You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணாமல் போன 2 வயது சிறுமி; '10 நாட்களுக்கு மேலாகியும் ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை' - என்ன நடந்தது?
- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
காக்கிநாடா மாவட்டம், தொண்டவாகா பஞ்சாயத்து சி.ஹெச். அக்ரஹாரத்தில் உள்ள ஒரு எண்ணெய் பனை தோட்டத்தில் தனது தந்தையைத் தேடிச் சென்றபோது காணாமல் போன இரண்டு வயது சிறுமி ஞானேஸ்வரியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாட்கள் கடந்தும் அந்தச் சிறுமி எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்டிஆர்எஃப்), தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) குழுக்கள், ட்ரோன்களை இயக்கும் ஹனுமான் குழுக்கள், போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து 40 ஏக்கர் எண்ணெய் பனை தோட்டம் மற்றும் 500 ஏக்கர் மலைப் பகுதியில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சாதகமற்ற வானிலை நிலவிய போதிலும் சிறுமியைத் தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது.
சிறுமி காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டதிலிருந்து போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
எண்ணெய் பனை தோட்டங்கள், புதர்கள், கால்வாய்கள், குளங்கள், கிணறுகள், பாழடைந்த வீடுகள் என, அந்தச் சிறுமி இருக்கக்கூடும் எனக் கருதப்படும் ஒவ்வொரு இடமும் சோதிக்கப்பட்டு வருகிறது.
வழக்கமான காணாமல் போனவர்கள் குறித்தான வழக்குகளைப் போலல்லாமல், இந்த வழக்கில் போலீசார் இவ்வளவு பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், சிறுமி பற்றிய எந்தவொரு தடயமும் கிடைக்காமல் இருப்பது ஏன்? இதுவரை தேடுதல் பணி எவ்வாறு நடந்துள்ளது? போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
என்ன நடந்தது?
இரண்டு வயது சிறுமி ஞானேஸ்வரி ஜூன் 6 அன்று காணாமல் போனார்.
ஞானேஸ்வரியின் தந்தை சுங்கராகணேஷ், காக்கிநாடா மாவட்டம் தொண்டவாகா பஞ்சாயத்து சி.ஹெச். அக்ரஹாரத்தில் உள்ள ஒரு எண்ணெய் பனை தோட்டத்தில் பராமரிப்பாளராகப் பணிபுரிகிறார். அவரது குடும்பத்தினர் அங்கேயே வசிக்கின்றனர்.
கணேஷ், அவரது மனைவி பவானி, அவர்களது குழந்தைகளான ஞானேஸ்வரி மற்றும் 6 மாதக் குழந்தை ஆகியோர் இந்த 40 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டத்தில் வசிக்கிறார்கள். கணேஷின் பெற்றோரும் அவர்களுடன் வசிக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் தோட்டத்தின் நடுவே சுமார் 80 கஜ பரப்பளவில் கட்டப்பட்ட இரண்டு மாடி கான்கிரீட் கட்டடத்தில் வசிக்கிறார்கள்.
சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போன அன்று (ஜூன் 6) என்ன நடந்தது என்பதை அந்தச் சிறுமியின் பெற்றோர் பவானி மற்றும் கணேஷ் பிபிசியிடம் விளக்கினர்.
"சனிக்கிழமை காலையில், குழந்தை எங்களுடன் இருந்தது. அவளுடைய தந்தை தோட்டத்தில் சில வேலைகளைச் செய்யச் சென்றிருந்தார். அவர் சென்ற பிறகு, குழந்தையும் அவருடன் சிறிது தூரம், மாமரத்தைத் தாண்டிச் சென்றாள். அதைக் கண்டு, அவர் குழந்தையை மீண்டும் அழைத்து வந்தார். நான் இளைய மகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, அவர் தோட்டத்தில் வேலைக்குச் செல்வதாகவும், அதுவரை குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறும் கூறி ஞானேஸ்வரியைச் சுவருக்கு அருகில் விட்டுச் சென்றனர்.
நான் ஞானேஸ்வரியைப் பிடித்துக் கொண்டேன். அவளுடைய தந்தை செல்வதைக் கண்டு அவள் அழுதாள். அதே நேரத்தில், வீட்டில் இருந்த இளைய மகள் சத்தமாக அழுதாள். அதைக் கேட்டு, இளைய மகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக நான் உள்ளே சென்றேன். ஏனென்றால், மூத்த மகள் வழக்கமாக இங்கும் அங்கும் விளையாடுவாள் அல்லது அவளுடைய தந்தையுடன் இருப்பாள்" என்று ஞானேஸ்வரியின் தாய் சுங்கரா பவானி பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், அன்று தோட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த தன் தந்தையைப் பின்தொடர்ந்து சென்றபோது, தோட்டத்தின் நடுவில் இருந்த பாதையில் குழந்தை மறைந்துவிட்டதாகப் பெற்றோர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
ஜூன் 6 ஆம் தேதி முதல் நடக்கும் தேடுதல் பணி
"சிறுமி காணாமல் போனபோது நேரம் சுமார் 11 மணி 50 நிமிடங்கள் இருக்கும். அந்த நேரத்தில், அவள் வீட்டுக்கு வெளியே செல்வது காணப்பட்டது.
அவள் மீண்டும் திரும்பி வரவில்லை. மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த போலீசாரையும் இந்தத் தேடுதல் நடவடிக்கைகளில் நாங்கள் ஒரு பகுதியாக மாற்றியுள்ளோம். மலையிலிருந்து தேடத் தொடங்கியுள்ளோம். ஹனுமான் குழுக்கள் என்று அழைக்கப்படும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்களையும் இதில் ஒரு பகுதியாக இணைத்துள்ளோம். இந்த வனப்பகுதியில் கீழே இறங்குவதற்கு ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார்" எனத் தேடுதல் பணி குறித்த விவரங்களை உள்துறை அமைச்சர் வங்களபுடி அனிதா விளக்கினார்.
ஒரு தடயம் கூடக் கிடைக்கவில்லை
குழந்தையைத் தேடும் பணி பெரிய அளவில் நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
"பலர் வழங்கிய ஆலோசனைகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். வீடு வீடாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையால் பல கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். அவர்கள் தேடினர். சிலர் எங்களையும் இந்தத் துறையையும் வசைபாடினர். இருப்பினும், சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் நாங்கள் தீவிரமாகத் தேடி வருகிறோம்" என்று அவர் கூறினார்.
வனவிலங்குகள் ஏதேனும் தூக்கிச் சென்றதா அல்லது யாராவது குழந்தையைக் கடத்திச் சென்றார்களா என்பதைக் கண்டறிய முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.
பொதுவாக, காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளில் சில மணி நேரங்களிலேயே ஏதேனும் ஒரு தடயம் கிடைத்துவிடும். ஆனால் இந்த வழக்கில், நாட்கள் கடந்தும் அப்படி எந்தவொரு ஆதாரமும் கிடைக்காமல் இருப்பது புலனாய்வு அதிகாரிகளுக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது.
துனி நகரத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்றதொரு தேடுதல் நடவடிக்கை இதுவரை எப்போதும் மேற்கொள்ளப்பட்டதில்லை என்றும், குழந்தை கடத்தல் போன்ற சம்பவங்கள் பதிவானதாகக் கூட தங்களுக்குத் தெரியவில்லை என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
பொம்மைகளை வைப்பதற்கான காரணம்
அது ஒரு வனப்பகுதி என்பதாலும், பாமாயில் தோட்டத்தில் சிறுமி காணாமல் போனதாலும், குழந்தையை ஏதேனும் விலங்குகள் தூக்கிச் சென்றிருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஏதேனும் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பதைக் கண்டறிய போலீசார் சில பொம்மைகளை வைத்துள்ளனர். அவற்றை இந்தத் தோட்டத்தின் வேலிகளில் அவர்கள் பொறுத்தியுள்ளனர்.
இருப்பினும், தோட்டத்தில் உள்ள வேலியில் தொங்கிக்கொண்டிருந்த உருவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பல ஊகங்கள் நிலவி வருகின்றன.
ஏதேனும் விலங்குகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதைப் பார்ப்பதற்காகவே அந்த பொம்மைகள் வைக்கப்பட்டதாகப் போலீசார் தங்களிடம் கூறியதாக ஞானேஸ்வரியின் தாய் சுங்கரா பவானி தெரிவித்தார்.
சந்தேகத்துக்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டத்தின் மீது கவனம் செலுத்தி, சுற்றியுள்ள பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஏற்கெனவே ஆய்வு செய்து வருகிறது.
கைபேசித் தரவுகள், அழைப்புப் பதிவுகள் மற்றும் உள்ளூர் தகவல்களும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
"இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்து மட்டுமே யாராவது வர வாய்ப்புள்ளது. கிராமத்தின் இந்தப் பக்கத்திலிருந்து பத்து பேர், அந்தப் பக்கத்திலிருந்து பத்து பேர் வருவார்கள். கிராமத்துக்கு வெளியிலிருந்து யாரும் வருவதில்லை" என்று சின்னா ராவ் என்ற உள்ளூர்வாசி கூறினார்.
நாயின் மரணம்
குழந்தையுடன் சென்றுவிட்டுத் திரும்பிய வளர்ப்பு நாய் உயிரிழந்ததும் இந்த வழக்கில் மற்றொரு விடை தெரியா கேள்வியாக மாறியுள்ளது.
"நாயின் திடீர் மரணம், குழந்தை வருமா, அது எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது என்ற எனது பயத்தை அதிகரித்துள்ளது" என ஞானேஸ்வரியின் தாய் கூறினார்.
"நான் யார் மீதும் சந்தேகப்படவில்லை," என்று கூறிய அவர், தன்னைச் சுற்றியுள்ள யாரையும் தனக்குத் தெரியாது என்றும், அன்று என்ன நடந்தது என்பதைத் தன்னால் ஊகிக்கக்கூட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
"அவர்கள் ஆறு மாதங்களாக வளர்த்து வந்த வளர்ப்பு நாய், வீட்டுக்குத் திரும்பிய பிறகு விசித்திரமாக நடந்து கொண்டது. பின்னர், அது இறந்துவிட்டது. நாயின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வு அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அதை தடய அறிவியல் சோதனைக்கும் அனுப்பியுள்ளோம். ஏதேனும் பாம்பு கடித்ததா என்று கேட்டதற்கு, ஆரம்பகட்ட அறிக்கைக்குப் பிறகு அப்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்" என உள்துறை அமைச்சர் அனிதா அனி கூறினார்.
தொழில்நுட்ப ஆதாரங்களின் பகுப்பாய்வு
இருப்பினும், இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும், ஞானேஸ்வரி எங்கு இருக்கிறார் என்பது இன்னும் கண்டறியப்படாதது இந்த வழக்கில் உள்ள குழப்பத்தை அதிகரிக்கிறது.
நாட்கள் கடந்து செல்லச் செல்ல, ஞானேஸ்வரியின் நலம் குறித்த கவலை குடும்ப உறுப்பினர்களிடையே அதிகரித்து வருகிறது.
நூற்றுக்கணக்கான பணியாளர்கள், ட்ரோன்கள், மோப்ப நாய் படைகள்... எஸ்டிஆர்எஃப் , என்டிஆர்எஃப் குழுக்கள், தொழில்நுட்ப விசாரணை என, போலீசார் ஏற்கெனவே தங்களிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும், ஞானேஸ்வரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தேடுதல் பகுதியை மேலும் விரிவுபடுத்துவதும், தொழில்நுட்ப ஆதாரங்களை இன்னும் ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதுமே போலீசாரின் அடுத்தகட்ட முக்கிய வழிமுறையாக உள்ளது என்று பெத்தபுரம் டிஎஸ்பி ஏ.பி.ஜி. திலக் பிபிசியிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு