சோக்கர் டூ சாம்பியன்: ஆர்சிபி அணியில் இரண்டே ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள் என்ன?

    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"காலத்தின் ஏற்ற, இறக்கங்களை நினைத்து கவலைப்படாதீர்கள், கஷ்டங்களில் தான் தைரியம் வளர்கிறது" என்கிற மஹ்ஃபுஸூர் ரஹ்மான் அடிலின் வரிகள் பெங்களுரு அணிகளின் ரசிகர்களுக்குப் பொருந்தும்.

ஏனெனில் அந்த அணியின் வாசகமான "இந்த ஆண்டு கோப்பை நம்முடையது"(ஈ சாலா கப் நமதே) தான் ஆர்சிபி ரசிகர்கள் கேலிக்கு உள்ளாக காரணமாக அமைந்தது.

17 ஆண்டுகளில் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் ஆர்சிபி அணி மற்றும் அதன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மீம்களால் கேலிக்கு உள்ளானார்கள்

ஆனால் தற்போது அந்தக் கதை மாறியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அல்லாமல் இந்த ஆண்டும் ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

சோக்கர் (லீக்கில் சிறப்பாக செயல்பட்டு, நாக் அவுட் போட்டிகளில் வெற்றியை நழுவ விடுபவர்களை குறிக்கும் சொல்) எனும் நிலையில் இருந்து சாம்பியன் எனும் நிலைக்கு உயர்ந்த ஆர்சிபி அணியின் பயணம் கடினமானது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அணிக்குள் என்ன மாறியது என்பதை அந்த அணியின் மிகப்பெரிய நட்சத்திரமான விராட் கோலி, இரண்டாவது கோப்பையை வென்ற பிறகு கூறிய வரிகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

"நீங்கள் ஒருவர் மட்டுமே முன்வந்து அணிக்காக பொறுப்பை எடுத்துக் கொள்கிறோம் என்கிற உணர்வு இல்லாத வீரர்கள் இருப்பது சிறப்பாக உள்ளது," என்று கூறியிருந்தார் கோலி.

நட்சத்திர வீரர்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட அணி

நீங்கள் யார் என்பதை உங்களுடைய பலவீனங்கள் தான் தீர்மானிக்கின்றன என்கிற வரி பிரபலமானது. ஆனால் துர்திருஷ்டவசமாக இது தான் பல ஆண்டுகளாக ஆர்சிபி அணியின் பிரச்னையாகவும் இருந்தது.

விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர் முதல் சீசனில் இருந்து ஆர்சிபி அணியுடன் இருக்கிறார்.

இவரைத் தவிர ஆர்சிபி அணிக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதில் கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது.

ஓர் அணியில் டி20 போட்டிகளின் மூன்று நட்சத்திர பேட்டர்கள் இருந்தும் அந்த அணி தோற்கிறது என்றால் அனைவரும் கவலை கொள்ளவே செய்வார்கள்.

ஆனால் இந்த மூன்று நட்சத்திர வீரர்களை மட்டுமே சார்ந்திருந்தது தான் பல ஆண்டுகளாக ஆர்சிபி அணியின் பின்னடைவுக்கும் காரணமாக அமைந்தது.

ஒவ்வொரு தொடரிலும் விராட் கோலி தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்தார். ஆனால் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்லக்கூடிய ஓர் அணியை அவர்களால் உருவாக்க முடியவில்லை.

முன்னதாக 2009, 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் ஆர்சிபி அணி இறுதிப் போட்டியை அடைந்திருந்தது, ஆனாலும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

அதன் பின்னர் 8 ஆண்டுகள் அந்த அணிக்கு கடுமையான காலகட்டமாக இருந்தது. இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை கூட அவர்களால் இறுதிப் போட்டியை அடைய முடியவில்லை.

முதல் 17 ஆண்டுகளில் மூன்று நட்சத்திர வீரர்களைத் தவிர அணியின் அடையாளமாக உருவெடுக்கக் கூடிய ஒரு பந்துவீச்சாளர் கூட அந்த அணியில் இல்லை.

மாற்றம் நடந்தது எங்கே?

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக அணியில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. தனது பலவீனங்களைக் கண்டறிந்த ஆர்சிபி அணி மெகா ஏலத்தில் அவற்றைச் சரி செய்ய முயன்றது.

இந்தப் பணியில் ஆண்டி ஃப்ளவர் என்பவர் முக்கியமான பங்காற்றினார். அவர் மிகச் சிறந்த கோச் ஆக இருந்தார்.

ஒன்று அல்லது இரண்டு நட்சத்திர வீரர்களை மட்டுமே சார்ந்திருந்த அணியின் கட்டமைப்பை அவர் மாற்றினார்.

2025 மெகா ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார் மற்றும் யஷ் தயாலை மட்டுமே அணியில் வைத்திருந்தது.

மெகா ஏலத்தில், நன்கு அறியப்பட்ட முக்கியமான வீரர்கள் மீது மட்டும் ஆர்சிபி கவனம் செலுத்தவில்லை.

பேட்டர்கள் தவிர சிறந்த ஆல்-ரவுண்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை அணிக்கு கொண்டு வர அவர் முயற்சி செய்தார்.

ஃபில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் பட்டிகல், டிம் டேவிட் மற்றும் க்ருனால் பாண்ட்யா ஆகியோரை அணியில் சேர்த்தது பேட்டிங்கை பலப்படுத்தியது.

இவர்கள் போக புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசல்வுட், ரசிக் சலாம் தர் போன்ற பந்துவீச்சாளர்களை அணியில் சேர்த்ததும் மிகப்பெரிய 'திருப்பு முனையாக' அமைந்தது.

2025-இல் கோப்பையை வென்ற பிறகும் ஆர்சிபி தனது அணியை மேலும் வலுப்படுத்த முயற்சி செய்தது.

லியம் லிவிங்ஸ்டோன் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் விடுவிக்கப்பட்டு ஜேக்கப் டஃபி மற்றும் வெங்கடேஷ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவரை அணியில் சேர்த்தது பலனளிக்கக்கூடிய முடிவாக மாறியது.

வெங்கடேஷ் ஐயர் ஆறு போட்டிகளில் 209 ரன்கள் (186 ஸ்டிரைக் ரேட்) எடுத்தார். ஜேக்கப் டஃபி 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

ரஜத் பட்டிதாரின் கேப்டன்சி

"நான் ஆர்சிபியின் கேப்டனாகி கோப்பையை வெல்வேன் என ஒருபோதும் நினைத்ததில்லை"

ஆர்சிபி இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன பிறகு ரஜத் பட்டிதார் கூறிய வரிகள் இவை.

ஆனால் ஏற்கெனவே ரஜத் பட்டிதார் வரலாறு படைத்துவிட்டார். இரண்டே சீசன்களில் இரண்டு முறை கோப்பையை வென்று ஐபிஎல்-இன் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார்.

2025 தொடருக்கு முன்பாக ரஜத் பட்டிதார் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது பலரும் அதை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

ஆனால் இந்த தொடரில் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலுமே பட்டிதார் சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஆண்டு 15 போட்டிகளில் 312 ரன்கள் அடித்த அவர் இந்த ஆண்டு 15 போட்டிகளில் 501 ரன்கள் எடுத்தார்.

ஆனால் பட்டிதாரின் உண்மையான திறன் அவருடைய கேப்டன்சியில் வெளிப்பட்டது. இரண்டு தொடர்களிலும் சவாலான சூழ்நிலைகளில் அவர் சளைக்கவில்லை. களத்தில் பொறுமையைக் கடைபிடித்தார்.

வீரர்களை அவர்களுடைய திறமைக்கு ஏற்ப பயன்படுத்தக்கூடிய திறன் அவருக்கு இருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுகின்றனர். ஃபீல்டிங் அமைப்பது தொடங்கி பவுலர்களை மாற்றுவது வரை அவருடைய முடிவுகள் ஜாம்பவான்களால் புகழப்படுவதோடு மட்டுமல்லாது வீரர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இறுதிப் போட்டிக்கு முன்பாக ஜிதேஷ் சர்மா தெரிவித்த கருத்தில் இருந்து இதை நாம் பார்க்க முடிகிறது.

"என்னால் இந்த ஆண்டு பெர்ஃபார்ம் செய்ய முடியவில்லை, ஆனாலும் எனக்கு ஆதரவு கிடைத்தது. சிறந்த வீரர்கள் அணியில் மதிக்கப்படுகிறார்கள். நீங்கள் பெரிய வீரரா இல்லையா என்பது முக்கியமில்லை. உங்களால் அணிக்கு ஏதாவது பங்களிப்பு செய்ய முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும், அந்த பங்களிப்பு மதிக்கப்படுகிறது," எனத் தெரிவித்தார்.

ரஜத் பட்டிதாரின் கேப்டன்சி பற்றி பேசிய விராட் கோலி, "இந்தப் பெயரை இன்னும் பல ஆண்டுகளுக்கு நீங்கள் நினைவு கூர்வீர்கள்." என்றார்.

விராட் கோலியின் இந்தக் கூற்று தற்போது உண்மையாகி உள்ளது. தற்போதும் அணிக்கு பயனுள்ள சொத்தாக விராட் கோலி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு 657 ரன்களும் இந்த ஆண்டு 675 ரன்களும் அவர் எடுத்துள்ளார்.

'தரமான வேகப் பந்துவீச்சு கொண்ட அணி'

மேலே பேசப்பட்ட அனைத்து விஷயங்கள் போகவும் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது அந்த அணியின் வேகப் பந்துவீச்சு தான்.

ஆர்சிபியின் தற்போதைய பந்துவீச்சை 'ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்' என்று அழைத்தால் மிகையாகாது.

அந்த அணிக்கு நீண்டகாலம் கேப்டனாக இருந்த விராட் கோலி தற்போதைய பந்துவீச்சை உலகின் சிறந்த பந்துவீச்சு எனக் குறிப்பிடுகிறார்.

எந்தச் சூழலுக்கும் தாங்கள் நம்பக்கூடிய பந்துவீச்சாளர்கள் தற்போது அணியில் இருப்பதாக அவர் கூறினார். "எங்கள் அணியைப் பாருங்கள், ஜோஷ் ஹேசல்வுட், புவி, டஃபி, க்ருனால் மற்றும் ரசிக் சலாம் தர் ஆகியோர் இருக்கிறார்கள்." என்றார்.

கடந்த ஆண்டு ஜோஷ் ஹேசல்வுட் அதிகபட்சமாக 22 விக்கெட்டுகள் எடுத்தார். புவனேஷ்வர் குமார் மற்றும் க்ருனால் பாண்ட்யா ஆகியோர் தலா 17 விக்கெட்டுகள் எடுத்திருந்தனர்.

இந்த ஆண்டு புவனேஷ்வர் குமார் பந்துவீச்சை வழிநடத்தி 28 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்த சீசனில் அவர் 378 டாட் பந்துகள் வீசினார். ரசிக் தர் மற்றும் ஹேசல்வுட் அவருக்கு தோள் கொடுத்தனர். 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் எடுத்தார் ரசிக். ஜோஷ் ஹேசல்வுட் 15 விக்கெட்டுகள் எடுத்தார்.

சுழற்பந்துவீச்சில் க்ருனால் பாண்ட்யா 14 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த தரவுகள் ஆர்சிபி அணியிடம் சிறப்பான பந்துவீச்சு இருந்ததைக் காட்டுகிறது. இதனால் தான் சீசனின் தொடக்கத்திலேயே ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்பட்டிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு