You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா - பின்னணியில் நடந்தது என்ன?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கட்சி மேலிடத்திற்கு அளித்த வாக்குறுதியின்படி கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் மேலிடத்தின் பேச்சை ஏற்றுக்கொண்டு தான் பதவி விலகப் போவதாக சித்தராமையா குறிப்பிட்டிருந்தார்.
மாநில முதலமைச்சராக 2013 முதல் 2018 வரை ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதலமைச்சராகப் பணியாற்றிய சித்தராமையா, மே 20 அன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தின் மூன்றாண்டுகளை நிறைவு செய்தார்.
ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, சித்தராமையா தனது ராஜிநாமா கடிதத்தை கர்நாடக ஆளுநரின் சிறப்புச் செயலாளர் பிரபு சங்கரிடம் கொடுத்துவிட்டார். ஏனெனில், மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று இரவுதான் வெளியூரில் இருந்து திரும்புகிறார்.
தனது ராஜிநாமாவை அறிவித்த சித்தராமையா, "நான் இன்று எனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
சித்தராமையாவும் டி.கே. சிவக்குமாரும் உணர்ச்சிவசப்பட்ட தருணம்
கர்நாடக மாநிலத்தில் தற்போது அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
வியாழக்கிழமையன்று தனது அமைச்சரவை சகாக்களுடன் நடந்த காலை உணவு சந்திப்பு உணர்வுபூர்வமான ஒரு திருப்பத்தை அடைந்தது.
சித்தராமையாவைத் தழுவி அணைத்த டி.கே. சிவகுமார், அவரது பாதங்களைத் தொட்டு வணங்கியபோது உணர்ச்சிவசப்பட்டார்.
நண்பகலில் முடிவடைந்த காலை உணவு சந்திப்பைத் தொடர்ந்து, தனது பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அமைச்சர், பிபிசியிடம், "சித்தராமையாவின் ஆசீர்வாதத்தை சிவகுமார் பெற்றார்" எனத் தெரிவித்தார்.
மற்றொரு அமைச்சர், "அமைச்சர்கள் தனக்கு ஒத்துழைப்பு அளித்ததற்கு சித்தராமையா நன்றி தெரிவித்தபோது, சில அமைச்சர்களின் கண்களில் கண்ணீர் ததும்பியது" என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத அந்த அமைச்சர், "ஒரு கட்டத்தில் அவரே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்" என்று கூறினார்.
இன்று பிற்பகல் மூன்று மணிக்கு, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்திக்க சித்தராமையாவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த சந்திப்பில், முதலமைச்சர் சித்தராமையா முறைப்படி தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், நேற்று இரவு 11 மணி 45 நிமிடங்களுக்கு ஆளுநர் திடீரென புறப்பட்டுச் சென்றதால், சித்தராமையா திட்டமிட்டபடி ஆளுநரை சந்திக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தராமையா ராஜிநாமா செய்ய எடுத்த முடிவு அவரது தீவிர ஆதரவாளர்கள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் பிபிசியிடம், "சித்தராமையா ராஜிநாமா செய்ய எடுத்த முடிவால் கட்சி எங்கள் எம்.எல்.ஏ-க்களும் தொண்டர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர், புதன்கிழமை காலை முதல் ஏராளமானோர் அவரைச் சந்திப்பதற்காக வந்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.
"கட்சி எப்போது விலகச் சொன்னாலும் பதவியைத் துறப்பேன் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு அளித்த வாக்குறுதியைத் தான் நிறைவேற்றிவிட்டதாக சித்தராமையா தொடர்ந்து அனைவரிடமும் கூறி வருகிறார்" என முன்னாள் அமைச்சர் ஆர்.வி. தேஷ்பாண்டே தெரிவித்தார்.
முதலமைச்சர் பதவி தொடர்பாக நீடித்து வந்த இழுபறியைத் தீர்ப்பதற்காக, ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சித்தராமையா மற்றும் சிவக்குமாருடன் கலந்தாலோசித்தார்.
224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 136 இடங்களைக் கைப்பற்றி, அக்கட்சி ஆட்சி அமைத்திருந்தது. 2023-ஆம் ஆண்டு தேர்தலில் கட்சி வெற்றி பெற்ற சமயத்தில் சித்தராமையா அளித்த வாக்குறுதியை அவர் மதித்து நடக்க வேண்டும் என்று சிவக்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அரசியலில் ஈடுபட மறுத்த சித்தராமையா
சித்தராமையாவுடனான சந்திப்பின் போது, அவரை மாநிலங்களவைக்கு சென்று மத்திய அரசுக்கு எதிராகப் பங்காற்றுமாறு ராகுல் காந்தி பரிந்துரைத்ததாகக் கட்சி வட்டாரங்கள் பிபிசியிடம் உறுதிப்படுத்தின.
இருப்பினும் பல காரணங்களைக் கூறி அந்த யோசனையை சித்தராமையா நிராகரித்துவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு உரையாடலின் போது பிபிசி செய்தியாளரிடம் பேசிய சித்தராமையா, "எனக்கு தேசிய அரசியலில் ஆர்வம் இல்லை. முதலமைச்சர் நாற்காலியை காலி செய்யச் சொன்னாலும், நான் மாநிலத்திலேயே தான் இருப்பேன்" என்று கூறியிருந்தார்.
நித்தே அகாடமியின் இயக்குநரும் அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் சந்தீப் சாஸ்திரி பிபிசியிடம், "கர்நாடக அரசியலில்தான் அவருடைய வேர்கள் உள்ளன. இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனையாக இருக்கும் டெல்லி கலாசாரத்திற்கு அவர் பழக்கமானவர் அல்ல" என்றார்.
"1996-இல் ஹெச்.டி. தேவகவுடா பிரதமரானபோது, டெல்லியில் இருந்தவர்களின் முதல் கேள்வி அவருக்கு இந்தி பேசத் தெரியுமா என்பதாகவே இருந்தது என்பதை நினைவுகூரலாம்."
மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என்ற பரிந்துரை, முதலமைச்சர் பதவியிலிருந்து தான் விலக வேண்டியிருக்கும் என்பதற்கான முதல் அறிகுறியாக சித்தராமையாவுக்கு அமைந்தது.
சித்தராமையாவிற்கு தற்போது 78 வயதாகிறது, சிவக்குமாருக்கு 64 வயதாகிறது.
மொத்தமுள்ள 136 சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 100 பேரின் ஆதரவு சித்தராமையாவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
டெல்லிக்குச் சென்றிருந்த தனது அமைச்சரவை சகாக்களிடம் பேசிய சித்தராமையா, தான் எப்போதும் ஒரு நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருவதாகக் கூறினார்.
"ராகுல் காந்தி என்னை எப்போது ராஜிநாமா செய்யச் சொன்னாலும் நான் அதைச் செய்வேன் என எப்போதும் கூறி வந்திருக்கிறேன். இப்போது அவர் பதவி விலகச் சொல்லிவிட்டதால், நான் உடனடியாக அதைச் செய்கிறேன்" என்று கூறினார். இரண்டு அமைச்சர்கள் பிபிசியிடம் இதனை உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் சாஸ்திரி, "தனக்கு விசுவாசமாக இருக்கும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஒரு ஒருங்கிணைப்பு மையமாக அவர் தொடர்ந்து திகழ்வார். அவர் நிச்சயமாக பிற்படுத்தப்படோர், தலித், சிறுபான்மையினரின் தலைவராகத் தனது தளத்தைப் பாதுகாத்துக் கொள்ளவே விரும்புவார்" என்றார்.
சித்தராமையா 'குருபா' சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், காங்கிரஸ் கட்சி பெருமளவில் ஈர்த்துள்ள அந்தச் சமூகத்தினரின் வாக்குகள் என்னவாகும் என்பதும் கவனிக்கத்தக்கது.
காங்கிரஸின் தேர்தல் வியூகம்
பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சமூக ஊடகப் பதிவு ஒன்றில், சித்தராமையாவை பதவியிலிருந்து நீக்கியதன் தாக்கம் காங்கிரஸ் கட்சியில் எதிரொலிக்கும் என்று கூறியுள்ளார்.
அவர் இதனை, "காங்கிரஸ் கட்சி, குறிப்பாக ராகுல் காந்தி பின்தங்கிய வகுப்பினருக்கு இழைத்த துரோகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"அவர் ஓபிசி பிரிவினருக்காகப் பிரசாரம் செய்து வருகிறார், ஆனால் ஒரு ஓபிசி முதலமைச்சரையே பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள். பின்தங்கிய வகுப்பினருக்காக அவர் வடித்த முதலைக் கண்ணீர் இப்போது அம்பலமாகிவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.
புதன்கிழமையன்று, முதலமைச்சராக சித்தராமையாவின் கடைசி அதிகாரப்பூர்வ நிகழ்வாக, மாநிலப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்திடமிருந்து சமூக-பொருளாதார மற்றும் கல்விசார் கணக்கெடுப்பு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு அமைந்தது.
இந்த அறிக்கை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு அளவை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப் பரிந்துரைக்கிறது. இந்த அறிக்கை தொடர்பான இறுதி முடிவை, புதிதாக அமையவுள்ள அமைச்சரவை மேற்கொள்ளும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு