தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா அதிமுக சார்பில் வென்ற எம்எல்ஏ பதவியை மீண்டும் கோருவது ஏன்?

6 எம்எல்ஏக்கள் ராஜிநாமா; இசக்கி சுப்பையா மட்டும் வாபஸ் பெற மனு செய்ததன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Facebook/Esaki subaya

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அம்பாசமுத்திரம் தொகுதி உட்பட 6 தொகுதிகள் காலியாக இருப்பதாக சட்டப்பேரவை கூறிய அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டுமென்ற அதிமுக சார்பில் தாக்கலான வழக்கு முடியும்வரை, தனது ராஜிநாமா கடிதத்தை நிறுத்தி வைத்து, சட்டப்பேரவை உறுப்பினராக பணியில் தொடர அனுமதிக்க வேண்டுமென்று இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனு, நீதிமன்றத்தாலும் சட்டப்பேரவையாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்க மனு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது, அங்கு இடைத்தேர்தல் நடத்துவது நீதிமன்ற மறு ஆய்வை முடக்கி, சரி செய்யமுடியாத நிலையை உருவாக்குமென்று அதிமுக வாதிட்டு வரும் நிலையில், இந்த வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனு, ''இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்திருப்பதை உறுதி செய்திருப்பதாக'' அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

எந்தவொரு பலனும் இருக்காது என்று தெரிந்தே இந்த மனுவை அவர் அரசியலுக்காக தாக்கல் செய்ததாக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, வழக்கறிஞர் தமிழ்மணி ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் ராஜிநாமா செய்துவிட்ட நிலையில், இடைத்தேர்தலும் தள்ளிப் போவதால் தொகுதி மக்களின் நலனுக்காக இந்த மனுவை தாக்கல் செய்ததாக பிபிசியிடம் கூறினார் இசக்கி சுப்பையா.

மே 4 எம்எல்ஏ; மே 26 ராஜிநாமா; செப்டெம்பர் 1 வாபஸ் பெற மனு!

மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்
படக்குறிப்பு, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஒரே மாதத்துக்குள் ராஜிநாமா செய்து விட்டு, ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக் கொள்வதாக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். அதனால் 6 தொகுதிகள் காலியாக இருப்பதாக சட்டப்பேரவையால் அறிவிக்கப்பட்டது.

அதற்கு முன்பே அவர்களை கட்சித்தாவல் தடைச் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று, அதிமுக சார்பில் சட்டப்பேரவை தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 6 பேருடைய ராஜிநாமாக்களை ஏற்கக்கூடாது என்று கூறிய அதிமுக, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று கோரி, உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி இருவரும் தனித்தனியாக இந்த கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இவ்வழக்கின் விசாரணையில், உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்புகளின்படி வழக்குகள் முடியும்வரை இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கில் தீர்ப்பு வராத நிலையில், 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவது தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. இதனால் இந்தத் தொகுதிகள் மற்றும் முதல்வர் விஜய் வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் அவர் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியை சேர்த்து 7 தொகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது பதவியை ராஜிநாமா செய்த இசக்கி சுப்பையா சார்பில் உயர்நீதிமன்றத்தில் செப்டெம்பர் 1 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மே 26 அன்று தனது ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட சட்டப்பேரவை தலைவரின் முடிவை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அதில், ''நான் தானாக ராஜிநாமா செய்தது உண்மை. இந்திய அரசியலமைப்புச் சட்டம், சட்டமன்ற விதிகள் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டப்பேரவை தலைவர் அதனைச் சரியான முறையில் ஏற்றுக்கொண்டார். என்னைப் போன்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜிநாமாக்கள் ஏற்கப்பட்டதை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது.'' என்று கூறியுள்ளார்.

''எனது ராஜிநாமாவைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, என் மீது தகுதி நீக்க நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு, சட்டப்பேரவை தலைவரிடம் இன்னும் நிலுவையில் உள்ளன. எனது ராஜிநாமாவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனு காரணமாக சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு ஜூலை 10 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை உள்ளது. தொடர்ச்சியான தாமதங்கள் மற்றும் நீண்டகால சட்டப் போராட்டங்கள் காரணமாக, சட்டமன்றத்தில் ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவம் பெறும் உரிமையை வாக்காளர்கள் இழந்துள்ளனர். இது உள்ளாட்சி நிர்வாகம், பொது நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.''

''பிரதிநிதித்துவம் இல்லாத சூழலையும், தொகுதியின் அவசரத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளின் இறுதி முடிவுக்கு உட்பட்டு, எனது பணிகளை மீண்டும் தொடரவும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகத் தொகுதிக்குச் சேவை செய்யவும் அனுமதிக்குமாறு நான் ஆகஸ்ட் 29 அன்று சட்டப்பேரவை தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன். அப்படி இல்லாவிட்டால் மே 26, 2026 தேதியிட்ட எனது ராஜிநாமா கடிதத்தைத் திரும்பப் பெறவும், சட்டமன்றத்தில் எனது உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்கவும் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.'' என்றும் அந்த மனுவில் இசக்கி சுப்பையா குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய இந்த மனுவை ஏற்க முடியாது என்று தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு மறுத்துவிட்டது. வாய்மொழி வாதங்கள் தொடங்கிய பின்பு, புதிய மனுக்களையோ அல்லது கூடுதல் ஆவணங்களையோ தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் ஏற்கனவே விசாரணையில் உள்ளதால், நாங்கள் எதையும் எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று தலைமை நீதிபதியும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று சட்டப்பேரவையும் இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க மறுத்துவிட்டது.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலர் அனுப்பிய பதில் கடிதத்தில், ''ராஜிநாமாவை இசக்கி சுப்பையா வாபஸ் பெற முடியாது. ராஜிநாமாவை திரும்ப பெற விதியில்லை. அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு. ராஜிநாமா கடிதத்தை வாபஸ் பெற முடியாது." என்று தெரிவித்திருந்தார்.

சட்டப்பேரவை தலைவர்

பட மூலாதாரம், Facebook/Esaki subaya

சரி செய்ய முடியாத நிலை என்றால் என்ன?

இருப்பினும் இசக்கி சுப்பையாவின் இந்த மனு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. அதிமுக இதை கடுமையாக விமர்சித்தது.

அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளருமான இன்பதுரை, தனது எக்ஸ் தள பதிவில் ''இது குதிரை பேரத்துக்கு துணை போன செயல்'' என்று விமர்சித்திருந்தார்.

அவருடைய பதிவில், ''பெருந்துறை ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, இரண்டு விஜயபாஸ்கர்கள் உள்ளிட்ட ஆறு அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை சட்டப்பேரவை தலைவர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஏற்றது தவறு. அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்ட புகார் நிலுவையில் உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தொகுதிகள் காலியானதாக அவசர அவசரமாக அறிவித்தது குதிரை பேரத்துக்கு துணை போன செயல். எனவே மேற்கண்ட 6 தொகுதிகள் காலியானதாக தமிழக சட்ட பேரவை வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற முதலாம் அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது பாலா சாகேப் வழக்கின் தீர்ப்புக்கு எதிராகி, நீதிமன்ற மறுஆய்வை முடக்கி, ஒரு மாற்ற முடியாத நிலையை உருவாக்கிவிடும் என அதிமுக சார்பில் வாதிடப்பட்டு வருகிறது'' என்று கூறியிருந்தார்.

மேலும், ''தனது ராஜிநாமாவை நிறுத்தி வைத்து, மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தன்னை செயல்பட அனுமதிக்க வேண்டும் என ஆகஸ்ட் 29 அன்று சட்டப்பேரவை தலைவரிடம் மனு அளித்துள்ளதாக இசக்கி சுப்பையா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அந்த மனுவை ஏற்க மறுப்பதாகத் தெரிவித்திருந்தாலும், தவெக அரசின் அரசியல் தூண்டுதல் மற்றும் குதிரை பேரம் குறித்து அதிமுக எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளை இசக்கி சுப்பையாவின் இந்த மனு மேலும் உறுதிப்படுத்துகிறது.'' என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், சட்டப்பேரவை தலைவரின் முன்பாக நேரில் வந்து தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்கும்போது அதை ஏற்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு.

அரசியல் சாசனப்படியே இதில் சட்டப்பேரவை தலைவர் முடிவு எடுக்க முடியுமென்றும் கூறிய அவர், ஒரு முறைக்கு இரு முறை சம்பந்தப்பட்ட உறுப்பினரின் முடிவை கேட்டுக் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, அதை வைத்துக்கொண்டு மிரட்டக்கூடாது என்றார்.

பிபிசியிடம் பேசிய அப்பாவு, ''அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமாவை பொறுத்தவரை அது அப்போதே முடிந்து போன விஷயம். ஆனால் அதிமுக கொறடா சார்பில் தவெகவை ஆதரித்த 25 சட்டப்பேரவை உறுப்பினர்களை கட்சித்தாவல் தடைச்சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று சட்டப்பேரவை தலைவரிடம் கடிதம் தரப்பட்டதுடன் அது தொடர்பாக வழக்கும் தாக்கலானதால் குழப்பம் ஏற்பட்டது.'' என்றார்.

டிடிவி தினகரனுடன் சென்ற 19 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக சார்பில் சட்டப்பேரவை தலைவரிடம் கடிதம் தரப்பட்ட பின்பு ஜக்கையன் மட்டும் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததையும், அவரைத் தவிர மற்றவர்களின் பதவி கட்சித்தாவல் தடைச்சட்டப்படி பறிபோனதையும் அப்பாவு விளக்கினார்.

''ராஜிநாமா கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஏற்க மறுக்கவும் ஒரு வகையில் அதிகாரம் உள்ளது. ஆனால் அவர் அதற்கு உரிய காரணம் சொல்ல வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு அழுத்தத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. சொந்த முடிவாகத் தெரியவில்லை, இதில் சந்தேகம் உள்ளது என்று அதை ஏற்க மறுத்து நிறுத்தி வைக்கலாம். ஆனால் பெரும்பாலும் சட்டப்பேரவை தலைவராக இருப்பவர்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக வரும் ஒருவரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதே வழக்கமாகவுள்ளது.'' என்றும் கூறினார் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு.

''கட்சி மாறிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று அதிமுக கடிதம் கொடுத்த நிலையில், ராஜிநாமா கடிதங்களை பரிசீலிப்பதாக சட்டப்பேரவை தலைவர் நிறுத்தி வைத்திருக்கலாம். ஆனால் எப்படியும் 15 நாட்களுக்குள் அதில் முடிவெடுக்க வேண்டும். கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் உங்கள் விவகாரம் இருக்கிறது என்று கூறியிருக்கலாம். உடனே ஏற்றுக்கொண்டதால் வழக்கு தாக்கலாகியுள்ளது.'' என்றார் அவர்.

முன்னாள் சபாநாயகர் அப்பாவு (கோப்புப் படம்)

பட மூலாதாரம், X/AppavuexSpeaker

படக்குறிப்பு, அப்பாவு

''நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் மே 13 அன்று வாக்களித்தனர். மறுநாளே நாங்கள் கட்சித்தாவல் தடைச் சட்டப்படி அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று கடிதம் கொடுத்து விட்டோம். அதற்குப் பின்பே 6 பேரும் ராஜிநாமா கடிதம் கொடுத்தனர். கீழே கடிதம் கொடுத்துவிட்டு மேலே போய் தவெகவில் சேர்ந்துவிட்டனர். அதை எதிர்த்தே நாங்கள் வழக்குத் தொடுத்தோம். அங்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று நீதிமன்றத்திடம் கோரியுள்ளோம். வழக்கு நடந்து வருகிறது.'' என்றார் அதிமுக கோவை மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் எஸ்.ஜி கனகராஜ்

''தகுதி நீக்கம் தொடர்பான மனு விசாரணையில் இருக்கும்போது, இடைத்தேர்தல் நடத்தி புதிதாக ஒருவர் தேர்ந்து எடுக்கப்பட்டால் சரி செய்ய முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும். ஒரு வேளை தகுதி நீக்கம் செல்லாது என்று அறிவித்தால் ஒரே நேரத்தில் ஒரு தொகுதிக்கு இரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ள சூழ்நிலை ஏற்படும். அதுதான் சரி செய்ய முடியாத சூழ்நிலை எனப்படுகிறது. இதைச் செய்யக் கூடாது என்பதுதான் மகாராஷ்டிராவின் பாலா சாகேப் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.'' என்றார்

அரசியலுக்காக தாக்கல் செய்யப்பட்டதா இசக்கி சுப்பையாவின் மனு?

தன்னிடம் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் நேரடியாக வந்து கடிதம் கொடுக்கும்போது அந்த கையெழுத்து அவருடையதுதானா என்பதை மட்டும் பார்த்துக்கொண்டு ஏற்பதுதான் தங்களுக்கான அதிகாரம் என்று சட்டப்பேரவை தலைவர் தரப்பில் வாதிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், ''ஆனால் நாங்கள் அது நியாயமான விசாரணை இல்லை என்கிறோம். இசக்கி சுப்பையாவின் மனுவே குதிரை பேரம் நடந்திருக்கிறது என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம். அவர் சரியான மனநிலையில் இந்த முடிவை எடுத்தாரா என்பதும் எங்கள் சந்தேகம்.'' என்றார்.

ஆனால் எல்லா காலகட்டங்களிலும் ஓர் அரசியல் விவகாரத்தை சட்டப்பூர்வமாக நீக்க முடியாது என்று கூறுகிறார் மூத்த வழக்கறிஞரும் அரசியல் விமர்சகருமான தமிழ்மணி.

பிபிசியிடம் பேசிய அவர், ''இசக்கி சுப்பையா அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்க்க இந்த மனுவை தாக்கல் செய்தார். அதுவும் ஆரம்ப நிலையிலேயே ஏற்கப்படவில்லை. இசக்கி சுப்பையா ஏற்கெனவே டிடிவி தினகரனுடன் சென்றபோதும் பதவி இழந்திருக்கிறார்.'' என்றார்.

பிபிசியிடம் பேசிய முன்னாள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ''சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் எந்தக் காரணத்துக்காக ராஜிநாமா செய்தாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அவர்களின் பதவி பறிபோகும். ஆனால் கட்சித்தாவல் தடைச்சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்படும்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் சில சலுகைகளும் கிடைக்காமல் போய்விடும். அதேபோன்று மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதிலும் சில சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.'' என்றார்.

இசக்கி சுப்பையா தனது ராஜிநாமா கடிதத்தை கொடுத்தபோது எடுத்த புகைப்படம்

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, இசக்கி சுப்பையா தனது ராஜிநாமா கடிதத்தை கொடுத்தபோது எடுத்த புகைப்படம்

ராஜிநாமாவை வாபஸ் பெறும் மனுவை தாக்கல் செய்தது தொடர்பாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார் அம்பாசமுத்திரம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான இசக்கி சுப்பையா.

''நானாகத்தான் என் பதவியை முறைப்படி ராஜிநாமா செய்தேன். சட்டப்பேரவை தலைவரும் அதை ஏற்றுக்கொண்டு தொகுதி காலியாக இருப்பதாகக் கூறிவிட்டார். அதன்பின்பே அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எங்கள் ராஜிநாமாவை ஏற்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். அதில் நீதிமன்றம் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது. அதனால் நான் ராஜிநாமா செய்தது செல்லுமா செல்லாதா என்ற கேள்வி எழுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வது ஏற்கப்படுவதாக இருந்தால் தொகுதியை காலியாக அறிவித்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஏற்கவில்லையென்றால் வழக்கு முடியும்வரை எனது பணியைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்பதே எனது மனு.'' என்றார் இசக்கி சுப்பையா.

''என்னுடைய இந்த மனு ஏற்கப்படாவிட்டாலும் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் முன்வந்துள்ளது. எது வந்தாலும் பரவாயில்லை. ஒரு முடிவு எட்டப்பட வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு. எங்களுடைய நிலைப்பாட்டை கட்சி கேட்கவில்லையென்றுதான் ராஜிநாமா செய்தேன். தொகுதி மக்களின் நலன் கருதியே இப்போது அதைத் திரும்பப் பெறுவதாக மனு தாக்கல் செய்தேன். இதில் எந்த அரசியலும் இல்லை. நான் மனு தாக்கல் செய்தபின்புதான் இந்த வழக்கு முடிவுக்கு வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு