மமதா பானர்ஜியால் நீக்கப்பட்ட 'அதிருப்தி எம்.எல்.ஏ' மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

    • எழுதியவர், பிரபாகர் மணி திவாரி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ ரிதப்ரத பானர்ஜி, மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகி உள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் அளிக்கப்பட்ட ஆதரவுக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் ரதீந்திர பாசு, எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்படும் அறையின் சாவியை ரிதப்ரதவிடம் ஒப்படைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரிதப்ரத, "திரிணாமுல் காங்கிரஸ் சின்னத்தில் வெற்றி பெற்ற மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்கு 60 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தற்போது மாநிலத்திற்கு வெளியே இருக்கிறார்கள். நாங்கள் அவையில் பாஜகவை வலுவாக எதிர்கொள்வோம்," என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவின் ஆலோசகராக இருக்க வேண்டும் என்று ரிதப்ரத கோரிக்கை விடுத்துள்ளார். அபிஷேக் பானர்ஜியுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக 58 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவையில் கூட்டம் நடத்தி, சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒரு கடிதத்தை ஒப்படைத்தனர். அந்தக் கடிதத்தில் ரிதப்ரத சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தங்களது குழு அவையில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியின் பங்கை ஆற்றும் என்று ரிதப்ரத கூறினார்.

ரிதப்ரதவின் அரசியல் வாழ்க்கையின் உச்சக்கட்டமாக அமைந்துள்ள இந்த நிகழ்வு, மம்தா பானர்ஜியின் நீண்ட அரசியல் பயணத்தில் மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.

சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து, அதன் அனைத்து முக்கிய முடிவுகளையும் மம்தா பானர்ஜியே தனிப்பட்ட முறையில் எடுத்து வந்தார்.

ஆனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதப்ரத, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவர்களின் ஆதரவைப் பெற்றிருப்பது, கட்சி வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது.

ரிதப்ரத என்ன சொன்னார்?

ஊடகங்களிடம் பேசிய ரிதப்ரத பானர்ஜி, "18-வது மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸின் இந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொண்ட சட்டப்பேரவை சட்டப்பேரவை குழு 'நான்' என்பதில் அல்ல, 'நாம்' என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. என்னென்ன விதிகள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனவோ, அவை அனைத்தையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம், இதனால்தான் 18-வது மேற்கு வங்க சட்டப்பேரவையில் எங்களுக்கு முதன்மை எதிர்க்கட்சியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது," என்றார்.

மேலும் அவர், "மமதா பானர்ஜி எங்களது முதன்மை ஆலோசகராக இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சியாக எங்களது நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். திரிணாமுல் காங்கிரஸ் சின்னத்தில் 80 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான உறுப்பினர்கள் எங்களது கோரிக்கையை ஆதரித்துள்ளனர், எங்களது கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது," என்றார்.

இதற்கிடையில், முன்னாள் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கொல்கத்தா மாநகராட்சி மேயருமான ஃபிரஹாத் ஹக்கீம் மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மமதாவுக்கு சவாலான காலம்

தொடர்ந்து 15 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த பிறகு, சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜியின் கட்சி தோல்வியடைந்தது.

அதன்பிறகு இருந்தே மமதா பானர்ஜி தனது அரசியல் வாழ்க்கையின் இந்த மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சியில் தீவிரமடைந்து வரும் அதிருப்தி மற்றும் ராஜினமாக்களின் வரிசையைப் பார்த்து, அரசியல் வட்டாரங்களில் வரும் காலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உடையக்கூடுமா என்ற கேள்விதான் கேட்கப்பட்டு வருகிறது.

இதனுடன், திரிணாமுல் காங்கிரஸை ஒற்றுமையாக வைத்திருக்க அதிகாரம் மட்டும்தான் ஒரே வழியாக இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது.

அதிகாரம் கையை விட்டுப் போனவுடனேயே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து பகிரங்கமாகக் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

கட்சி இரண்டாக உடையுமா அல்லது சிதறுமா என்பது குறித்த யூகங்களின் வரிசையும் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தினமும் புதிய புதிய யூகங்களும் கோரிக்கைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

வங்கத்திலும் மகாராஷ்டிரா மாடல் மீண்டும் நடக்குமா என்ற கேள்வியும் இங்கே கேட்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் சிவசேனா உடைந்ததைப் போல திரிணாமுல் காங்கிரஸும் உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியில் அதிருப்தி குரல்கள் திடீரென தீவிரமடையத் தொடங்கியுள்ளன. பல தலைவர்கள் இந்தத் தோல்விக்குத் திரிணாமுல் அரசின் செயல்பாட்டு முறை மற்றும் கட்சியின் தேர்தல் உத்திகள்தான் காரணம் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதன்பிறகு நகராட்சி முதல் செய்தித் தொடர்பாளர் நிலை வரையிலான தலைவர்களின் ராஜினாமாக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனுடன் ஊழல் குற்றச்சாட்டில் தலைவர்கள் கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.

ஆனால் போலி கையெழுத்து ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பல பழைய தலைவர்களின் அதிருப்தி ஆகியவை மமதா பானர்ஜிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

நான்கு முறை எம்பியாக இருந்த ககோலி கோஷ் தஸ்திதாரை மக்களவைக் கட்சியின் முதன்மைக் கொறடா பதவியிலிருந்து மமதா பானர்ஜி நீக்கியிருந்தார். அதன்பிறகு ககோலி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், தனக்கு நான்கு தசாப்த கால விசுவாசத்திற்கான பலன் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாத நிபந்தனையுடன் பிபிசியிடம் பேசுகையில், "தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய நிகழ்வுகள் மமதா தீதிக்குக் கவலையை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் அவர் அடிமட்டத்திலிருந்து வந்த தலைவர், சவாலான சூழ்நிலைகளில் போராடிய நீண்ட அனுபவம் அவருக்கு உண்டு. அவர் இந்த முறையும் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார். கட்சியைப் பாதுகாப்பதற்கான உத்திகளில் அவர் வேலை செய்யத் தொடங்கிவிட்டார்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு