ஷியா முஸ்லிம்களை ஒடுக்க தாலிபன் முயற்சியா? ஆப்கானிஸ்தானில் புதிய குற்றச்சாட்டு

    • எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஆப்கானிஸ்தானில் ஷியா சமூகத்தின் மீதான தனது கட்டுப்பாடுகளை தாலிபன் அரசு படிப்படியாக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் காபூலில் உள்ள ஒரு மூத்த ஷியா அறிஞர், தற்காலிக திருமண (நிக்காஹ்-ஏ-முத்ஆ) ஒப்பந்தம் செய்ததற்காக தாலிபன் தங்களை அழைத்து விசாரித்ததாகவும், தங்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கம் ஷியா ஜாஃபரி ஃபிக்ஹ் (மதச் சட்ட பாரம்பரியம்)-இல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் சுன்னி ஹனஃபி ஃபிக்ஹ்-இல் (Sunni Hanafi Fiqh) இல்லை.

தாலிபனுக்கு முந்தைய ஆப்கான் அரசால் ஜாஃபரி ஃபிக்ஹ் (Shia Jafari Fiqh) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் தாலிபன் அரசு முந்தைய அரசின் சட்டம் ஒழுங்கு முறையை ரத்து செய்துவிட்டு, ஹனஃபி ஃபிக்ஹை மட்டுமே ஊக்குவித்தது.

'தற்காலிக திருமண ஒப்பந்தம் செய்ததற்காக சம்மன்'

காபூலில் உள்ள மூத்த ஷியா அறிஞர் ஆயத்துல்லா ஹுசைன்தாத் ஷெரீஃபி, தற்காலிக நிக்காஹ் ஒப்பந்தம் செய்ததற்காக தாலிபன் அதிகாரிகள் தங்களை அழைத்துக் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார், அதே சமயம் இது ஷியா ஜாஃபரி ஃபிக்ஹ்-இல் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாகும்.

மே 15 அன்று ஆற்றிய உரையில், தாலிபனின் நற்பண்புகளை ஊக்குவித்தல் மற்றும் தீமைகளைத் தடுத்தல் மற்றும் குறைதீர்க்கும் அமைச்சகத்தின் அதிகாரிகள் தங்களை விசாரணை செய்ததாகவும், தங்களை தாக்கியதாகவும் மற்றும் நாட்டின் ஷியா சமூகத்தின் மீது மேலும் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் ஷெரீஃபி கூறினார்.

தாலிபன் ஒரு தீவிர சுன்னி குழுவாகும். 2021-ஆம் ஆண்டு ஆப்கனில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தாலிபன்கள் ஹனஃபி ஃபிக்ஹை மட்டுமே முதன்மைப்படுத்தி உள்ளனர். சுன்னி ஃபிக்ஹ் தற்காலிக திருமணத்தை (நிக்காஹ்-ஏ-முத்ஆ) அங்கீகரிப்பதில்லை.

தற்காலிக நிக்காஹ் செய்ய மாட்டோம் என்று தம்மையும் பல ஷியா அறிஞர்களையும் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "அவர்கள் டஜன்கணக்கான அறிஞர்களை மதரஸாக்களுக்கு அழைத்துச் சென்று கையெழுத்து, புகைப்படங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ உறுதிமொழிகளைப் பெற்றுள்ளனர். இதனை மீண்டும் செய்தால் 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு என்ன பொருள்? கடவுளின் மீது ஆணையாக, இது நமக்கு அவமானம் இல்லையா? இது நம் மதப் பாரம்பரியத்தை இழிவுபடுத்துவது இல்லையா?" என்றார்.

தாலிபன் அதிகாரிகள் சாலைகளில் ஹசாரா ஷியா தம்பதியினரை நிறுத்தி, தற்காலிக நிக்காஹ் செய்ததாக சந்தேகித்து காவலில் எடுத்து வருவதாகவும் இந்த அறிஞர் கூறினார்.

தான் எந்த ஒரு அரசியல் ஆளுமையும் இல்லை என்றும், அரசியலில் ஒரு நாள் கூட செலவிடவில்லை என்றும் அவர் வலியுறுத்தி கூறினார். தாலிபனிடம், "குறைந்தது எங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலாவது தலையிடாதீர்கள்" என்று அவர் முறையிட்டார்.

வெளிநாட்டில் உள்ள ஆப்கன் தனியார் நிறுவனங்கள் - பிரிட்டனை தளமாகக் கொண்ட ஆப்கானிஸ்தான் இன்டர்நேஷனல், அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமோ டிவி மற்றும் இத்திலாஅத்-ஏ-ரோஸ் உள்ளிட்டவை - ஷெரீஃபியின் அறிக்கைகளை செய்தியாக வெளியிட்டுள்ளன.

சட்டம் என்ன சொல்கிறது?

ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் ஷியாக்கள் ஆவர். ஷியா குடிமக்களுக்கான சிவில் விவகாரங்களில் அதிகாரப்பூர்வமாக ஷியா ஃபிக்ஹை முந்தைய அரசு அங்கீகரித்திருந்தது.

ஷியா குடிமக்களின் பெரும்பான்மையான மக்கள் தொகை ஜாஃபரி ஃபிக்ஹைப் பின்பற்றுகிறது. 2009-இன் ஷியா தனிநபர் சட்டத்தின் கீழ் குடும்ப விவகாரங்கள் - அதாவது நிக்காஹ், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் இதர சிவில் விவகாரங்களில் முந்தைய அரசு இதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியிருந்தது.

ஆனால் ஆகஸ்ட் 2021-இல் ஆட்சிக்குத் திரும்பிய பிறகு, தாலிபன் ஆப்கானிஸ்தானின் அரசியலமைப்பு மற்றும் முந்தைய இஸ்லாமிய குடியரசின் கீழ் இயற்றப்பட்ட சட்டங்களை நிறுத்தி வைத்தது.

அதற்குப் பதிலாக தாலிபன் தொடர்ந்து சுன்னி ஹனஃபி ஃபிக்ஹுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்த அடிப்படையில் சுன்னி தாலிபன் அதிகாரிகள் தற்காலிக நிக்காஹ் நடைமுறையை அங்கீகரிப்பதில்லை, அதே சமயம் ஷியா ஜாஃபரி ஃபிக்ஹ் இதனை நியாயமானது எனக் கருதுகிறது.

தாலிபனின் 2024-இன் ஒழுக்கநெறிச் சட்டம், அவர்களின் அமைச்சகத்திற்கு "இஸ்லாமிய ஷரியத் மற்றும் ஹனஃபி ஃபிக்ஹ் நிபந்தனைகளின்படி நற்பண்புகளை ஏவவும், தீமைகளைத் தடுக்கவும்" அதிகாரம் அளித்தது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த அமைச்சகத்தின் அதிகாரிகள் மீதே ஷெரீஃபியை காவலில் எடுத்து தவறாக நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாலிபனின் 2026-இன் குற்றவியல் சட்டமும் மற்ற இஸ்லாமிய சித்தாந்தங்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருடன் ஒப்பிடுகையில் சுன்னி ஹனஃபி ஃபிக்ஹின் முதன்மையை மேலும் வலுப்படுத்தியது.

குறிப்பாக, ஒரு நபர் ஹனஃபி ஃபிக்ஹை கைவிடுவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுவாக நான்கு சுன்னி சட்டப்பிரிவுகளும் சம அந்தஸ்தைப் பெறுகின்றன.

இதேபோல், பிப்ரவரி 2026-இல், இஸ்லாமிய பிரசாரகர்களின் நடைமுறைகளைக் கட்டுப்படுத்த தாலிபன் ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி மதப் பிரசாரகர் ஹனஃபி ஃபிக்ஹுடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

ஷியாக்கள் மீது தாலிபன் என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கிறது?

ஆஷூராவின் பொது நிகழ்ச்சிகளை தாலிபன்கள் கட்டுப்படுத்துவதாக ஷியா ஆப்கானியர்களும் எதிர்ப்புக் குழுக்களும் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நாளில் ஷியா முஸ்லிம்கள் இஸ்லாமிய இறைத்தூதரின் பேரனான இமாம் ஹுசைனின் தியாகத்திற்காக துக்கம் அனுசரிக்கிறார்கள்.

ஆனால், தாலிபன் அதிகாரிகள் இந்தக் கட்டுப்பாடுகளை பொதுப் பாதுகாப்பிற்கான 'கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்' என்று கூறுகிறார்கள், ஏனெனில் இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் ஐஎஸ் (தாயேஷ்) தாக்குதல்களின் இலக்காக மாறியுள்ளன.

இஸ்லாமிய பண்டிகைகளைத் தீர்மானிப்பதில் சிறிய வேறுபாடுகள் ஏற்பட்டபோது, தாலிபன் ஷியா குடிமக்களைத் தங்களின் ஃபிக்ஹ் படி கட்டாயமாக ஈத்-உல்-பித்ர் மற்றும் ஈத்-உல்-அதா கொண்டாட நிர்பந்தித்தது.

சமீபத்தில் கஜினி மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில், தாலிபனின் ஒழுக்கநெறி அமைச்சகத்தின் அதிகாரிகள் ஷியா தொழுகையாளர்களை சுன்னி ஹனஃபி ஃபிக்ஹ் படி தொழுமாறு கூறியதாகவும் இல்லையெனில் அந்த மசூதிகள் மூடப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

கஜினி நகரத்திற்கு அருகிலுள்ள நவாபாத் பகுதியில், தாலிபன் அதிகாரிகள் உள்ளூர் ஷியா மக்களுக்கு மக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளைத் தனித்தனியாக தொழ வேண்டும் என்று எச்சரித்தனர், அதே சமயம் ஷியா ஜாஃபரி ஃபிக்ஹ் படி இந்த தொழுகைகளை ஒன்றாக செய்வது பொதுவானதாகும்.

வேறு எந்த மதக்குழுக்கள் குறி வைக்கப்படுகின்றன?

ஆட்சிக்கு மீண்டும் வந்த பிறகு, தாலிபன் அதிகாரிகள் தாங்கள் வழக்கத்திற்கு மாறானவை என்று கருதும் முஸ்லிம் குழுக்களையும் இலக்கு வைத்துள்ளனர். இதில் ஷியாக்கள், குறிப்பாக இஸ்மாயிலி ஷியாக்கள், சில சூஃபி குழுக்கள் மற்றும் சலஃபிகள் அடங்குவர்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தாலிபனின் ஒழுக்கநெறி அமைச்சகம் அல்லது அதன் உள்ளூர் கிளைகள் இந்தக் கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி உள்ளன.

ஷியா இஸ்லாமின் இஸ்மாயிலி பிரிவு தாலிபனின் தரப்பிலிருந்து குறிப்பாக இலக்கு வைக்கப்படுவது போல் தோன்றுகிறது.

டிசம்பர் 2025-இல், பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பான ரவாதாரி, ஆப்கானிஸ்தானின் இஸ்மாயிலி ஷியா சிறுபான்மையினர் வழிபாடு, மதச் சடங்குகள் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகள் உள்ளிட்ட பாகுபாடுகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்கின்றனர் என்று கூறியது.

ஜனவரி 2026-இல், வெளிநாட்டில் உள்ள ஆப்கன் ஊடகங்கள், வடகிழக்கு மாகாணமான பதக்ஷானில் தாலிபன் அதிகாரிகள் சுன்னி இஸ்லாத்தை ஏற்கும் இஸ்மாயிலி குடிமக்களுக்குச் சலுகைகளை வழங்க முன்வந்ததாக செய்தி வெளியிட்டன. இந்தச் சலுகைகளில் நிதி உதவி, பாதுகாப்பிற்கான உத்தரவாதம் மற்றும் அரசு வேலைகளுக்கான வாய்ப்புகள் ஆகியவை அடங்கும்.

செப்டம்பர் 2025-இல், தாலிபனின் ஒழுக்கநெறி அமைச்சகம் சுன்னி சூஃபி தலைவர் சையத் இப்ராஹிம் கிலானி மற்றும் அவரது பல ஆதரவாளர்களை 'சூஃபித்துவத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக' மற்றும் ஷரியத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி காவலில் எடுத்தது.

கிழக்கு மாகாணமான குனாரில் சுன்னி சலாஃபிகளின் மதரஸாக்களை மூடி தாலிபன் அவர்களையும் இலக்கு வைத்தது.

தாலிபன் நிலைப்பாடு என்ன?

ஷெரீஃபியைத் தவறாக நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் ஷியா நடைமுறைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து தாலிபன் பகிரங்கமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, இருப்பினும் ஷியா தலைவர்கள் இவ்விவகாரம் குறித்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மே 17 அன்று தாலிபனின் கீழ் உள்ள ஊரக மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம், அமைச்சர் முல்லா அப்துல் லத்தீப் மன்சூர் ஒரு செல்வாக்கு மிக்க ஷியா தலைவர் சையத் ஹசன் பாசில்சாதா மற்றும் இதர பிரதிநிதிகளைச் சந்தித்ததாகக் கூறியது.

இருப்பினும் அந்த அறிக்கையில் கூடுதல் விவரங்கள் வழங்கப்படவில்லை, ஆனால் ஆப்கானிஸ்தான் இன்டர்நேஷனல் டிவி, மன்சூர் அனைத்து ஃபிக்ஹ்களையும் மதிப்பதாகக் கூறியதாகக் குறிப்பிட்டது.

"ஷியா குடிமக்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பு மற்றும் ஷியா அறிஞர்கள் கைது மற்றும் வன்முறை நடத்தை பற்றிய செய்திகளுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது." என அந்த செய்தி தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானின் ஷியா அறிஞர்களின் உயர் ஆணையம் மே 13 அன்று, 'ஆயத்துல்லா ஷெரீஃபியை இழிவுபடுத்தும் விதமாக நடத்திய' விவகாரத்தைத் தாலிபனின் ஒழுக்கநெறி அமைச்சகத்தின் முன் கொண்டு சென்றதாகவும், இத்தகைய முறையற்ற அணுகுமுறையை நிறுத்தக் கோரியதாகவும் அறிவித்தது.

"ஆணையத்தின் அதிகாரிகளை வரவேற்ற போது, அமைச்சக அதிகாரிகள் ஒத்துழைப்பு மற்றும் இந்த விவகாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான உத்தரவாதத்தை அளித்தனர். அமைச்சகத்தின் முடிவுகள் ஆணையத்தின் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று முடிவு செய்யப்பட்டது," என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில், தாலிபனின் ஒழுக்கநெறி அமைச்சகம் இன்னும் மௌனம் காக்கிறது

கடந்த காலத்தில் தாலிபன் தலைவர்கள் பொதுவாக ஆப்கானிஸ்தானில் வாழும் அனைத்து தேசிய இனங்கள் மற்றும் மதக் குழுக்களுக்கு இடையே ஒற்றுமையை வலியுறுத்தி வந்துள்ளனர். இருப்பினும் சிலர் சுன்னி ஹனஃபி ஃபிக்ஹின் முதன்மையையும் வலியுறுத்தியுள்ளனர்.

விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஆப்கான் ஆய்வாளர்கள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஷியாக்கள் மற்றும் இதர மதக் குழுக்கள் மீதான தாலிபனின் கட்டுப்பாடுகளை விமர்சித்துள்ளனர்.

முன்னாள் எம்பி ஆரிஃப் ரஹ்மானி மே 17 அன்று ஆப்கானிஸ்தான் இன்டர்நேஷனலிடம் பேசுகையில், "ஷியா சமூகத்திற்கான அவமானம், இழிவு மற்றும் மத சுதந்திரங்களைப் பறிப்பது, குறிப்பாக அறிஞர்கள் மற்றும் ஷியா தலைவர்களை இழிவுபடுத்துவது என்பது அறிவீனம், ஒழுக்கக்கேடு மற்றும் அரசியல் தொலைநோக்குப் பார்வைக்கு எதிரானது." என்று கூறினார்.

இதே செய்தியில் ஒரு விமர்சகர், "தனது மக்களை ஆதரிக்காமல் அவர்கள் மீது அநீதி இழைக்கும் எந்தவொரு அரசும் விரைவில் அல்லது பின்னரோ அழிந்துவிடும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. தாலிபன் அரசும் இதற்கு விதிவிலக்கல்ல," எனக் கூறினார்.

முன்னாள் தகவல் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் அப்துல்பாரி ஜஹானி, தாலிபனுக்கு எழுதிய திறந்த கடிதத்தில் ஷியா சமூகத்தை நடத்தும் விதம் குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

அவர் ஆப்கானிஸ்தானின் தாலிபனுக்கு அரசியல் ரீதியான விலகல் குறித்து எச்சரித்து கூறுகையில்: "உங்களது ஷியா சகோதரர்களின் எதிர்ப்பு இப்போது வெறுப்பாக மாறியுள்ளது. இந்த வெறுப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது. நீங்கள் அல்லது இதைவிடப் பெரிய சக்திகள் கூட, ஆறு முதல் ஏழு மில்லியன் மக்களின் பகையை எதிர்கொள்ள முடியாது." என கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு