திமுக, அதிமுக-வை இணைக்க எம்.ஜி.ஆர், கருணாநிதி செய்த முயற்சி தோல்வியடைந்தது ஏன்?

திமுக, அதிமுக இணைப்பு, கருணாநிதி, எம்ஜிஆர்

பட மூலாதாரம், Twitter

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஜூலை 2ஆம் தேதி தவெக-வில் இணைந்தபோது, "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக-வுடன் கூட்டணி வைக்க முயன்றதால், தாங்கள் அதிமுகவில் இருந்து விலகியதாக" தெரிவித்திருந்தனர்.

அதேபோல அந்த நிகழ்வில் பேசிய பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "வரும் காலத்தில் திமுக, அதிமுக இணையும். ஏற்கெனவே 60% அதிமுகவினர் தவெக-வில் இணைந்துவிட்டனர். அப்படி திமுக, அதிமுக இணையும்போது மீதமுள்ள தொண்டர்களும் இங்கே வந்துவிடுவார்கள்" எனக் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை அந்தக் கட்சி பெறவில்லை. பின்னர், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தங்களிடம் இருந்த தலா 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெக-வுக்கு வழங்கின. அதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவின் ஒரு பிரிவினரும் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

மறுபுறம், தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க எத்தனிப்பதாக செய்திகள் பரவின. அதற்குப் பிறகான தலைவர்களின் பேட்டிகளிலும் இதுகுறித்துப் பேசப்பட்டது.

கடந்த மே மாதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி 'இந்தியா டுடே' ஊடகத்திற்கு அளித்த பேட்டி, இந்தத் தகவலுக்கு மேலும் வலு சேர்த்தது.

அப்போது பேபி, "நாங்கள் எங்கள் கூட்டணியின் தமிழ்நாடு தலைவரான ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். அப்போது அதிமுக தலைமை தாங்கும் அரசை ஆதரிக்கப் போவதாக அவர் தெரிவித்தார். அதிமுகவை திமுக ஆதரிப்பதை இடதுசாரிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும், "நாங்கள் திமுகவை எதிர்க்கவில்லை, அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள, இந்தியா கூட்டணிக்கு எதிராகச் செயல்படும் அதிமுகவை ஆதரிக்க முடியாது என்று ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டோம்" என்று பேபி கூறியிருந்தார். இருப்பினும், அவர் பிறகு இந்தக் கூற்றை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், திமுக, அதிமுக இணைக்கப்படுவதற்கு இதற்கு முன்பு நடந்த முயற்சிகள் குறித்த பேச்சுகள் எழத் தொடங்கின.

குறிப்பாக, எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய முயற்சி நடந்தது பற்றி கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி' நூலில் எழுதியுள்ளதைப் பலரும் சுட்டிக்காட்டினர். அந்த முயற்சி குறித்தும், அது தோல்வி அடைந்தது குறித்தும், இரு கட்சியினரும் கூறிய கருத்துகள் மாறுபட்டவையாக இருந்தன.

1979இல் திமுக – அதிமுக இணைப்பு முயற்சியின்போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், MGR FAN CLUB

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குறிப்பாக இதற்கான முயற்சியை ஒடிசாவின் முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக் மேற்கொண்டதாகச் சிலர் பதிவிட்ட தகவல் வேகமாகப் பரவியது. அதைத் தொடர்ந்து, அந்த முயற்சி குறித்த தகவல்களை இணையத்தில் தேடுவதும் அதிகமானது.

அத்துடன், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியின்போது, இதுபற்றிக் கூறிய தகவலை வைத்தும் விவாதங்கள் நடந்தன.

அதில் பேசிய துரைமுருகன், ''எம்.ஜி.ஆர் இன்னும் இரண்டு நாட்கள் உயிருடன் இருந்திருந்தால் கட்சியை திமுகவுடன் இணைத்திருப்பார். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது'' என்றொரு தகவலைக் கூறியிருந்தார்.

இந்தப் பேட்டி வெளிவந்த அடுத்த நாளே அதிமுக தரப்பில் இதற்குக் கடுமையான எதிர்வினை கிளம்பியது. எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த ஹண்டே, பொன்னையன், முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் திருச்சி செளந்தரராஜன், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி ஆகியோர், இந்தத் தகவல் அனைத்தும் பொய் என்று கூறி, துரைமுருகனை கடுமையாக விமர்சித்தனர்.

இதுபற்றிப் பேசியிருந்த ஹண்டே, ''இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பும்கூட எம்.ஜி.ஆர் உணர்வின்றியே இருந்தார். அவருக்கு அருகில் இருந்து சிகிச்சைகளை ஏற்பாடு செய்த நான் அதை அறிவேன். இரு கட்சிகளை இணைக்க பிஜூ பட்நாயக் முயற்சி எடுத்தது உண்மை. அவருக்கு இந்திரா காந்தி எதிரி. அதனால் எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரும் சேர்ந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் காலியாகி விடுமென நினைத்து இதற்காக இருவரிடமும் பேசினார். ஆனால் அது வெற்றியடையவில்லை. அந்த முயற்சியை எடுத்தது கருணாநிதிதான். அப்படியொரு தேவை எம்.ஜி.ஆருக்கு அவர் இறக்கும் வரை ஏற்படவே இல்லை'' என்றார்.

திமுக, அதிமுக இணைப்பு, கருணாநிதி, எம்ஜிஆர்

பட மூலாதாரம், Getty Images

பிஜூ பட்நாயக் எடுத்த முயற்சி குறித்து கருணாநிதி எழுதியிருப்பது என்ன?

கருணாநிதி எழுதிய ''நெஞ்சுக்கு நீதி'' மூன்றாம் பாகத்தில் பிஜூ பட்நாயக் குறித்து 'உயர்ந்த மனிதன்' என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததன் அடிப்படையிலும் இந்த விஷயத்தை பலரும் விவாதித்தனர். அந்தப் புத்தகத்தின் 390வது பக்கத்தில் இருந்து 394வது பக்கம் வரையிலும் இதுபற்றி கருணாநிதி, விரிவாகப் பல கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்

அதில் கருணாநிதி பதிவு செய்திருக்கும் தகவல்களின் சாராம்சம் இதுதான்: ''1979 செப்டெம்பர் 6 அன்று மத்திய அமைச்சர் பிஜூ பட்நாயக் என்னிடம் தொலைபேசியில் அழைத்து, முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்றார். நான் வரச் சொன்னேன். திமுக, அதிமுகவை இணைக்க அவர் முயற்சி எடுப்பதாக ஏடுகளில் செய்திகள் வந்தன. செப்டம்பர் 9 அன்று என்னை வேலூரில் சந்தித்த செய்தியாளர்கள் இது பற்றிக் கேட்டனர்.''

''பூம்புகாரில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஜி.ஆர், திமுக-வும் அதிமுக-வும் இணைவதில் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். அன்று மாலையில் காரைக்கால் பொதுக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்று பேசியிருக்கிறார். எதற்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற கருத்துப்பட பதில் கூறினேன். அதன் பிறகு என்னிடம் கூறியபடியே செப்டெம்பர் 12ஆம் தேதி பிஜூ பட்நாயக் என்னை சென்னையில் சந்தித்தார்.''

''சென்னையில் என் வீட்டில் நீண்டநேரம் என்னிடம் இதுபற்றிப் பேசினார். நான் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னணித் தலைவர்களிடம் கலந்து பேசியபடி சில நிபந்தனைகளைக் கூறினேன். கட்சியின் பெயர் திமுக என்றே இருக்க வேண்டும்; அண்ணா படம் பொறித்த கொடி இருப்பதில் ஆட்சேபனை இல்லை. இரு கட்சிகள் இணைவதால் திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி தேவையில்லை.''

''மற்ற பொறுப்புகள் குறித்து கட்சி இணைந்த பிறகு உரிய நேரத்தில் பேசிக் கொள்ளலாம். இட ஒதுக்கீட்டில் சமூகநீதிக்குப் புறம்பாக எம்.ஜி.ஆர் கொண்டு வந்துள்ள பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு (Creamy Layer) என்பதைத் திரும்பப் பெறவேண்டும். நான் சந்திப்புக்கு நாளையே ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். பிஜூ பட்நாயக் அதைக் கேட்டு மகிழ்ந்து, இதை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொள்வார் என்று புறப்பட்டார்.''

''மறுநாள் (13–9–1979) அன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நானும் எம்.ஜி.ஆரும் சந்தித்துப் பேசினோம். அப்போது பேராசிரியர் அன்பழகன், அதிமுக சார்பில் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர். நானும் எம்.ஜி.ஆரும் வேறொரு அறையில் தனியாகவும் பேசினோம். பிஜூ பட்நாயக்கிடம் நான் சொன்ன கருத்துகள், நிபந்தனைகள் உண்மைதானா என்று எம்.ஜி.ஆர் வியப்புடன் கேட்டார்.''

1979இல் திமுக – அதிமுக இணைப்பு முயற்சியின்போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

''நான் அவற்றை விளக்கினேன். அதற்கு அவர் ஒரே நாளில் இரு கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, இரு கட்சிகள் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிவிடலாம் என்று கூறினார். வெளியே வந்து எங்கள் முடிவை பிஜூ பட்நாயக்கிடமும், அங்கிருந்த தலைவர்களிடமும் தெரிவித்தோம். இருவரும் கைகுலுக்கி, படமெடுத்து, செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுப்பதாக செய்தியாளர்களிடம் விளக்கினோம்.''

''இந்தச் சந்திப்பு நடந்த அதே நாளில் காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை எம்.ஜி.ஆர் சந்தித்ததாக ஏடுகளில் செய்தி வெளியானது. அதற்கு மறுநாள் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் இதுபற்றிப் பேசவே இல்லை. ஆனால் அவரை மேடையில் வைத்துக்கொண்டு, அதிமுக அமைச்சர்கள் என்னையும், திமுகவையும் மிகவும் தரக்குறைவாகப் பேசினார்கள். நாங்கள் பேசியதற்குப் பின் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. வேலூரில் பேசியது பற்றி கட்சி நிர்வாகிகள் என்னிடம் வருந்தினார்கள்."

''இரு கட்சிகளின் இணைப்பு பற்றி யுஎன்ஐ செய்தி நிறுவனம் என்னிடம் கேட்டபோது, 'தொடர் நடவடிக்கையில்லை' என்றேன். அதனால் தேர்தல் உடன்பாடுகள் வெவ்வேறாகத்தான் இருக்கும் எனக் கருதுவதாகவும் கூறினேன். பின்பு பிஜூ பட்நாயக் என்னிடம் தொலைபேசியில் பேசியபோது, இணைப்புக்குச் சாதகமான சூழ்நிலை இல்லை என்பதை விளக்கினேன். அவர் என்னை டெல்லிக்கு வரச் சொன்னார்.''

இவ்வாறு அந்த முயற்சியை விளக்கியுள்ள கருணாநிதி, அதன் பிறகு இந்திரா காந்தியிடம் இருந்து முரசொலி மாறன் மூலமாக வந்த அழைப்பு காரணமாக, காங்கிரஸ் உடன் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

திமுக, அதிமுக இணைப்பு, கருணாநிதி, எம்ஜிஆர்

பட மூலாதாரம், Subaguna Rajan

திமுக, அதிமுக-வை இணைக்க பிஜூ பட்நாயக் முயற்சி எடுத்தது ஏன்?

கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி'யில் எழுதியிருந்தபடியே, திமுக, அதிமுக இணைப்பு முயற்சி தோல்வியடைந்த பின் இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி (திமுக) அமோக வெற்றியைப் பதிவு செய்ததாகக் கூறுகிறார், திராவிட இயக்க ஆய்வாளர் சுபகுணராஜன்.

பிபிசியிடம் பேசிய சுபகுணராஜன், ''எம்ஜிஆர் 1977இல் ஆட்சி அமைத்த பின், இந்த முயற்சி நடந்தது உண்மை. அந்தக் காலகட்டத்தில் இருந்த அனைவருக்குமே இது தெரியும். இருவரும் சந்தித்துப் பேசியும் விட்டனர். ஆனால் கருணாநிதிக்கு எதிராக எம்.ஜி.ஆரை உருவாக்கிய சில உயர் சமுதாய சக்திகள் உள்ளே புகுந்து அந்தத் திட்டத்தை நிறைவேற விடாமல் தடுத்துவிட்டன'' என்றார்.

பிஜூ பட்நாயக் இதில் ஈடுபாடு காட்டியதற்கான காரணத்தை விளக்கிய அவர், ''இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தில் மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாமல் ஆட்சியில் இருந்த மாநிலக் கட்சி திமுக மட்டுமே. ஆட்சியில் இருந்துகொண்டே பெரும் சோதனைகளை எதிர்கொண்டு மிகத் தீவிரமாக அதை எதிர்த்த ஒரே கட்சியும் திமுகதான். அப்போது பல மாநிலங்களில் இருந்து ஜார்ஜ் பெர்ணான்டஸ் போன்ற பல தலைவர்கள் இங்கே வந்திருந்தனர். இங்கிருப்பதைப் பாதுகாப்பாக உணர்ந்தனர்'' என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜனதா தளத்தை உருவாக்கி ஆட்சியில் அமர்த்தியதில் முக்கியப் பங்காற்றிய பிஜூ பட்நாயக், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைக் காலி செய்வதற்காக இந்த முயற்சியை எடுத்ததாக விளக்கினார் சுபகுணம்ராஜன். அதோடு, இந்த விஷயத்தில் அந்தக் காலகட்டத்தில் நடந்த சில விஷயங்களை மட்டுமே நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி குறிப்பிட்டு எழுதியிருந்ததாகத் தெரிவித்தார் அவர்.

1979இல் திமுக – அதிமுக இணைப்பு முயற்சியின்போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

பண்ருட்டி ராமச்சந்திரனின் பங்கு என்ன?

இந்த முயற்சி குறித்து 2012ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதி பேசும்போது, இந்த முயற்சியைத் தடுத்தது பண்ருட்டி ராமச்சந்திரன் என்றும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இணைப்புப் பேச்சுவார்த்தை நடந்தபோது, அங்கு இருந்தததாக கருணாநிதி குறிப்பிட்டு இருந்தவர்களில் கருணாநிதி, எம்ஜிஆர், அன்பழகன், நெடுஞ்செழியன், பிஜூ பட்நாயக் அனைவரும் மரணமடைந்துவிட்டனர். பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே தற்போது இருக்கிறார். இவர் கருணாநிதி சொன்ன கருத்தையும் ஒப்புக்கொண்டு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், ''நான் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், அந்த இணைப்பு நிச்சயம் நடந்திருக்கும். திமுக-வில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் வேலைக்காரர்களைப் போல நடத்தப்படுவார்கள் என்று நான் தலைவரிடம் எடுத்துரைத்தேன்," என்று அதில் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

அப்போது நடந்தது என்ன என்பது பற்றி கருணாநிதி பதிவிட்ட தகவல்களை மட்டுமே வைத்து, அவை அனைத்துமே உண்மையாக இருக்குமெனக் கருத முடியாது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் சுகுணா திவாகர்.

பிபிசி தமிழிடம் பேசிய சுகுணா திவாகர், ''கருணாநிதி நெஞ்சுக்கு நீதியில் எழுதியுள்ள தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்தச் சம்பவம் பற்றி அனைவராலும் பேசப்படுகிறது. அப்போது பிஜூ பட்நாயக் இந்த முயற்சியில் ஈடுபட்டபோது, கட்சிப் பெயர், சின்னத்தை மாற்றக்கூடாது, முதல்வராக எம்.ஜி.ஆரே தொடரட்டும் என்று தான் கூறியதாகவும், அதை முதலில் ஒப்புக்கொண்டு விட்டு, டெல்லியில் இருந்து அழுத்தம் வந்ததும் மறுத்துவிட்டார் என்றும் எழுதியிருந்தார். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து இந்த முயற்சி பற்றி எந்தப் பதிவுகளும் இல்லை'' என்றார்.

அதேவேளையில், எம்.ஜி.ஆர்–கருணாநிதி காலத்தில் இதற்கான முயற்சிகள் நடந்து இருந்தாலும், இப்போதுள்ள நிலையில் இரு கட்சிகளும் கூட்டணி வைத்துக் கொள்வதே இரு கட்சிகளையும் அழித்துவிடும் என்று பிபிசியிடம் குறிப்பிட்டார் திராவிட இயக்க ஆய்வாளர் சுபகுணராஜன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு