You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் மக்கள் தொகையை கணக்கிட அஞ்சல் தலை, அஞ்சல் அட்டை எவ்வாறு உதவின?
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்திய செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் அரசு செயலிகள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, உலகின் மிகப்பெரிய புள்ளிவிவரக் கணக்கெடுப்புகளில் ஒன்றான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் பங்கேற்பதை உறுதி செய்ய, இந்தியா தனது பரந்த அஞ்சல் வலையமைப்பைப் பயன்படுத்தியது.
தற்போது, 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு எட்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 16-ஆவது முறையாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில், அந்த மறந்துபோன வரலாற்றை புதிய கண்காட்சி ஒன்று அஞ்சல் தலைகள், தபால் முத்திரைகள் மற்றும் கடிதங்கள் வாயிலாக மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. அக்காலத்தில், குடிமக்களை இந்தத் தேசியக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்த இவை பயன்படுத்தப்பட்டன.
பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் விகாஸ் குமாரால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கண்காட்சி, சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில் இந்தியாவின் அஞ்சல் அமைப்பு எவ்வாறு தேசத்தைக் கட்டமைக்கும் ஒரு முக்கியக் கருவியாக மாறியது என்பதை ஆராய்கிறது.
சுதந்திர இந்தியாவுக்குத் தேர்தல்களை நடத்துவதற்கும் (அனைத்து வயது வந்தோருக்கும் வாக்குரிமை அடிப்படையில்), திட்டமிட்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நம்பகமான மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் அவசரமாகத் தேவைப்பட்டன.
புதிய குடியரசின் அரசியல் பொருளாதாரத்திற்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானது என்று கருதப்பட்டது. இதனால்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே, 1948-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தை (Census Act) இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை இயற்றியது.
இருப்பினும், அரசு இரண்டு உடனடி சவால்களை எதிர்கொண்டது: மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க மக்களை எவ்வாறு ஊக்குவிப்பது என்பது மற்றும் பரந்த, ஏழ்மையான, பெருமளவில் கிராமப்புறங்களைக் கொண்ட ஒரு நாட்டில், கணக்கெடுப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே எவ்வாறு தொடர்பைத் தொடர்வது என்பது.
நம்பகத்தன்மை என்பது ஒரு முக்கிய கவலையாக இருந்தது. 1931 மற்றும் 1941-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட காலனித்துவ கணக்கெடுப்புகள் இந்தியாவின் சில பகுதிகளில் புறக்கணிக்கப்பட்டன. அதே நேரத்தில், 1941-இல் பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் வகுப்புவாத அடிப்படையில் குளறுபடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் நம்பகத்தன்மைக்கு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியமானதாக மாறியது.
அங்குதான் தபால் துறை களத்தில் இறங்கியது. சில தசாப்தங்களுக்கு முன்பு வரை, இந்திய அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு வலைமைப்பாகத் தபால் துறை மட்டுமே இருந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு, வங்கி உள்ளிட்ட பிற பொதுத்துறை வலைப்பின்னல்களை விட தபால் துறை மிகவும் வேகமாக விரிவடைந்தது. 1968-ஆம் ஆண்டிற்குள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் மூலம் 3 லட்சம் கிராமங்களுக்கு தினசரி தபால்களும், மற்றுமொரு 3 லட்சம் கிராமங்களுக்கு வாராந்திர தபால்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்திய அரசு ஒரு காலத்தில் குடிமக்களுடன் எவ்வாறு வித்தியாசமாகத் தொடர்புகொண்டது என்பதை குமாரின் ஆய்வுகள் காட்டுகின்றன.
சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பான 1951-ஆம் ஆண்டு கணக்கெடுப்புக்கு முன்னதாக, நாடு முழுவதும் பயணித்த கடிதங்களில் இருமொழி முத்திரை பொறிக்கப்பட்ட தபால் குறியீடுகளை அரசு பயன்படுத்தியது.
அந்த தபால் முத்திரையில், மூன்று பேர் கொண்ட குடும்பத்தின் உருவத்தைச் சுற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு" (Census of India) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
குறைந்த கல்வியறிவு கொண்ட ஒரு நாட்டிற்காக, இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டது. கிராமப்புறங்களில் தபால்காரர்கள், கடிதங்களைப் படிப்பவராகவும், எழுதுபவராகவும், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான ஒரு பாலமாகவும் செயல்பட்டனர். இது, தபால் வலைப்பின்னலை பொதுமக்களுக்கான செய்திப் பரிமாற்றத்திற்கு ஏற்ற ஒரு கருவியாக மாற்றியது.
காலப்போக்கில், தேசத்தின் வளர்ச்சியுடன் இணைந்து இந்தச் செய்திப் பரிமாற்ற முறைகளும் பரிணாமம் அடைந்தன.
1961-ஆம் ஆண்டு, "உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளுங்கள்", "உங்கள் நண்பர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவியுங்கள்" என்று இந்தியர்களை வலியுறுத்தும் முத்திரைகள் அஞ்சல்களில் இடம்பெற்றன.
1971-ஆம் ஆண்டு வாக்கில், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது "உலகின் மிகப்பெரிய நிர்வாகச் செயல்பாடுகளில் ஒன்று" என்று நினைவுத் தபால் தலைகள் கொண்டாடின. மக்கள் தொகை தரவுகள் மின்னணு கணினிகள் மூலம் கையாளப்படுவதையும் அவை பெருமையுடன் குறிப்பிட்டன.
அக்காலத் தபால் ஆவணங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசாங்கங்கள் எவ்வாறு ஒரு பிம்பமாகப் பார்த்தன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
2000-ஆம் ஆண்டு வெளியான விளம்பரங்களில், இது "நாட்டின் கண்ணாடி" மற்றும் "நாட்டின் குழு புகைப்படம்" என்று வர்ணிக்கப்பட்டது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரு வெறும் அதிகாரத்துவச் செயல்பாடாக மட்டும் பார்க்காமல், தேசத்தின் கூட்டுச் சுய உருவப்படமாக (collective self-portrait) முன்னிறுத்தியது.
பிற்காலப் படங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மக்கள் தொகை கட்டுப்பாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டது. அந்தக் காலத்தின் அச்சத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 'இரு குழந்தைகள்' கொள்கை அதில் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.
குமாரைப் பொறுத்தவரை, இந்த நலிந்துபோன தபால் ஆவணங்கள் ஒரு அதிகாரத்துவ வரலாற்றை விட மேலானவை.
தினசரி தகவல் தொடர்பின் மூலம் இந்திய அரசு எவ்வாறு சட்டபூர்வத்தன்மையையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப முயன்றது என்பதையும், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வளர்ச்சி, பன்முகத்தன்மை மற்றும் தேசிய அடையாளத்தோடு எவ்வாறு பின்னிப்பிணைந்து கிடக்கிறது என்பதையும் இவை வெளிப்படுத்துகின்றன.
அந்த நம்பிக்கைக்குரிய கேள்வி இன்றும் பொருத்தமானதாகவே உள்ளது.
டிஜிட்டல் கருவிகள் தரவு சேகரிப்பை வேகப்படுத்தினாலும், தொழில்நுட்பம் மட்டுமே நம்பகமான தரவை உறுதி செய்ய முடியாது என்று குமார் வாதிடுகிறார். "மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு, நம்பிக்கையை வளர்ப்பதற்கு மிகவும் முக்கியமானது" என்று அவர் கூறுகிறார். தபால் முறையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அரசு புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
இருப்பினும், இன்று இந்தியா தயாராகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்த பழைய தபால் ஆவணங்களில் நினைவுகூரப்படும் கணக்கெடுப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், கொள்கை திட்டமிடல், நலத்திட்டங்கள் சென்றடைதல் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு புதிய கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானது என்று கருதப்படுகிறது.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, இம்முறை சாதி குறித்த தரவுகளும் முதல்முறையாக சேகரிக்கப்படவுள்ளன. இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை இன்றும் சாதி தீர்மானிக்கும் நிலையில், இது அரசியல் ரீதியாக உணர்ச்சிகரமான ஒரு செயலாக உள்ளது.
இதன் அளவு பிரமிக்க வைக்கிறது: 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 7,000-க்கும் மேற்பட்ட துணை மாவட்டங்கள், 9,700-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் சுமார் 6,40,000 கிராமங்கள் என இந்த கணக்கெடுப்பு விரிவடையும்.
ஆசிரியர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் லட்சக்கணக்கான குடும்பங்களைச் சந்தித்து கணக்கெடுப்பை மேற்கொள்வர்.
ஆனால், ஒரு விஷயம் அடிப்படை ரீதியாக மாறியுள்ளது. முதல்முறையாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி தரவுகளை உடனுக்குடன் சேகரித்து பதிவேற்றம் செய்வர்.
உறைகளில் முத்திரையிடப்பட்ட குடும்ப உருவ முத்திரைகளில் தொடங்கி, ஸ்மார்ட்போன்கள் மூலம் உடனுக்குடன் தரவுகளைப் பதிவேற்றும் முறை வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு நீண்ட தூரம் பயணித்துள்ளது.
இருப்பினும், இந்தக் கண்காட்சி சுட்டிக்காட்டுவது போல, அடிப்படை சவால் இன்றும் மாறாமல் உள்ளது: பில்லியன்கணக்கான மக்கள், தாங்களும் இந்த நாட்டின் ஒரு பகுதிதான் என்று நம்பி, தங்களை கணக்கெடுப்பில் இணைத்துக்கொள்ளும் அளவுக்கு அரசின் மீது நம்பிக்கை வைப்பதே அந்த சவால்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு