'கிராமத்தில் கஞ்சா விளைவித்து தமிழகம் உள்பட 21 மாநிலங்களுக்கு டெலிவரி' - விரைவுத் தபாலில் அனுப்பியது எப்படி?

பட மூலாதாரம், Hyderabadpolice
- எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
விரைவுத் தபால் மூலம் ஆவணங்கள், பொருட்கள், பரிசுப் பொருட்கள் அனுப்பப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்திய தபால் துறையின் விரைவுத் தபால் சேவையை பயன்படுத்தி கஞ்சா கடத்திய கும்பலை ஹைதராபாத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
ஹைதராபாத் நகர காவல்துறையும், ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
"இந்தக் கும்பல் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் செயல்பட்டு வந்தது என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஐந்து பேர் கொண்ட கும்பலின் முக்கிய உறுப்பினரான ஜார்கண்டைச் சேர்ந்த சத்யம் மிஸ்ராவை கைது செய்துள்ளோம். மற்ற நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்," என்று ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.
சத்யம் மிஸ்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்ததாக அவர் பிபிசியிடம் கூறினார்.
"ஆரம்பத்தில் அவர் பெயின்டராகவும் லாரி ஓட்டுநராகவும் வேலை செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு பல்வேறு மாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் பணிக்காக மும்பைக்கு சென்றபோது கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானார்," என்று சஜ்ஜனார் கூறினார்.
எளிதாக பணம் சம்பாதிக்கும் நோக்கில், தனது மூத்த சகோதரரான சுபம் மிஸ்ரா உடன் இணைந்து நாடு முழுவதும் கஞ்சா விநியோகிக்கும் திட்டத்தை சத்யம் மிஸ்ரா தீட்டியதாகவும் சஜ்ஜனார் விளக்கினார்.
’21 மாநிலங்களுக்கு கஞ்சா விநியோகம்’
சத்யம் மிஸ்ராவும் அவரது சகோதரர் சுபமும் இணைந்து தங்களது நிலங்களில் கஞ்சா பயிரிட்டு வந்ததாக காவல்துறை கண்டறிந்துள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களையும் கஞ்சா சாகுபடியில் ஈடுபட ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது.
"சத்யம் மிஸ்ராவின் சொந்த ஊரான ஜார்கண்டின் தம்பகுடியாவுக்கு எங்கள் குழுவினர் சென்றபோது, அங்கு அதிகளவில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல இடங்களில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன," என்று காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.
இவ்வாறு விளைவிக்கப்பட்ட கஞ்சா, ஹைதராபாத், மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு மட்டுமல்லாமல், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட சுமார் 21 மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்ததாக காவல்துறை கண்டறிந்துள்ளது.

பட மூலாதாரம், Hyderabadpolice
'வாட்ஸ்அப்பில் ஆர்டர், விரைவுத் தபாலில் டெலிவரி'
கஞ்சாவை கடத்துவதற்காக இந்த கும்பல் இந்திய தபால் துறையின் விரைவுத் தபால் சேவையை பயன்படுத்தி வந்ததாக ஹைதராபாத் காவல்துறை கண்டறிந்துள்ளது.
கஞ்சா சிறிய பெட்டிகளில் அடைக்கப்பட்டு பார்சல்களாக 'விரைவுத் தபால்' மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாக காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.
"ஜார்கண்டில் உள்ள இஸ்ரி பஜார் மற்றும் புஸ்ரோ பஜார் தபால் நிலையங்கள் வழியாக கஞ்சா பார்சல்கள் அனுப்பப்பட்டன. அந்தப் பெட்டிகளில் மருந்துகள் இருப்பதாக தபால் நிலைய ஊழியர்களிடம் அவர்கள் கூறியுள்ளனர்," என்றார்.
காவல்துறை விசாரணையில், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்கள் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது.
50 கிராம் முதல் 250 கிராம் வரை எடையுள்ள பொட்டலங்களாக கஞ்சா தினமும் 8 முதல் 10 பார்சல்கள் வரை விரைவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
தபால் நிலையங்களில் இந்தப் பார்சல்கள் முறையாக ஸ்கேன் செய்யப்படாததால், கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக இந்த சட்டவிரோத வியாபாரம் நடைபெற்று வந்ததாக சஜ்ஜனார் தெரிவித்தார்.
"ஒரே தபால் நிலையத்தை பயன்படுத்தாமல், இரண்டு வெவ்வேறு தபால் நிலையங்கள் வழியாக பார்சல்கள் அனுப்பப்பட்டன. அவற்றில் மருந்துகள் உள்ளன என்று கூறியதால், தபால் நிலைய ஊழியர்களும் கூடுதல் சோதனை இல்லாமல் அனுமதித்துள்ளனர் என்பதை நாங்கள் அறிந்தோம்," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கஞ்சா பார்சல்கள் அனுப்புவதற்காக விரைவுத் தபால் சேவை தவறாகப் பயன்படுத்தப்பட்டது, பார்சல்கள் ஸ்கேன் செய்யப்படாதது மற்றும் ஊழியர்களின் அலட்சியம் தொடர்பாக இந்திய தபால் துறையின் தலைமை இயக்குநர் ஜிதேந்திர குப்தாவிடம் பிபிசி மின்னஞ்சல் மூலம் விளக்கம் கோரியுள்ளது. அவரின் பதில் இன்னும் கிடைக்கவில்லை.
"விரைவுத் தபால் மூலம் கஞ்சா சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து தபால் துறையின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவுத் தபால் பார்சல்களை கட்டாயமாக ஸ்கேன் செய்யும் நடைமுறையை அமல்படுத்துமாறும் பரிந்துரைத்துள்ளோம்," என்று சஜ்ஜனார் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Hyderabadpolice
உள்ளூர் ரயில், ஆட்டோ மூலம் விநியோகம்
கஞ்சா விற்பனை வலையமைப்பை மும்பையில் சச்சின் மிஸ்ரா மற்றும் சந்தோஷ் பண்டிட் ஆகியோர் ஒருங்கிணைத்து வந்ததாக, விசாரணையின்போது சத்யம் மிஸ்ரா தெரிவித்ததாக காவல்துறை கூறியுள்ளது
இதுகுறித்து காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் கூறுகையில், "எங்கள் விசாரணையில் சத்யம் மிஸ்ரா சில முக்கிய தகவல்களை வெளியிட்டார். மும்பையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கஞ்சா விநியோகிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள சுபம் மிஸ்ரா, ஜார்கண்டிலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை மும்பைக்கு கொண்டு செல்வார். அங்கு சச்சின் மிஸ்ரா மற்றும் சந்தோஷ் பண்டிட் வீடுகளில் ரகசியமாக சேமித்து வைத்து, பின்னர் சிறிய பொட்டலங்களாகப் பிரித்து வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே விநியோகித்துள்ளனர்," என்றார்.
வாட்ஸ்ஆப் மூலம் ஆர்டர்கள் பெறும்போது, 'கஞ்சா' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், 'மாம்பழம்', 'குச்சி', 'பூ' போன்ற குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
"ஒரு மாம்பழம் என்பது 50 கிராம் கஞ்சா, இரண்டு மாம்பழம் என்பது 100 கிராம் கஞ்சா என்று குறியீடு வைத்திருந்தனர். ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முடிந்தவுடன், சத்யம் மற்றும் சுபம் மிஸ்ரா மும்பையில் இருந்த தங்களது கூட்டாளிகளுக்கு தகவல் அனுப்புவார்கள். அவர்கள் கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக மாற்றி, உள்ளூர் ரயில்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்தனர்," என்று சஜ்ஜனார் கூறினார்.
விசாரணையின்போது, ஆர்டரின் அளவைப் பொறுத்து வாடிக்கையாளர்களிடம் ரூ.1,500 முதல் ரூ.8,000 வரை வசூலித்ததாகவும், இதன் மூலம் மாதத்திற்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையும், ஆண்டுக்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரையும் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டியதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
"கஞ்சா விற்பனையில் கிடைத்த வருமானத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். அந்தப் பணத்தில் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார்கள் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று சஜ்ஜனார் தெரிவித்தார்.

'ஒவ்வொரு பார்சலையும் கட்டாயம் ஸ்கேன் செய்ய வேண்டும்'
பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் அனைத்து பார்சல்களையும் நிறுவனங்கள் கட்டாயமாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்று ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பிபிசியிடம் கூறுகையில், "கூரியர் மற்றும் தபால் சேவைகள் மூலம் கஞ்சா கடத்தப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களுக்குத் தொடர்பில்லாத அல்லது நீங்கள் ஆர்டர் செய்யாத பார்சல்கள் வந்தால், அவற்றை எந்த சூழலிலும் பெற்றுக்கொள்ளக் கூடாது'' என்றார்,

பட மூலாதாரம், Hyderabadpolice
விரைவுத் தபால் என்றால் என்ன?
இந்திய தபால் துறையால் 1986 ஆகஸ்ட் 1ஆம் தேதி விரைவுத் தபால் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
குறைந்த செலவில் விரைவாக ஆவணங்கள் மற்றும் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தச் சேவை தொடங்கப்பட்டதாக இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
இந்த சேவையின் மூலம், 50 கிராம் முதல் 500 கிராம் வரை எடையுள்ள பொருட்களை 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு அனுப்ப முடியும்.
இதற்காக தபால் துறை நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தி, பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























