பிரிக்ஸ் புதுடெல்லி பிரகடனம் வெளியீடு: பெயர் குறிப்பிடாமல் அமெரிக்கா பற்றியுள்ள மறைமுக விமர்சனங்கள் என்ன?

பிரிக்ஸ் புதுதில்லி பிரகடனம் ஒருமித்த கருத்துகளுடன் வெளியீடு

பட மூலாதாரம், Narendra Modi Photo Gallery/ANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் புதுடெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரிக்ஸ் நாடுகள் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கடுமையாகக் கண்டித்துள்ளன. எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த முடியாது என்று அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 பக்கங்களும், 140 அம்சங்களையும் கொண்ட இந்தப் புதுடெல்லி பிரகடனமானது, "கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை"க் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம், அதற்கு நிதி உதவி அளித்தல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை பிரிக்ஸ் நாடுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

பயங்கரவாதத்தை எந்தவொரு மதம், தேசிய இனம், நாகரிகம் அல்லது சமூகக் குழுவுடன் இணைத்துப் பார்க்கக் கூடாது என்று அந்தப் பிரகடனம் குறிப்பிடுகிறது.

இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதம் மற்றும் மத அடிப்படைவாதம் பரவுவதைத் தடுப்பதற்காக ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தின. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல், ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல், பணமோசடி, சைபர் குற்றங்கள், ஊழல் மற்றும் டிஜிட்டல் மோசடிகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவை வலியுறுத்தின.

ஒழுங்கமைக்கப்பட்ட ஆன்லைன் மோசடி வலையமைப்புகளை முற்றிலுமாக ஒழிப்பது, குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கண்டறிந்து மீட்டெடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது குறித்தும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை என்ன?

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் வெளியூர்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், AUSEEF MUSTAFA/AFP via Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் வெளியூர்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர் (கோப்புப் படம்)

"எந்தவொரு நோக்கத்திற்காக, எங்கு, எப்போது அல்லது யாரால் நடத்தப்பட்டாலும், குற்றச் செயலாகவும் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகவும் உள்ள அனைத்து வகையான பயங்கரவாதச் செயல்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று பிரிக்ஸ் நாடுகள் தங்களது பிரகடனத்தில் தெரிவித்துள்ளன.

"கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையும், அதனால் 26 பேர் உயிரிழந்த சம்பவத்தையும், பலர் காயமடைந்ததையும் நாங்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம்."

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய நடமாட்டம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட அதன் அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்."

பிரிக்ஸ் நாடுகள் மேலும் தெரிவிக்கையில், "பயங்கரவாதத்தை எந்தவொரு மதம், தேசிய இனம், நாகரிகம் அல்லது சமூகக் குழுவுடன் இணைத்துப் பார்க்கக் கூடாது என்பதையும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபாடு கொண்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்."

மேலும் அதில், "பயங்கரவாதத்தின் மீது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இரட்டை நிலைப்பாடுகளை நிராகரிக்கிறோம் எனவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் நாடுகளுக்குரிய முதன்மையான பொறுப்பை நாங்கள் வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையால் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரிக்ஸ் கூறியுள்ளது.

ஒருதரப்பு வரி விதிப்புகளுக்கு எதிர்ப்பு

டிரம்ப்

பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images

படக்குறிப்பு, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல நாடுகளுக்கு எதிராக வரி விதிப்புகளை அறிவித்தார் டிரம்ப். இந்த நடவடிக்கை உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது (கோப்புப் படம்)

உலக வர்த்தக அமைப்பு விதிகளை மீறி விதிக்கப்படும் ஒருதரப்பு வரிகள், வரி அல்லாத நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புவாதக் கொள்கைகள் குறித்துப் பிரிக்ஸ் அமைப்பினர் கவலை தெரிவித்தனர்.

இத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பாதிப்பதோடு, பொருளாதார ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கும் என்று அக்குழு கூறியுள்ளது.

சர்வதேச சட்டத்திற்கு முரணான ஒருதரப்புப் பொருளாதாரத் தடைகள் மற்றும் பிற பலவந்தமான பொருளாதார நடவடிக்கைகளைப் பிரிக்ஸ் கண்டனம் செய்ததுடன், அவை ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் தெரிவித்தது.

உலக அமைதியைப் பொறுத்தவரை, மோதல்களைத் தடுத்தல், பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் மத்தியஸ்தம் ஆகியவற்றுக்குப் பிரிக்ஸ் முக்கியத்துவம் அளித்தது. அதிகரித்து வரும் ராணுவச் செலவுகள், அணுஆயுத அச்சுறுத்தல்கள் மற்றும் ஆயுதப் போட்டி குறித்துக் கவலை தெரிவித்துள்ள அந்த அமைப்பு, ஆயுதக் குறைப்பு, ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தது. அணு ஆயுதமற்ற பகுதிகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அக்குழு வலியுறுத்தியது.

கியூபா மீதான ஒருதரப்புத் தடைகள் மற்றும் முற்றுகை கடுமையாக்கப்படுவது குறித்துப் பிரிக்ஸ் கவலை தெரிவித்தது. கியூபா மீதான பொருளாதார, வர்த்தக மற்றும் நிதித் தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பிரிக்ஸ் கோரிக்கை விடுத்தது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு

காஸாவில் நிலவும் மனிதாபிமானமற்ற நெருக்கடி குறித்துக் கவலை தெரிவித்துள்ள பிரிக்ஸ் நாடுகள், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்துள்ளன (கோப்புப் படம்)

பட மூலாதாரம், BASHAR TALEB/AFP via Getty Images

படக்குறிப்பு, காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்துக் கவலை தெரிவித்துள்ள பிரிக்ஸ் நாடுகள், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்துள்ளன (கோப்புப் படம்)

மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்துப் பிரிக்ஸ் நாடுகள் தங்களது தீவிரக் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. சூழ்நிலையை மேலும் மோசமாக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்த்து, அனைத்துத் தரப்பினரும் உச்சக்கட்டப் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவை கேட்டுக்கொண்டுள்ளன.

காஸாவில் போர்நிறுத்தத்தைப் பேணவும், மனிதாபிதான உதவிகள் எவ்விதத் தடையுமின்றிச் சென்று சேர்வதை உறுதி செய்யவும் பிரிக்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதையும், காஸாவின் புவியியல் வரைபடத்தையோ அல்லது மக்கள் தொகையையோ மாற்றும் எதேச்சதிகார முயற்சிகளையும் அக்குழு எதிர்த்துள்ளது.

இஸ்ரேல் - பாலத்தீன பிரச்னைக்கு நியாயமான மற்றும் நிரந்தரமான தீர்வு அமைதியான வழிகள் மூலமாக மட்டுமே சாத்தியமாகும் என்று பிரிக்ஸ் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஜெருசலேமைத் தலைநகரமாகக் கொண்டு, 1967 ஆம் ஆண்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள் இறையாண்மையைக் கொண்ட மற்றும் சுதந்திரமான பாலத்தீன அரசை உருவாக்க வழிவகுக்கும் 'இரு நாடுகள் தீர்வு' கொள்கைக்கு பிரிக்ஸ் ஆதரவு அளிக்கிறது.

காஸாவில் நிலவும் மனிதாபிதான சூழல் குறித்துக் கவலை தெரிவித்துள்ள பிரிக்ஸ் நாடுகள், பொதுமக்கள், மருத்துவ மையங்கள் மற்றும் பிற குடிமைசார் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், மனிதாபிமான உதவிகள் தடுத்து நிறுத்தப்படுவதையும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமின் சட்டப்பூர்வ மற்றும் வரலாற்று நிலையை மாற்றக்கூடிய எந்தவொரு ஒருதரப்பு நடவடிக்கையையும் தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன. நகரில் உள்ள அனைத்து மதம் மற்றும் புனிதத் தலங்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், எந்தவொரு தடையுமின்றி மதத் தலங்களை அணுகவும், தங்களது மதச் சடங்குகளைப் பின்பற்றவும் அனைத்து மக்களுக்குமான உரிமை மதிக்கப்பட வேண்டும் எனவும் அவை அழைப்பு விடுத்துள்ளன.

லெபனானில் நடைமுறைக்கு வந்துள்ள போர்நிறுத்தத்தை வரவேற்பதாகத் தெரிவித்த பிரிக்ஸ், அதன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை முழுமையாகச் செயல்படுத்துமாறும் அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது.

சூடானில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்துக் கவலை தெரிவித்துள்ள பிரிக்ஸ், உடனடியாகவும் நிலையானதாகவும் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. சிரியாவின் இறையாண்மை மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் செயல்பாட்டிற்குத் தனது ஆதரவை இந்தப் பிரகடனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் வளரும் நாடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல்

நரேந்திரமோடி, புடின்.

பட மூலாதாரம், DPR PMO/ANI Photo

பரஸ்பர மரியாதை, இறையாண்மை சமத்துவம், ஒற்றுமை, ஜனநாயகம், திறந்த மனப்பான்மை, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை மற்றும் ஒருமித்த கருத்து போன்ற பிரிக்ஸ் கோட்பாடுகளை அதன் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகள் ஆகிய மூன்று துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

கூட்டாளி நாடுகளின் பங்களிப்புகளைத் தலைவர்கள் வரவேற்றதுடன், வளரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளுடனான கூட்டாண்மையை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.

மிகவும் நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பொறுப்புள்ள உலகளாவிய ஒழுங்கை உருவாக்குவதில் ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய பங்கை வலுப்படுத்தத் தலைவர்கள் உறுதியேற்றனர்.

உலகளாவிய முடிவெடுக்கும் செயல்பாட்டில் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளில், குறிப்பாக உலக நாடுகளின் தெற்கு அரைக்கோளத்தை சேர்ந்த வளரும் நாடுகள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரிக்ஸ் வலியுறுத்தியது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தீர்மானம் மற்றும் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு' தொடர்பான செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டைப் பிரிக்ஸ் நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின. அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து மட்டங்களிலான முடிவெடுக்கும் செயல்பாடுகளிலும் பெண்களின் முழுமையான, சமமான, பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பு இருக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.

பல்முனை உலக ஒழுங்கில் வளரும் நாடுகளின் பங்கை வலுப்படுத்துவதற்கும், மிகவும் நியாயமான மற்றும் சமமான உலகளாவிய ஆளுமைக்காக உரையாடல்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கும் பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டன.

பொருளாதாரத்தைப் பொருத்தவரை, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பிற நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரிக்ஸ் கோரிக்கை விடுத்தது. வளரும் பொருளாதார நாடுகளுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அது வலியுறுத்தியது.

சர்வதேச நாணய நிதியத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், உலக வங்கியில் வளரும் நாடுகளின் பங்கை அதிகரிப்பதற்கும் பிரிக்ஸ் ஆதரவு அளிக்கிறது. உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், திறந்த, வெளிப்படைத்தன்மை, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்பை வலுப்படுத்தவும் பிரிக்ஸ் நாடுகள் உறுதிபூண்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் வெள்ளப்பெருக்கு, காலநிலை மாற்றம் குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Ezra Acayan/Getty Images

படக்குறிப்பு, நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, காலநிலை மாற்றம் குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஒரு முக்கிய வாய்ப்பு வழங்கும் துறை என்று பிரிக்ஸ் அடையாளம் கண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்ய பன்னாட்டு ஒத்துழைப்பு அவசியமென்றும் அது வலியுறுத்தியுள்ளது.

கல்வித் துறையைப் பொறுத்தவரை, டிஜிட்டல் கல்வியறிவு, திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாடு, கல்வி உதவித்தொகைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை அதிகரிப்பது குறித்துப் பேசப்பட்டது.

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் திறனை வலுப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டன.

முன்னெச்சரிக்கை அமைப்புகள், உள்ளூர் மற்றும் பாரம்பரிய அறிவு, பேரிடர்களைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புகள், பொது மற்றும் தனியார் முதலீடுகள் மூலம் பேரிடர் எதிர்கொள்ளும் திறனை அதிகரிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டின் கீழ் காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் பணிகளை விரைவுபடுத்துவதாகப் பிரிக்ஸ் உறுதியளித்துள்ளதுடன், ஒருதரப்பான மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்து கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

புதிய வளர்ச்சி வங்கி மற்றும் ஜி20

நரேந்திரமோடி, புடின், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Kristina Solovyova/POOL/AFP via Getty Images

பிரிக்ஸ் மற்றும் உலக நாடுகளின் தெற்கு அரைக்கோள நாடுகளின் வளர்ச்சிக்கு 'புதிய வளர்ச்சி வங்கி' ஒரு முக்கிய நிறுவனமாக விளங்குவதாக அந்தப் பிரகடனம் வர்ணித்துள்ளது. உள்ளூர் நாணயங்களில் நிதியளித்தல், வளங்களைத் திரட்டுதல் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குதல் போன்ற அதன் திறனை மேலும் விரிவுபடுத்துவதை அது எதிர்நோக்கியுள்ளது.

உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மையான தளமாக ஜி20 விளங்குவதாகக் குறிப்பிட்ட பிரிக்ஸ் நாடுகள், அதில் வளரும் பொருளாதார நாடுகளின் குரலை வலுப்படுத்துவதற்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தன.

நீதித்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், எல்லை தாண்டிய வணிகத் தகராறுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்தன. நடுவர் மன்றங்கள் மற்றும் பிற மாற்றுத் தகராறு தீர்வு முறைகளை மேலும் எளிதில் அணுகக் கூடியவையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவை வலியுறுத்தின.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு