'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி விவகாரத்தை மிகவும் உணர்வுபூர்வமாக அணுக வேண்டாம் என்று மனுதாரர் ஒருவரிடம் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் திங்களன்று கூறினார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

லைவ் லா இணையதளத்தின் தகவலின்படி, கரப்பான் பூச்சி குறித்த தனது கருத்துக்களுக்கு தலைமை நீதிபதி விளக்கம் அளித்த போதிலும், 'ஒரு தவறான மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரம்' தொடர்ந்து நீடித்து வருவதாக வழக்கறிஞர் என்.கே. கோஸ்வாமி வாதிட்டார்.

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் "இதை இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று வழக்கறிஞரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை தற்போது உடனடியாக விசாரிப்பதற்கான தேவை ஏதுமில்லை என்றும், உரிய நேரத்தில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த ஒரு கருத்தைத் தொடர்ந்து உருவான, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கம், சமூக ஊடகங்களில் நையாண்டி இயக்கமாக இயங்கிவருகிறது.

ஒரு விசாரணையின் போது, வேலை இல்லாத இளைஞர்கள் பத்திரிகை மற்றும் சமூகச் செயல்பாடுகளை நோக்கி நகர்வதை, அவர் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர், தாம் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் இளைஞர்களைக் குறிப்பிடவில்லை என்றும், குறிப்பாக "போலியான மற்றும் தகுதியற்ற பட்டங்களை" கொண்டவர்களை மட்டுமே குறிப்பிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

நீதிபதி சூர்யகாந்தின் இந்த கருத்தை தொடர்ந்து, அபிஜீத் திப்கே என்ற நபர் சமூக ஊடகங்களில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தொடங்கப்படுவதாக அறிவித்தார்.

ஒரே இரவில், அதன் சமூக ஊடகக் கணக்குகளில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் பெருகியது.

2 லட்சத்திற்கும் அதிகமானோர் அதன் எக்ஸ் பக்கத்தை பின்தொடர்கிறார்கள். அப்பக்கம் தற்போது இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

பிறகு புதிய கணக்குடன் அபிஜீத் திப்கே மீண்டும் களமிறங்கினார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எப்படி உருவானது?

நீதிபதி சூர்யகாந்த்தின் கருத்துக்குப் பிறகு 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த பெயரில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இன்ஸ்டாகிராமில் இதற்கு 2 கோடியே 30 லட்சம் பின்தொடர்பவர்கள் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இணையதளத்தில் உறுப்பினராவதற்குக் தங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணையதளத்தில் அதன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பற்றிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. அவரது பெயர் அபிஜீத் திப்கே.

அபிஜீத் திப்கே உடன் பிபிசி விரிவாக உரையாடியது.

இந்த சமூக ஊடகப் பிரசாரத்திற்கான யோசனை எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு பதிலளித்த அபிஜீத் திப்கே, "நான் எக்ஸ் வலைதளத்தில் இந்தியத் தலைமை நீதிபதியின் கருத்தை பார்த்தேன். அதில் அவர், நாட்டின் அமைப்பை விமர்சிக்கும், தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் நாட்டின் இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டுக் பேசிக் கொண்டிருந்தார்.

இது எனக்கு வேடிக்கையானதாகத் தோன்றியது. நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பவர் என தலைமை நீதிபதி கருதப்படுகிறார். அந்த அரசியலமைப்புதான் ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை வழங்குகிறது. அப்படியிருக்க, கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டிய ஒரு நபர், எப்படி இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட முடியும்?" என்றார்

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) உருவாக்கம் மற்றும் அதன் பிரபலம் குறித்து சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி சசி தரூர், "கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அதிவேக வளர்ச்சியை நான் மிகவும் ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன். இது வெறும் ஐந்தே நாட்களில் இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளது. இளைஞர்களின் ஏமாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, அவர்கள் ஏன் இதனுடன் தங்களை இவ்வளவு நெருக்கமாக உணர்கிறார்கள் என்பதையும் என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. எக்ஸ் தளத்தில் இந்த கணக்கு முடக்கப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது'' என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

"இளைஞர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு தளம் இருக்க வேண்டும், எனவே சிஜேபியின் கணக்கை முடக்குவதற்குப் பதிலாக அதைத் தொடர அனுமதிக்க வேண்டும். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு, நகைச்சுவை, நையாண்டி மற்றும் கோபத்தைக்கூட வெளிப்படுத்துவதற்கும் இடம் இருக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் கடந்த வாரம் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "சமூக ஊடகங்களில் ஒரு 'மீம்' போல தொடங்கிய இந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்பது நகைச்சுவை அல்லது கோபத்தை மட்டுமல்ல அதைவிட ஆழமான ஒன்றை பிரதிபலிக்கிறது. அமைப்பால் உருவாக்கப்பட்ட வழிகளும் பாதைகளும் மூடப்பட்டுவிட்டதால், நாட்டிற்குள் அடித்தட்டு மக்களிடையே ஒருவித குமுறலும் தவிப்பும் ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை அல்லது நையாண்டி என்பது எப்போதும் ஏதோ ஒரு ஆழமான வலியோடு தொடர்புடையதாகவே இருக்கும். எனவே இதை நாம் வெறும் சிரிப்புக்குரிய விஷயமாகக் கடந்துவிட முடியாது. இதைத் தடை செய்யும் நோக்கில் அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும், ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் தொடக்கமாக அமையக்கூடும்."என கூறினார்

சிபிஐ(எம்-எல்) லிபரேஷன் கட்சி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எக்ஸ் தளத்தில் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

அக்கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், "கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்குவதன் மூலம் 'ஜென்-சி இளைஞர்களின் குரலை தடுத்து நிறுத்திவிடலாம் என்று மோதி அரசு நினைக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், "ஒருவேளை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, பாஜக மற்றும் நமோ கணக்குகளுக்கு எதிராக 'அன்ஃபாலோ பிரசாரத்தை' தொடங்கினால் என்னவாகும்? எக்ஸ் தளம் இணைய சுதந்திரத்தை மதிக்க வேண்டும் மற்றும் எந்தவொரு தாமதமும் இன்றி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கணக்கை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ராவும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்:

"இது ஜனநாயகம் அல்ல, சர்வாதிகாரம். இந்த நாட்டின் இளைஞர்களைக் கண்டு நமது அரசாங்கம் எவ்வளவு பயந்திருக்கிறது என்றால், அவர்களால் ஒரு கற்பனையான ஆன்லைன் இயக்கத்தைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சியான நாங்கள் ஒவ்வொரு நாளும் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் அழுத்தங்களையும் எதிர்கொள்கிறோம் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் எம். நாகேஸ்வர ராவ் என்ற சமூக ஊடக பயனர், "தேசவிரோத சக்திகள்தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு மறைமுகமாக ஆதரவளித்து தூண்டிவிடுகின்றன" என்று எழுதியுள்ளார்.

நேஹா சிங் என்ற மற்றொரு பயனர், "கரப்பான்பூச்சி ஜனதா கட்சியால் உண்மையில் பாஜகவுக்குத்தான் லாபம் ஏற்படும். ஏனெனில் இதில் இணைபவர்களில் பெரும்பாலானோர் பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளை ஆதரித்து வந்தவர்கள் ஆவர். ஆனால் இப்போது அவர்கள் இந்த எதிர்க்கட்சிகள் மீது ஏமாற்றமடைந்து சிஜேபியை ஆதரிக்கிறார்கள். இந்த கட்சி தேர்தலில் போட்டியிட்டால், பாஜக எதிர்ப்பு வாக்குகள் இதற்குக் கிடைக்கும். ஆனால் பாஜகவின் முக்கிய வாக்காளர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறி, அதன் லாபம் பாஜகவிற்கே கிடைக்கும்." என குறிப்பிட்டுள்ளார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு