எந்தெந்த விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது? மதுரை உயர்நீதிமன்றம் கூறியது என்ன?

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மனநலம் சார்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் திருமண மற்றும் விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட அடையாள விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனைவி மீதான மனநல பாதிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு கணவர் தாக்கல் செய்திருந்த விவாகரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனு ஒன்றை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளைவு, 'ஒருவரின் மனநலம் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தனிநபரின் கண்ணியம், தனியுரிமை மற்றும் சமூக வாழ்வில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்' என்றும் சுட்டிக்காட்டியது.

"பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் பெண்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்பது 'மனநலம்' தொடர்பானதாகவே இருக்கும். தீர்ப்பு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வழங்கப்பட்டாலும் கூட, இந்த குற்றச்சாட்டுகள் அவர்களை வாழ்க்கை முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும், எனவே இந்த உத்தரவு மிகச் சிறந்த முன்னெடுப்பு" என வழக்கறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதேசமயம், ஒருவர் விவாகரத்து பெற்றவரை திருமணம் செய்யும்போது அவரது பின்புலம் குறித்தோ அல்லது முந்தைய திருமண உறவு குறித்தோ அறிந்துகொள்ளும் வகையிலும் வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வழக்கின் பின்னணி என்ன?

நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ஆர்.ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய மதுரை உயர் நீதிமன்ற கிளை விவாகரத்து தொடர்பான ஒரு மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்தது.

இந்த வழக்கில், கணவர் தாக்கல் செய்த மனுவில், திருமணத்துக்கு முன்பே மனைவிக்கு ஸ்கிசோஃப்ரேனியா (Schizophrenia - ஒருவித மனநல ஒருங்கின்மை) இருந்ததாகவும், அந்த விவரம் மறைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு அவர் விவாகரத்து கோரியிருந்தார்.

ஆனால் அவரது மனுவை தஞ்சாவூர் குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.

கணவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் போதுமான மருத்துவ ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறிய நீதிமன்றம், 'மருத்துவ பரிந்துரைகள் மற்றும் மருந்துச் சீட்டுகள் மட்டும் ஒருவருக்கு ஸ்கிசோஃப்ரேனியா இருப்பதை நிரூபிக்க போதுமானதல்ல' என்றும் கூறியது.

மேலும், 'மனைவி உயர் கல்வியை முடித்திருந்தது, வழக்கு விசாரணையின் போது தெளிவாக வாக்குமூலம் அளித்தது உள்ளிட்ட அம்சங்களையும் குறிப்பிட்ட நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ஆர்.ஆர்.ராமகிருஷ்ணன், கணவரது மனுவை கடந்த ஜூன் 15ஆம் தேதி தள்ளுபடி செய்தனர்.

பெயர்களை வெளியிடுவதால் என்ன பாதிப்பு?

'மனநலக் குறைபாடு குறித்த குற்றச்சாட்டுகள் பின்னர் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டாலும், அதனால் ஏற்படும் சமூக அவப்பெயர் பல ஆண்டுகள் நீடிக்கக்கூடும்' என நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

"திருமண வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், சமூக உறவுகள் மற்றும் தனிநபரின் கண்ணியம் ஆகியவற்றில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்."

"ஒருவரின் பெயருடன் 'மனநல நோயாளி' என்ற முத்திரை இணைக்கப்படுவது அவருடைய வாழ்நாள் முழுவதும் அவரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதை பாதிக்கக்கூடும்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுபோன்ற வழக்குகளில் எதிர்காலத்தில்,

  • கணவன், மனைவி ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்படக் கூடாது.
  • முகவரி, குடும்ப விவரங்கள் உள்ளிட்ட அடையாளம் காண உதவும் தகவல்கள் நீக்கப்பட வேண்டும்.
  • நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளில் தரப்பினரை "X" மற்றும் "Y" போன்ற குறியீட்டு பெயர்களால் குறிப்பிட வேண்டும்.
  • மனநலக் குறைபாடு தொடர்பான விவாகரத்து மற்றும் குடும்பநல வழக்குகளில் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய வழக்குகளில் மனுக்கள், உத்தரவுகள், தீர்ப்புகள் உள்ளிட்ட பொதுமக்கள் அணுகக்கூடிய நீதிமன்ற ஆவணங்களில் அடையாள விவரங்கள் வெளியிடப்படக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

"மனநலக் குறைபாடு குறித்த கடுமையான குற்றச்சாட்டுடன் கூடிய திருமணம் சார்ந்த வழக்குகள் அதிகரித்துள்ளதாலும், வழக்கு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் அடையாளம் அவர்களின் வாழ்நாளின் எஞ்சிய நாட்களில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும், இதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவு அனைத்து விவாகரத்து வழக்குகளுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் கூறவில்லை. மனநலக் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் இடம்பெறும் திருமண மற்றும் குடும்பநல வழக்குகளை மையமாகக் கொண்டே இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏன் இந்த உத்தரவு முக்கியமானது?

"இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடுவதற்கு ஏற்கெனவே சட்டத் தடை உள்ளது. ஆனால், மனநலக் குறைபாடு குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெறும் குடும்பநல வழக்குகளில் பெயர்களை மறைக்க வேண்டும் என்ற தெளிவான நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அரிதாகவே உள்ளன. அப்படியிருக்க இதை வரவேற்க வேண்டும்" என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ்.

தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் கையாண்ட ஒரு வழக்கை மேற்கோள் காட்டிய அவர், "சில வருடங்களுக்கு முந்தைய அந்த விவாகரத்து வழக்கில், பெண் தரப்பில் நான் வாதாடினேன். தனது பெயர் கொண்ட தீர்ப்பு அல்லது உத்தரவு நகல்கள், விவாகரத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் பொதுவெளியில் இருப்பது தனது எதிர்கால வாழ்க்கையை, வேலைவாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என அவர் கருதியதால், அவரது அடையாளத்தை வழக்கு விசாரணையில் வெளிப்படுத்த வேண்டாம் என நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்தோம். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது" என்கிறார்.

இங்கு ஒருவர் மீது, குறிப்பாக திருமணம் சார்ந்த வழக்குகளில் எளிதாக குற்றச்சாட்டுகள் வைத்துவிடலாம், அதுவும் மனநலம் சார்ந்த குற்றச்சாட்டு எனும்போது அது பிற்காலத்தில் 'பொய்' என நிரூபிக்கப்பட்டாலும் கூட, அது அவர்களுக்கு ஒரு களங்கமாகவே இருக்கும் என குறிப்பிடுகிறார் ராஜீவ் ரூஃபஸ்.

'சமூகம் என்னை மனநோயாளியாக பார்க்கிறது'

திருநெல்வேலியைச் சேர்ந்த 60 வயதான, பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஒருவர் திருமண உறவு சார்ந்த ஒரு வழக்கில் தனது கணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் மிகவும் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவையும் வரவேற்றார்.

"எனது 30 வருட திருமண வாழ்வின் இறுதியில் நான் மனநல நோயாளியாக மாற்றப்பட்டேன்" என்கிறார் அவர்.

"திருமண வாழ்க்கையில் தொடர்ந்து உடல் மற்றும் மனநலம் சார்ந்த சித்திரவதைகள், அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். எங்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, எனது கணவர் இரண்டாம் திருமண உறவின் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டார். அதையும் பொறுத்துக்கொண்டேன்."

"எனக்கு மனரீதியாக ஏதோ ஒரு பிரச்னை உள்ளது என ஒரு மனநல மருத்துவர் மூலம் நம்பவைத்து, சில மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வைத்தார். என்னுடைய நகைகள், சொத்துகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு, எனது 54வது வயதில் என்னை கைவிட முயற்சித்தபோது, என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எங்கள் ஊர் நீதிமன்றத்தில் 'குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின்' கீழ் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார் அப்பெண்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆனால் என் கணவர் எனக்கு தீராத மனநோய் உள்ளது, அதனால் நான் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறினார். இறுதியில் எனக்கு எந்த மனநல பிரச்னைகளும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து எனது கணவர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், அங்கும் எனக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது" என்கிறார்.

அவர் கூறிய வழக்கு விவரங்களை அவரது வழக்கறிஞரிடம் பேசி பிபிசி தமிழ் உறுதி செய்துகொண்டது.

தீர்ப்புகள் சாதகமாக வந்தாலும் சமூகம் மற்றும் உறவுகள் தன்னைப் பார்க்கும் பார்வை மாறவில்லை என்கிறார் அப்பெண்.

"இங்கு ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதை மட்டும் தான் சமூகம் கவனிக்கும், அவை பொய் என நிரூபிக்கப்படுவதை பலரும் கவனிப்பதில்லை." என்கிறார் அவர்.

கூடுதல் வழிகாட்டுதல்கள்

"குடும்ப நல வழக்குகளில் மனநலப் பிரச்னைகள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தடுக்கும் வகையில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவு அமைந்துள்ளது" என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி.

"அதேசமயம், 'மனநோயாளிகளை' மனிதாபிமானத்தோடு அணுகும் ஒரு உத்தரவு இது. பொதுவெளியில் அவர்களை அடையாளப்படுத்துவது தவறு என்பதை இது அழுத்தமாக வலியுறுத்துகிறது" என்றும் அவர் கூறுகிறார்.

இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், திருமண உறவு சார்ந்த சில வழக்குகளில் தங்களது அல்லது எதிர்தரப்பின் பெயர் வெளியாவது அவசியம் என நினைப்பவர்கள் அதற்கான சிறப்பு அனுமதியை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேகா.

"அதேபோல, ஒருவர் மறுமணம் செய்துகொள்ளும்போது, அவர் முந்தைய திருமண உறவிலிருந்து எதற்காக விலகினார் என்பதை துணையாக வருபவர் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினால், அதற்கு சட்டத்தில் எளிய வழிகள் இருக்க வேண்டும்."

"தனிப்பட்ட நபரின் பெயர் கொண்ட ஆவணங்கள் பொதுவெளியில் இருக்காது எனும்போது, சிறப்பு அனுமதி மூலம் தகுதியான காரணத்துடன் ஒருவர் அதை அணுகுவதற்கான வழிகாட்டுதல்களை நீதிமன்றங்கள் அளிக்க வேண்டும்" என்றும் கூறுகிறார் வழக்கறிஞர் சுரேகா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு