You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாட்சாப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டுமா? புதிய வாட்சாப் ப்ளஸ் பற்றிய 7 கேள்வி - பதில்கள்
வாட்சாப் பயனர்கள் கட்டணம் செலுத்தி கூடுதல் சேவைகள் பெறும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்சாப் ப்ளஸ் என்கிற பெயரில் வழங்கப்படும் இந்த சேவைகள் மெட்டா ஓன் என்கிற திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, வாட்சாப் போலவே மெட்டா நிறுவனத்தின் இதர தயாரிப்புகளான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிற்கும் இன்ஸ்டாகிராம் பிளஸ் மற்றும் ஃபேஸ்புக் பிளஸ் என்கிற சேவைகள் அறிமுகமாக இருக்கின்றன.
இந்தியாவில் சுமார் 85 கோடிக்கும் (சுமார் 853.8 மில்லியன்) அதிகமான வாட்சாப் கணக்குகள் இருப்பதாக வார்ல்ட் பாப்புலேஷன் ரிவியூ இணையதளம் தெரிவிக்கிறது.
மெட்டா நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா உள்ளது.
வாட்சாப் சேவையைப் பயன்படுத்தவே இனி கட்டணம் வசூலிக்கப்படலாம் என்பது போன்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. இந்தச் சூழலில் புதிய சேவை என்ன, மெசேஜ் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுமா? இவை யாருக்கெல்லாம் பொருந்தும்? இதில் இடம்பெற உள்ள அம்சங்கள் என்னென்ன?
மெட்டா ஒன் தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனத்தின் ப்ராடக்ட் பிரிவு தலைவர் நவோமி கிளைட் சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகப் பதிவின் மூலம் வெளியிட்டார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தகவல் சரிபார்ப்பு வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை, "உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேவைகள் படிப்படியாகவே இந்திய பயனர்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் சில உள்ளூர் சட்டங்கள் மற்றும் தேவைகள் உள்ளன. அதனைப் பொருத்து பிராந்திய வாரியாக இந்த அம்சங்கள் மாறுபடலாம், புதுப்பிக்கப்படலாம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ளவை அடிப்படை அம்சங்கள் மட்டுமே. வாட்சாப்பில் தற்போது விளம்பரங்கள் இடம்பெறுகின்றன. சந்தா சேவையில் விளம்பரங்கள் தவிர்க்கப்படுமா என்பதையும் பொருத்திருந்து பார்க்க வேண்டும்." என்றார்.
வாட்சாப் ப்ளஸ் என்றால் என்ன?
ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள வாட்சாப் செயலியில் பல கூடுதல் அம்சங்கள் இடம்பெற உள்ளன. இந்த சேவை படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ள நிலையில் சில அம்சங்கள் தாமதமாக கிடைக்கலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.
இதற்கான நிபந்தனைகள் என்னென்ன?
இந்தச் சேவைகளை மொபைல் போனில் உள்ள வாட்சாப் மெசஞ்சரில் மட்டுமே சப்ஸ்க்ரைப் செய்ய முடியும். கணினி அல்லது மொபைல் உலாவியில் (பிரௌஸர்) சப்ஸ்க்ரைப் செய்ய முடியாது. வாட்சாப் பிசினஸ் செயலிக்கும், கணக்குகளுக்கும் வாட்சாப் ப்ளஸ் பொருந்தாது.
ஒரு வாட்சாப் கணக்கிற்கு ஒரு வாட்சாப் பிளஸ் சப்ஸ்க்ரிப்ஷன் மட்டுமே பெற முடியும்.
வாட்சாப் ப்ளஸ் பெற அடிப்படை தேவைகள் என்ன? புதிய வசதியை வந்துவிட்டதா என்பதை எங்கு தெரிந்துகொள்ள முடியும்?
வாட்சாப் பிளஸ் எந்த நாட்டில் அறிமுகமாகிறதோ அந்நாட்டில் உள்ள உள்ளூர் மொபைல் எண் வேண்டும். வாட்சாப் அக்கவுண்ட் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும்.
வாட்சாப்பில் செட்டிங்ஸ் சென்று அதன் கீழ் சப்ஸ்க்ரிப்ஷன் என்கிற ஆப்ஷன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அங்கு வந்த பிறகு வாட்சாப் பிளஸ் சப்ஸ்க்ரைப் செய்ய முடியும்.
சப்ஸ்க்ரைப் செய்த பிறகு வாட்சாப் செட்டிங்ஸ் ----> சப்ஸ்க்ரிப்ஷன் -----> வாட்சாப் பிளஸ் எனத் தேர்வு செய்து அதில் உள்ள அம்சங்களை நிர்வகித்துக் கொள்ளலாம்.
யாருக்கெல்லாம் இந்தச் சேவை பொருந்தும்?
இந்த புதிய சேவையை வாட்சாப் பயன்படுத்தும் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும். மெசெஜ் செய்வது போன்ற வாட்சாப்பின் அடிப்படை தேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
மாறாக சில கூடுதல் மற்றும் பிரத்யேக அம்சங்கள் வேண்டும் என்பவர்கள் இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.
வாட்சாப் ப்ளஸ் சேவைக்கான கட்டணம் என்ன? எவ்வாறு வசூலிக்கப்படும்?
புதிய சேவைக்கு தற்போது கட்டணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இவை தற்போது தொடக்க நிலையில் உள்ளதால் ஒவ்வொரு நாட்டையும் பொருத்து கட்டணங்கள் மாறுபடலாம்.
வாட்சாப் ப்ளஸுக்கான கட்டணம் மாதம் மாதம் (ஆட்டோ ரினிவல் முறையில்) பெறப்படும். எந்த தேதியில் வாட்சாப் சப்ஸ்க்ரிப்ஷன் பெறுகிறோமா அதே தேதியில் ஒவ்வொரு மாதமும் கட்டணம் பிடிக்கப்படும்.
சந்தாவை பாதியில் நிறுத்தினாலும் சந்தா காலம் முடிகிற வரை அந்த அம்சங்கள் கிடைக்கும். சந்தா முறையாக புதுப்பிக்கப்படவில்லை என்றால் வாட்சாப் பிளஸ் சேவைகள் நின்றுவிடும்.
ஒருவேளை வாட்சாப் ப்ளஸ் சேவையை புதுப்பிக்க விருப்பமில்லை என்றால் கட்டணம் புதுப்பிக்கப்படும் தேதிக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக அதனை ரத்து செய்ய வேண்டும்.
கட்டண சேவையில் கிடைக்கும் அம்சங்கள் என்னென்ன?
- வாட்சாப் பிளஸ் ப்ரிமியம் சப்ஸ்க்ரிப்ஷன் உடன் கீழ்கண்ட அம்சங்கள் கிடைக்கும் என மெட்டா பட்டியலிட்டுள்ளது.
- சிறப்பு எஃபெக்ட்ஸ் உடன் பிரிமியம் ஸ்டிக்கர்கள் அனுப்பலாம்.
- பிரத்யேகமான ஆப் தீம் மற்றும் ஐகான்களுடன் வாட்சாப்பின் தோற்றத்தைப் பயனருக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும்.
- 20 சாட்கள் வரை மேலே பின் செய்து கொள்ளலாம் (தற்போது 3 சாட் வரை மட்டுமே பின் செய்து கொள்ள முடியும்)
- முக்கியமான தொடர்புகளுக்கு பிரத்யேகமான ரிங்டோன்கள் வைத்துக்கொள்ள முடியும் (தற்போது பொதுவான ரிங்டோன் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்)
- சாட் லிஸ்டுகளுக்கு தனி அலர்ட், ரிங்டோன் மற்றும் தீம் வைத்துக் கொள்ளலாம்.
புதிய அறிவிப்புகள் எவ்வாறு வேறுபடுகின்றன?
ஸ்டிக்கர்கள்: வாட்சாப்பில் ஏற்கெனவே ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. இந்த புதிய வசதி பிரத்யேகமான ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும். இவை வாட்சாப் ப்ளஸ் லேபில் உடன் வரும்.
சாட் பின்: முக்கியமான, அதிகம் உரையாடக்கூடிய தனிநபர் சாட் அல்லது க்ரூப் சாட்களை மேலே பின் செய்து கொள்ளும் வசதி தற்போதும் உள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த சாட்களைத் தேடி எடுப்பதைக் குறைக்கவே இந்த அம்சம் உள்ளது. தற்போது ஃப்ரி வெர்ஷனில் 3 சாட் வரை பின் செய்து கொள்ள முடியும். வாட்சாப் ப்ளஸ் சப்ஸ்க்ரைப் செய்த பிறகு 20 சாட் வரை பின் செய்துகொள்ள முடியும்.
ரிங்டோன்கள்: தற்போது மொபைல் அழைப்புகளுக்கு இருப்பதைப் போல வாட்சாப்பில் வரும் அழைப்புகளுக்கு தனி ரிங்டோன் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் அனைத்து தொடர்புகளுக்கும் (Contact) பொதுவாக ஒரு ரிங்டோன் மட்டுமே வைக்க முடியும். இந்த புதிய சேவையில் குறிப்பிட்ட சில தொடர்புகளுக்கு ப்ரிமியம் ரிங்டோன்கள் வைத்துக் கொள்ள முடியும்.
சாட் லிஸ்டுகளுக்கு பிரத்யேக அம்சங்கள்: தற்போது வாட்சாப்பின் மேல் பக்கத்தில் சாட் லிஸ்ட் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. அதாவது ஒரு தலைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்களை அதன் கீழ் வைத்துக் கொள்ள முடியும். அதே போல் வாட்சாப்பில் தனி தீம் வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. வாட்சாப் ப்ளஸ்ஸில் ஒவ்வொரு சாட் லிஸ்டுக்கும் தனித்தனி அலர்ட், தீம் மற்றும் ரிங்டோன் வைத்துக் கொள்ள முடியும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு