கொசுக்கள் சிலரை மட்டும் அதிகம் கடிப்பது ஏன்?

பட மூலாதாரம், NurPhoto via Getty Images
- எழுதியவர், கேத்தரின் வாங்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நான் கொசுக்களை ஈர்க்கும் காந்தம்.
கோடை விடுமுறைக்காக நான் உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், தப்பிக்கவே முடியாமல் கொசுக்களிடம் கடி வாங்குவேன் என்பது மட்டும் நிச்சயம். அதனால் பல வார காலங்கள் என்னை வதைக்கும் வகையில் பெரிய, அரிப்புடன் கூடிய தடிப்புகள் ஏற்படும்.
அதே நேரத்தில், என்னுடன் இருக்கும் மற்றவர்கள் அதனால் கொஞ்சம் கூட அவதிப்படுவதில்லை. அவர்களுக்கு ஒரு கடி கூட இருக்காது. அப்படியே கடி வாங்குபவர்களுக்கும் கூட, பெரும்பாலும் ஒரு சிறிய சிவப்பு புள்ளி மட்டுமே எஞ்சியிருக்கும்.
என் நண்பர்கள் பல ஆண்டுகளாக, 'உன் ரத்தம் கொசுக்களுக்கு மிகவும் இனிப்பாக இருப்பதால்தான் அவை உன்னையே அதிகம் கடிக்கின்றன' என்று நகைச்சுவையாகச் சொல்லி வருகிறார்கள்."
உண்மையில், அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். நம் உடல், மூச்சு மற்றும் உடல் மணம் உள்ளிட்ட பல உயிரியல் அடையாளங்களை வெளியிடுகின்றன. இவையே ஒருவரை கொசுக்கள் எவ்வளவு அதிகமாகக் கடிக்கும் என்பதைத் தீர்மானிக்கின்றன. சிலரிடம் இந்த அடையாளங்கள் கொசுக்களை மிகவும் வலுவாகக் கவரும் தன்மை கொண்டிருக்கும்.
கொசுக்கள் உங்களைக் கண்டுபிடித்துத் துரத்துவதற்கான மூன்று வழிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சமிக்கை அளிக்கும் கார்பன் டை ஆக்சைடு
பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கின்றன. தங்களின் முட்டை வளர்ச்சிக்குத் தேவையான புரதத்திற்காக அவை நமது ரத்தத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.
சுமார் 10 மீட்டர் (33 அடி) தூரத்திலிருந்தே, பார்வை மற்றும் மணத்தை பயன்படுத்தி தங்களின் இலக்கை அவை அடையாளம் காண்கின்றன. இதில் நாம் சுவாசம் மற்றும் தோலின் மூலம் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுவும் அடங்கும்.

பட மூலாதாரம், FreshSplash via Getty Images
மனிதர்களின் சுவாசம் கொசுக்களுக்கு ஒரு கார்பன் டை ஆக்சைடு சமிக்கையை அனுப்புகிறது. இது அவற்றின் வாசனை உறுப்புகளில் "இலக்கைத் தேடும் நடத்தையை" தூண்டுகிறது.
குழந்தைகள் உற்பத்தி செய்வதைவிட பெரியவர்கள் அதிக கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்வதால், அவர்கள் கொசுக்களை அதிகம் ஈர்க்கிறார்கள்.
ஆனால், கொசுக்கள் மனிதர்கள் அல்லாத பிற கார்பன் டை ஆக்சைடு ஆதாரங்களாலும் ஈர்க்கப்படுகின்றன என்பதால், உலர் பனி மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு ஆகியவை கொசுப் பொறிகளுக்கு பயனுள்ள கருவிகளாக அமைகின்றன.
உடல் வெப்பம் ஈர்ப்பை அதிகமாக்குகிறது
கொசுக்கள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தாலும் ஈர்க்கப்படுகின்றன (மேலும் இந்த கார்பன் டை ஆக்சைடு வெப்பத்தின் மீதான ஈர்ப்பை மேலும் அதிகப்படுத்துகிறது) என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
எனவே, கர்ப்பமாக இல்லாத பெண்களுடன் ஒப்பிடும்போது, கர்ப்பிணிப் பெண்கள் கொசுக்களை இரண்டு மடங்கு அதிகமாக ஈர்க்கிறார்கள்.
இதற்கு காரணம், கர்ப்ப காலம் வளர்சிதை மாற்றத் தேவையையும் சுவாச அளவையும் அதிகரிக்கிறது. இதனால் அதிக வெப்பமும் கார்பன் டை ஆக்சைடும் வெளியேற்றப்படுகின்றன.
"உங்களுக்குள் ஒரு சிறிய உலை இருக்கிறது. நீங்கள் அதிக வெப்பமாக இருக்கிறீர்கள்" என்கிறார் பிரிட்டனின் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பூச்சியியல் துறை பேராசிரியரான ஸ்டீவ் லிண்ட்சே.
உடற்பயிற்சி செய்பவர்கள் தற்காலிகமாக கொசுக்களை அதிகம் ஈர்க்கக்கூடும், குறிப்பாக உடற்பயிற்சியின் போதும் அதற்குப் பின்னரும் இது நிகழ்கிறது. ஏனெனில், அதிகரித்த வளர்சிதை மாற்றத் தேவை காரணமாக கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி அதிகரிப்பதுடன், அவர்கள் அதிக வெப்பமாகவும் வியர்வையுடனும் காணப்படுகிறார்கள்.
பெரிய உடலமைப்பு கொண்டவர்கள் பொதுவாக அதிக உடல் வெப்பத்தையும் அதிக கார்பன் டைஆக்சைடை வெளியிடுவதால், அவர்கள் கொசுக்களை அதிகமாக ஈர்க்கக்கூடும்.
சருமம் ஒரு வாசனையை வெளிப்படுத்துகிறது
கொசுக்கள் நெருங்கி வரும்போது (அதாவது 10 மீட்டர் அல்லது 33 அடிக்கும் குறைவான தூரத்தில் இருக்கும்போது), அவை சருமம் மற்றும் சுவாச வாசனைகள் உள்ளிட்ட தொடர்ச்சியான சமிக்கைகள் மூலம் தங்களின் இலக்குகளை அடையாளம் காண்கின்றன.
ஒரு கொசு யாரைக் கடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது "முக்கியமாக வாசனைதான்" என்று கூறும் லிண்ட்சே, "சிறிய, எளிதில் ஆவியாகக்கூடிய வேதிப்பொருட்கள் தான் இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. கொசுக்கள் ஒரு வேதியியல் உலகில் வாழ்கின்றன" என்கிறார்.

பட மூலாதாரம், boonchai wedmakawand via Getty Images
"இனிப்புச் சுவை கொண்ட ரத்தம்" கொண்டவர்கள் கொசுக்கடியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கட்டுக்கதையை லிண்ட்சே பிற விஞ்ஞானிகளுடன் இணைந்து பொய்யாக்கினார்.
அதற்குப் பதிலாக, கொசுக்கள் நமது தனித்துவமான "சரும வாசனை" நோக்கித்தான் ஈர்க்கப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார்.
சருமத்தில் உள்ள நுண்ணுயிரிகள், சருமத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் பெப்டைடுகளை எளிதில் ஆவியாகக்கூடிய கரிமச் சேர்மங்களாக உடைக்கின்றன.
இவை காற்றில் எளிதாகக் கலந்துவிடுவதால் கொசுக்களால் இவற்றை வேறுபடுத்தி அறிய முடிகிறது. நமது சருமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆவியாகக்கூடிய கரிமச் சேர்மங்கள் உள்ளன.
நமது சருமத்தில் உள்ள அம்மோனியா மற்றும் லாக்டிக் அமிலத்தால் கொசுக்கள் ஈர்க்கப்படுகின்றன, மேலும் கார்பாக்சிலிக் அமிலங்களும் காணப்படுவது இந்த ஈர்ப்பை இன்னும் வலுவாக்குகிறது.
அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆறு மணி நேரம் நைலான் ஆடைகளை அணிந்திருந்த 64 பேரின் சரும வாசனையை பகுப்பாய்வு செய்தனர்.
அந்த நைலான் துணியில் சேர்ந்திருந்த உடல் மணத்தை கொசுக்கள் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டது. அது ஒரு "மணம் சேகரிக்கும் கருவி" போல செயல்பட்டது. இதில், கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிகமாக இருந்தவர்களின் மணத்தை கொசுக்கள் தெளிவாக அதிகம் விரும்பியதாக ஆய்வில் தெரியவந்தது.
நாம் கொசுக்கடியால் பாதிக்கப்படுகிறோம் என்று நினைத்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாம் அனைவரும் கொசுக்களிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஈர்ப்பு மதிப்பெண்ணைக் கணக்கிட்டனர், மேலும் அதில் அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவரை விட 100 மடங்கு அதிகமாக கொசுக்களை ஈர்ப்பதைக் கண்டறிந்தனர்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் எதையும் பொருட்படுத்தாமல், இந்த வேறுபாடுகள் பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நீடித்தன.
''கொசுக்களை நீங்கள் எவ்வளவு ஈர்க்கிறீர்கள் என்பது பெரும்பாலும் உங்கள் உடலின் இயல்பான தன்மையால் தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கும்,'' என்று லிண்ட்சே கூறுகிறார்.

பட மூலாதாரம், Paula Bronstein via Getty Images
சருமத்தில் உள்ள நுண்ணுயிரிகளும் நாம் கொசுக்களை எவ்வளவு தூரம் ஈர்க்கிறோம் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
நெதர்லாந்தின் வாகனிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மலேரியா கொசுக்களை அதிகம் ஈர்க்கும் நபர்களின் சருமத்தில், குறைவாக ஈர்க்கும் நபர்களை விட வேறுபட்ட பாக்டீரியா சமூகம் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இது அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், குறைந்த பன்முகத்தன்மை கொண்டதாக இருந்தது. மனித உடலின் வாசனையை உருவாக்குவதில் சரும பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம்.
பாக்டீரியா இல்லாவிட்டால் மனித வியர்வை மனித மூக்கால் உணரக்கூடிய வாசனை இல்லாததாக இருக்கும்.
இரட்டையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், ஒரே மரபணுக்களைக் கொண்ட ஒத்த இரட்டையர்களை கொசுக்கள் கிட்டத்தட்ட ஒரே அளவில் ஈர்த்ததைக் காட்டின. ஆனால், மரபணுக்கள் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாத இரட்டையர்களிடம் இந்த ஈர்ப்பு வேறுபட்டிருந்தது.
இதனால், கொசுக்கள் ஒருவரைக் கடிக்கத் தூண்டும் உடல் மணத்தின் தன்மை மரபணுக்கள் மூலம் பரம்பரையாகக் கடத்தப்படக்கூடும் என்பதற்கான சான்று கிடைக்கிறது.
எல்லா கொசுக்களும் ஒரே மாதிரி கடிப்பதில்லை
கொசு கடிக்கு ஒவ்வொருவரின் உடலும் வெவ்வேறு விதமாகப் பதிலளிக்கலாம். மனிதர்களின் முழு மரபணுக்களையும் ஆய்வு செய்த ஒரு ஆராய்ச்சியில், நமது நோயெதிர்ப்பு மண்டலத்துடன் தொடர்புடைய மரபணுக்கள், கொசு கடிக்கு உடல் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதில் முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப்பட்டது. சுவாரசியமாக, இந்த மரபணுப் பகுதிகள் ஒவ்வாமை ஏற்படுவதுடன் தொடர்புடைய பகுதிகளுடனும் ஒத்துப்போயின.
கொசு கடித்த பிறகு பெரிய சிவப்பு வீக்கம் அல்லது அதிக அரிப்பு ஏற்படும் உடல்நிலை இருந்தால், 'கொசுக்கள் என்னையே அதிகமாகக் கடிக்கின்றன' என்ற எண்ணம் ஒருவருக்கு ஏற்படலாம்.
"சிலர் தங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதால், தங்களைத்தான் கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன என்று நினைக்கிறார்கள்" என்று கூறும் பெர்குசன், "சிலர் அடிக்கடி கடி வாங்கினாலும் கூட, அவர்களுக்குப் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை"என்கிறார்.
நம்மில் சிலர் உயிரியல் ரீதியாக கொசுக்களுக்கு எளிதான இலக்காக இருந்தாலும், கொசுக்களின் கண்காணிப்பிலிருந்து யாரும் முற்றிலும் தப்பிக்க முடியாது.
பெர்குசன் கூறுவது போல, "உங்களை கொசுக்கள் கடிக்காது என்று நீங்கள் நம்பினாலும் கூட, நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்".
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























