தேர்வு அமைப்புகள் மீதான நம்பிக்கை தேய்கிறதா? நீட் வினாத்தாள் கசிவு, மறுதேர்வுக்கு பிறகு எஞ்சியுள்ள கேள்விகள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வினாத்தாள் கசிவு குறித்த கவலைகளுக்கு மத்தியில், ஜூன் 21 அன்று 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் மறுதேர்வை எழுதினர்.

மறுதேர்வின்போது, பிகாரில் வினாத்தாள்களுக்கு சட்டவிரோதமாக விடை காண முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் காவல்துறையினர் பிடித்தனர். இருப்பினும், பெரும்பாலான தேர்வு மையங்களில் கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் தேர்வு சுமூகமாக நடைபெற்றது.

முன்னதாக, வினாத்தாள் கசிவு குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, மே 3 அன்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை கல்வி அமைச்சகம் ரத்து செய்திருந்தது.

தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இது நிலைமையை மேலும் தீவிரமாக்கியதுடன், மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் குறித்த கவலைகளையும் எழுப்பியது.

அதே வேளையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திரைவழி விடைத்தாள் திருத்தும் முறை குறித்த சர்ச்சையும் தொடர்ந்து வருகிறது. பல மாணவர்கள் இன்னும் தங்கள் திருத்தப்பட்ட மதிப்பெண்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

மகாராஷ்டிராவில், ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வும், வினாத்தாள் கசிவு குறித்த தகவல்களைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன.

தேர்வுகளை நடத்தி, மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அமைப்புகளை அவர்களால் நம்ப முடியுமா? நிர்வாகத் தவறுகள் அல்லது தோல்விகளால் தங்கள் குழந்தைகளின் கல்விக்காகச் செலவிட்ட பல ஆண்டுக்கால உழைப்பு, பணம் மற்றும் தியாகங்கள் வீணாகாது என்று பெற்றோர்களால் நம்ப முடியுமா?

இந்த வாரம், கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் துறை இயக்குநரான முகேஷ் சர்மா, பிபிசியின் தி லென்ஸ் என்ற வாராந்திர நிகழ்ச்சியில் இந்தப் பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பல நிபுணர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

விருந்தினர்களில் ஒருவராக, இந்திய அரசின் ஓய்வுபெற்ற இணைச் செயலாளரும் கல்வி நிபுணருமான பிரேம்பால் சர்மா பங்கேற்றார்.

இவர் 2004 முதல் 2009 வரை என்.சி.ஆர்.டி பாடநூல் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியதுடன், கல்வி மற்றும் அது தொடர்பான தலைப்புகளில் 8 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

நீட் மறுதேர்வு: மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் மன அழுத்தம்

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மீனு குமாரி, நீட் தேர்வுக்காக கடந்த ஓராண்டாக டெல்லியில் வசித்து, தயாராகி வருகிறார். தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள அவர் பிபிசி ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார்.

தினமும் சுமார் 12 முதல் 14 மணிநேரம் வரை படித்ததாக மீனு கூறினார். நீட் தேர்வில் அவர் சிறப்பாகச் செயல்பட்டு இருந்தாலும், தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

"முதல் தேர்வை நான் மிக நன்றாக எழுதியிருந்தேன், ஆனால் மறுதேர்வு அறிவிக்கப்பட்டபோது மிகவும் கவலைப்பட்டேன். இருப்பினும், மருத்துவராக வேண்டும் என்ற கனவு என்னை முன்னோக்கிச் செல்லத் தூண்டியது," என்று அவர் கூறினார்.

டெல்லியை சேர்ந்த மற்றொரு மாணவரான சுஷாந்த் சிங், கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தயாராகி வருகிறார். வினாத்தாள் கசிவு விவகாரத்தால் அவரும் பாதிக்கப்பட்டார். பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே அவர் நீட் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினார்.

பிபிசியிடம் பேசிய சுஷாந்த், "மறுதேர்வுக்காகத் தயாராவது பல மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்ததாக" கூறினார். "மே 3ஆம் தேதி நடந்த தேர்வுக்குப் பிறகு, தேர்வு முடிந்துவிட்டதாகக் கருதி பெரும்பாலான மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருந்தனர் அல்லது சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில், மீண்டும் புதிதாகப் படிப்பைத் தொடங்குவது எளிதான காரியமாக இருக்கவில்லை."

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், மருத்துவர்களின் பற்றாக்குறையையும் அதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் மக்கள் நேரில் கண்டதாகவும் சுஷாந்த் குறிப்பிட்டார். அந்த அனுபவம் இருந்தபோதிலும், அரசாங்கம் அதிலிருந்து போதுமான பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை என்பது அவரது கருத்து.

"மருத்துவர்களாகத் தயாராகும் மாணவர்களுக்கு எந்தவித ஊக்கமும் கிடைப்பதில்லை. நமது கல்வி அமைப்பு மாணவர்களை உள்ளே ஈர்ப்பதற்குப் பதிலாக, அவர்களை வெளியே தள்ளும் வகையிலேயே செயல்படுகிறது," என்று அவர் கூறினார்.

கேள்விக்கு உள்ளாகும் நம்பகத்தன்மை

நீட் மறுதேர்வின்போது, வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசு பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியது: இந்த நடவடிக்கைகள் தேர்வு முறையின் மீது மாணவர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துமா?

இதற்குப் பதிலளித்த மாணவர் சுஷாந்த் சிங், மறுதேர்வு மிகவும் பலமான பாதுகாப்புடன் நடத்தப்பட்டதாகவும், முன்பைவிட முறைகேடுகள் குறைவாகவே இருந்ததாகவும் கூறினார். இருப்பினும், சுமூகமாக நடத்தப்படும் ஒரேயொரு தேர்வு மட்டுமே மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கப் போதுமானதல்ல என்று அவர் கருதுகிறார்.

"அடுத்த ஆண்டு நீட் தேர்வு இணையவழியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த முறையில் கணினி அமைப்பு ஹேக் செய்யப்படுமா அல்லது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது," என்கிறார் அவர்.

மாணவி மீனு குமாரியும், மறுதேர்வின்போது வினாத்தாள் கசிவு குறித்த புகார்கள் எதுவும் வரவில்லை என்று கூறினார். இருப்பினும், நாடு முழுவதும் தேர்வு முறைகேடுகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வருவதால், நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது எளிதல்ல என்று கருதுகிறார்.

அவரது கருத்துப்படி, மீண்டும் மீண்டும் எழும் இத்தகைய சர்ச்சைகள் பல மாணவர்களைத் தங்கள் எதிர்காலம் குறித்துக் கவலை கொள்ளச் செய்துள்ளன.

கல்வி அமைச்சகத்தின் உயர் பதவிகளில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த கல்வி நிபுணர்களை நியமிப்பதன் மூலம் கல்வி முறையை மேம்படுத்த வேண்டும் என்று சுஷாந்த் பரிந்துரைத்தார்.

கல்வி முறையில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்திற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் மீனு, சுஷாந்த் இருவரும் தெரிவித்தனர்.

மாணவர்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால், பெற்றோர்களும் இத்தகைய இயக்கங்களுக்குத் தீவிர ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில், குடும்பத்தினரின் ஆதரவின்றி இந்த மாணவர்களால் முக்கிய முடிவுகளை எடுக்கவோ அல்லது போராட்டங்களில் பங்கேற்கவோ இயலாது.

தேசிய தேர்வு முகமை எவ்வாறு மேம்படுத்தப்படும்?

தேசிய தேர்வு முகமை நடத்தும் மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் மீது மாணவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை வருமா என்பது இன்றைய முக்கியக் கேள்வியாக உள்ளது. அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன நடவடிக்கைகள் தேவை?

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசின் ஓய்வுபெற்ற இணைச் செயலாளரும் கல்வி நிபுணருமான பிரேம்பால் சர்மா, தேசிய தேர்வு முகமை நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்றாலும், சர்ச்சைகள் ஏதுமின்றி தேர்வுகளை நடத்துவதில் அது தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாகக் கூறினார்.

அவரது கருத்துப்படி, இத்தகைய தொடர்ச்சியான தோல்விகள் இருந்தபோதிலும், இதிலிருந்து அர்த்தமுள்ள பாடங்கள் எதுவும் கற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக, "மாணவர்களின் ஒரு முழு தலைமுறையினரும் தேர்வு முறையின் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அரசு இந்தப் பிரச்னையைப் போதிய அளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று அவர் கருதுகிறார்.

கடந்த 2024 நீட் யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தை பிரேம்பால் சர்மா சுட்டிக்காட்டினார். "அது இறுதியில் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அந்தச் சர்ச்சைக்குப் பிறகு, தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க ராதாகிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், அக்குழுவின் பல பரிந்துரைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை" என்று அவர் கூறினார்.

அதுகுறித்துப் பேசிய அவர், "ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளுக்கு முரணாகவே, தேசிய தேர்வு முகமையின் நியமனங்கள் அமைந்தன. இதில் அரசும் அமைப்பும் சம பங்கைக் கொண்டுள்ளன. குறைபாடுகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் தேசிய தேர்வு முகமையை ஒன்று கலைக்க வேண்டும் அல்லது தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர்களை அதில் கொண்டு வர வேண்டும்," என்றார்.

எந்த அமைப்பும் அதன் பலவீனங்களை நேர்மையாக ஏற்றுக் கொண்டு சரிசெய்தால் மட்டுமே மேம்பட முடியும் என்றும் பிரேம்பால் சர்மா கூறினார். தற்போதைய சூழலில் அத்தகைய அணுகுமுறை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிபிஎஸ்இ அறிமுகப்படுத்திய புதிய திரைவழித் திருத்தும் முறை குறித்துப் பேசிய சர்மா, சார்தக் சித்தாந்த் என்ற மாணவர் இந்த முறையை கேள்விக்கு உள்ளாக்கியபோது, அவர் "பாகிஸ்தானியர்" என்று விமர்சிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

சர்மா கருத்துப்படி, "இத்தகைய எதிர்வினைகள் கல்வி முறை குறித்த நியாயமான கவலைகளை எழுப்புவதில் இருந்து மாணவர்களைத் தடுக்கின்றன அல்லது ஊக்கமிழக்கச் செய்கின்றன."

பல உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதால், நாட்டின் கல்வி முறைக்குத் தேவையான கவனம் கிடைப்பதில்லை என்றும் அவர் வாதிட்டார்.

ஜெஇஇ தேர்வைப் போலவே நீட் தேர்வையும் இணையவழியில் நடத்துவது, வினாத்தாள் கசிவுக்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவும் என்று சர்மா கருதுகிறார். அதேவேளையில், தேர்வுகளை வெறும் இணையவழி முறைக்கு மாற்றுவது மட்டுமே போதாது என்றும் அவர் எச்சரித்தார்.

அவரது கருத்துப்படி, "இணையவழித் தேர்வு மையங்களை அமைப்பதற்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், தேர்வை நடத்துவதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தங்களை வழங்குவதிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்."

சிபிஎஸ்இ-யின் ஓ.எஸ்.எம் முறை தொடர்பான சர்ச்சையைப் போலன்றி, பிற்காலத்தில் மோசடி அல்லது முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

தேசிய தேர்வு முகமை மற்ற தேர்வு நடத்தும் அமைப்புகளிடம் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் பிரேம்பால் சர்மா கருதுகிறார்.

நம்பகமான முறையில் 'பேனா மற்றும் காகித' பயன்பாட்டில் தேர்வுகளை நடத்துவதில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வலுவான நற்பெயரைப் பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, ரயில்வே வாரியமும் மிக அதிக எண்ணிக்கையிலான தேர்வர்களுக்கு வினாத்தாள் கசிவு குறித்த புகார்கள் ஏதுமின்றித் தேர்வுகளை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"தேசிய தேர்வு முகமை இந்த வெற்றிகரமான மாதிரிகளை ஆய்வு செய்து, தனது சொந்தத் தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் உறுதித்தன்மையையும் மேம்படுத்த அதே போன்ற நடைமுறைகளைக் கையாள வேண்டும்" என்று சர்மா கருதுகிறார்.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு