7 மூட்டை தபால்களை விநியோகிக்காமல் வீட்டில் பதுக்கிய போஸ்ட்மேன் - நாயால் சிக்கியது எப்படி?

விநியோகிக்காமல் இருந்த தபால்கள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த காட்சி
படக்குறிப்பு, விநியோகிக்காமல் இருந்த தபால்கள் - செந்தில் குமார்(வலது)
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர், கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த தபால்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நட்பு, காதல் என பலவிதமான அன்பின் உணர்வுகளையும், பள்ளி, கல்லூரிச் சேர்க்கை, வேலைவாய்ப்பு என எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் செய்திகளையும் காகிதங்களாகச் சுமந்து வந்த தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது. எல்லாமே இணையமயமான பின்பு, மின்னஞ்சல்களிலும், சமூகஊடகங்களிலும் தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன.

ஆனாலும் இப்போதும் மத்திய, மாநில அரசுகளால் அனுப்பப்படும் தகவல் கடிதங்கள், ஆதார ஆவணங்கள், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களின் அழைப்பிதழ்கள், சட்டப்பூர்வமான அழைப்பாணைகள் போன்றவை தபால் மூலமாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

பெயிண்டர் ராஜ்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, ராஜ்

நாய் கடித்ததால் வெளிச்சத்துக்கு வந்த தபால்கள் பதுக்கல்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் துணை அஞ்சலகம் உள்ளது. நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வரும் தபால்களை விநியோகிப்பதற்காக அங்கு பணியாற்றும் 4 தபால்காரர்களில் ஒருவர்தான் செந்தில்குமார். இவர் வெள்ளகோவிலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தபால்களை விநியோகிக்கும் பணியை பல ஆண்டுகளாகச் செய்து வருவதாக அங்குள்ள ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

இவருடைய வீடு, அருகிலுள்ள காங்கேயம் நகராட்சியிலுள்ள தட்டான்தோட்டத்தில் உள்ளது. இவர் வீட்டுக்கு முன்புறமுள்ள வீட்டில் வசிக்கும் பழனியம்மாள் என்பவருக்குச் சொந்தமான காலியிடம், செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகில் உள்ளது.

கடந்த ஜூன் 24-ஆம் தேதியன்று அந்த இடத்திற்கு பழனியம்மாள் சென்றபோது, செந்தில்குமார் வீட்டில் வளர்க்கப்படும் 5 நாய்கள் அவரைக் கடிக்கத் துரத்தியுள்ளன. அதில் ஒரு நாய் அவருடைய காலில் கடித்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

தகவலறிந்து பழனியம்மாளின் மகள் சிவகாமி, மருமகன் கருப்புசாமி ஆகியோர் வந்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பின் வெள்ளகோவில் காவல் நிலையத்திலும், நகராட்சி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.

காவல்துறை பாதுகாப்புடன் அங்கு சென்றபோது, அங்கு சில ஆதார் அட்டை தபால்கள் உள்ளிட்ட தபால்கள் சிதறிக்கிடந்ததை கருப்புசாமி பார்த்துள்ளார். அதுபற்றி தபால் துறைக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தபால்துறை அலுவலர்கள் வந்து செந்தில்குமார் வீட்டை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு தபால்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, அவற்றை 7 மூட்டைகளில் சேகரித்து திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இப்படித்தான் இந்த விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து தபால்காரர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உண்மை நிலையை அறிவதற்காக பிபிசி தமிழ் வெள்ளகோவில் பகுதிக்கு நேரில் சென்றது. காங்கேயம் தலைமை தபால் நிலையத்துக்கு கீழ் செயல்படும் வெள்ளகோவில் துணை அஞ்சலகத்தில்தான் தபால்காரர் செந்தில்குமார் பணியாற்றியுள்ளார்.

இந்த அஞ்சலகத்தின் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றி வரும் சுந்தரமூர்த்தியை பிபிசி நேரில் சந்தித்துப் பேசியபோது, ''தபால்காரர் செந்தில்குமார் இங்கேதான் பணியாற்றி வந்தார். ஆனால் அவர் வீட்டில் தபால்கள் பதுக்கியிருப்பது பற்றி எங்களுக்கு புகார் வரவில்லை. திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிந்து, அவர்கள்தான் நேரில் வந்து தபால்களை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள்தான் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுபற்றி நான் வேறு எதுவும் கூறமுடியாது.'' என்றார்.

அந்த அலுவலகத்தின் பொறுப்பாளர் என்ற முறையில், அவர் தபால் விநியோகிக்கும் பகுதிகளிலிருந்து இதுவரை தங்களிடம் யாருமே புகார் தரவில்லையா என்று கேட்டதற்கு, ''எங்களுக்கு இதுவரை எந்தப் புகாருமே வந்ததில்லை.'' என்றார். தினமும் அவர் எவ்வளவு தபால்களைக் கையாள்வார், இதற்கான பதிவுகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பது போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் தரமறுத்துவிட்டார்.

விநியோகிக்காமல் இருந்த தபால்கள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த காட்சி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, விநியோகிக்காமல் இருந்த தபால்கள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த காட்சி

மக்கள் கூறுவது என்ன?

தபால்காரர் செந்தில்குமார் தபால் விநியோகிக்கும் பகுதிகளை கேட்டறிந்த பிபிசி, வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட முத்தூர் சாலை, கச்சேரி வலசு, இந்திரா நகர் போன்ற சில பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள மக்கள் பலரிடமும் பேசியது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவரைப் பற்றித் தெரியவும் இல்லை. தங்களுக்கு தபால்கள் வராமலிருந்ததாக எந்தப் புகாரும் தெரிவிக்கவுமில்லை.

பிபிசியிடம் பேசிய கச்சேரிவலசு பகுதியைச் சேர்ந்த ராஜ், ''அவரை எனக்கு நான்கைந்து ஆண்டுகளாகத் தெரியும். அங்கே வந்து முகவரிகள் பற்றி சந்தேகம் கேட்பார். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த உதவிகளைச் செய்வோம். அவருக்கு உதவியாக ஒரு பெண்ணும் சில நாட்கள் வருவார். சமூகஊடகங்களில் பார்த்த பின்புதான் அவருடைய வீட்டில் இவ்வளவு தபால்கள் இருந்தது என்ற விபரம் தெரியவந்தது.'' என்றார்.

இந்திரா நகர் பகுதியில் பர்னிச்சர் கடை வைத்துள்ள வளர்மதி என்பவர், ''எனக்குத் தெரிய இந்தப்பகுதியில் அவர் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறார். எங்களுக்கு எப்போதாவதுதான் தபால்கள் வரும். அதையும் அவர் கொடுத்துவிடுவார். எங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கூரியர்களில்தான் தபால்கள் வரும் என்பதால் தபால் மிஸ் ஆனதாகத் தெரியவில்லை. எங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இதுபோன்று எந்தப் புகாரும் தெரிவித்ததில்லை.'' என்றார். இதேபோன்ற கருத்தை பலரும் தெரிவித்தனர்.

பழனியம்மாள்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, பழனியம்மாள்

'பலருக்கு பாதிப்பு’

வெள்ளகோவிலைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள், தங்களுக்கு வரவேண்டிய நீதிமன்ற வழக்குகள் சார்ந்த பல தபால்கள் முறைப்படி வருவதில்லை என்று புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் சிவகாமி தெரிவித்தார். புகார் தெரிவித்த இரு வழக்கறிஞர்களில் ஒருவர் இறந்துவிட்டதாகத் தெரியவந்த நிலையில், மற்றொரு வழக்கறிஞரான விஜய் பிபிசியிடம் பேசினார்.

''அவர் எங்கள் பகுதிக்கான தபால்காரர்தான். கடந்த ஆறேழு ஆண்டுகளாக நிறைய தபால்கள் எங்களுக்கு வராமல் பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக எங்களைப் போன்ற வழக்கறிஞர்கள், ஒருவருக்கு பதிவுத்தபால் அனுப்பியதற்கான அஞ்சல் ஒப்புதல் பெற்று, அதை நீதிமன்றத்தில் ஆவணமாகச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தபால்காரர் செந்தில் அவற்றைப் பெரும்பாலும் தருவதேயில்லை. சில நாட்களில் கேட்டபின்பு 'சாரி. மறந்துவிட்டேன்.' என்று கொடுப்பார்.'' என்றார் விஜய்.

ஏராளமான பொதுமக்களின் ஆதார் அட்டை, பான் அட்டை, அரசு சார்ந்த தபால்கள், பட்டச்சான்று, வங்கிகளின் காசோலைப் புத்தகங்கள், டெபிட் கார்டு போன்றவை தரப்படாமல் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறும் வழக்கறிஞர் விஜய், இதுபற்றி பொதுமக்களிடம் விரிவாக விசாரணை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார்.

தபால்காரர் செந்தில்குமாரின் வீட்டில்தான், 7 மூட்டைகள் நிறைய விநியோகிக்கப்படாத தபால்கள் கைப்பற்றப்பட்டன. அவருடைய வீட்டிற்கும் பிபிசி நேரில் சென்றது.

தட்டான்தோட்டத்தில், கோவை பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள அந்த வீதியில், செந்தில்குமாரின் வீடு, ஒரு சந்துக்குள் இருக்கிறது. அதன் வழியாக மட்டுமே அவருடைய வீட்டிற்குச் செல்ல முடியுமென்ற நிலையில், சந்துக்குள் நுழையும்போதே 3 நாய்கள் ஆக்ரோஷமாகக் குரைத்து அச்சுறுத்தின.

செந்தில் குமார்
படக்குறிப்பு, செந்தில் குமார் வீடு உள்ள சந்து

பழனியம்மாள் என்பவரை, செந்தில்குமார் வீட்டில் வசிக்கும் நாய் கடித்தபின்பே, இந்த தபால்கள் பதுக்கல் விவகாரம் வெளியில் தெரியவந்தது. கடந்த ஜூன் 24 அன்று தனக்கு நாய் கடித்ததைப் பற்றி விவரித்த பழனியம்மாள், அவருடைய காலில் நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்தையும் காண்பித்தார்.

பிபிசியிடம் பேசிய பழனியம்மாள், ''அவருடைய வீட்டுக்கு அருகில் எங்களுக்குச் சொந்தமான காலியிடம் உள்ளது. அதைச் சுத்தம் செய்யச்சென்றபோது, அங்குள்ள 5 நாய்கள் என்னைக் கடிக்கத் துரத்தின. அதில் ஒரு நாய் கடித்துவிட்டது. கையிலிருந்த இரும்பு வாளியை வைத்து மற்ற நாய்களைத் துரத்தித் தப்பித்தேன். சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன். நாய்க்கடிக்காக இதுவரை எனக்கு 12 ஊசி போடப்பட்டுள்ளது. இப்போதும் விடியவிடிய நாய்கள் குரைத்துக்கொண்டேயிருப்பதால் எங்கள் தூக்கமே போய்விட்டது.'' என்றார்.

பழனியம்மாளுக்கு நாய் கடித்த தகவல் தெரியவந்ததும், அவருடைய மகள் சிவகாமி, மருமகன் கருப்புசாமி ஆகியோர் அங்கு விரைந்து வந்து, அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பின் நகராட்சி அலுவலகத்தில் நாய்கள் பற்றி புகார் தெரிவித்துள்ளனர். மறுநாள் காலையில் நாய்களைப் பிடிக்க நகராட்சி அலுவலர்கள் வந்தபோது, விலங்குகள் நல ஆர்வலர் என்று ஒருவர் போனில் பேசி அவர்களைத் திரும்பிப் போக வைத்துவிட்டதாக அப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் தகவலைத் தெரிவித்தனர்.

பிபிசியிடம் பேசிய கருப்புசாமி, ''நகராட்சி அலுவலர்கள் நாய்களைப் பிடிக்காமல் போய்விட்ட நிலையில், நாங்கள் போலீசில் புகார் கொடுத்தோம். அவர்கள் விசாரிக்க வந்தபோதுதான், எங்களுடைய இடத்தில் நிறைய ஆதார் அட்டை, பான்கார்டு தபால்கள் சிதறிக்கிடந்தன. சில ஏடிஎம் கார்டு தபால்கள் எரிக்கப்பட்ட நிலையில் இருந்தன. அதுபற்றி திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நான்தான் போனில் புகார் தெரிவித்து ஆதாரங்களை அனுப்பினேன். '' என்றார்.

''காங்கேயம் தலைமை தபால் நிலையத்திலிருந்து அலுவலர்கள் ஆய்வு செய்ய வந்தபோது அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. பின்பு போலீஸ் பாதுகாப்புடன் வீட்டில் சோதனையிட்டபோதுதான் 7 மூட்டை அளவுக்கு தபால்களை செந்தில்குமார் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். மத்திய அரசின் துறைகளிலிருந்து வந்த ஆதார், பான் அட்டை போன்ற தபால்கள்தான் அதிகமிருந்தன.'' என்றார் கருப்புசாமி.

அதே பகுதியைச் சேர்ந்த அபர்ணா, ''அவர்கள் வீட்டிற்குள் நாய் வளர்ப்பது பிரச்னையில்லை. ஆனால் அவர்கள் வளர்க்கும் அத்தனை நாய்களும் தெருவில் பலரையும் கடிக்கத் துரத்துகின்றன. குறிப்பாக குழந்தைகள் வீதியில் விளையாடவே முடிவதில்லை. தபால்துறை அலுவலர்கள் வந்து பார்த்து, இந்தத் தபால்களை எடுத்த பின்புதான் இதற்காகத்தான் அவர்கள் அத்தனை நாய்களை வளர்த்துள்ளனர் என்று தெரியவந்தது. இப்போதும் அவர்கள் வீட்டிற்கு முன்பு 3 நாய்கள் உள்ளன. யாருமே அந்த சந்துக்குள் போகவே முடியாது.'' என்றார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் வசந்தா, ''ஒரு வீட்டில் ஒரு நாய் வளர்க்கலாம். அவர்கள் ஐந்து நாய்கள் வளர்ப்பதால் எப்போது பார்த்தாலும் அவை தெரு மக்களை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. எனக்கு 70 வயதாகிறது. அடிக்கடி அந்த நாய்கள் துரத்தி நான் ஓடவேண்டியதாயிருக்கிறது. இதுபற்றி செந்தில்குமாரின் மனைவியிடம் கேட்டபோது என்னிடம் மிக அநாகரீகமாகப் பேசியதால் நான் பேசுவதேயில்லை.'' என்றார்.

வழக்கறிஞர் விஜய்
படக்குறிப்பு, வழக்கறிஞர் விஜய்

கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

இதுகுறித்து கருத்துக்கேட்பதற்காக, செந்தில்குமாரின் வீட்டிற்குச் சென்றபோது, அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. செந்தில்குமாரின் அலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அந்த எண்ணுக்கான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. செந்தில்குமார் குடும்பத்தினர் நாய்கள் வளர்ப்பது பற்றி பழனியம்மாள் தரப்பில், வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

வெள்ளகோவில் காவல் நிலையத்தில் இதுபற்றி பிபிசி நேரில் விசாரித்தபோது, சார்பு ஆய்வாளர் துரைசாமி, ''அந்தப் புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. ஆனால் விநியோகிக்கப்பட வேண்டிய தபால்கள் அவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பற்றி எந்தப் புகாரும் தரப்படவில்லை. அதனால் அதுபற்றி காவல்துறை தரப்பில் எதுவும் விசாரிக்கவோ, வழக்குப்பதியவோ இல்லை.'' என்றார்.

இதுபற்றி திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராமிடம் பிபிசி தமிழ் பேசியது.

அதற்கு விரிவாக பதிலளித்த அவர், ''அவர் தொடர்ச்சியாக இப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. அவ்வப்போது சில தபால்களை விநியோகிக்காமல் வைத்திருக்கிறார். இதுவரை எவ்வளவு தபால்கள் என்று கணக்கிடவில்லை. ஆனால் 2022, 2023, 2024 ஆம் ஆண்டுக்கான தபால்கள்தான் நிறைய இருந்தன. சமீபத்திய நாட்களில் விநியோகிக்க வேண்டிய தபால்கள் எதுவும் அதில் இல்லை.'' என்றார்.

பாஸ்போர்ட், அரசு வேலைகள் தொடர்பான அழைப்பு போன்ற தபால்கள் ஏதாவது தரப்படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக புகார் வந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய கோட்ட தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராம், அவர் விநியோகிக்காமல் இருந்ததில் பெரும்பாலும் அழைப்பிதழ்களும், முக்கியமல்லாத தபால்களும்தான் அதிகமிருந்தன என்கிறார். ஆதார் மற்றும் பான் அட்டைகள் அதிகமிருந்ததாகக் கூறப்பட்ட தகவலையும் மறுத்த அவர், யாரும் புகார் தெரிவிக்க வழியில்லாத தபால்களையே அவர் தரவில்லை என்றார்.

''செந்தில்குமாருக்கு பக்கவாத பாதிப்பு இருந்துள்ளது. ஆனால் அவர் பணிக்கு வராமல் இருந்ததில்லை. தபால்களை பதிவு செய்து எடுத்துச் சென்றுவிட்டு, அவற்றில் முக்கியமில்லை என்று கருதிய தபால்களை வீட்டில் வைத்திருந்துள்ளார். எங்களின் முதற்கட்ட விசாரணையில் இதை அவர் கூறியுள்ளார். அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் யாராவது புகார் தெரிவித்தால் அவர்களிடம் புகாரைப் பெற்று அதன்பின்பு மீண்டும் அவரிடம் விசாரிக்கப்படும்.'' என்றார் கோட்ட தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராம்.

தபால்காரர் செந்தில்குமாரின் வீட்டில் எடுக்கப்பட்ட தபால்களை, வரிசைப்படி பதிவு செய்து, அவற்றை விநியோகித்து, அதன் அடிப்படையில் அவர்களிடமும் கருத்துகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் யாரிடமிருந்தாவது ஒரு புகார் வந்திருந்தாலும் முன்பே இந்த முறைகேடு தடுக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த பல ஆயிரம் தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

தற்போது உதவி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பழனியிடம் இந்த தபால்களை விநியோகிக்கும் பணியும், விசாரணை நடத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிபிசியிடம் பேசிய பழனி, ''தபால்களை சம்மந்தப்பட்ட மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 3 லிருந்து அந்தப் பணிகள் துவங்கியுள்ளன. தபால் பதுக்கல் பற்றித் தெரிந்ததும் செந்தில்குமார் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணை முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

தபால்காரர் செந்தில்குமார் மீது மட்டுமின்றி, அவர் மீதான புகார்களை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்காத மேலதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் வழக்கறிஞர் விஜய்.

பிபிசியிடம் பேசிய அவர், ''இப்போதுதான் அவர் எவ்வளவு தபால்களை இப்படி தராமல் மறைத்துள்ளார் என்று தெரிகிறது. இதுபற்றி இங்குள்ள போஸ்ட் மாஸ்டரிடம் புகார் தந்திருக்கிறேன். திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னையிலுள்ள தபால்துறை உயரதிகாரிக்கு ஆன்லைன் மூலமாக செந்தில்குமார் பற்றி புகார் அனுப்பியுள்ளேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இப்போது நடந்துள்ள தவறுக்கு தபால் துறை உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' என்றார்.

கோவை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சரவணனிடம் பிபிசி இதுபற்றிக் கேட்டபோது, ''இப்போதுதான் செந்தில்குமார் மீதான விசாரணை துவங்கியுள்ளது. தபால் பணிகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உயரதிகாரிகளுக்கும் உள்ளது. அவருக்குரிய பகுதியிலிருந்து யாரும் புகார் அளித்திருக்கிறார்களா என்று ஆய்வு செய்யப்படும். அப்படி கொடுத்திருந்தால் அவர்களிடமும் விசாரிக்கப்படும். அதன்பின்பே யார் யார் மீது தவறு உள்ளது என்பது தெரியும். விசாரணை அறிக்கை வந்ததும் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு