பெண்ணின் வீட்டுக்கு அடியில் '40,000 உடல்கள்' - விசாரணையில் என்ன தெரியவந்தது?

எலும்புகள் மற்றும் பற்கள் நிரப்பப்பட்ட பல பெட்டிகளை ஒரு கருப்பு-வெள்ளை புகைப்படம் காட்டுகிறது.

பட மூலாதாரம், IPN

படக்குறிப்பு, மீட்கப்பட்ட எச்சங்களை மெர்சிட் பெட்டிகளில் பிரித்து வைத்தார்
    • எழுதியவர், ஜூலியா டயஸ் கார்னிரோ
    • பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

8 ஜனவரி 1996 அன்று, மூன்று குழந்தைகளின் தாயான மெர்சிட் கைமரைஸ் டோஸ் அஞ்சோஸ், ரியோ டி ஜெனிரோவின் துறைமுகப் பகுதியில் தான் முதன்முதலில் சொந்தமாக வாங்கிய 1866ஆம் ஆண்டு கட்டப்பட்ட தனது வீட்டின் விரிவாக்கப் பணிகளை கட்டுமானத் தொழிலாளர்கள் தொடங்குவதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகால சேமிப்பிற்கு இறுதியாக பலன் கிடைத்திருந்தது.

ஆனால் சில மணிநேரங்களுக்குள், அந்தப் புனரமைப்புப் பணி எதிர்பாராத ஒன்றைக் வெளிப்படுத்தியது: எலும்புகள்.

தொழிலாளர்கள் அவை விலங்குகளுடையவை என்று நினைத்தனர். ஆனால் மெர்சிட் அதை நம்பவில்லை. இடிபாடுகளைச் தேடிப் பார்த்தபோது, அவருக்கு ஒரு முழுமையான வயதுவந்தவர்களின் பற்கள் கிடைத்தன.

"நான் பில்டரிடம், 'இது நாயுடையது அல்ல மனிதனுடையது' என்று கூறினேன்," என்று மெர்சிட் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறுகிறார்.

"அவர் உடனடியாக சிலுவை அடையாளம் போட்டுக் கொண்டார்."

சிறிது நேரத்திற்குப் பிறகு, மெர்சிட் சிறிய அளவிலான பற்களைக் கண்டெடுத்தார்.

"நான் அவரிடம், 'இவை ஒரு குழந்தையுடையது' என்றேன். அதைக் கேட்டதும் அவர் அழத் தொடங்கினார். எல்லாரும் அப்படியே உறைந்து போயினர்."

தென் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்காவின் வரைபடத்தை சித்தரிக்கும் சிவப்பு நிறத் திரைச்சீலைக்கு முன்னால் மெர்சிட் கைமரைஸ் டோஸ் அஞ்சோஸ் நிற்கிறார்.

பட மூலாதாரம், Júlia Dias Carneiro

படக்குறிப்பு, மெர்சிட் இன்னும் அதே வீட்டில்தான் வசிக்கிறார், வேலை செய்கிறார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேலும் பல எச்சங்கள் அவற்றில் பல உடைந்த நிலையில் வெளிவரத் தொடங்கியதும், மெர்சிட் அவற்றைச் சேகரித்து பெட்டிகளில் பிரித்து வைக்கத் தொடங்கினார். இதற்கிடையில், பல்வேறு யூகங்கள் வளர்ந்தன.

"நாங்கள் ஆயிரம் விஷயங்களை யோசித்தோம். முந்தைய உரிமையாளர்கள் மக்களைக் கொன்று இங்கே புதைத்திருக்கலாம் அல்லது இது ஒரு தொடர் கொலைகாரனின் வேலையாக இருக்கலாம் என்று."

ஆனால் பதில்கள் விரைவாகக் கிடைத்தன. அந்தப் பகுதியின் வரலாற்றை நன்கு அறிந்த ஒரு பக்கத்து வீட்டுக்காரர், ஒரு பழைய வரைபடத்துடன் வந்தார்.

"அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, 'நீங்கள் ஒரு மயானத்தின் மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இங்குதான் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் புதைக்கப்பட்டனர்' என்றார்."

சுமார் 1770 மற்றும் 1830ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தப்பட்ட, நீண்ட காலமாக காணாமல் போன 'புதிய கருப்பர்களின் மயானத்தை' மெர்சிட் தன்னையும் அறியாமலே கண்டறிந்துள்ளார். அங்கு 40,000 பேர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் மதிப்பிடுகிறார்.

தேவாலயப் பதிவுகளின் மூலம் இதன் இருப்பு பற்றி வரலாற்றாசிரியர்கள் நீண்ட காலமாக அறிந்திருந்தனர், ஆனால் விரிவடைந்து வரும் நகரத்தின் அடியில் அதன் துல்லியமான இருப்பிடம் தொலைந்து போயிருந்தது.

"புதிய கருப்பர்கள்" என்ற சொல் பிரேசிலுக்குப் புதிதாக வந்திறங்கிய, இன்னும் போர்த்துகீசிய மொழி பேசத் தெரியாத, அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களைக் குறிக்கிறது.

இரண்டு போக்குவரத்துக் கூம்புகளை இணைக்கும் ஒரு சங்கிலி, கண்காட்சிகளைக் காணும் மக்கள் நிறைந்த ஒரு கேலரியின் நுழைவாயிலுக்கு வெளியே உள்ளது, உள்ளே இரண்டு தொட்டிச் செடிகள் உள்ளன.

பட மூலாதாரம், IPN

படக்குறிப்பு, வீட்டின் வாகன நிறுத்துமிடம் நிரந்தரக் கண்காட்சியுடன் கூடிய நினைவகமாக மாற்றப்பட்டது

"நான் இங்கே ஒரு பேரழிவைக் கண்டேன். கருப்பர்களின் பேரழிவு," என்று தனது சொந்த வீட்டின் அடியில் எலும்புகள், அதிலும் குறிப்பாக பற்கள் கூட சரியாக முளைக்காத குழந்தைகளின் எச்சங்களைக் கண்ட அதிர்ச்சியை நினைவு கூர்ந்து மெர்சிட் கூறுகிறார்.

"எங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. மக்கள் விற்கப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட இடம் இது என்று யாரும் எங்களிடம் சொல்லவே இல்லை. இந்த வரலாறு மறைக்கப்பட்டிருந்தது."

இதன் அருகில்தான் அடிமைப்படுத்தப்பட்ட மக்களை ஏற்றி வந்த கப்பல்கள் நங்கூரமிட்ட வலோங்கோ கப்பல்துறை இருந்தது. யுனெஸ்கோ கூற்றுப்படி, 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 1831இல் அது மூடப்படும் வரை, சுமார் 900,000 ஆப்பிரிக்கர்கள் அதன் வழியாகக் கடத்தப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற எந்த பிரேசில் நகரத்தையும் விட ரியோ டி ஜெனிரோ தான் அதிகப்படியான அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களைப் பெற்றது. அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அட்லாண்டிக் கடந்த அடிமை வர்த்தக தரவுத்தளத்தின்படி மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக, சுமார் 4.8 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் வலுக்கட்டாயமாக இந்த நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டனர் . இது அமெரிக்காவின் மற்ற எந்த இடத்தையும் விட அதிகமாகும்.

அமெரிக்காவைச் சேர்ந்த எமோரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி, சுமார் 300,000 பேர் கரைக்கு வருவதற்கு முன்பே உயிரிழந்தனர்.

அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களில் பலர், வந்தடைந்த சில காலத்திலேயே நோய் அல்லது கடும் சோர்வு காரணமாக உயிரிழந்தனர். அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு விற்கப்பட்ட கிடங்குகளிலேயே இந்த மரணங்கள் நிகழ்ந்தன. உயிர் பிழைக்காத பலரின் உடல்கள், தற்போது மெர்சிட்டின் வீட்டின் கீழ் அமைந்துள்ள அந்தக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன.

'வரலாற்றுப் புதையல்'

மேற்கத்திய உலகில் அடிமைமுறையை கடைசியாக ஒழித்த நாடும் பிரேசில்தான், இது 1888இல் நிகழ்ந்தது.

இருப்பினும் பல தசாப்தங்களாக, இப்பகுதியின் இந்த இருண்ட வரலாற்றைப் பற்றி பொதுவெளியில் அதிகம் அங்கீகரிக்கப்படவில்லை. 1990களில் மெர்சிட் இதைக் கண்டுபிடித்தபோது, கல்வி வட்டாரங்களுக்கு வெளியே இந்த இடத்தின் தொடர்பு பெருமளவில் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

2011ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெற்ற மேம்பாட்டுப் பணிகளின் போது, வலோங்கோ கப்பல்துறை மீண்டும் கண்டறியப்பட்டபோது அது மாறத் தொடங்கியது. பின்னர் அது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாறியதுடன், இப்பகுதியின் கடந்த காலத்தின் மீது கவனத்தை ஈர்த்தது.

தனது இடத்தில் ஒரு "வரலாற்றுப் புதையல்" இருப்பது மெர்சிட்டிற்குத் தெரிந்திருந்தது, ஆனால் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

முதலில், அவர் கருப்பர் விழிப்புணர்வு நாள் மற்றும் அடிமைமுறை ஒழிப்பு நாள் போன்ற பொது விடுமுறை நாட்களில் மட்டுமே எப்போதாவது தனது வீட்டைத் திறந்தார்.

"அது கடினமாக இருந்தது," என்று அவர் கூறுகிறார். "ஒரு மயானத்தைப் பார்க்க யார் விரும்புவார்கள்?"

ஆனால் ஆர்வலர்களின் ஊக்கத்துடன் இந்தத் தளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்தது.

வெள்ளை நிற கேலரி சுவர்களின் இருபுறமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்படைப்புகளைப் பல மக்கள் பார்க்கிறார்கள்.

பட மூலாதாரம், IPN

2005ஆம் ஆண்டில், மெர்சிட் மற்றும் பிறர் இணைந்து பிரெடோஸ் நோவோஸ் ஆராய்ச்சி மற்றும் நினைவக நிறுவனத்தை நிறுவினர்.

அந்த இடம் படிப்படியாக உருவெடுத்தது. வாகன நிறுத்துமிடம் நிரந்தரக் கண்காட்சியுடன் கூடிய நினைவகமாக மாறியது.

ஒரு காலத்தில் நீச்சல் குளத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதி இப்போது ஒரு காபி உணவகம், ஒரு சிறிய கடை மற்றும் அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் மற்றும் ஆப்பிரிக்க புலம்பெயர்வு பற்றிய ஒரு சிறப்பு நூலகத்தைக் கொண்டுள்ளது.

தரையில் உள்ள ஒரு கண்ணாடித் தடுப்பு, பார்வையாளர்கள் கீழே உள்ள தொல்பொருள் எச்சங்களை எண்ணற்ற எலும்புத் துண்டுகள் சிதறிக்கிடக்கும் சிவப்பு நிற மண்ணைப் பார்க்க அனுமதிக்கிறது.

இதை ஒரு மயானம் என்று விவரிப்பது தவறான வழிகாட்டுதலாகும் என்று மெர்சிட் கூறுகிறார்.

"இவை சடலங்கள் தூக்கி வீசப்பட்ட குழிகள்," என்று அவர் கூறுகிறார். "நாற்றம் காரணமாக, சில எரிக்கப்பட்டன. குழிகள் மிகவும் நிரம்பியிருந்ததால், சடலங்கள் மற்றவற்றின் கீழ் நசுக்கப்பட்டன."

இந்தத் தளம் ரகசியமானது அல்ல என்பதைத் தேவாலயப் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன. மரணங்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன, இருப்பினும் இறந்தவர்களில் பெரும்பாலோரின் பெயர்கள் இல்லை. தேதிகள், கப்பல்கள் அல்லது அவர்கள் வந்த இடங்கள் மூலம் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெயர்கள் தோன்றும் போது, அவை பெரும்பாலும் அடிமைப்படுத்தியவர்களின் பெயர்களாகவே இருக்கின்றன.

"இந்த மயானம் நான்கு வீடுகளுக்கு அடியில் அமைந்துள்ளது," என்று மெர்சிட் கூறுகிறார். "அங்கு குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அங்கோலா, காங்கோ மற்றும் மொசாம்பிக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்."

மேசைகளைச் சுற்றி நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் இருக்கும் பல மக்கள், வெள்ளை நிற கேலரி சுவர்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்படைப்புகளைப் பார்த்தவாறு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Divulgação

இப்போது 69 வயதாகும் மெர்சிட், இன்னும் அதே வீட்டில் நினைவகத்திற்கு அடுத்தபடியாக வசித்து வருகிறார், மேலும் தினமும் அங்கு வேலை செய்கிறார்.

"நீங்கள் தரையை உடைக்கும்போது, மேற்பரப்பிற்கு சற்று கீழே எலும்புகளைக் காண்பீர்கள்," என்று அவர் கூறுகிறார்.

சுமார் 300,000 மக்கள் இந்த நிறுவனத்தைப் பார்வையிட்டுள்ளனர். மேலும் பலர் இப்பகுதியைச் சுற்றி வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை மேற்கொள்கின்றனர். இது இப்போது ஆப்பிரிக்கப் பாரம்பரியச் சுற்றுப்பாதை என்று அழைக்கப்படுகிறது.

நிறுவனத்தின் 21வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அருகில் ஒரு புதிய கலாசார மையம் திறந்து வைக்கப்பட்டது.

இது கவிதை கூட்டங்கள், சாம்பா நடன வட்டங்கள், கலைக் கண்காட்சிகள், பட்டறைகள், புத்தக வெளியீடுகள் மற்றும் குழந்தைகளுக்கான வாசிப்பு கிளப்புகள் ஆகியவற்றை, குறிப்பாக பள்ளி வருகைகளின் போது நடத்தும் என்று மெர்சிட் கூறுகிறார்.

கட்டடத்தின் இரண்டாவது தளத்தைப் புதுப்பிப்பதற்காக அவர் இப்போது நிதி திரட்டி வருகிறார். "நாங்கள் வெளியில் எல்லாரிடமும் உதவி கேட்டுக்கொண்டிருக்கிறோம்."

அவரது பணி இன்னும் முடிவடையவில்லை.

"இதைப் பற்றி பேசாமல் ஒரு நாளைக் கடக்க விட்டாலும், அந்த நினைவு மங்கிவிடும். இது ஏதோ ஒரு சாதாரண இடம் அல்ல. இது ஒரு தனித்துவமான இடம். ஏதோ ஒரு வகையில், அவர்கள் (ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மக்கள்) தங்களை மறந்துவிடக் கூடாது என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு