'காடு, மலையில் தேடல்' - ஒரு மாதமாகியும் கிடைக்காத 40 ஏக்கர் தோட்டத்தில் காணாமல் போன சிறுமி

- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஒவ்வொரு முறை போன் ஒலிக்கும் போதும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. "உங்கள் குழந்தை கிடைத்துவிட்டது" என்று யாராவது சொல்ல மாட்டார்களா என ஞானேஸ்வரியின் பெற்றோர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஒரு மாதம் கடந்தும், அந்த ஒரு போன் கால் இன்னும் வரவில்லை.
ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டம் சி.எச். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஞானேஸ்வரி காணாமல் போய், ஜூலை 6-ஆம் தேதியோடு ஒரு மாதமாகிறது.
கடந்த ஒரு மாதமாக காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வரும் வேளையில், தங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற ஒரு தகவலுக்காக அக்குழந்தையின் பெற்றோர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
காவல்துறையினர் காடுகளில் தேடினர். மலைகள், கிணறுகள் மற்றும் குளங்களில் தேடுதல் நடத்தினர். ட்ரோன்கள் மூலமும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
செல்போன் தரவுகளை ஆய்வு செய்தனர். எங்கு தகவல் கிடைத்தாலும், உடனடியாக தனிப்படைகளை அனுப்பி சோதித்தனர்.
ஆனால், ஞானேஸ்வரியின் இருப்பிடம் இன்னும் கண்டறியப்படவில்லை.
ஞானேஸ்வரி எங்கே? அவருக்கு என்ன ஆனது? ஒரு மாதம் கடந்தும், இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
காவல்துறை விசாரணை எந்தக் கட்டத்தை எட்டியுள்ளது?
ஞானேஸ்வரி காணாமல் போன வழக்கில் இதுவரை அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
மொபைல் டவர் தரவு சேகரிப்பு , போன் கால் விவரங்கள் பகுப்பாய்வு , ட்ரோன் ஆய்வுகள், ட்ரேப் கேமராக்கள் மற்றும் ஆர்.எஃப்.ஐ.டி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஞானேஸ்வரி காணாமல் போன வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல், இந்த வழக்கைக் கண்காணித்து வரும் பெத்தபுரம் டி.எஸ்.பி ஏ.பி.ஜி திலக், ஞானேஸ்வரி வழக்கில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து பிபிசியிடம் விளக்கினார்.

"காட்டுவிலங்கு தாக்கியிருக்கக் கூடும் என்ற கோணத்திலும் நாங்கள் விசாரித்தோம். அதன் ஒரு பகுதியாக, குழந்தை கடைசியாகக் காணப்பட்ட இடத்தில் இறைச்சி நிரப்பப்பட்ட பொம்மைகளை வைத்து, ட்ரேப் கேமராக்கள் மூலம் கண்காணித்தோம். இருப்பினும், அந்த சோதனையிலும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை" என்று டி.எஸ்.பி திலக் தெரிவித்தார்.
குழந்தை காணாமல் போன அன்று பலத்த மழை பெய்ததால், வெள்ளம் ஏற்பட்டிருக்கலாமா என்ற கோணத்தையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் என்.டி.ஆர்.எஃப் குழுவினரைக் கொண்டு கிணறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளைச் சோதித்தும் கூட எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

தொலைபேசி அழைப்புகள்
ஆதிலாபாத் மற்றும் பாபட்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று தகவல்களை உறுதிப்படுத்த முயன்றபோதிலும், குழந்தையின் இருப்பிடம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று காவல் துறையினர் கூறினர்.
"ஆதிலாபாத் மற்றும் பாபட்லாவில் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. இது தவிர, பல்வேறு இடங்களுக்குச் சென்று கிடைத்த தகவல்களைச் சரிபார்த்தோம், ஆனால் எந்தப் பலனும் இல்லை" என்று டி.எஸ்.பி திலக் தெரிவித்தார்.
"ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு சிறுமி காணப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைக்கும் போதெல்லாம், நாங்கள் அங்கு தனிப்படைகளை அனுப்புகிறோம். பல்வேறு பகுதிகளுக்குப் படைகளை அனுப்பி உறுதிப்படுத்த முயன்றபோதிலும், இதுவரை குழந்தை இருக்கும் இடம் கண்டறியப்படவில்லை"

குழந்தை கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியதாகவும், பின்னர் அதை ஐந்து கிலோமீட்டர் சுற்றளவாக விரிவுபடுத்தியதாகவும், தற்போது 15 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அந்தப் பகுதியை முழுமையாகத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
"ஞானேஸ்வரி காணாமல் போன அன்று, மதியம் சுமார் இரண்டரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. தோட்டத்தில் அதிகளவில் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக, வெள்ளம் ஏதேனும் ஏற்பட்டிருக்குமா என்ற கோணத்திலும் நாங்கள் ஆராய்ந்தோம். உடனடியாக, எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் என்.டி.ஆர்.எஃப் குழுவினருடன் கிணறுகள், குளங்கள் மற்றும் தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளை ஆய்வு செய்தோம். இருப்பினும், இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை" என்று டி.எஸ்.பி திலக் பிபிசியிடம் விளக்கினார்.

'பொம்மைகள் இன்னும் அங்கேயே இருக்கின்றன'
எண்ணெய் பனை தோட்டத்தில் குழந்தை கடைசியாகக் காணப்பட்ட பகுதியில், விசாரணையின் ஒரு பகுதியாக காவல்துறையினர் வேலியின் மீது பொம்மைகளைத் தொங்கவிட்டுள்ளனர். இவை ஜூன் 18 அன்று வைக்கப்பட்டன.
பிபிசி அந்தப் பகுதிக்குச் சென்றது.
அந்தப் பொம்மைகள் இப்போதுவரை அங்கேயே உள்ளன.
பொம்மைகளை அங்கு வைத்து மூன்று வாரங்கள் கடந்த பிறகும், காவல்துறையினர் எதிர்பார்த்த எந்த ஒரு தடயமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
"அந்த வேலிக்கு அருகில் குழந்தை கடைசியாகக் காணப்பட்டதால், அங்கு ஏதேனும் விலங்கு தாக்கியிருக்கலாம் என்று சந்தேகித்து, அந்தப் பொம்மைகளுக்குள் ட்ரேப் கேமராக்களைப் பொருத்தியுள்ளோம், மேலும் அவற்றுக்குள் இறைச்சியையும் வைத்துள்ளோம். அந்த இறைச்சி வாசனைக்காக ஏதேனும் விலங்கு சாப்பிட வந்தால், அதை நாம் பார்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் தான் அவற்றைக் கண்காணிக்கக் குழுக்களையும் அமைத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த விலங்கும் வரவில்லை. பொம்மைகள் அங்கேயேதான் இருக்கின்றன" என்று டி.எஸ்.பி திலக் கூறினார்.

13 மலைகளில் எங்காவது குழந்தை காணாமல் போயிருக்க வாய்ப்புள்ளதா?
குழந்தை காணாமல் போய் ஒரு மாதம் கடந்த பிறகும் தங்களது தேடுதல் வேட்டை தொடர்கிறது என்று டி.எஸ்.பி திலக் தெரிவித்தார். குழந்தை காணாமல் போன பகுதி உட்பட, சந்தேகத்திற்குரிய ஒவ்வொரு இடத்திற்கும் தனிப்படைகள் அனுப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
குழந்தையின் குடும்பம் வசிக்கும் 40 ஏக்கர் எண்ணெய் பனை தோட்டத்தை ஒட்டியுள்ள மலைகளுக்குச் செல்லும் பாதைகள் மொத்தம் 13 இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பாதைகள் வழியாக யாராவது குழந்தையைக் அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், வனத்துறையின் உதவியோடு விசாரித்து வருவதாக டி.எஸ்.பி திலக் கூறினார்.
"குழந்தையைக் கண்டுபிடிப்பதற்காக, எண்ணெய் பனை தோட்டங்களில் வேலை செய்ய வரும் உள்ளூர் மக்கள் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சிலர் முந்திரிப் பருப்புகளைச் சேகரிப்பதற்காக எண்ணெய் பனை தோட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள முந்திரி, மாந்தோட்டங்களுக்கும் வருகிறார்கள்.அப்படிப்பட்டவர்கள் தற்செயலாகக் குழந்தையை அழைத்து சென்றார்களா அல்லது விற்கும் நோக்கத்திலோ குழந்தையைக் அழைத்துச் சென்றார்களா என்ற கோணத்திலும் நாங்கள் விசாரித்து வருகிறோம். இதுதவிர, குழந்தையின் இருப்பிடம் குறித்து யாராவது தகவல் தெரிவித்தால், காவல்துறை சார்பில் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளோம்" என்று டி.எஸ்.பி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Ganesh
போஸ்டர்கள் ஒட்டி வரும் சிறுமியின் தந்தை
ஒருபுறம் காவல்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், ஞானேஸ்வரியின் தந்தை கணேஷ் தன் மகளின் புகைப்படம் அடங்கிய 'காணவில்லை' என்று அச்சிடப்பட்டுள்ள போஸ்டர்களைக் கையில் பிடித்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்.
அவரும் அவருடைய குடும்பத்தினரும் பல இடங்களுக்குச் சென்று போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

அவர்கள் வழியில் சந்திக்கும் அனைவரிடமும் "இந்தக் குழந்தையை யாராவது பார்த்தீர்களா?" என்று கேட்கிறார்கள்.
யாராவது தகவல் தருவார்கள் என்ற நம்பிக்கையில் சுவர்கள், மரங்கள் மற்றும் மின் கம்பங்களில் போஸ்டர்களை ஒட்டுகிறார்கள்.
தங்களது மகள் எங்கோ பாதுகாப்பாக இருக்கிறாள் என்று இன்னும் நம்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு தகவலும் ஒரு நம்பிக்கை
ஞானேஸ்வரி குறித்த தொலைபேசி அழைப்புக்காக அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவரது உறவினர் கோட்டேஸ்வர ராவ் பிபிசியிடம் பேசுகையில், "சில சமயங்களில் காவல்துறையினர் வெளியில் இருந்து எங்களுக்குப் புகைப்படங்களை அனுப்பும்போது, 'இது நமது குழந்தையாகத்தான் இருக்கும்' என்று நினைத்து அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், கூர்ந்து கவனித்தபோது அது ஞானேஸ்வரி இல்லை என்று தெரிந்து மீண்டும் ஏமாற்றமடைந்தோம்" என்று கூறினார்.
"நாங்கள் எந்தத் தெருவுக்குள் சென்றாலும் எங்கள் குழந்தையைப் பார்த்துவிடுவோம் என்று நம்பினோம். யாருடைய குழந்தை அழுதாலும், நாங்கள் நின்று பார்ப்போம். ஒவ்வொரு போன் கால் வரும்போதும் ஒரு சிறு நம்பிக்கை பிறந்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது எங்கள் குழந்தை இல்லை என்று தெரியவரும்போது, எங்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது" என்கிறார் கோட்டேஸ்வர ராவ்.

'என்ன நடந்தது என்று எங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை'
ஞானேஸ்வரியைக் கடைசியாகப் பார்த்த அவரது தாய் சுங்கரா பவானியால், அன்று என்ன நடந்தது என்பதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.
"குழந்தை காணாமல் போயிருப்பதாக நீங்கள் நினைக்கலாம். குழந்தை இறந்திருந்தாலோ, விலங்கு ஏதேனும் தாக்கியிருந்தாலோ அல்லது வழிதவறிப் போயிருந்தாலோ... இவ்வளவு பெரிய விசாரணையில் ஏதேனும் ஒரு ஆதாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், எதுவுமே கிடைக்கவில்லை . அது தான் தான் புரியவில்லை" என்று அவர் கூறினார்.
"பாப்பா கண்டிப்பாக எங்களிடம் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி இல்லை என்றால், அதுவரை நிலைமை எப்படி இருக்குமோ என்ற வலி கடினமானது" என்று ஞானேஸ்வரியின் தாய் சுங்கரா பவானி பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் காவல்துறையினர் இதுவரை எந்த ஒரு கோணத்தையும் முழுமையாக நிராகரிக்கவில்லை. இது கடத்தலா? விபத்தா? அல்லது காட்டுவிலங்கு தாக்குதலா? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை எந்த ஒரு தெளிவான ஆதாரமும் கிடைக்கவில்லை.
அதனால் தான், "ஞானேஸ்வரி எங்கே?" என்ற கேள்வி, ஒரு மாதம் கடந்த பிறகும் விடை கிடைக்காமல் உள்ளது.

ஞானேஸ்வரி என்றாவது தனது பெற்றோரிடம் திரும்புவாரா, அல்லது ஆந்திரப் பிரதேசத்தில் இருப்பிடம் கண்டறியப்படாமல் இருக்கும் நூற்றுக்கணக்கான காணாமல் போனவர்களின் வழக்குகளில் ஒருவராகவே ஞானேஸ்வரியும் இருந்துவிடுவாளா என்ற கேள்விக்கான பதிலுக்காக அந்தக் குடும்பம் தற்போது காத்துக்கொண்டிருக்கிறது.
மறுபுறம், ஞானேஸ்வரியின் இருப்பிடம் கண்டறியப்படும் வரை விசாரணை தொடரும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























