"மேலே ஏவுகணை, கீழே கண்ணி வெடி" - ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள 20,000 மாலுமிகள்

    • எழுதியவர், முகிமுல் ஹிமேல்
    • பதவி, பிபிசி நியூஸ் வங்க மொழி சேவை
    • எழுதியவர், முகமது ஜுபைர் கான்
    • பதவி, பிபிசி உலக சேவை
    • எழுதியவர், கிரேஸ் டிசோய்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடல் சில நேரங்களில் மிகவும் அமைதியாக இருப்பதால், கேப்டன் ஹசன் கான் தனது கப்பல் மூன்று மாதங்களாக ஒரு போர் மண்டலத்தின் நடுவில் சிக்கியிருப்பதை மறந்துவிடுகிறார்.

"வெளியே எல்லாம் சாதாரணமாகத் தெரிவதும், ஆனால் உள்ளே இருக்கும் மனிதர்கள் அமைதியின்றி இருப்பதும் விசித்திரமாக இருக்கிறது" என்கிறார் தனது உண்மையான பெயரைப் பயன்படுத்த விரும்பாத அந்தப் பாகிஸ்தானிய மாலுமி.

இந்தச் சூழல் சாதாரணமாகத் தோன்றலாம்.

ஆனால் நிச்சயமாக அவ்வாறு இல்லை.

பிப்ரவரி மாத இறுதியில் இருந்து இரானுடன் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் போரின் காரணமாக, கானும் மற்ற 20,000 மாலுமிகளும் ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது அதற்கு அருகிலோ தவித்து வருகின்றனர்.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட, ஒரு காலத்தில் உலகின் மிக பரபரப்பான நீர்வழிகளில் ஒன்றாக இருந்த ஹோர்முஸ் நீரிணை, கடலுக்கு மேல் ஏவுகணைகள் பறப்பதாலும், கடலுக்கு அடியில் கண்ணிவெடிகள் வைக்கப்படுவதாலும் இப்போது முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

ஆனால், கானின் கப்பலில் உள்ள பணியாளர்கள் தங்களது வழக்கமான பணியைத் தொடர முயன்று வருகின்றனர்.

இருப்பினும், அரிதாக கரைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் விடுப்புகளுக்காகக் கூட கப்பலை விட்டு வெளியேற யாரும் விரும்புவதில்லை.

அதே நேரத்தில், மகிழ்ச்சியான உரையாடல்களுக்குப் பதிலாக ஒரு பதற்றமான மௌனம் அங்கு நிலவுகிறது. அந்த மௌனம் தொலைபேசிகளின் அதிர்வு சத்தத்தால் மட்டுமே கலைக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் தூக்கத்தில் கூட மிகச் சிறிய சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு எழுகிறார்கள்.

"மன அழுத்தம் எப்போதும் எங்களிடம் இருந்து கொண்டே இருக்கிறது" என்று கூறும் கான், "ஒவ்வொருவரும் உடலளவிலும் மனதளவிலும் முற்றிலும் சோர்வடைந்துள்ளனர்"என்கிறார்.

போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம்

ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகளால் ஏற்படும் ஆபத்துகள் இல்லை என்றாலும் கூட, சர்வதேச கடல்சார் அமைப்பு மதிப்பிட்டுள்ளபடி, ஹோர்மூஸ் நீரிணையின் தவறான பக்கத்தில் சிக்கிக்கொண்டுள்ள 1,600 கப்பல்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை.

போர் தொடங்கிய சில நாட்களிலேயே, வளைகுடாவிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழியான இந்த குறுகிய நீர்வழியை இரான் மூடியதுடன், தனது வெளிப்படையான அனுமதி இல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டது.

"நாங்கள் ஒரு குளத்தில் சிக்கிக்கொண்டது போல் இருக்கிறது. வெளியேறுவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது, அது ஹோர்மூஸ்" என்று மற்றொரு மாலுமியான கேப்டன் ஷபிகுல் இஸ்லாம் கூறுகிறார்.

வங்கதேசத்துக்குச் சொந்தமான 'பங்களார் ஜோய்ஜத்ரா' என்ற தனது கப்பலில், தென்னாப்பிரிக்காவிற்கு கொண்டு செல்வதற்காக சுமார் 37,000 டன் உரங்களை ஏற்றிச் செல்லும் இஸ்லாம், அதற்குப் பிந்தைய மாதங்களில் அங்கிருந்து வெளியேற இரண்டு முறை முயன்றார்.

ஆனால் அந்த இரண்டு முயற்சிகளுமே தோல்வியில் முடிந்துள்ளன.

ஏப்ரல் 8 அன்று போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, மற்றொரு கப்பலுக்குக் கடந்து செல்ல இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அனுமதி அளித்துள்ளதாக இஸ்லாமிற்குத் தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து, அவர் தனது கப்பலை மேலும் நான்கு கப்பல்களுடன் இணைந்து அந்த முக்கியமான நீர்வழியை நோக்கிச் செலுத்தினார். ஆனால் சிறிது நேரத்திலேயே, அவர்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர்.

ஒன்பது நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் இந்த நீரிணை "முழுமையாகத் திறக்கப்படும்" என்று இரான் கூறியபோது, இஸ்லாம் மீண்டும் முயன்றார்.

ஆனால், அமெரிக்கா தனது துறைமுகங்களின் மீதான முற்றுகையைத் தொடர்ந்து நீட்டித்ததால், இரான் அந்த முடிவை விரைவாக மாற்றிக்கொண்டது.

அதற்குள், இஸ்லாமின் கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து 30 கடல் மைல் (55 கி.மீ.) தொலைவிற்குள் சென்றிருந்தது. ஆனால், வானொலியில் தாக்குதல் எச்சரிக்கைகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்ததால், கப்பலைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

பாதுகாப்பிற்காகக் கப்பல்கள் வளைகுடாவிற்குள் இருக்கும் வெவ்வேறு துறைமுகங்களுக்கு நகர்ந்துள்ளன அல்லது கடலோரப் பகுதிகளில் நங்கூரமிட்டுள்ளன. ஆனால், உணவு மற்றும் தண்ணீர் விநியோகம் இப்போது ஒரு முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில், குறிப்பாக துபை, அபுதாபி மற்றும் குவைத் ஆகிய இடங்களைச் சுற்றி நன்கு நிறுவப்பட்ட விநியோகச் சேவைகள் இருப்பதால், துறைமுகங்களுக்குள் நுழையாமலேயே தேவையான பொருட்களை மீண்டும் நிரப்புவது தற்போது சாத்தியமான நடவடிக்கையாகவே உள்ளது.

ஆனால், விநியோகங்கள் இப்போது கணிக்க முடியாததாக உள்ளன.

அனைத்து அத்தியாவசியப் பொருட்களிலும் தண்ணீரின் விலைதான் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாக 'பங்களார் ஜோய்ஜத்ரா' கப்பலின் தலைமைப் பொறியாளர் ரஷேதுல் ஹசன் கூறுகிறார்.

"இரண்டு நாட்களுக்கு முன்பு கப்பலுக்காக சுமார் 180 டன் தண்ணீரை வாங்கினோம். இதற்கு முன்பு, இதன் விலை 1,500 டாலர் முதல் 2,000 டாலர் வரை இருக்கும். இப்போது, இதற்கு எங்களுக்கு 11,000 டாலர் செலவாகியுள்ளது"என்றார் ரஷேதுல் ஹசன்.

"உணவு மற்றும் தண்ணீர் விநியோகஸ்தர்கள் சிலர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அதிகப்படியான லாபம் ஈட்ட முயல்வது போலவும் தோன்றுகிறது" என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு கொரிய மாலுமி கூறுகிறார். அவர் வேறொரு கப்பலில் இருக்கிறார்.

கோடை காலம் வரவிருப்பதால், தவித்து வரும் இந்தக் கப்பல்களுக்கு இன்னும் அதிகமான தண்ணீர் தேவைப்படும். மே மாதத்திலேயே காற்றின் வெப்பநிலை ஏற்கனவே 30 டிகிரி செல்சியஸைத் தாண்டிவிட்டது. இது 45 டிகிரி செல்சியஸ் வரை கூட உயரக்கூடும்.

கானின் கப்பலில், அவர்களுக்கு "இன்னும் உணவும் தண்ணீரும் உள்ளன, ஆனால் தற்போது வாழ்க்கை மிகவும் எளிமையான முறைக்குச் சுருங்கியுள்ளது". அவருக்கு இன்னும் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கிடைத்து வந்தாலும், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் கிடைப்பது கடினமாக உள்ளது.

ராஜ்ஜீய முயற்சிகளின் நிலை என்ன?

இருப்பினும், இஸ்லாம் இன்னும் தன்னை அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறார். மோதலின் இரண்டாவது நாளில், இரானிய தாக்குதலுக்கு உள்ளான துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் இருந்து அவரது கப்பல் வெறும் 200 மீட்டர் (656 அடி) தொலைவில், அதாவது ஒரு நடுத்தர அளவிலான எண்ணெய் கப்பலின் நீளத்தில் மட்டுமே இருந்தது.

அன்று முதல், இஸ்லாமும் அவரது 30 பணியாளர்களும் தாங்கள் நேரில் பார்த்த தாக்குதல்களின் எண்ணிக்கையை மறந்துவிட்டனர். "சில நேரங்களில் ஏவுகணைகள் ஒரு கப்பலுக்கு மேல் பறக்கின்றன, சில நேரங்களில் சிதைந்த பாகங்கள் அடுத்த கப்பலில் விழுகின்றன" என்று கேப்டன் கூறுகிறார்.

"இரவு முழுவதும் தாக்குதல்கள் தொடரும் போதெல்லாம், எங்களால் தூங்க முடியாது" என்று கூறும் பொறியாளர் ஹசன், "நாங்கள் பயத்தையும் பேரழிவையும் எங்கள் கண்களால் பார்த்திருக்கிறோம்"என்கிறார்.

அவர்கள் பயப்படுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது.

உறுதிசெய்யப்பட்ட 39 தாக்குதல் சம்பவங்களில், குறைந்தது 11 மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை என சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தெரிவிக்கிறது.

போர்நிறுத்தத்திற்குப் பிறகு பதற்றம் ஓரளவுக்குத் தணிந்தது, ஆனால் இந்த நீரிணையில் தொடர்ந்து நடந்து வரும் ராணுவ நடவடிக்கைகள் அதன் பலவீனமான நிலையை நினைவூட்டுகின்றன.

சில மாலுமிகள் தொடர்ந்து ட்ரோன்களையும் போர் விமானங்களையும் காண்கின்றனர். மற்றவர்கள் கடற்படைக் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் வழக்கமாகக் காண்கின்றனர்.

"இந்தக் கப்பல்கள் பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்துகின்றன. ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவிப்புகள் செய்யப்படுவதையும் நாங்கள் கேட்கிறோம். யாரும் கடந்து செல்வதைத் தடுப்பதற்காகவே இரானியர்கள் இதைச் செய்கிறார்கள் என கேப்டன் கூறுகிறார்" என்கிறார் ஓர் எண்ணெய் கப்பலில் சமையல்காரராகப் பணிபுரியும் பாகிஸ்தானியரான சாஜித் மசூத். இவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.

குடும்பத்தினருக்கு பதில் என்ன?

சிக்கிக்கொண்ட மாலுமிகளுக்கு வெளியேற ஏதேனும் வழி இருக்கிறதா?

கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கான செலவுகளைக் குறைக்க முடியும் என்று உறுதியாக நம்புகின்றன.

போர் தொடங்கிய போது, மாலுமிகள் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்காக, பல கப்பல் நிறுவனங்கள் அதிக ஊதியத்தையும் கூடுதல் சலுகைகளையும் வழங்கின என்று புனைப்பெயரில் பேசும் காமில் என்ற பாகிஸ்தானிய மாலுமி கூறுகிறார்.

தற்போது நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன. எனவே, வேலையை விட்டுச் செல்ல விரும்புபவர்கள் விலகலாம் என்று பணியாளர்களிடம் கூறுவதோடு, அவர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளையும் குறைத்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், அடுத்து என்ன நடக்கும், இறுதியில் அவர்களுக்குப் பதிலாக யார் வருவார்கள் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

பல மாலுமிகளின் ஒப்பந்தங்கள் முடிவடையும் நிலையில் உள்ளன, மேலும் பெரிய அளவிலான பணியாளர்கள் சுழற்சி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது.

ஆனால், இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், போர் முடிந்த பிறகும் கூட இந்தக் கப்பல்களை இயக்குவதற்குத் தேவையான ஆட்களைக் கண்டறிவது கடினமாக இருக்கக்கூடும்.

"இந்த நெருக்கடி, இந்த வேலை எவ்வளவு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது, பல மாலுமிகள் இந்தத் தொழில் குறித்து வித்தியாசமாகச் சிந்திக்கக்கூடும்" என்று காமில் கூறுகிறார்.

மேலும், எதிர்கால மோதல்களில் சர்வதேச நீர்வழிகளை அணுகுவதற்கான வாய்ப்பு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் என்று அவர் கவலைப்படுகிறார்.

சமையல்காரரான மசூதும் தனது கடல்சார் வாழ்க்கை குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறார். அவரது ஒப்பந்தத்தில் இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியுள்ளது.

ஆனால், இத்தகைய பெரிய முடிவை எடுப்பதற்கு முன்பாக, அவர் பாகிஸ்தானுக்குத் திரும்புவதையும், துபையில் இருந்து தனது குடும்பத்தினருக்காகப் பரிசுகளைக் கொண்டு செல்வதையும் மட்டுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது மகள்களுக்குப் பார்பி பொம்மைகளும், மகனுக்கு ஒரு பொம்மை விமானமும் கொண்டு செல்ல விரும்புகிறார் மசூத் .

"நான் விரைவில் வீட்டிற்குச் சென்றுவிடுவேன் என்று நினைத்தேன், ஆனால் இப்போது தெளிவான எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லாமல் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே நாங்கள் இன்னும் சிக்கித் தவிக்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.

"நான் எப்போது திரும்பி வருவேன் என்று ஒவ்வொரு நாளும் எனது குடும்பத்தினர் கேட்கிறார்கள், ஆனால் அவர்களிடம் சொல்வதற்கு என்னிடம் பதில்கள் இல்லை"என்று மசூத் பகிர்ந்து கொண்டார்.

"இரட்டை நெருக்கடி"

கடல்சார் தரவு நிறுவனமான 'கெப்லர்' கூற்றுப்படி, பிப்ரவரி 28 முதல் சுமார் 750 கப்பல்கள் இங்கிருந்து எப்படியோ கடந்து செல்ல முடிந்துள்ளது.

அவற்றின் உரிமையாளர்கள் இரானுடனான சர்வதேச நேரடி ராஜ்ஜீயத்தைச் சார்ந்திருந்ததாகத் தெரிகிறது, மேலும் இதில் பெரும்பாலானவை சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட 'சிஎன்ஏ' என்ற லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் ஜொனாதன் ஷ்ரோடன் கூறுகிறார்.

அவர்கள் "ஒரு கப்பலுக்குச் சில மில்லியன் டாலர்கள் என்ற அளவில் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும்" தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது ராஜ்ஜீயப் பேச்சுவார்த்தை தான் 'பங்களார் ஜோய்ஜத்ரா' கப்பலின் சிறந்த நம்பிக்கையாக உள்ளது.

மேலும் அது வெளியேறுவதை உறுதி செய்வதற்காக வங்கதேச அரசாங்கம் அதன் உரிமையாளரான வங்கதேச கப்பல் கழகத்துடன் (BSC) இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஆனால், அதுவும் கடினம் என்பது நிரூபணமாகியுள்ளது.

இரான் கோரிய சுங்கக் கட்டணத்தைச் செலுத்த வங்கதேசம் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டதாக பிஎஸ்சி நிர்வாக இயக்குநர் கம்மடோர் மஹ்முதுல் மாலெக் தெரிவித்தார்.

ஆனால், அப்படிச் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராக அமெரிக்கா தடைகளை விதிப்பதாக அச்சுறுத்தியதை அடுத்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

"நாங்கள் இப்போது இரட்டை நெருக்கடியில் இருக்கிறோம்" என்று கூறுகிறார் மஹ்முதுல் மாலெக்.

கூடுதல் அறிக்கை : பிபிசி நியூஸ் கொரியாவைச் சேர்ந்த ஹியோஜங் கிம்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு