'கடவுளே எங்கள் மன்மதன்': ஒரு மடத்தில் சந்தித்து பின் காதல் மணம் புரிந்த இளம் கன்னியாஸ்திரிகள்

    • எழுதியவர், இயன் ஆல்வ்ஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"என்ன ஒரு தலைக்கனம் பிடித்த கன்னியாஸ்திரி, என்ன ஒரு மோசமான கன்னியாஸ்திரி."

அதனைக் கண்டதும் காதல் என்று சொல்லிவிட முடியாது.

19 வயதில் துறவறப் பயிற்சி மாணவிகளாக சேர்ந்திருந்த கன்னியாஸ்திரி மடத்தில், லூயிசா சில்வேரியோ தனது எதிர்கால மனைவியை முதன்முதலாக சந்தித்தபோது, இருவரும் ஒருவரை ஒருவர் வெறுத்தனர்.

தற்போது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்தி வரும் அவரது மனைவி பிரான்சிலியா கோஸ்டா, பிபிசி நியூஸ் பிரேசிலிடம் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் .

"ஒரு பெண்ணால் எப்படி இவ்வளவு தலைக்கனத்துடன் இருக்க முடியும்? என நானும் அவரைப் பற்றி இதையேதான் நினைத்துக் கொண்டிருந்தேன்" என்று கூறுகிறார் பிரான்சிலியா .

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு லூயிசா கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்தபோது, பிரான்சிலியா ஏற்கனவே ஐந்து ஆண்டுகளாக அந்த மடத்தில் தங்கி இருந்தார். வறுமை, கற்பு மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்கான தனது புனிதமான சபதங்களை ஏற்று, இறையியல் பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருந்தார் பிரான்சிலியா.

வடகிழக்கு பிரேசிலின் பியாயு என்ற வறண்ட கிராமப்புறத்தில், மிகவும் மதப் பற்றுள்ள தனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டதால், அவர் இயல்பாகவே கன்னியாஸ்திரி வாழ்க்கையை நோக்கி ஈர்க்கப்பட்டார்.

அப்போதுதான், லூயிசா அங்கு வந்து சேர்ந்தார்.

தென்கிழக்கு பிரேசிலின் மினாஸ் ஜெராய்ஸ் பகுதியில் கழிந்த தனது டீன்-ஏஜ் பருவத்தின் "வெறுமையால்" அதிருப்தியடைந்த அவரும், முழுநேர மதச் சேவை செய்வதற்காக தமக்கு அழைப்பு வந்ததாக உணர்ந்தார்.

"நாங்கள் ஒரு நோக்கத்துடன் கன்னியாஸ்திரி மடத்தில் நுழைந்தோம். கடவுளுக்குச் சேவை செய்வது தான் அந்த நோக்கம்" என்று பிரான்சிலியா கூறுகிறார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், அந்த நோக்கம் கன்னியாஸ்திரியான பிரான்சிலியாவையும், புதிதாக அங்கு வந்திருந்த லூயிசாவையும் படிப்படியாக நெருக்கமாக்கியது. அவர்கள் நண்பர்களாயினர். பின்னர் மெதுமெதுவாக, அவர்களின் பரஸ்பர வெறுப்பு அரவணைப்பாகவும் மரியாதையாகவும் மாறியது.

ஆனால், அவர்களின் நட்பு மலரத் தொடங்கிய அதே நேரத்தில், கன்னியாஸ்திரி வாழ்க்கை மீதான அவர்களின் அர்ப்பணிப்பு தளர்வடையத் தொடங்கியது.

கோவிட் பெருந்தொற்று பிரான்சிலியாவை அச்சத்தால் அவதிப்பட வைத்திருந்தது. வைரஸ் தொற்று ஏற்படுமோ, அது பரவுமோ என்ற பயம் அவரை அடிக்கடி ஆட்கொண்டது. தனது சிகிச்சை அமர்வுகளின் போது, அவர் தனது முடிவுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினார்.

"ஆன்மீக வாழ்க்கை என்பது மிகவும் அழகான வாழ்க்கை. ஆனால் அதற்கு உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியம் தேவை. எப்படிப் பிரார்த்தனை செய்வது என்று தெரிந்திருப்பது மட்டும் போதாது" என்று பிரான்சிலியா கூறுகிறார்.

இதற்கிடையில், தனது பாட்டியின் மரணத்தால் துக்கத்தில் இருந்த லூயிசாவிற்கும் அச்ச உணர்வுகள் ஏற்படத் தொடங்கின, பின்னர் அவர் மன சோர்வினால் பாதிக்கப்பட்டார்.

அவர் தனது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் கன்னியாஸ்திரி மடத்தில் வாழ வேண்டும் என்ற தனது கனவைக் கைவிட வேண்டும் என்றும் அவரது சிகிச்சை அமர்வுகள் முடிவெடுக்க வைத்தன.

"லூயிசாவும் தனது மனநலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது" என்று பிரான்சிலியா கூறுகிறார்.

"அவர் வெளியேற முடிவு செய்தபோது, அது எனக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்தது. 'கடவுளே! அந்த வயதில் ஒரு பெண், எங்கிருந்தாலும் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதைப் பற்றி சிந்திக்கும் திறனைக் கொண்டிருக்கிறார். என்னால் மீண்டும் தொடங்குவதைப் பற்றி சிந்திக்க முடியவில்லையே, நான் இங்கிருந்ததை விட வெளியேதான் அதிக காலம் வாழ்ந்திருக்கிறேன் என்றாலும் கூட என்னால் அது முடியவில்லையே" என தான் சிந்தித்ததாகக் கூறுகிறார் பிரான்சிலியா .

தனது துணிச்சல் மிக்க இளம் தோழியின் தூண்டுதலால், பிரான்சிலியாவும் தனிப்பட்ட முறையில் அதே முடிவுக்கு வந்தார். அவரும் கன்னியாஸ்திரி மடத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

இருப்பினும், அங்கிருந்து வெளியேறுவது அவர்கள் இருவருமே எதிர்பார்த்ததை விட மிகவும் கடினமானதாக இருந்தது.

"இங்கே வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல, இது மிகவும் கடினமானது"என்று கூறும் லூயிசா,"உங்களால் கல்லூரிக்குச் செல்ல முடியுமா, அல்லது உங்களால் ஒரு வேலையைப் பெற முடியுமா என்று உங்களுக்கே தெரியாது"என்கிறார்.

பிரான்சிலியாவும் இதையேதான் உணர்ந்தார்.

"ஒரு வேலைக்கான நேர்காணலைக் கற்பனை செய்து பாருங்கள். யாராவது உங்களிடம், 'நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்? ' எனக் கேட்டால், 'இறையியல் ' என்று பதில் சொல்ல வேண்டும். அப்படியென்றால், எனக்கு என்ன மாதிரியான வேலை கிடைக்கும்?" என்று அவர் கூறுகிறார்.

அவர் வெளியேற முடிவு செய்த நேரத்தில், கன்னியாஸ்திரி மடத்தில் ஏழு ஆண்டுகள் இருந்ததால், பிரான்சிலியா தனது புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும், இனிமேல் கன்னியாஸ்திரி ஆடையை அணியாமல் இருப்பதற்கும் புதிய ஆடைகளை வாங்க வேண்டியிருந்தது.

இருப்பினும், வாடகை செலுத்துவதுதான் மிகப்பெரிய பொருளாதாரச் சுமையாக இருந்ததால், பணத்தைச் சேமிப்பதற்காக, அவர்கள் இருவரும் ஒரே வீட்டை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தனர்.

பின்னர் ஒரு மாலைப் பொழுதில், 'லவ் இன் வெரோனா' என்ற காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படத்தை அவர்கள் இருவரும் ஒன்றாகப் பார்த்தனர்.

அதில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் ஆரம்பத்தில் ஒருவரையொருவர் வெறுத்து, பின்னர் காதலில் விழுவார்கள்.

அதனைக் கண்ட பிரான்சிலியா, லூயிசாவிடம் அவரைப் பற்றிய தனது உணர்வுகளும் அதே பாதையில்தான் சென்றதாக குறிப்பிட்டார்.

பதின்பருவத்தில், இருவருமே தங்களை இருபாலின ஈர்ப்புடையவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனால் இது அவர்கள் கன்னியாஸ்திரிகளாக மாற வேண்டும் என்ற விருப்பத்தையோ அல்லது கன்னியாஸ்திரி மடத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தையோ பாதிக்கவில்லை.

"அது எங்களை கடவுளுக்கு அஞ்சவோ அல்லது அங்கு இருப்பதற்குப் பயப்படவோ வைக்கவில்லை" என்று கூறும் லூயிசா, "நான் யாருடனும் உறவில் இருக்க விரும்பவில்லை. நான் உண்மையில் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கவும் , எனது மதத்தையும், எனது திருச்சபையைப் பின்பற்றவுமே விரும்பினேன். வெளியே சென்று ஒருவருடன் உறவில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி நான் நினைக்கவில்லை"என்கிறார்.

பிரான்சிலியாவும் அதே கருத்தை வெளிப்படுத்துகிறார். "வேறு எதையும் பற்றி சிந்திக்க நேரம் இருக்கவில்லை," என்று கூறிய அவர், "உள்ளே நுழைவது மிகவும் எளிதாக இருந்தது, ஆனால் கன்னியாஸ்திரி மடத்திலிருந்து வெளியேறுவது தான் நான் எதிர்கொண்ட மிகக் கடினமான விஷயமாக இருந்தது"எனக் குறிப்பிட்டார்.

தற்போது தம்பதியாக இணைந்து வாழ்ந்து வரும் அவர்களுக்கு, தங்களது விசுவாசத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது எப்படி என்பது தான் மிகப்பெரிய குழப்பமாக இருந்தது.

அவர்கள் கன்னியாஸ்திரி மடத்தை விட்டு வெளியேறிய அடுத்த ஆண்டு, அவர்களின் திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2025 அக்டோபரில், ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், சில சூழ்நிலைகளின் கீழ், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் "முறைசாரா" தம்பதிகளை ஆசீர்வதிக்க பாதிரியார்களுக்கு அனுமதி அளித்திருந்தார்.

ஆனால், திருச்சபை இன்னும் தன் பாலின உறவுகளை "பாவம் என்றே கருதுகிறது என்றும், அது தன் பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்காது என்றும் அவர் கூறினார்.

"இது நானும் பிரானும் இங்கே வீட்டில் அடிக்கடி பேசும் ஒரு விஷயம்" என்று கூறும் லூயிசா, "மனித இயல்புடைய இயேசுவையும், தெய்வீக இயல்புடைய இயேசுவையும் உங்களால் பிரிக்க முடியாது. அவர் ஒருவர் தான். அதுபோலவே நமது பாலின ஈர்ப்பும் நமது நம்பிக்கையும் பிரிக்கப்படக் கூடாது, ஏனெனில் அது நமக்குள் இருக்கிறது. நாங்கள் நம்பிக்கை கொண்ட ஒரு தம்பதி. அதை எங்களால் பிரிக்கவே முடியாது" என்கிறார்.

இந்தத் தம்பதியர் தாங்கள் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்தபோது அங்கு சந்தித்த கன்னியாஸ்திரிகள் மற்றும் துறவிகளுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள்.

ஆனால் திருச்சபையில் இருந்து யாரும் இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும், "எங்களுக்கும் எங்களது திருமண நாளுக்கும் அளிக்கப்பட்ட அன்பு, வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளை நாங்கள் பெற்றோம்" என்று கூறுகிறார் லூயிசா .

"ஒருவேளை ஒரு தேவாலயத்தின் பலிபீடத்தின் முன் எடுத்த புகைப்படம் எங்களிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களிடம் அபாரெசிடாவின் அன்னை [பிரேசிலில் வணங்கப்படும் இயேசுவின் தாயான புனித கன்னி மரியாவின் சிலை] உடனான புகைப்படம் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, அவர் எங்களது குடும்பத்தின் நன்றியுணர்வையும், பரிந்துரையையும் கடவுளுக்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறார்"என்றும் அவர் தெரிவித்தார்.

பதின்பருவத்தில் தங்களை கன்னியாஸ்திரி மடத்தில் சேரத் தூண்டிய அந்தச் சேவை மனப்பான்மையையும் அவர்கள் கைவிடவில்லை.

தங்களின் கதையை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட பிறகு, இந்தத் தம்பதியினருக்குத் தங்களின் சொந்த பாலின ஈர்ப்பு குறித்து கேள்விகள் உள்ள கிறிஸ்தவர்களிடமிருந்தும், நம்பிக்கை குறித்து கேள்விகள் உள்ள தன் பாலின ஈர்ப்பாளர்கள், இரு பாலின ஈர்ப்பாளர்கள்(பைசெக்ஸ்சுவல்) அல்லது திருநங்கைகளிடமிருந்தும் ஏராளமான குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின.

"எங்கள் பாலுணர்வு, எங்கள் நம்பிக்கை, எங்கள் வாழ்க்கைக் கதை குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என்ற விருப்பத்தை இது மேலும் வலுப்படுத்தியது"என்று கூறும் லூயிசா, "அது மிகவும் இயல்பானதாகவே தோன்றியது. அது பலருக்கும் உதவியாக இருக்கிறது"என்கிறார்.

"இந்தத் தளம் மனிதர்களாகவும் தம்பதியினராகவும் எங்களது விசுவாசப் பாதையை இன்னும் ஆழப்படுத்துகிறது. எங்களது கதையைப் பகிர்ந்து கொள்வதற்காக நாங்கள் கண்டடையும் ஒவ்வொரு தளமும் எங்களைப் பொறுத்தவரை, எங்களது சேவையின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

"மக்களின் கதைகளைக் கேட்பதும் அவர்களுக்கு உதவுவதுமே எங்களது சேவையாகும். நீங்கள் சமூக ஊடகங்கள் மூலம் செயல்படும் போது, ​​எப்படிக் கேட்பது, எப்படிப் பேசுவது என்பதை அறிந்துகொள்வது தான் மிகப்பெரிய சவால்களில் ஒன்று"என்கிறார் பிரான்சிலியா.

"'ஒருநாள் நான் ஒரு குடும்பத்தை அமைக்க வேண்டியிருந்தால், நான் உருவாக்க வேண்டிய குடும்பத்தின் வடிவத்தை கடவுளே எனக்குக் காட்டுவார்' என நான் எப்போதும் கூறுவேன். அதனால் தான்… இன்று நாங்கள் இங்கே இருக்கிறோம்" என்றும், "நம்ப முடியாததாகத் தோன்றினாலும், இந்த உலகத்தில் ஒரு மன்மதன் இருக்கிறார் என்றால், எங்களைப் பொறுத்தவரை அது கடவுள்தான்"என்றும் கூறுகிறார் பிரான்சிலியா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு