கால்பந்து உலகக் கோப்பையில் முதல் முறை - ரெட் கார்டு பெற்ற அமெரிக்க வீரரின் தடை டிரம்ப் அழுத்தத்தால் நீக்கமா?

டிரம்ப், ஃபிஃபா, பலோகன், ரெட் கார்டு, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபோலரின் பலோகுன்
    • எழுதியவர், டேல் ஜான்சன்
    • பதவி, கால்பந்து செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மிக முக்கியமான, மாறாத விதிகளில் ஒன்று மாறிவிட்டது. உலகக்கோப்பை போட்டியில் ஒரு வீரருக்கு ஒருமுறை 'ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டால், அடுத்த போட்டியில் அவர் விளையாட முடியாது.

இது, எந்த காரணமும், எந்தவித மறுப்பும், எந்த மேல்முறையீடும் இல்லாத இறுதி முடிவாக இருந்தது.

ஆனால், தற்போது 2026 ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் அமெரிக்க அணியின் நட்சத்திர வீரரான ஃபோலரின் பலோகுனுக்கு காட்டப்பட்ட ரெட் கார்டை ரத்துசெய்த முடிவு, பல பதிலளிக்கப்படாத கேள்விகளை எழுப்புகிறது.

போஸ்னியா-ஹெர்சகோவினாவுக்கு எதிரான 'லாஸ்ட்-32' சுற்றில் சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்ட பலோகுன், இப்போது திங்கட்கிழமை பெல்ஜியத்திற்கு எதிராக நடக்கவிருக்கும் 'லாஸ்ட்-16' சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இந்தத் தொடரில் மூன்று கோல்கள் அடித்த பலோகுன் அமெரிக்க அணியின் அதிக கோல் அடித்த வீரராக உள்ளார்.

உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை 189 சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டுள்ளன, அதில் இரண்டு வீரர்கள் மட்டுமே இடைநீக்கத்தை அனுபவிக்காமல் தப்பியுள்ளனர்.

மற்றொரு சம்பவம் 1962 இல் நடந்தது. அப்போது பிரேசில் நாட்டின் காரின்சா, சிலிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிவப்பு அட்டை பெற்றார். ஆனால் பின்னர் அவர் இறுதிப்போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டு, செக்கோஸ்லோவாக்கியாவுக்கு எதிரான பிரேசிலின் வெற்றியிலும் பங்கேற்றார்.

இருப்பினும், அக்காலத்தில் தானியங்கி தடை விதிக்கும் முறை இல்லை. நடுவர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு குழுவே சிவப்பு அட்டை இருந்தாலும், காரின்சா விளையாட அனுமதிக்கலாம் என முடிவு செய்தது.

1962 இல் ஃபிஃபா ஒழுங்குமுறைக் குழு எடுத்த அந்த முடிவுக்கு அரசியல் தலையீடுகளே காரணம் என்றும் புகார்கள் எழுந்தன.

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கும் ஃபிஃபாவுக்கும் இடையே உள்ள நன்கு அறியப்பட்ட நெருக்கமான உறவைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொடரை இணைந்து நடத்தும் நாட்டிற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இந்த மிகவும் அசாதாரணமான முடிவு குறித்து பல கேள்விகள் எழுகின்றன.

வியாழக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவை தொலைபேசியில் அழைத்து இந்தத் தடை குறித்துப் பேசிய பிறகுதான் பலோகுனின் தடை நீக்கப்பட்டது என்பதை, அந்த உரையாடலை நன்கு அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

டிரம்ப், ஃபிஃபா, பலோகன், ரெட் கார்டு, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, Balogun was sent off following a video assistant referee review

இந்த உலகக்கோப்பையில் சிவப்பு அட்டை பெற்ற மற்ற 11 வீரர்களும் தங்களது தடையை அனுபவித்துள்ள நிலையில், பலோகுனுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

இதனால், விதிகளின்படி சிவப்பு அட்டை வழங்கப்பட்டது நியாயமானதாக இருந்தாலும், தடைத் தண்டனையைத் தவிர்க்கும் நோக்கில் கால்பந்தில் மேலும் பல மேல்முறையீடுகள் செய்யப்படுமா?

இனிவரும் உலகக்கோப்பை போட்டிகளில் சிவப்பு அட்டை காட்டப்படும்போது தொலைக்காட்சி ஒளிபரப்பில் "அடுத்த போட்டியில் விளையாடமாட்டார்" என்று கூறும்போது, ​​அது நடக்கும் என உறுதியாக சொல்லிவிட முடியுமா?

இந்த முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது, இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் என்ன, மேலும் இதன் சாத்தியமான விளைவுகள் என்ன என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

ஃபிஃபா எந்தக் காரணமோ அல்லது விளக்கமோ அளிக்கவில்லை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இப்போது பலர் எழுப்பும் முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது. "இது எப்படி சாத்தியமானது?"

"கடுமையான விதிமீறல் ஆட்டத்திற்காக" பலோகுனுக்கு "குறைந்தது இரண்டு போட்டிகள் தடை" விதிக்கப்பட வேண்டும் என்று ஃபிஃபாவின் ஒழுங்குமுறை விதிமுறை கூறுகிறது.

மேலும், உலகக்கோப்பை விதிமுறைகளின்படி, சிவப்பு அட்டைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய எந்தவொரு அணிகளுக்கும் அனுமதி இல்லை.

பலோகுனின் தடையை தற்காலிகமாக நீக்கியதற்கான எந்தவொரு காரணத்தையோ அல்லது விளக்கத்தையோ ஃபிஃபா தெரிவிக்கவில்லை. ஃபிஃபாவின் அறிக்கையில் "ஃபிஃபா ஒழுங்குமுறை விதிகளின் 27-வது பிரிவை" மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளது.

"ஒரு ஒழுங்கு நடவடிக்கையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறுத்தி வைக்க" ஃபிஃபாவிற்கு பிரிவு 27 அதிகாரம் அளிக்கிறது.

இது ஒரு பரந்த அளவிலான விதியாகும், இது வேறு எந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாமலேயே, ஃபிஃபா தான் விரும்பும் எந்த முடிவையும் எடுக்க அனுமதிக்கிறது.

இதற்கு முன்பு உலகக்கோப்பை வரலாற்றில் 27-வது பிரிவு ஒருபோதும் பயன்படுத்தப்பட்டதே இல்லை.

கூடுதலாக, ஒழுங்குமுறை விதிகளின்படி இரண்டு போட்டிகளுக்குப் பதிலாக, பலோகுனின் தற்காலிக தடை ஒரு போட்டிக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இது ஏன் நடந்தது என்று பிபிசி ஸ்போர்ட்ஸ் கேள்வி எழுப்பியது.

ஆனால் எங்களுக்கு எந்தக் காரணமும் கூறப்படவில்லை. அதற்கு பதிலாக, இந்தத் தொடருக்கு முன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்டு பின்னர் நிறுத்திவைக்கப்பட்ட தடை குறித்து மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டது.

ஃபிஃபாவின் ஒழுங்குமுறை விதிகளின்படி, கடந்த நவம்பர் மாதம் அயர்லாந்துக்கு எதிரான தகுதிச் சுற்றில் போர்ச்சுகல் 2-0 எனத் தோல்வியடைந்தபோது, டாரா ஓஷியாவை முழங்கையால் தாக்கியதற்காக ரொனால்டோவுக்கு மூன்று போட்டிகள் தடை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவர் ஆர்மீனியாவுக்கு எதிரான இறுதி தகுதிச் சுற்றுப் போட்டியில் ஒரு போட்டிக்கான தடையை அனுபவித்தார். ஆனால் தடையின் மீதமுள்ள இரண்டு போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இருப்பினும், ரொனால்டோ தகுதிச் சுற்றுப் போட்டியில்தான் சிவப்பு அட்டை பெற்றார். அது உலகக்கோப்பைத் தொடரில் பெற்ற ரெட் கார்டு அல்ல.

ஒரு பெரிய தொடருக்கு முன்பு வீரர்களுக்கு சலுகை வழங்கப்பட்ட சம்பவங்கள் ரொனால்டோவுக்கு மட்டுமல்ல.

014-ல் பிரான்ஸின் லாரன் கோஸ்சியெல்னி, மேலும் இந்த உலகக் கோப்பைக்கு முன்பு ஈக்வடாரின் மொய்சஸ் கைசிடோ மற்றும் அர்ஜென்டினாவின் நிக்கோலஸ் ஒட்டமெண்டி ஆகியோருக்கும் இதுபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் ரொனால்டோ விஷயத்திலாவது, "அவர் தனது மற்ற 225 சர்வதேசப் போட்டிகளில் சிவப்பு அட்டை எதையும் பெறவில்லை" என்பதைக் கருத்தில் கொண்டதாகக் கூறி, ஃபிஃபா ஓரளவு நியாயமான காரணத்தை வழங்கியது.

ஆனால் பலோகுன் விஷயத்தில், அந்தளவு விளக்கம்கூட கிடைக்கவில்லை. இது, யூகங்களுக்கு மட்டுமே வழிவகுக்கக்கூடிய ஒரு தகவல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து 2026

பட மூலாதாரம், Jose Breton/Pics Action/NurPhoto via Getty Images

இது ஏன் ஒரு தனித்துவமான சம்பவமாகக் கருதப்படுகிறது? என்னென்ன காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன? இந்த முடிவை எடுத்தது யார்?

நடுவர் இடைநீக்கத்தை நீக்குமாறு கோரினார் என்றோ அல்லது காணொளி உதவி நடுவர் (VAR) நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றோ எந்தக் குறிப்பும் இல்லை என பிபிசி ஸ்போர்ட்ஸிடம் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இதுபோன்ற சூழலில், கால்பந்து சங்கம் முழுமையான எழுத்துப்பூர்வ விளக்கத்தை வெளியிடும்.

இந்தக் காரணங்களை வெளியிடுமாறு ஃபிஃபாவிடம் கோருவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை உண்டு, ஆனால் பெல்ஜியத்திற்கு அந்த உரிமை இல்லை.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரரும் பிபிசி ஸ்போர்ட் வர்ணனையாளருமான மைக்கா ரிச்சர்ட்ஸ், இது ஒரு கேலிக்கூத்து என்று கூறினார்.

"இந்தத் தடையை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைத்திருப்பது ஒட்டுமொத்த தொடரையும் கேலிக்குரியதாக்குகிறது. பெரிய நட்சத்திர வீரர்களைத் தொடரில் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இது செய்யப்பட்டுள்ளது. இது எப்படி நடக்கலாம்? ஃபிஃபா இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். இது பலருடைய மனதில் ஒரு கசப்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார்.

பெல்ஜியம் அணி, இயல்பாகவே இதனால் கடும் கோபத்தில் உள்ளது. பலோகுன் விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டு தாங்கள் "அதிர்ச்சியடைந்ததாக" ஞாயிற்றுக்கிழமை அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

பெல்ஜிய கால்பந்து சங்கம் பல விதிகள், பயிற்சி விளக்கக்காட்சிகள் மற்றும் தொடருக்கு முந்தைய ஒருங்கிணைப்புக் கூட்டங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு வீரர் ரெட் கார்டு பெற்றால், "அவரது அணியின் அடுத்த போட்டியில் இருந்து தானாகவே இடைநீக்கம் செய்யப்படுவார்" என்று கூறும் விதிமுறைகளுக்கு இந்த முடிவு முரணானது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

சுருக்கமாகச் சொன்னால், போட்டி விதிமுறைகளை மீறுவதற்கு ஃபிஃபா தனது சொந்த ஒழுங்குமுறை விதியைப் பயன்படுத்தியுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பெல்ஜியத்தின் தலைமைப் பயிற்சியாளர் ரூடி கார்சியா, ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இன்னும் ஒரு படி மேலே சென்றார். அவர், "ஃபிஃபா உலகக்கோப்பையில் ஜூலை 5 என்பது இப்போது ஏப்ரல் 1-ஆக, அதாவது முட்டாள்கள் தினமாக மாறிவிட்டது என்று எனக்குத் தெரியாது. நாங்கள் தேசிய அணியையோ அல்லது கால்பந்து சங்கத்தையோ பாதுகாக்கவில்லை, நாங்கள் ஒட்டுமொத்த கால்பந்து விளையாட்டையும் பாதுகாக்கிறோம்" என்றார்.

இந்தத் தொடரில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட மற்ற வீரர்கள் இப்போது என்ன நினைப்பார்கள்?

உதாரணமாக, கத்தாரின் அசிம் மதிபோ. கனடா வீரர் இஸ்மாயேல் கோனேவின் கால் முறிவுக்கு வழிவகுத்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில் அவர் ரெட் கார்ட் பெற்றார்.

அந்தச் சம்பவத்தில் மதிபோ வேண்டுமென்றே பந்தைப் பறிக்க முயலவில்லை என்பதும், அந்த காயம் தற்செயலாக நடந்ததுதானே தவிர ஆட்டத்தின் மோசமான தன்மையால் அல்ல என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இருந்தபோதிலும், ஃபிஃபா மதிபோவுக்கு ஐந்து ஆட்டங்கள் விளையாடத் தடை விதித்தது. கடுமையான விதிமீறல் ஆட்டத்திற்கான வழக்கமான தண்டனையுடன் கூடுதலாக மூன்று போட்டிகள் சேர்க்கப்பட்டன.

கால்பந்து, உலக கோப்பை, ஃபிஃபா, டிரம்ப், ஃபிஃபா, பலோகன், ரெட் கார்டு, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை

பட மூலாதாரம், Liao Pan/China News Service/VCG via Getty Images

இது கால்பந்து விளையாட்டில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்துமா?

பலோகுனுக்கு ரெட் கார்டு காட்டப்பட்டது மிகக் கடுமையான தண்டனையா? என்றால் நிச்சயமாக ஆம் என்றே சொல்லலாம்.

அமெரிக்க வீரரான பலோகுன், போஸ்னியா வீரர் தாரிக் முஹாரெமோவிச்சிடமிருந்து பந்தைப் பறிக்க முயன்றபோது, தற்செயலாகத் தனது காலை அவரது கணுக்காலில் மிதித்துவிட்டார்.

அப்படியென்றால், தற்செயலாக நடந்த ஒரு செயலுக்காக ரெட் கார்டு காட்டப்படும்போதெல்லாம், அதற்கான தடையை ஃபிஃபா இனிமேல் நீக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

இனிமேல் பயிற்சியாளர்கள், "ஒரு முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது, இனி இதையே அனைவரின் விஷயத்திலும் கடைப்பிடியுங்கள்" என்று அவர்கள் கேட்பார்கள்.

ஒரு வீரரின் 'நோக்கம்' என்ன என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே கால்பந்து விதிகளிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பந்தைப் பறிக்க முயன்றதன் 'விளைவு' மட்டுமே இப்போது விதிகளின்படி கணக்கில் கொள்ளப்படுகிறது.

கடந்த டிசம்பரில் லிவர்பூலுக்கு எதிரான போட்டியில் சாவி சிமன்ஸ் பெற்ற ரெட் கார்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். டாடன்ஹாம் முன்கள வீரர், வேண்டுமென்றே விர்ஜில் வான் டாக்கின் காலின் பின்புறத்தில் மிதிக்கவில்லை. ஆனால் அவர் மிதித்துவிட்டார், அது எதிரணி வீரரின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக நடுவரால் கருதப்பட்டது.

டாடன்ஹாம் அணியின் அப்போதைய தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் ஃபிராங்க், சாவி சிமன்ஸ்க்கு விதிக்கப்பட்ட மூன்று போட்டிகளுக்கான தடை குறித்து அதிருப்தி தெரிவித்தார்; ஆனால், மேல்முறையீடு செய்தால் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதி அந்த கிளப் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என முடிவு செய்தது.

பலோகுன் விஷயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இந்த உலகக்கோப்பையின் முடிவுகளால் உள்ளூர் லீக் போட்டிகளுக்குள் எழுந்துள்ள சில கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த உலகக்கோப்பையில் மஞ்சள் அட்டைகள் குறைவாகக் காட்டப்படுவதும், விஏஆர் முறை பயன்படுத்தப்படும் சில விதங்களும், மற்றும் புதிய விதிகளுக்கு அளிக்கப்படும் விளக்கங்களும் லீக் போட்டிகளில் அப்படியே பின்பற்றுவது சாத்தியமற்றது என்று கருதப்படுகிறது.

ஆனால், ரசிகர்களோ லீக் போட்டிகளிலும் இதே போன்ற முடிவுகளையே எதிர்பார்ப்பார்கள். பலோகுனின் தடையை நீக்கியதன் மூலம், ஃபிஃபா உள்ளூர் லீக் நிர்வாகங்களின் பணியை இன்னும் கடினமாக்கியுள்ளது.

ஃபிஃபா காட்டிய சலுகையை, ஏன் இங்கிலாந்து கால்பந்து சங்கம் காட்டக் கூடாது என்று மக்கள் கேட்பார்கள்.

நிச்சயமாக சிமன்ஸ் அனுபவித்தது போன்ற கடுமையான தடைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் அல்லவா?

கால்பந்து, உலக கோப்பை, ஃபிஃபா, டிரம்ப், ஃபிஃபா, பலோகன், ரெட் கார்டு, 2026 ஃபிஃபா உலகக் கோப்பை

பட மூலாதாரம், Shaun Botterill/Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

ஃபிஃபாவின் முடிவுக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கும் என்ன சம்பந்தம்?

உலகக் கோப்பை ஒழுங்கு நடவடிக்கை முறையின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, சிவப்பு அட்டை அல்லது அதனைத் தொடர்ந்து விதிக்கப்படும் தடைத் தண்டனைக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்பதாகும்.

அப்படியானால், ஏன் ஃபிஃபா போட்டியை நடத்தும் நாட்டின் நட்சத்திர வீரருக்காக மட்டும் விதிவிலக்கை உருவாக்கியது?

அமெரிக்க வீரருக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டும் அதனால் விதிக்கப்பட்ட தடையும் அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

போஸ்னியாவுக்கு எதிரான போட்டியின் கடைசி 27 நிமிடங்களையும், பெல்ஜியத்துக்கு எதிரான முழுப் போட்டியையும் அவர் தவறவிட வேண்டியிருந்தது. அதாவது, ஒரே தவறுக்காக இரட்டைத் தண்டனை வழங்கப்பட்டது என்று அமெரிக்க ஊடக விமர்சகர்கள் வாதிட்டனர்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க ஊடகங்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் அழுத்தம் அதிகரித்தது.

அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோ, "அந்த சிவப்பு அட்டையால் அமெரிக்கா பாதிக்கப்பட்டது" என்றும், "இதுபோன்ற சூழ்நிலைகளில் மேல்முறையீட்டு நடைமுறை இருக்க வேண்டும்" என்றும் வெள்ளிக்கிழமை கூறினார்.

இருப்பினும், முன்னாள் ஆர்சனல் வீரரான பலோகுன் மீண்டும் விளையாடுவதற்கு ஃபிஃபா திடீரென சிறப்பு அனுமதி வழங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

நடைமுறையில் பார்த்தால், பலோகுனுக்கு போஸ்னியாவுக்கு எதிரான போட்டியில் ஒரு வகையான தற்காலிக வெளியேற்றம் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டதுபோல அமைந்துள்ளது; தற்போது அவர் மீண்டும் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

அதிபர் டிரம்ப், ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோவிடம் நேரடியாக தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக சிபிஎஸ் ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் டிரம்புடனான குறுகிய நேர தொலைபேசி உரையாடலில், ஃபிஃபாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இது குறித்து விசாரிக்கும் என்று இன்ஃபான்டினோ கூறியதாக அந்த வட்டாரங்களில் ஒன்று தெரிவிக்கிறது.

வெள்ளை மாளிகையின் உலகக்கோப்பை பணிக்குழுவின் நிர்வாக இயக்குநரான ஆண்ட்ரூ கியூலியானி என்பவரும் இந்தச் சூழல் குறித்து இன்ஃபான்டினோவிடம் பேசினார். மேலும், வர்த்தகத்துறை செயலர் ஹோவர்ட் லுட்னிக்கும் ஃபிஃபாவுடன் தொடர்பில் இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து கோரிய சிபிஎஸ் செய்தியின் வேண்டுகோளுக்கு வெள்ளை மாளிகை, லுட்னிக் மற்றும் கியூலியானி ஆகியோரின் செய்தித் தொடர்பாளர்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை, டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பதிவில், "ஒரு பெரிய அநீதியை மாற்றியமைத்ததற்காக" ஃபிஃபாவுக்கு நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க அணியின் முன்னணி வீரரான ஃபோலரின் பாலோகுனுக்கு விதிக்கப்பட்ட ஒரு போட்டித் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு தாம் ஃபிஃபாவிடம் கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், பாலோகுனின் தடையை நிறுத்திவைத்த ஃபிஃபா "சரியான முடிவையே எடுத்துள்ளது" என்று டிரம்ப் கூறினார்.

"அந்தத் தடை அமல்படுத்தப்பட்டிருந்தால், அது இந்த உலகக் கோப்பை தொடரின் மீது ஒரு பெரிய களங்கமாக இருந்திருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

டிரம்பிற்கு ஃபிஃபாவின் அமைதிப் பரிசு வழங்குவது தொடர்பாக, அரசியல் நடுநிலைமை குறித்த விதிமுறைகளை இன்ஃபான்டினோ மீறியதாகக் கூறி, அவர் மீது விசாரணை நடத்துமாறு ஃபிஃபாவின் நெறிமுறைக் குழுவிடம் ஏற்கனவே கோரப்பட்டிருந்தது.

கால்பந்து விளையாட்டில் அரசியல் தலையீட்டை உலக நிர்வாக அமைப்பின் விதிமுறைகள் தடை செய்கின்றன. தற்போது அமெரிக்க அரசு இதில் நேரடியாகத் தலையிட்டுள்ளதால், எதிர்வரும் காலத்தில் ஃபிஃபா மேலும் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் அதற்கு முன்பாக, திங்கட்கிழமை அன்று பெல்ஜியத்திற்கு எதிராக நடக்கவிருக்கும் போட்டியில் பலோகுன் மற்றும் அமெரிக்க அணியின் மீதுதான் அனைவரின் பார்வையும் இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு