டெல்லியில் இரு பெண் பத்திரிகையாளர்களை போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், X/4PM News Network
டிஜிட்டல் செய்தி ஊடகமான '4பிஎம்'-க்காக பணியாற்றும் இரு பெண் பத்திரிகையாளர்கள், டெல்லி காவல்துறை தங்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களது 'முஸ்லிம்' அடையாளம் காரணமாகவே தாங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ரேகா குப்தா பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பான வீடியோவை அவர்கள் பதிவு செய்துகொண்டிருந்தபோது, போலீசார் அவர்களிடம் கேள்வி எழுப்பத் தொடங்கியதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செப்டம்பர் 3ஆம் தேதியன்று டெல்லி சாகேத் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரேகா குப்தாவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்துகொண்டிருந்தார்.
பெண் பத்திரிகையாளர்கள் எழுப்பிய இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி காவல் துறையின் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக டெல்லி காவல் துறையின் தரப்பு கருத்துகளைப் பெறத் தொடர்புகொள்ள முயன்ற போதிலும், இந்தச் செய்தி எழுதப்படும் வரை அவர்களைத் தொடர்புகொள்ள இயலவில்லை.
முழு விவரம் என்ன?
இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் ஷாகீன் கானின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், டெல்லி காவல்துறையினர் தம்மையும் தமது தோழியையும் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீடியோவில் டெல்லி காவல்துறையைக் குற்றம் சாட்டி ஷாகீன் பேசுகையில், "முழுமையாக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் என் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகுகூட, எனது பெயர் என்னவென்று கேட்கப்படுகிறது" என்று கூறுகிறார்.
மேலும் அவர், "ஒரு முதலமைச்சரிடம் கேள்வி கேட்பதற்கான தண்டனை இது, உள்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்பதற்கான தண்டனை இது, டெல்லி காவல்துறை தங்களது கோபத்தை எங்கள் மீது காட்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
வீடியோவில் தனது உடலில் ஏற்பட்டுள்ள காயங்களையும் அவர் காட்டுகிறார். தமக்கும் தமது தோழிக்கும் காவல்துறையினரின் தடிகளால் காயங்கள் ஏற்பட்டதாக ஷாகீன் கூறினார். ஆனாலும், இந்தக் காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.
இதுகுறித்து சாகேத் காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ள முயன்ற போதும் அந்த முயற்சி பலன் தரவில்லை. கூடுதல் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இங்கு புதுப்பிக்கப்படும்.
டெல்லி காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில் ஷாகீன் கான் குறிப்பிட்டு இருப்பதாவது, செப்டம்பர் 3ஆம் தேதி காலை சுமார் 11:30 மணியளவில் அவர் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதி வழக்கத்தைவிட மிகவும் தூய்மையாக இருப்பதாக உணர்ந்துள்ளார்.
அதுகுறித்து விசாரித்துப் பார்த்தபோது, மேக்ஸ் மருத்துவமனையின் புதிய கட்டடத்தைத் திறந்து வைக்க முதலமைச்சர் ரேகா குப்தாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வருகை தரவுள்ளதால் இந்தத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அவருக்குத் தெரிய வந்துள்ளது.

பட மூலாதாரம், X/4PM News Network
தானும் தனது தோழி நபீசாவும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்து மிகத் தொலைவில் இருந்ததாக ஷாகீன் கூறுகிறார். இந்தத் தூய்மைப் பணிகளைக் கண்ட அவர்கள், முதலமைச்சரின் கட்-அவுட் முன்பாக நின்று ஒரு செல்ஃபி வீடியோ எடுத்துள்ளனர். "வழக்கமாக அப்பகுதி இவ்வளவு தூய்மையாக இருப்பதில்லை என்றும், காவல் நிலையம் மற்றும் மருத்துவமனைக்கு வெளியிலும் குப்பைகள் இருக்கும் நிலையில், இன்று விஐபி வருகைக்காக மட்டும் இந்தப் பகுதி முழுமையாகத் துப்புரவு செய்யப்பட்டுள்ளது" என்றும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் சில கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் தனது புகாரில் மேலும் கூறியிருப்பதாவது, "அப்போது பின்னால் வந்த பல காவல் அதிகாரிகள் எங்களை மிரட்டி எங்களது செல்போனை பறிக்க முயன்றனர். கேமரா முன்பாகவே நான் இதை எதிர்த்தபோது, சில பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர்."
தங்களை மிரட்டிய மற்றும் தொலைபேசியைப் பறித்த காவலர்களைப் பார்த்தால் அடையாளம் காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
காவல்துறையினர் தங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தங்களது மத அடையாளம் காரணமாகவே தாங்கள் கூடுதல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல் நிலையத்தில் தாங்கள் மருத்துவ உதவி கோரியபோதும் அது உடனடியாக வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், 112 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்த பின்னரே தனக்கு அந்த உதவி கிடைத்ததாகவும், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான அறிக்கை சாகேத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்
இதற்கிடையே, இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, இந்திய மகளிர் பிரஸ் கார்ப்ஸ், டெல்லி பத்திரிகையாளர்கள் சங்கம், பிரஸ் அசோசியேஷன், கேரள ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
ஷாகீன் கான் மற்றும் நபீசா கான் மீது 'கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய' சாகேத் காவல் நிலையத்தின் எஸ்.ஹெச்.ஓ (SHO) உள்ளிட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரஸ் கிளப் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், காவல்துறையினர் இருவரிடமும் அவர்களின் மத அடையாளத்தைக் கேட்டறிந்து, அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்பான அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தங்களைத் தாக்கியதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
'4பிஎம்' செய்தி நெட்வொர்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஷாகீன் கான் தனியாக இல்லை என்றும், இது தொடர்பாக இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 3ஆம் தேதி இரவில் ஏராளமான பத்திரிகையாளர்கள் சாகேத் காவல் நிலையத்திற்கு வெளியே திரண்டு, இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். இந்தச் சம்பவம் குறித்துப் பல பத்திரிகையாளர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
'தி இந்து' ஆங்கில நாளிதழின் சர்வதேச விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் சுஹாசினி ஹைதர் எழுதியுள்ள பதிவில், "இது மிகவும் கண்டிக்கத்தக்கது. டெல்லி காவல்துறை உடனடியாக இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமென நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும் யூடியூபருமான அஜீத் அஞ்சும் தனது பதிவில், "ஷாகீன் மற்றும் நபீசா மீது தடிகளால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்வாறாயினும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஒரு செய்தியாளருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அரசியல் தலைவர்களின் எதிர்வினைகள்
இந்தச் சம்பவம் குறித்துப் பல தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் மாணவர் அமைப்பான ஐசா (AISA)-வின் தலைவர் நேஹா போரா, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தச் சம்பவத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதையும், டெல்லி காவல்துறை பொறுப்பேற்பதையும் உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது உண்மையை வெளிப்படுத்தியதற்காக இரு முஸ்லிம் பெண் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட வகுப்புவாதத் தாக்குலே தவிர வேறு ஒன்றும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இக்ரா ஹசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டெல்லி காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் சட்டம் மற்றும் சட்டத்தின் விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானவை. 4பிஎம் ஊடகத்தின் பெண் பத்திரிகையாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, அவரது பெயரைக் கேட்டு மதத்தின் அடிப்படையில் வன்முறையைக் காட்டுவது மிகவும் வெட்கக்கேடானது, கவலை அளிக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையின் இந்தச் செயல்பாடு, ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் ஆட்சி மீதும் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இம்ரான் பிரதாப்கடி தனது எக்ஸ் பதிவில், "இன்று 4பிஎம் ஊடகத்தின் பெண் பத்திரிகையாளர் மகள்களை போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர், அந்த மகள்களிடம் தொலைபேசியில் பேசினேன், அவர்கள் விவரித்த சம்பவங்கள் மிகவும் வேதனையானவை. முதலமைச்சரிடம் கேள்வி கேட்ட இந்த மகள்களிடம் சாகேத் போலீசார் நடந்துகொண்ட முறையும், பின்னர் பெயர் கேட்டுத் தாக்குதல் நடத்திய விதமும் காவல்துறையின் செயல்பாட்டு முறையே கேள்விக்கு உள்ளாக்குகிறது" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா எக்ஸ் பதிவில், "டெல்லியின் முதலமைச்சர் குறித்துக் கேள்வி கேட்டதற்காகப் பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இவர்களில் ஒருவர் முஸ்லிம் பெண் என்பதை போலீசார் அறிந்தவுடன் தாக்குதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இது ஜனநாயகமா அல்லது இது காவல் துறையின் ராஜ்ஜியமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "பெண்கள் அதிகாரமளித்தல் பற்றி முழக்கமிடும் பிரதமர் மோதியின் சொந்த நான்கு என்ஜின் அரசின் முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? முதலமைச்சர் ரேகா குப்தாவிடம் கேள்வி கேட்டார் என்பதற்காகவே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறை பெண் பத்திரிகையாளரை மிக மோசமாகத் தாக்கியுள்ளது. மோதி ஆட்சியில் பெண் பிள்ளைகளின் குரல் இதே போலத்தான் எப்போதும் அடக்கப்படுமா என்ற நியாயமான கேள்வி எழுந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































