கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் - மாநிலத்தில் தனித்து விடப்படுகிறதா திமுக?

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழகத்தில் திமுக கூட்டணியிலிருந்து முக்கிய கட்சிகள் அனைத்தும் வெளியேறிவரும் நிலையில், திமுக தனித்துவிடப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியைப் பலப்படுத்தினால் யாரும் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியுமென்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கூறியுள்ளார்.

திமுகவுக்கு இத்தகைய சூழல் ஒன்றும் புதிதல்ல என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ஆனால் திமுகவின் அடிமட்டத் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்ய வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உள்ளது என்கிறார்.

திமுக தலைமையில் இப்போதும் மதச்சார்பற்ற கூட்டணி செயல்படுகிறது என்று கூறிய நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேசியக் கட்சி கூட்டணி இல்லாமலே நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவால் வெல்ல முடியும் என்கிறார்.

தமிழக மக்கள் அரசியலைப் பார்க்கும் பார்வையும் அணுகுமுறையும் மாறியிருப்பதாகக் கூறும் தேர்தல் வியூக வகுப்பாளர் லியோ ரீகன், திமுக சில விஷயங்களை சரிசெய்யாவிட்டால் எதிர்காலம் மிகக்கடினமாக இருக்கும் என்கிறார். வரும் நாட்களில் திமுகவின் செயல்பாடு மட்டுமின்றி, தவெக கட்சி மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளும் சேர்ந்தே, திமுகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்கிறார் அவர்.

தவெகவுடன் இணைந்த திமுக கூட்டணிக் கட்சிகள்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தோல்வியடைந்து தவெக அதிக இடங்களில் வென்றது. திமுக கூட்டணியில் சொந்த சின்னங்களில் போட்டியிட்டு வென்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின், காங்கிரஸ் தாமாக முதல் கட்சியாக தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்தது. மற்ற கட்சிகள், தவெக வேண்டுகோளை ஏற்று ஆதரவு தெரிவித்தன.

தமிழகத்தில் தற்போது "திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே இல்லை" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் தொடர வாய்ப்பில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார். தவெக அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை இடம்பெற்றுள்ள நிலையில், அவையும் திமுக கூட்டணியில் தொடரவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

இவற்றைத் தவிர்த்து, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகளில் கொமதேக, மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவை திமுக கூட்டணியில் தொடர்வதை உறுதி செய்திருக்கின்றன. வரும் ஜூன் 27 ஆம் தேதியன்று மதிமுக பொதுக்குழுவில் "திமுக கூட்டணியில் தொடர்வதா, விலகுவதா" என்பதை முடிவு செய்யப் போவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில், முக்கியக் கட்சிகள் அனைத்தும் வெளியேறிவிட்ட நிலையில், திமுக தனித்துவிடப்பட்டதா, அதன் தலைமையிலான கூட்டணி என்னவாகும், திமுகவின் அடுத்தகட்ட நகர்வு எப்படியிருக்கும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஊடகங்களிலும் விவாதங்கள் வலுத்து வரும் நிலையில், சமூக ஊடகங்களிலும் திமுக எதிர்காலம் குறித்த பதிவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், கடந்த மே 14 ஆம் தேதியன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போது, தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய தலைமைக்கழகம் சார்பில் விரிவான களஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், அதற்காக சிறப்புக் குழு அமைக்கப்படுமென்றும் அறிவித்தார்.

அதன்படி, தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக மொத்தம் 36 பேர் கொண்ட 19 குழுக்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கள ஆய்வு செய்த இந்த குழுக்களின் அறிக்கை, கடந்த ஜூன் 10 அன்று மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து திமுக தரப்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. ஆனால், கள ஆய்வில் பல்வேறு புகார்களையும் அடுக்கியுள்ள திமுக நிர்வாகிகள், திமுக தனித்துப் போட்டியிட வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் உறுதி செய்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின், தூத்துக்குடியில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, ''கூட்டணி பற்றி சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நம்மை நாமே பலப்படுத்திக்கொள்ளும்பட்சத்தில், யாருமே இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியும்.'' என்று பேசியிருந்ததும் ஊடகங்களில் பேசுபொருளாயிருந்தது.

ஆனால், திமுக கூட்டணியிலிருந்து முக்கிய கட்சிகள் அனைத்தும் வெளியேறியுள்ள நிலையில், திமுக தனித்துவிடப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''1991 தேர்தலில் ஒரே ஓரிடத்தில் திமுக வென்றபோது, கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி கட்சிக்குள் இருந்த பல தலைவர்களே போய்விட்டனர். திமுகவுடன் பல கட்டங்களில் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. முறித்தும் சென்றுள்ளன. திமுகவைப் பொருத்தவரை வந்தால் அவர்களுடன், வராவிட்டால் அவர்கள் இல்லாமல், எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து அரசியல் செய்வோம் என்பதே என்றைக்குமான நிலைப்பாடு.'' என்றார்.

மாநிலங்களவை திமுக உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
படக்குறிப்பு, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இதற்கு மாறாக தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி இப்போதும் தொடர்கிறது என்கிறார், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். திமுக தனித்துவிடப்படவில்லை என்று கூறும் அவர், ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி, கருணாஸ் போன்றவர்கள், திமுக கூட்டணியில் இருப்பதாக தெளிவாக விளக்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ''தேர்தலின்போது திமுக கூட்டணியில் 23 கட்சிகள் இருந்தன. இப்போது காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட 4 கட்சிகள்தான் வெளியே சென்றிருக்கின்றன. மதிமுகவும் வெளியேறலாம். திமுகவுக்கு துரோகம் செய்துவிட்டுச் சென்றவர்கள், நட்புறவுடன் வெளியேறியவர்களைத் தவிர்த்து திமுகவின் மீதான நம்பிக்கையில் இன்னும் பல கட்சிகள் இருக்கின்றன.'' என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ''இவற்றில் காங்கிரஸ் மட்டுமே மீண்டும் நம்மோடு ஒட்ட முடியாது என்கிற அளவுக்குக் காயப்படுத்தி விட்டு வெளியே சென்றுள்ளது. மற்ற கட்சிகள் எதற்கும் நம்முடன் பெரிதாக கருத்து முரண் இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் தொடர இயலாது என்றுதான் வீரபாண்டியன் கூறியுள்ளார். பிரச்னைகளின் அடிப்படையில் திமுகவுடன் கூட இருப்போம் என்று அவர் கூறியிருப்பதால் எதிர்காலத்தில் எப்படியும் சூழ்நிலை மாறலாம்.'' என்றார்.

அதேநேரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தமிழகத்தில் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியது பற்றி அவர் கூறுகையில், ''தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கவில்லை. திமுகதான் உருவாக்கியது.

நாங்கள் ஒரு வீடு கட்டியிருக்கிறோம். அதில் ஓர் அறையில் வாடகைக்கு இருந்த ஒருவர், வெளியே செல்கிறேன் என்பதற்காக வீட்டையே இடித்துவிடுவேன் என்பது போல் அவருடைய கருத்து இருக்கிறது.'' என்றார்.

திமுக தோல்விக்கு காரணங்களென்ன?

இதற்கு மாறான கருத்தை முன் வைக்கும் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட சோர்வை விட, தேர்தல் முடிவுகளுக்குப் பின் கூட்டணிக் கட்சிகள் நடந்து கொண்ட விதம் திமுகவை பெரிதும் சோர்வடைய வைத்திருக்கிறது என்கிறார்.

''முந்தைய தோல்விகளின்போது கருணாநிதி இருந்தது திமுகவுக்கு பெரும் பலம். ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, 3 தேர்தல்களில் தொடர் வெற்றி கண்ட பின், இப்போது ஏற்பட்டுள்ள தோல்வி அவர்கள் எதிர்பாராதது. அதனால் கட்சிக்குள் பெரும் சோர்வும் தளர்வும் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள கட்சிகள் அனைத்துக்குமே, திமுக மீது ஒரு கோபம் இருந்தது இப்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதே கசப்பு தொடருமென்று நினைத்தே தவெகவுடன் கூட்டணியைத் தொடர்வதற்கு அக்கட்சிகள் நினைப்பதாகத் தெரிகிறது.'' என்றார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

தேர்தல் தோல்விக்குப் பின் திமுக பல விஷயங்களைச் சரி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்கிறார், தேர்தல் வியூக வகுப்பாளரான லியோ ரீகன். தேர்தலுக்குப் பின்பு நடந்த திமுக தரப்பில் நடந்துள்ள ஆலோசனையில், கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை மொத்தமாக மாற்ற வேண்டும், தனித்துப் போட்டியிட வேண்டுமென்ற இரு முக்கிய முடிவுகள் பரிசீலிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், ''கூட்டணிக் கட்சிகளை ஸ்டாலினின் கவனத்தில் இல்லாமல் கையாண்ட விதமும் தவறாக இருந்ததும் தோல்விக்குக் காரணம்" என்றார்.

திமுகவின் அடுத்தகட்ட நகர்வு பற்றிக் கூறும் லியோ ரீகன், "கட்சியில் கனிமொழியிடம் சில முக்கியப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம், திமுக ஐடி விங் மீண்டும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்படவும் வாய்ப்புள்ளது" என்றார்.

"சில காரணங்களுக்காக பாஜகவுக்கு எதிராக வீரியமாகப் போராடுவதை திமுக நிறுத்திக்கொள்ளவும்" வாய்ப்புள்ளதாக லியோ ரீகன் கருத்துத் தெரிவித்தார்.

''கட்சி கட்டமைப்பை சீரமைத்து, தனித்து நின்று கட்சியின் பாரம்பரியத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது திமுகவினரின் எதிர்பார்ப்பாகவுள்ளது. அரசியல் எப்போதுமே சோதனைக்களம் என்பதால் அது சாத்தியமில்லை என்று கூறமுடியாது. விஜய் போன்ற ஒரு செல்வாக்குள்ள தலைமையும் வேண்டும், நிர்வாகம் அறிந்த அதிகாரிகளும் வேண்டுமென்று இன்றைய இளைய தலைமுறை நினைக்கிறது. அதைப்புரிந்து கொண்டே அண்ணாமலை களம் இறங்கியிருக்கிறார். திமுக இதையெல்லாம் கவனிக்க வேண்டும்.'' என்றார் லியோ ரீகன்.

திமுக தனித்துப் போட்டியிட வேண்டுமென்பது கட்சிக்காரர்களின் விருப்பமாகவுள்ளது என்ற கருத்தை தெரிவித்திருந்த ஆர்.எஸ்.பாரதி, ''150 இடங்களில் நின்று நுாறில் ஜெயிப்பதை விட 234 தொகுதிகளில் நின்று 140 தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கலாம். காங்கிரஸ் நின்ற 28 தொகுதிகளில் திமுக நின்றிருந்தால் 15 தொகுதிகளில் வென்றிருப்போம்.'' என்றும் கூறியிருந்தார்.

தேர்தல் வியூக வகுப்பாளர் லியோ ரீகன்
படக்குறிப்பு, தேர்தல் வியூக வகுப்பாளர் லியோ ரீகன்

இதுபற்றி பேசிய பத்திரிகையாளர் ப்ரியன், ''2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதா எடுத்த முடிவை வைத்து தனித்துப் போட்டி என்ற முடிவை எடுக்கலாம் என்கிறார் கனிமொழி. ஆனால் ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கும், கட்சியில் அவர் வைத்திருந்த கட்டுப்பாடும் வேறு. ஸ்டாலினுக்கும் செல்வாக்கு இருந்தாலும் திமுகவுக்கு கட்டமைப்பு இருந்தாலும் தனித்து நின்று பெரும் வெற்றி பெறுமளவுக்கு கட்சி பலமாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் கூட்டணிக்கான சூழல் எதிர்காலத்தில் எப்படியும் மாறலாம்.'' என்றார்.

பாஜக எதிர்ப்பு என்ற ஒரே புள்ளியில் திமுக கூட்டணியில் இணைந்திருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் வெளியேறிவிட்ட நிலையில், எதிர்காலத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் பகிரங்கமாக அப்படி நடக்க வாய்ப்பில்லை, மறைமுகமாக நகர நிறைய வாய்ப்புள்ளது என்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன்.

அதுபற்றி விளக்கிய அவர், ''உதாரணமாக நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரத்தில் பழைய நிலையையே தொடர்வோம் என்று ஆ.ராசா கூறியுள்ளார். ஆனால் சில திருத்தங்களைச் செய்யக்கோரிவிட்டு, அதைச் செய்ய வைத்து, அதன் அடிப்படையில் ஆதரித்ததாக ஒரு காரணம் கற்பிக்கலாம். திமுகவுக்கு தற்போதுள்ள பலம், அவர்களின் எம்பிக்கள். அதை வைத்தே மத்திய, மாநில ஆளும்கட்சிகளைச் சமாளிக்க நினைப்பார்கள். கூட்டணிக் கட்சிகளும் பலமாக இல்லையெனும்போது, அடுத்த 3 ஆண்டுகளுக்கு கட்சியை நடத்துவதற்கு சில பல விஷயங்களில் திமுக கவனமாக நடக்க வேண்டியிருக்கும். அதனால் பாஜகவை நேரடியாக ஆதரிக்காமலும் அதே நேரத்தில் எதிர்க்காமலும் நடுநிலை வகிக்க வாய்ப்புள்ளது.'' என்றார்.

''தவெகவின் செயல்பாடும் திமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்''

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களைத் தவிர, 2029 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்தான் முக்கியத் தேர்தலாக உள்ளது. கடந்த 5 நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரே ஒரு தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்கள் அனைத்திலும் திமுக–காங்கிரஸ் கூட்டணி இருந்தது. ஆளும்கட்சியாகவும் இல்லாமல், தேசியக்கட்சி கூட்டணியும் இல்லாமல் அந்தத் தேர்தலை திமுக சந்திப்பதால் எந்தளவுக்கு அதற்கான வெற்றி வாய்ப்பு இருக்குமென்பது பற்றியும் இப்போதே கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இதுபற்றிப் பேசிய ரவீந்திரன் கான்ஸ்டன்டைன், ''நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று நினைப்பது தவறு. இதற்கு முன் தேசிய கட்சி எதனுடன் கூட்டணி வைக்காமல் ஜெயலலிதா வெற்றியை ஈட்டினார். திமுகவும் அதேபோன்று வெற்றி பெற்றுள்ளது.'' என்றார்.

ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், தேசிய கட்சியுடன் கூட்டணியின்றி நாடாளுமன்றத் தேர்தலை ஒரு மாநில கட்சி சந்திப்பது சற்று சிரமம்தான் என்கிறார் பத்திரிக்கையாளர் ப்ரியன். ஆனால், தவெக ஒருவேளை பாஜகவுடன் மிகவும் இணக்கமாகப் போவதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் நினைத்தால் வெளியேறலாம் என்பதால், 2029 தேர்தல் நெருங்கும் சூழலில்தான் இதை கணிக்க முடியுமென்கிறார்.

''தவெக அரசின் செயல்பாடு, கட்சியின் நிலைப்பாடு காரணமாக காங்கிரஸ் வெளியேறினால் இதே திமுக, மீண்டும் ராகுலை பிரதமராக முன்னிறுத்தும் சூழல் கூட ஏற்படலாம். அரசியலில் இதுதான் நடக்கும் இப்படி நடக்காது என்று எதையும் திட்டவட்டமாகக் கணிக்க முடியாது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு திமுக, இரு தேசிய கட்சிகளுக்கும் இடையில் ஒரு நடுநிலைத்தன்மையில்தான் இருக்கும்.'' என்றார் ப்ரியன்.

மாநில சுயாட்சி என்ற கொள்கையில் திமுக காட்டும் தீவிரமே அதற்குரிய தனித்தன்மை என்று கூறும் தேர்தல் வியூக வகுப்பாளர் லியோ ரீகன், தவெகவைப் பொருத்தவரை, தமிழக நலன் சார்ந்து மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே அதை எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்கிறார். இதை தேசிய அளவிலான இடதுசாரி இயக்கங்கள் எப்படிப் பார்க்கும், அவை தவெகவை எந்தளவுக்கு ஆதரிக்கும் என்பதெல்லாம் திமுகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்கிறார் அவர்.

''தவெகவின் அரசியல், ஆட்சி நிர்வாகம் இரண்டும் கூட திமுகவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஒருவேளை திமுக, அதிமுக ஆட்சிகளை விட தவெக ஆட்சி சிறப்பான ஆட்சி என கருதப்பட்டால், திமுகவின் நிலை மிகவும் கடினமாகிவிடும்.'' என்றார் லியோ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு