்கலாம்.
வாய்க்குள் இருக்கும் பாக்டீரியாக்களின் உலகம்
நமது வாயில் சுமார் 700 வகையான வெவ்வேறு பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் பிற நுண்ணுயிரிகளும் அங்கு உள்ளன. ஒவ்வொரு நுண்ணுயிரிக்கும் தனக்கென விருப்பமான வாழ்விடங்கள் உள்ளன. சில பற்களின் மேற்பரப்பில் வாழ்கின்றன, சில நாக்கில் வாழ்கின்றன, மேலும் சில பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உள்ள மிகச் சிறிய இடைவெளிகளில் வாழ்கின்றன.
இவற்றில் சில தீங்கு விளைவிக்கக் கூடியவை. உதாரணமாக, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் (Streptococcus mutans) பற்களின் மேற்பரப்பில் காணப்படுகிறது. இது சர்க்கரையை விரும்புகிறது. இது சர்க்கரையை அமிலமாக மாற்றுகிறது. இந்த அமிலங்கள் படிப்படியாக உங்கள் பற்களைப் பாதுகாக்கும் எனாமல் அடுக்கை அரித்துவிடுகின்றன. காலப்போக்கில், உங்கள் பற்களில் சிறிய துளைகள் அல்லது சொத்தைகள் உருவாகலாம்.
அமெரிக்காவில், 30 வயதுகளின் நடுப்பகுதியை அடையும் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானோருக்கு பற்களில் சொத்தை ஏற்பட்டுள்ளது. ஆனால், வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மட்டுமே நிறைந்திருக்கவில்லை. வெய்லோனெல்லா (Veillonella), ஆக்டினோமைசீஸ் (Actinomyces), சில வகையான ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus), நைசீரியா (Neisseria) ஆகியவை நன்மை தரக்கூடியவை.
இந்த பாக்டீரியாக்கள், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்களை ஏற்படுத்தக்கூடிய பிற நுண்ணுயிரிகள் வாயில் நிலைபெறுவதைத் தடுக்க உதவும். அதாவது, வாயில் நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடையே தொடர்ந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதே இதன் பொருள்.

பட மூலாதாரம், Getty Images
வாயின் சமநிலை சீர்குலையும்போது...
வாய்வழி நுண்ணுயிர்த் தொகுப்பின் சமநிலை என்பது பற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் முக்கியமானது.
நாம் பற்களைத் தொடர்ந்து முறையாகவும் முழுமையாகவும் சுத்தம் செய்யாவிட்டால், பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் சிறிய பாக்கெட் போன்ற இடைவெளிகள் உருவாகலாம்.
இந்த இடங்களில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால், போர்ஃபைரோமோனஸ் ஜிங்கிவாலிஸ் (Porphyromonas gingivalis) போன்ற பாக்டீரியாக்கள் எளிதாக வளர முடியும். போர்ஃபைரோமோனஸ் ஜிங்கிவாலிஸ் ஈறு நோயை ஏற்படுத்தக்கூடும்.
இதை இதய நோய், மனச்சோர்வு, அல்சைமர் நோய், நீரிழிவு, குடல் அழற்சி நோய், முடக்குவாதம் மற்றும் குறைப் பிரசவம் போன்ற உடல்நல அபாயங்களுடனும் விஞ்ஞானிகள் தொடர்புபடுத்தியுள்ளனர்.
சமீப ஆண்டுகளில், பாதிக்கப்பட்ட வாய்வழி நுண்ணுயிர்த் தொகுப்பு, குடல் புற்றுநோய், கணையப் புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையிலான சாத்தியமான தொடர்பு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்திய ஓர் ஆய்வில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், உமிழ்நீரில் காணப்படும் நுண்ணுயிரிகளை ஆய்வு செய்ததுடன், பின்னர் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் ஆய்வு செய்தனர்.
பல் சிதைவுடன் தொடர்புடைய சில குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் அல்லது கேண்டிடா ஈஸ்ட் (Candida yeast) வகை நுண்ணுயிரிகள் வாய்வழி நுண்ணுயிர்த் தொகுப்பில் இருந்தவர்களுக்கு கணையப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும் இதன் பொருள், இந்த நுண்ணுயிரிகள் நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்துகின்றன என்பதல்ல. அவற்றுக்கு இடையிலான தொடர்பை விஞ்ஞானிகள் தொடர்ந்து புரிந்துகொள்ள முயன்று வருகின்றனர்.
வாயில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருப்பது நல்லது என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நுண்ணுயிர்த் தொகுப்பு எந்த அளவுக்கு பல்வேறு வகையான நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் சமநிலையும் சிறப்பாக இருக்கும்.
வாயிலுள்ள நுண்ணுயிரிகளின் குறைந்த பன்முகத்தன்மைக்கும் மனச்சோர்வுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதையும் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பல் துலக்குவது மட்டுமே போதாது
ஆரோக்கியமான வாய்வழி நுண்ணுயிர்த் தொகுப்பைப் பராமரிக்க பற்களைத் துலக்குவது மட்டுமே போதாது என்பது ஒரு முக்கியமான விஷயம்.
நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், உங்கள் வாயில் வாழும் நுண்ணுயிரிகளும் அதையே சாப்பிடுகின்றன. எனவே, வாயில் எந்த பாக்டீரியாக்கள் அதிகரிக்கும், எந்த பாக்டீரியாக்கள் குறையும் என்பதில் உணவுமுறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
முதல் படியாக, அதிக அளவு சர்க்கரை கொண்ட உணவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பல் சொத்தையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் சர்க்கரையை எளிதில் உட்கொள்கின்றன.
பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை குறைவாகச் சாப்பிடுவதும் நல்லது. ஏனெனில், அவை வாயில் எளிதில் உடைந்து சர்க்கரையாக மாறக்கூடும்.
இதில் வெள்ளை ரொட்டி, கிராக்கர்கள், பிஸ்கட், கேக்குகள் போன்ற மாவுச் சத்து நிறைந்த சிற்றுண்டிகளும் அடங்கும். மறுபுறம், நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் உதவியாக இருக்கும்.
இந்த பாக்டீரியாக்கள் உணவு மற்றும் இடத்திற்காகத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் போட்டியிடுகின்றன. இதனால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வாயில் வளர்ந்து நிலைபெறுவது கடினமாகிறது.
சில நன்மை தரும் பாக்டீரியாக்கள், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை நேரடியாகத் தாக்கக்கூடிய புரதங்கள் மற்றும் பிற பொருட்களையும் உற்பத்தி செய்கின்றன.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியரான லாரா வைரிச், வாய்வழி நுண்ணுயிர்த் தொகுப்பு குறித்து ஆராய்ந்து வருகிறார்.
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus) குடும்பத்தைச் சேர்ந்த சில பாக்டீரியாக்கள் மிகக் குறைந்த அளவிலேயே அமிலத்தை உற்பத்தி செய்வதுடன், அதிகளவில் அமிலத்தை உற்பத்தி செய்யும் பிற நுண்ணுயிரிகளைத் தாக்கக்கூடும் என்று அவர் விளக்குகிறார்.
உதாரணமாக, நன்மை தரும் எஸ். சாலிவேரியஸ் (S. salivarius) பாக்டீரியா, பல தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளைக் கொல்லக் கூடிய புரதங்களை உற்பத்தி செய்கிறது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் விளைவுகளில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்ட, நோய்களை ஏற்படுத்தும் சில நுண்ணுயிரிகளும் இதில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
பச்சைக் காய்கறிகள் நன்மை பயப்பது ஏன்?
உங்கள் வாயிலுள்ள நுண்ணுயிர்த் தொகுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், அதிக அளவில் பச்சை இலைக் காய்கறிகளைச் சாப்பிடுவது நல்ல தொடக்கமாக இருக்கும்.
வாழைப் பழம், கீரை, பீட்ரூட், முள்ளங்கி போன்ற காய்கறிகளில் நைட்ரேட் அதிக அளவில் உள்ளது. வாயில் இருக்கும் நைசீரியா (Neisseria) போன்ற பாக்டீரியாக்கள் நைட்ரேட்டை பயன்படுத்தி அதை நைட்ரைட்டாக மாற்றுகின்றன.
அதன் பிறகு, குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அதை மேலும் மாற்றி, அதிலிருந்து நைட்ரிக் ஆக்சைடு உருவாகக் கூடிய பொருட்களாக மாற்றுகின்றன.
நைட்ரிக் ஆக்சைடு ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது இதயம் மற்றும் ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடும்.
ஓர் ஆய்வில், நைட்ரேட் அதிகமுள்ள பீட்ரூட் சாற்றை இரு வாரங்களுக்கு தினமும் இரண்டு முறை குடித்தவர்களின் ரத்த அழுத்தம் குறைந்தது.
பூண்டு ஒரு சுவாரஸ்யமான உதாரணம். அதை மென்று சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதில் அலிசின் (allicin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது பல் சொத்தை மற்றும் ஈறு நோயுடன் தொடர்புடைய சில பாக்டீரியாக்களை பாதிக்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
தேநீர், பழம் மற்றும் பாலிஃபினால்கள்
தாவர அடிப்படையிலான உணவுகளில் பாலிஃபினால் (polyphenol) எனப்படும் இயற்கைப் பொருட்கள் உள்ளன. இவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு, தாவரங்களின் செல்கள் மற்றும் திசுக்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
தாவரங்களுக்கு பாலிஃபினால்கள் முக்கியமானவை. ஏனெனில், ஆபத்து ஏற்படும் சூழலில் விலங்குகள் வேறு இடங்களுக்குச் செல்ல முடியும். ஆனால், தாவரங்களால் அவ்வாறு செய்ய முடியாது. எனவே, வெப்பம், குளிர் அல்லது அதிகப்படியான சூரிய ஒளி போன்ற கடினமான சூழ்நிலைகளைத் தவிர்க்க அவை இதுபோன்ற பொருட்களை உருவாக்குகின்றன. ஆனால், பாலிஃபினால்கள் மனிதர்களுக்கும் நன்மை பயக்கக்கூடும்.
அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக் கழகத்தின் பல் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டின் வூ மற்றும் அவருடைய சக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தேநீரில் உள்ள பாலிஃபினால்கள் பல் சொத்தை மற்றும் ஈறு நோயுடன் தொடர்புடைய சில தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டைத் தடுக்கக்கூடும் என்பது கண்டறியப்பட்டது.
அவை பாக்டீரியாக்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு, பற்களின் மேற்பரப்பில் சேர்வதையும் தடுக்கக்கூடும். கிறிஸ்டின் வூ கூற்றுப்படி, பற்களில் படியும் பிளேக்கை ஒட்டும் தன்மையுடையதாக மாற்றும் என்சைமின் செயல்பாட்டை பாலிஃபினால்கள் தடுக்கின்றன. அவர்களது ஆய்வுகளில் ஒன்று, தேநீர் குடிப்பது நாக்கின் பின்புறத்தில் வாழும், வாய் துர்நாற்றத்துடன் தொடர்புடைய சில பாக்டீரியாக்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டியது.
பல பழங்களிலும், குறிப்பாக அடர் நிறத்தில் உள்ள பெர்ரி பழங்களிலும், பாலிஃபினால்கள் அதிகம் உள்ளன. இது ஆச்சரியமாகத் தோன்றலாம். ஏனெனில், பழங்களிலும் இயற்கையான சர்க்கரைகளும் அமிலங்களும் உள்ளன.
ஆனால், கிறிஸ்டின் வூ நடத்திய ஆய்வில், க்ரான்பெரி சாறு பற்களில் பிளேக் உருவாவதைத் தடுக்க உதவக்கூடும் என்றும், பல் சொத்தை மற்றும் ஈறு நோயுடன் தொடர்புடைய சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடும் என்றும் கண்டறியப்பட்டது.
தேனிலும் பாலிஃபினால்கள் உள்ளன. பிளேக் படிவதைத் தடுக்கவும், பல் சொத்தையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் இவை உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் காட்டியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சீஸ் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளின் நன்மைகள்
வாய்வழி நுண்ணுயிர்த் தொகுப்புக்கு சீஸ் சாப்பிடுவதும் நன்மை தரக்கூடும். இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், 9 பேருக்குத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினமும் கிரானா படானோ (Grana Padano) சீஸ் வழங்கப்பட்டது. ஆய்வின் முடிவில், அவர்களின் வாயிலுள்ள பாக்டீரியாக்களில் பெரிய மாற்றம் ஏதும் இருக்கவில்லை.
சர்க்கரையை விரும்பும், பல் சொத்தையுடன் தொடர்புடைய எஸ். மியூட்டன்ஸ் (S. mutans) பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்தது. அதேவேளையில், வாயில் அதிகம் காணப்படும் ஆரோக்கியமான எஸ். சாங்குயினிஸ் (S. sanguinis) பாக்டீரியாக்களின் அளவு அதிகரித்தது.
சீஸ் மற்றொரு விதத்திலும் உதவக்கூடும். அதை மென்று சாப்பிடுவது உமிழ்நீர் அதிகமாக உற்பத்தியாகத் தூண்டுகிறது. உமிழ்நீர் பற்கள் மற்றும் வாயிலுள்ள அதிகப்படியான சர்க்கரையை அகற்ற உதவுகிறது. வாயில் உற்பத்தியாகும் அமிலத்தின் தாக்கத்தையும் அது நடுநிலையாக்குகிறது.
நொதிக்கப்பட்ட உணவுகளும் உதவியாக இருக்கக்கூடும். அவற்றில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களோடு போட்டியிடும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளன.
உதாரணமாக, சமீபத்திய ஓர் ஆய்வு மதிப்பாய்வில், நொதிக்கப்பட்ட பால் பானமான கேஃபிர் (kefir), சில தீங்கு விளைவிக்கும் வாய்வழி பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் என்பது கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியாக்கள் பயோஃபில்ம் (biofilm) எனப்படும் ஒட்டும் படலத்தை உருவாக்குவதையும் அது தடுக்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
ஒரே சிறந்த உணவு என எதுவுமில்லை
இருப்பினும், வாய் ஆரோக்கியத்திற்கென பிரத்யேகமான 'சூப்பர்ஃபுட்' எதுவும் இல்லையென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தாலியின் கட்டானியா பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் கெய்டானோ இசோலாவின் கூற்றுப்படி, நாம் ஒட்டுமொத்தமாக எந்த வகை உணவுகளைச் சாப்பிடுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் வாயிலுள்ள பாக்டீரியாக்களால் எளிதில் உடைக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகளை நாம் அடிக்கடி சாப்பிட்டால், அமிலத்தை உற்பத்தி செய்வதிலும் அதைத் தாங்கிக் கொள்வதிலும் திறன் கொண்ட நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு அது ஊக்கமளிக்கிறது. காலப்போக்கில், இது வாயிலுள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையைச் சீர்குலைக்கக்கூடும்.
மாறாக, முழுமையான தாவர உணவுகள், நார்ச்சத்து மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை குறைவாகவும் உள்ள உணவுமுறை, வாய்வழி நுண்ணுயிர்த் தொகுப்பின் சமநிலைக்குச் சிறந்ததாக இருக்கலாம். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக அதிக காய்கறிகள், முழுப் பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களைச் சாப்பிட வேண்டும் என்பதுதான் இசோலாவின் எளிய அறிவுரை.
மத்திய தரைக் கடல் உணவுமுறை இதற்கு நல்ல உதாரணம். ஏனெனில், இதில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இசோலாவும் பங்கேற்ற சமீபத்திய ஓர் ஆய்வில், மத்திய தரைக் கடல் உணவுமுறையை மிகவும் நெருக்கமாகப் பின்பற்றியவர்களுக்கு ஈறு நோயின் தீவிரம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.
புரதம், போர்ஃபைரோமோனஸ் ஜிங்கிவாலிஸ் (Porphyromonas gingivalis) போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான சூழலை வாயில் உருவாக்க உதவக்கூடும் என்பது ஒரு சாத்தியக்கூறு.

பட மூலாதாரம், Getty Images
பல் துலக்குவதும் பல் இடுக்குகளைச் சுத்தம் செய்வதும் முக்கியம்
உங்கள் உணவுப் பழக்கங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அவை பற்களைத் துலக்குவதற்கும் பல் இடுக்குகளைச் சுத்தம் செய்வதற்கும் மாற்றாக இருக்க முடியாது. பல் இடுக்குகளைச் சுத்தம் செய்வது, பல் சொத்தையுடன் தொடர்புடைய எஸ். மியூட்டன்ஸ் (S. mutans) போன்ற பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைவதுடன் தொடர்புடையதாக உள்ளது.
அதே வேளையில், பற்களையும் நாக்கையும் துலக்குவது, பல் மற்றும் ஈறு நோய்களுடன் தொடர்புடைய பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கக்கூடும். வாய் கொப்பளிக்கும் திரவத்தைப் பொருத்தவரை, பொதுவாகக் கிடைக்கும் வாய் கொப்பளிக்கும் திரவங்கள் நீண்ட காலத்தில் வாய்வழி நுண்ணுயிர்த் தொகுப்பில் ஏற்படுத்தும் விளைவுகளை விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.
எதிர்காலத்தில், வாயிலுள்ள அனைத்து பாக்டீரியாக்களையும் அழிப்பதற்குப் பதிலாக, நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கும் இடையிலான சமநிலையைப் பராமரிக்க உதவும் வகையில் வாய் கொப்பளிக்கும் திரவங்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், குளோர்ஹெக்சிடின் (chlorhexidine) கொண்ட சில வாய் கொப்பளிக்கும் திரவங்கள், வாயிலுள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையைச் சீர்குலைப்பது அறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவற்றை குறுகிய காலத்திற்குப் பயன்படுத்துவது ஈறு நோய் மற்றும் வேறு சில வாய்வழிப் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவியாக இருக்கக் கூடும்.

பட மூலாதாரம், Getty Images
அப்படியானால் என்ன சாப்பிடுவது?
வாய்வழி நுண்ணுயிர்த் தொகுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க குறிப்பிட்ட ஒரு 'சூப்பர் உணவு' எதுவும் தேவையில்லை. மிக முக்கியமான விஷயம், நம் ஒட்டுமொத்த உணவுமுறையும் சமநிலையானதாக இருக்க வேண்டும் என்பதுதான்.
நிறைய காய்கறிகளைச் சாப்பிடுங்கள், குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகளைச் சாப்பிடுங்கள். முழு பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் போதுமான அளவு புரதத்தைச் சாப்பிடுங்கள். சீஸ், தேநீர் மற்றும் நொதிக்கப்பட்ட உணவுகளும் சமநிலையான உணவுமுறையின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
மறுபுறம், சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் அடிக்கடி சாப்பிடும் சர்க்கரை நிறைந்த உணவுகளைக் குறைப்பது நல்லது.
லாரா வைரிச் கூற்றுப்படி, இந்த அறிவுரை எளிமையானதாகத் தோன்றலாம். ஆனால், இதுதான் மிகவும் முக்கியமானது. சமநிலையான உணவுமுறையைப் பின்பற்றுங்கள், நிறைய காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள், போதுமான புரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள், சர்க்கரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள், குறிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களைத் தவிருங்கள்.
பற்களைத் துலக்குவதையும், பல் இடுக்குகளைச் சுத்தம் செய்வதையும் மறந்துவிடாதீர்கள். ஏனெனில், நமது வாயில் வாழும் இந்தச் சிறிய உயிரினங்களை நம்மால் பார்க்க முடியாது. ஆனால், நாம் சாப்பிடுவது அவற்றையும் பாதிக்கிறது.
எனவே, அடுத்த முறை உங்கள் தட்டில் பச்சைக் காய்கறிகள் நிறைந்த சாலட், அதனுடன் சிறிது சீஸ் மற்றும் ஒரு கப் சூடான தேநீர் இருக்கும்போது, இதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த உணவு உங்கள் உடலுக்காக மட்டுமல்ல. உங்கள் வாயில் வாழும் நன்மை தரும் பாக்டீரியாக்களும் இதனால் மகிழ்ச்சியடையக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































