You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் தாக்குதலில் இதுவரை 20 அமெரிக்க ராணுவ தளங்கள் சேதம் - செயற்கைக்கோள் படங்கள் உணர்த்தும் உண்மை
- எழுதியவர், மெர்லின் தாமஸ் , அலெக்ஸ் முர்ரே மற்றும் மாட் மர்பி
- பதவி, பிபிசி வெரிஃபை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
போர் தொடங்கிய பிறகு இதுவரை இரான் நடத்திய தாக்குதலில் 20 அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்துள்ளன என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் காணொளிகள் வெளிப்படுத்துகின்றன.
வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டதை விட இந்தத் தாக்குதல்கள் மிகவும் விரிவானவை என்பதை இப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பிப்ரவரி மாத இறுதியில் இருந்து மத்திய கிழக்கில் உள்ள எட்டு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் முக்கியத் தளங்களை இரான் குறிவைத்ததால், அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் ரேடார்களுக்கு மில்லியன்கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக இரான் மற்றும் லெபனான் முழுவதும் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இரான் அமெரிக்கத் தளங்களையும், அமெரிக்க ராணுவத்தின் கூட்டுத் தளங்களையும் குறிவைத்துள்ளது.
'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்கியதிலிருந்து இரானில் 13,000க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக பென்டகன் கூறுகிறது.
இரானின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி, அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதில் தனது ராணுவம் பெற்ற வெற்றியைக் முன்னிலைப்படுத்த முயன்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கு பகுதி இனி அமெரிக்கத் தளங்களுக்கு "பாதுகாப்பான இடம்" அல்ல என்று கூறியுள்ளார்.
இரானின் ராணுவம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக வெள்ளை மாளிகை பலமுறை கூறியுள்ள போதிலும், அமெரிக்கத் தளங்களில் காணப்படும் சேதங்கள், இரானின் எதிர்-தாக்குதல்கள் அமெரிக்க அதிகாரிகள் முன்பு ஒப்புக்கொண்டதை விட மிகவும் துல்லியமானவை மற்றும் விரிவானவை என்பதை உணர்த்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"செயல்பாட்டு பாதுகாப்பு காரணங்களை" சுட்டிக்காட்டி, பிபிசி வெரிஃபையின் கண்டுபிடிப்புகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மறுத்துவிட்டார்.
இரான் மற்றும் மத்திய கிழக்கைச் சேர்ந்த பெரும்பாலான பகுதியின் புதிய படங்களுக்கு "காலவரையற்ற" கட்டுப்பாட்டை விதிக்குமாறு முக்கிய சேவை வழங்குநரான பிளானட் நிறுவனத்திடம் கோரியதன் மூலம், இந்த மோதல் குறித்த செயற்கைக்கோள் பகுப்பாய்வைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்றது.
தங்களது படங்கள் "கூட்டணி மற்றும் நேட்டோ கூட்டாளி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை இலக்கு வைக்க எதிரி நாடுகளின் அமைப்புகளால் பயன்படுத்தப்படாமல்" இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகக் கூறி அந்நிறுவனம் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியது.
இரானிய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களைக் கண்டறிய, பிபிசி வெரிஃபை மற்ற சர்வதேச நிறுவனங்களின் செயற்கைக்கோள் படங்களையும், பிளானட் நிறுவனத்தின் பழைய படங்களையும் இணைத்துப் பயன்படுத்தியுள்ளது.
இந்த ராணுவத் தளங்கள் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , கத்தார், குவைத், இராக், ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன.
தாக்கப்பட்ட தளங்களின் எண்ணிக்கை 28 வரை இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுவதால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் ருவைஸ் மற்றும் அல் சாதர் விமானத் தளங்கள் மற்றும் ஜோர்டானிலுள்ள முவாஃபக் சால்டி விமான தளம் ஆகியவற்றில் சேதமடைந்த அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் இந்த மதிப்புமிக்க ராணுவ தளவாடங்களில் அடங்கும்.
உலகெங்கிலும் உள்ள தளங்களில் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய, உற்பத்தி செய்ய தலா 1 பில்லியன் டாலர் (766 மில்லியன் பவுண்டுகள்) செலவாகக் கூடிய இத்தகைய 8 தாட் (THAAD) வான் பாதுகாப்பு அமைப்புகளை மட்டுமே அமெரிக்கா இயக்குவதாக அறியப்படுகிறது.
ஒவ்வொரு தாட் அமைப்பையும் இயக்க சுமார் 100 வீரர்கள் கொண்ட குழு தேவைப்படுகிறது, அதே நேரத்தில் அது ஏவும் இடைமறிப்பு ஏவுகணையின் (interceptor) விலையும் சுமார் 12.7 மில்லியன் டாலராக உள்ளது.
பிபிசி வெரிஃபையிடம் ஐரிஷ் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவரான வைஸ்-அட்மிரல் மார்க் மெலெட் கூறுகையில், இந்த பேட்டரிகள் "மிகவும் சிக்கலான" பிராந்திய பாதுகாப்பு வலையமைப்பின் மையப்பகுதி என்றும், இவற்றை "விரைவாகவோ அல்லது எளிதாகவோ மாற்ற முடியாது" என்றும் தெரிவித்தார்.
சௌதி அரேபியாவிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளத்தில் இருந்த அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் மற்றும் கண்காணிப்பு விமானங்களுக்கும் இரானிய தாக்குதல்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அங்கு, சேதமடைந்த விமானங்கள் மற்றும் புகை கக்கும் பள்ளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன என்று செயற்கைக்கோள் படங்களின் நிபுணர் பகுப்பாய்வு காட்டுகிறது.
அங்குள்ள ஒரு விமானம் 'இ-3 சென்ட்ரி' (E-3 Sentry) கண்காணிப்பு விமானம் என்று எம்ஏஐஏஆர் (MAIAR) அமைப்பின் ஆய்வாளர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார்.
இதனை மாற்றுவதற்கு 700 மில்லியன் டாலர் வரை செலவாகலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மற்ற இடங்களில், குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானப்படைத் தளம் மற்றும் கேம்ப் ஆரிஃப்ஜான் ஆகியவற்றை இலக்கு வைத்தும் இரானிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மோதலின் போது பலமுறை தாக்கப்பட்ட இந்த விமான தளத்தின் செயற்கைக்கோள் படங்களில், அழிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள், விமான நிலையக் கூடாரங்கள் மற்றும் ராணுவ வீரர்களின் தங்குமிடங்கள் ஆகியவற்றை எம்ஏஐஏஆர் (MAIAR) ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
கேம்ப் ஆரிஃப்ஜானில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜேன்ஸ் என்ற பாதுகாப்பு உளவுத்துறை நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
அமெரிக்கத் தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவை மதிப்பிடுவது கடினம்.
ஆனால் மே மாதத்தில் பென்டகன் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' இன் மொத்தச் செலவு 29 பில்லியன் டாலராகும்.
இதில் பெரும் பகுதி இந்த மோதலில் அழிக்கப்பட்ட "உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கும் அல்லது மாற்றுவதற்கும்" செலவிடப்பட வாய்ப்புள்ளது.
இது குறைத்து மதிப்பிடப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடும் என்று ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர்.
பிப்ரவரி மாதத்தில் இருந்து எஃப்-15 (F-15) மற்றும் எஃப்-35 (F-35) போர் விமானங்கள், 24 எம்கியூ-9 ரீப்பர் (MQ-9 Reaper) டிரோன்கள் மற்றும் ஒரு ஏ-10 (A-10) தாக்குதல் விமானம் உட்பட குறைந்தது 42 விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள இலக்குகள் மீதான தனது தாக்குதல்களுக்கு, இரான் மலிவான எளிதில் மாற்றக்கூடிய டிரோன்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர்கள், போர் செல்லும் போக்கில் இரானிய உத்திகள் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன என்றும், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் தளங்களை இலக்கு வைத்து ஏவப்பட்ட பரவலான ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து, மிகவும் துல்லியமான, குறிவைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு அவை மாறியுள்ளன என்றும் கூறினர்.
"இரானின் ஆரம்பகட்ட தாக்குதல்கள் எண்ணிக்கையை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டவை. அதாவது, மிகப்பெரிய அளவில் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தொடர்ந்து ஏவி, எதிரியின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வெறும் எண்ணிக்கையின் அழுத்தத்தால் திணறடிக்க முயன்றன," என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டிம்சன் சென்டர் ஆய்வு நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் கெல்லி கிரிகோ தெரிவித்தார்.
"இருப்பினும், சில நாட்களுக்குள், இரான் அளவில் சிறிய மற்றும் மிகவும் துல்லியமாகக் குறிவைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு மாறியது. எஞ்சியிருக்கும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் குறிப்பிட்ட மதிப்புமிக்க இலக்குகளுக்காகச் சேமித்து வைத்ததுடன், இலக்கை சற்று தவறவிட்டு அருகில் விழுந்தாலும் கூட பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களில் தங்களது தாக்குதல்களைக் குவித்தது."
இரானின் உத்திகள் மாறமாற, இரானிய டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் எல்லைக்கு அப்பால் தங்களது விமானங்களை நகர்த்தத் தவறியதன் மூலம், அமெரிக்க ராணுவம் "போரின் ஆரம்பக் கட்டத்தில் ஒருவித மெத்தனப் போக்கிற்குப் பலியாகியிருப்பது போல் தோன்றுகிறது," என்று எம்ஏஐஏஆர் (MAIAR) ஆய்வாளர் ஒருவர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.
இளவரசர் சுல்தான் விமான தளத்தைப் பொறுத்தவரை, விமானங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பே அந்தத் தளம் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது என்று அவர்கள் கூறினர்.
இரானின் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி, "பிராந்தியத்தின் நாடுகளும் நிலங்களும் இனி அமெரிக்க தளங்களுக்குக் கேடயமாகச் செயல்படாது" என்று சபதம் செய்ததுடன், "தீய செயல்கள் செய்வதற்கும் ராணுவத் தளங்களை அமைப்பதற்கும் அமெரிக்காவிற்கு இந்தப் பிராந்தியத்தில் இனி பாதுகாப்பான இடம் இருக்காது, நாளுக்கு நாள் அது தனது பழைய நிலையில் இருந்து மேலும் விலகிச் செல்லும்." என்றும் கூறினார்.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
தெற்கு இரானில் அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பிராந்தியத்திலுள்ள அமெரிக்கத் தளம் ஒன்றை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா–இரான் இடையிலான இந்த பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து மீண்டும் மோதல் வெடித்தால், ஏற்கெனவே அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை பார்க்கும்போது, வளைகுடா பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்கள் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயத்தில் இருக்கலாம் என்று முனைவர் கிரிகோ எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,"தற்போதைய மோதல் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் வான் பாதுகாப்பு இருப்புகளைக் கணிசமான அளவில் பயன்படுத்தியுள்ளது." என்றார்.
"அவற்றை விரைவாக பதிலீடு செய்வதற்கான வழி எதுவும் இல்லை, அதாவது மீண்டும் இரானிய தாக்குதல் ஏதேனும் நடத்தப்பட்டால், மோதல் தொடங்கியபோது இருந்த இடைமறிப்பு ஏவுகணைகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டு அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்." என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூடுதல் தகவல் : பார்பரா மெட்ஸ்லர் மற்றும் டாம் கவுல்ட்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு