You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கொன்று விட்டு, தேடுவது போல நடிப்பு'- கோவை சிறுமி கொலையில் நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு
கோவையில் 10 வயது சிறுமியை கடத்திய நபர், அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பின்பு, வீட்டிற்கு வந்து சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினருடன் சேர்ந்து தேடுவதாக நடித்தது தெரியவந்துள்ளது.
நன்கு தெரிந்தவர் என்பதால்தான் நம்பி தனது மகள் அந்த நபருடன் சென்றிருப்பதாக சிறுமியின் தாயார் கூறுகிறார்.
தனக்குத் தெரியாமல் தன் மகள் உடலை கணவர் குடும்பத்தினர் எரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தனது மகளின் உயிரிழப்புக்கு அரசு கொடுத்த இழப்பீடும் தன்னிடம் தரப்படவில்லை என்று கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சிறுமியின் தந்தை, உடற்கூராய்வு முடிந்த பின்னும் உடலை வாங்க மறுத்ததால்தான், நாங்கள் வாங்கிச்சென்று சொந்த ஊரில் தங்களின் வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்ததாகத் தெரிவித்தார்.
உடற்கூராய்வு அறிக்கையின்படி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதுடன், கொடூரமாக தாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி பிபிசியிடம் தெரிவித்தார்.
சிறுமியின் பெற்றோர் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகக் கூறிய அவர், அதற்கும் இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார்.
சிறுமியை கொன்று விட்டு தேடுவது போல நடித்த நபர்
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி, கடந்த மே 21 அன்று பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். அவருடைய உடல் ஒரு குளக்கரையில் வீசப்பட்டுள்ளது. இந்த குற்றங்களில் தொடர்புடையதாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி (வயது 33) மற்றும் அவருக்கு உதவிய மோகன் (வயது 30) ஆகிய இருவரும் காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை செய்திக்குறிப்பின்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி கோவையில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். கார்த்தி காவல்துறையிடமிருந்து தப்பிக்க முயன்று மாடியிலிருந்து குதித்ததில் அவருடைய வலது கை மற்றும் வலது கால் முறிந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வலியுறுத்தி, மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்ட முதலமைச்சர் விஜய், "இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச்செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது." எனக் குறிப்பிட்டிருந்தார்.
கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடமும் அலைபேசியில் பேசி அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார். சிறுமியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.7 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என்று சிறுமியின் உறவினர்கள் போராடினர்.
ஆனால் உடற்கூராய்வு செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்கிச்சென்ற சிறுமியின் தந்தை குடும்பத்தினர், அவர்களின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் இறுதிச்சடங்குகளை செய்து எரியூட்டியுள்ளனர்.
தன்னிடம் தகவல் எதுவுமே தெரிவிக்காமல் தனது மகள் உடலை எரித்து விட்டதாக சிறுமியின் தாயார் ஊடகங்களிடம் பேசியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை அறிவதற்காக பிபிசி தமிழ் சம்பவம் நடந்த பகுதியில் களஆய்வு மேற்கொண்டது.
சிறுமியின் தாயார் மற்றும் அவருடைய உறவினர்கள், பிபிசியிடம் பகிர்ந்த தகவலின்படி, சிறுமியின் தாய், கோவையைச் சேர்ந்தவர். தந்தை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உயிரிழந்த சிறுமிக்கு 10 வயதாகிறது.
பல ஆண்டுகளாக சிறுமியின் தாயார் வளர்ந்த பகுதியில் வசித்து வந்த இவர்கள், சிறுமியின் தந்தைக்கு வேறு ஒரு பகுதியில் வேலை கிடைத்ததால் அப்பகுதிக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் குடிபெயர்ந்துள்ளனர்.
இவர்கள் குடியேறிய இடத்துக்கு அருகில் குற்றஞ்சாட்டப்பட்ட கார்த்தியும், அவருடைய குடும்பமும் வசித்துள்ளது.
அதனால் சிறுமிக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருந்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பின், சிறுமியின் தாயார், தனது சொந்த ஊரில் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். தந்தை அவரின் சொந்த ஊரில் தனது மகனுடன் இருக்கிறார். இருவரும் வெவ்வேறிடங்களில் இருக்கும்நிலையில், இவர்களிருவரிடமும் முதல்வர் விஜய் ஃபோனில் பேசியுள்ளார்.
ஃபோனில் தந்தையிடம் கடைசியாக பேசிய சிறுமி
சிறுமியின் தாயாரை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது. தொடர்ந்து அழுத நிலையில் இருந்த அவர், சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகளை விளக்கினார்.
''அன்று மாலை 5 மணிக்குதான் நான் கடைசியாக என் மகளைப் பார்த்தேன். ஏழு மணிக்கு என் கணவர் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வரை பாப்பா (சிறுமி) வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடினோம். ஆனால் காணவில்லை. உடனே 100க்கு போன் செய்தோம். அடுத்த சிறிது நேரத்தில் போலீசார் வந்துவிட்டனர். நாங்களும் போலீசாரும் தேடியபோது, குற்றவாளி கார்த்தியும் எங்களுடன் சேர்ந்து தேடினான். கடைசியாக அவனுடைய ஃபோனிலிருந்துதான் என் மகள் என் கணவருக்கு பேசியிருக்கிறாள்.'' என்றார் அவர்.
''அவனுடைய ஃபோனில் அப்பாவிடம் பேசி, எப்போது வருவீர்கள் என்று அவள் கேட்டதற்கு, அவர் ஏழு மணிக்கு வந்து விடுகிறேன், வந்ததும் எல்லோரும் கோவிலுக்குப் போகலாம் என்று கூறியிருக்கிறார். அதனால் 7 மணிக்குதான் வருவார் என்பதைத் தெரிந்து கொண்டு, வண்டியில் குழந்தையை அவன் அழைத்துச் சென்றிருக்கிறான். ஏற்கெனவே அவனைத் தெரியும் என்பதுடன் கார்த்தியின் 2 பெண் குழந்தைகளுடன்தான் அவள் எப்போதும் விளையாடுவாள் என்பதால் நம்பி அவனுடன் சென்றிருக்கிறாள்.'' என்றார் சிறுமியின் தாயார்.
சிறுமியின் தாயாரும் அவருடைய உறவினர்களும் கூறியதன்படி, காவல்துறையினரும், சிறுமியின் குடும்பத்தினரும் குழந்தையைத் தேடியபோது, கார்த்தியும் சேர்ந்து குழந்தையைத் தேடியிருக்கிறார்.
மாலையில் ஒரு டூ வீலரில் யாருடனோ சிறுமி ஏறிச்சென்றதைத் தான் பார்த்ததாகக் கூறிய கார்த்தி, அது சிறுமியின் அப்பா என்று நினைத்ததாகவும் போலீசாரிடமும் தகவல் தெரிவித்திருக்கிறார்.
''அவன் சொன்னதை நம்பி சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு டூ வீலரில் ஒருவரின் பின்னால் ஒரு குழந்தை சென்றதைக் காண்பித்து அது எங்கள் குழந்தையா என்று கேட்டனர். பார்த்தபோது அது என் மகள் போல இருந்ததால் ஆமென்று கூறிவிட்டோம். ஆனால் அந்த டூ வீலரில் சென்றது வேறு ஒரு அப்பாவும் மகளும் என்பது பின்பு தெரிந்தது. அதன்பின்பே கார்த்தியின் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது.'' என்று விளக்கினர் சிறுமியின் தாயாரின் குடும்பத்தினர்.
சந்தேக நபரை கண்டுபிடித்தது பற்றி பிபிசியிடம் விளக்கிய சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், ''சிறுமி மாலை 5 மணிக்கே காணாமல் போயிருக்கிறாள். ஆனால் எங்களுக்கு தகவல் வந்தபோதே இரவு 8 மணிக்கு மேலாகிவிட்டது. ஆனால் அப்போதே 5 தனிப்படைகளை அமைத்து, இரவெல்லாம் தேட ஆரம்பித்து விட்டோம். அதன்பின் சுற்று வட்டாரத்திலுள்ள 240க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில்தான் சில பதிவுகளில் இவனுடன் சிறுமி வண்டியில் சென்றது தெரியவந்தது.'' என்றார்.
அதன்பின் கார்த்தியின் செல்போன் இருந்த டவர்களை ஆய்வு செய்து, விசாரணையைத் துவக்கியதாகக் கூறிய அவர், மறுநாள் மதியம் கார்த்தி குற்றத்தை ஒப்புக்கொண்டு கொலை நடந்த இடத்தைக் காண்பித்ததாகத் தெரிவித்தார்.
அதனால் மாலையில்தான் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியதாகவும் அவர் மேலும் விளக்கினார்.
''இரவு 7 மணிக்கு மேல் நாங்கள் குழந்தையைத் தேடியபோதே கார்த்தியும் எங்களுடன் தேடினான். அதனால் மாலை 5 மணிக்கு குழந்தையைக் கடத்திச் சென்று, ஒன்றரை மணி நேரத்தில் அவளை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகத் தாக்கி கொன்றிருக்கிறான். குழந்தையின் உடலைப் பார்த்தபோதுதான் அவள் அனுபவித்த சித்ரவதையும், வேதனையும் தெரிந்தது. அதனால்தான் அவனுக்கு கடுமையான தண்டனை தரவேண்டுமென்று குழந்தை உடலை வாங்க மறுத்தேன்.'' என்றார் சிறுமியின் தாயார்.
''முதல்வர் விஜய் என்னிடம் பேசும்போது, இந்த சம்பவம் தனக்கும் பெரும் வேதனை தருவதாகக் கூறினார். எவ்வளவு சீக்கிரமாக நடவடிக்கை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக நடவடிக்கை எடுப்போம் என்றார். கூடிய விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றும் சொன்னார்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தன்னைக் குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்துப் பதிவிட்டிருப்பது பற்றி பெரும் கதறலுடன் பேசிய சிறுமியின் தாயார், ''நான் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவள் என்றும், வேறு விதமாகவும் என்னைப் பற்றி பலரும் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். ஏற்கெனவே வேதனையில் இருக்கும் நான் இந்த குற்றச்சாட்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்.'' என்றார்.
''எனது கணவர், குளிர்பானத்தில் மதுவைக் கலந்து ஃபிரிட்ஜில் வைத்திருந்திருக்கிறார். அது தெரியாமல் நான் தாகத்தில் எடுத்துக் குடித்துவிட்டேன். உண்மையிலேயே அதைக்குடிக்கும்போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் மயக்கம் வருவது போலிருந்ததால் அப்படியே தூங்கிவிட்டேன். அப்போதுதான் எனது மகள் காணாமல் போயிருக்கிறாள்.'' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனக்குத் தெரியாமல் தன் மகள் உடலை, எடுத்துச்சென்று எரித்து விட்டதுடன், சிறுமி உயிரிழப்புக்கான இழப்பீடாக அரசு கொடுத்த ரூ.7 லட்சம் காசோலையையும் தன் கணவரே வாங்கிக் கொண்டதாக சிறுமியின் தாய் கூறினார். தன் மகனையும் தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாகக் கூறிய அவர், தனக்கு இழப்பீடு பணம் எதுவும் தேவையில்லை என்றும், தன் மகனை மட்டுமாவது தன்னிடம் ஒப்படைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
சிறுமியின் தாய் கூறிய பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து சிறுமியின் தந்தையிடம் பிபிசி பேசியபோது, அவர் எதற்கும் நேரடியாக பதில் கூற மறுத்துவிட்டார். தன்னிடமும் முதல்வர் விஜய் பேசியதாகக் கூறிய அவர், தனது சொந்த ஊரில் தனது குடும்ப வழக்கப்படி சிறுமிக்கு இறுதிச்சடங்கு செய்ததாகத் தெரிவித்தார். தனது சார்பில் தன்னுடைய அண்ணன் (பெரியப்பா மகன்) பேசுவார் என்றும் அவர் கூறி அவரை பேசவைத்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், ''என் தம்பி 7 மணிக்கு வேலையை விட்டு வந்து பார்க்கும் வரை, குழந்தை தொலைந்ததே தெரியாமல் அவர் மனைவி இருந்திருக்கிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்...எங்கள் உற்றார், உறவினர்கள் யார் எப்படி இறந்தாலும் எங்கள் வழக்கப்படி ஊரில் வைத்தே எரியூட்டுவோம். குற்றவாளியை காவல்துறை உடனே கைது செய்ததுடன், கடும் தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று அரசு தரப்பு உறுதி கூறியுள்ளது. அதனால் அதிகாரிகள் உறுதியை ஏற்று சிறுமிக்கு முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய நினைத்தோம். ஆனால் என் தம்பியின் மனைவி எதற்குமே ஒப்புக்கொள்ளவில்லை.'' என்றார்.
''அவர்கள் இறுதிச்சடங்கு செய்வதற்கு எங்கள் ஊருக்கு வரவே முடியாது என்று கூறிய பின்புதான், இனிமேலும் காத்திருக்க முடியாது என்று நினைத்தே உடலை எங்கள் வழக்கப்படி கிராமத்தில் வைத்து இறுதிச்சடங்கு செய்தோம். குற்றவாளிக்கு மிக விரைவாக கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டுமென்பதைத் தவிர எங்கள் வேண்டுகோள் வேறு எதுவுமில்லை.'' என்றார் அவர்.
குற்றஞ்சாட்டப்பட்ட கார்த்தி குடியிருந்த வீடு, ஒரு சிறிய காம்பவுண்டுக்குள் அமைந்துள்ள 3 வீடுகளில் முதலாவதாகவுள்ளது. இப்போது அங்கு யாருமில்லை. இரண்டாவது வீடு காலியாகவுள்ளது. மூன்றாவது வீட்டிலிருந்த மாணிக்கம், ''அவர்கள் இங்கே குடிவந்து ஒரு மாதம்தான் ஆவதால் அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது. எனது மனைவிக்கு உடுமலையில் குழந்தை பிறந்திருப்பதால் நானும் ஒரு மாதமாக அதிகமாக இங்கிருக்கவில்லை.'' என்றார்.
அதே தெருவில் அயர்ன் கடை நடத்தும் மகேந்திரன் என்பவர், ''கைது செய்யப்பட்ட நபர் குடும்பத்துடன் சமீபத்தில்தான் இங்கு குடிவந்தார். அக்குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடக்கும்.'' என்றார்.
'குடும்ப சண்டைக்கும் குற்றத்தின் நோக்கத்திற்கும் தொடர்பில்லை'
இந்த சம்பவத்தால் பெரிதும் வேதனை அடைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் பலரும் கருத்து பகிர்ந்தனர்.
அருகில் உள்ள குளக்கரை பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
அந்த குளத்தையொட்டிய பகுதிகளில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்கள் சிலரிடம் பேசியபோது, ''இந்த குளக்கரையில்தான் ஏராளமான ஆண்கள் மது குடித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும். ஆனால் மாலை நேரத்தில் அந்த குழந்தையை எப்படிக் கொண்டு வந்து இந்த கொடுமையை செய்தான் என்பது தெரியவில்லை.'' என்றனர்.
சிறுமியின் கொலை குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் பல்வேறு தகவல்கள் குறித்து பிபிசியிடம் பேசிய மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, சிறுமியின் பெற்றோர் குடும்பத்தில் சில உள்பிரச்னைகள் இருக்கின்றன என்றாலும் அதற்கும் இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார். சிறுமியைக் கொன்றதற்கான நோக்கம் பாலியல் வன்கொடுமை செய்வதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் அவர்.
பிபிசியிடம் பேசிய ஐஜி ரம்யா பாரதி, ''இப்போது முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கைதான் வந்துள்ளது. அதில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக மரபணு சோதனை உள்ளிட்ட மேலும் பல சோதனைகள் முடிந்து இறுதிக்கட்ட அறிக்கை வரவேண்டியுள்ளது. அது வந்த பின்பே எதையும் நாம் திட்டவட்டமாகக் கூறமுடியும்.'' என்றார்.
''முதற்கட்ட அறிக்கையின்படியே, பாலியல் வன்கொடுமை இருப்பது உறுதி செய்யப்பட்ட காரணத்தால்தான் கொலை வழக்குடன் போக்சோ வழக்கும் பதியப்பட்டுள்ளது. சிறுமியை மிகவும் கடுமையாகத் தாக்கியதும், அதில் பலத்த காயம் ஏற்பட்டதும் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. மிக விரைவாக குற்றவாளியைக் கைது செய்தது போலவே, துரிதமாக குற்றப்பத்திரிக்கையையும் தயார் செய்வோம்'' என்றார் ஐஜி ரம்யா பாரதி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு