'ராதிகா முதல் பிரியாமணி வரை' - பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடைந்த நாயகிகள்

இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது 84வது வயதில் காலமானார்.

பட மூலாதாரம், Bharathiraja

படக்குறிப்பு, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா தனது 84வது வயதில் காலமானார்.
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பாரதிராஜாவால் தமிழ்த்திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட நாயகிகள் பலரும், தமிழச்சினிமாவைத் தாண்டி அகில இந்திய அளவில் பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் பிரபலமான நட்சத்திரங்களாக ஜொலித்துள்ளனர். தன்னுடைய திரைப்படங்களில் பாரதிராஜா அறிமுகம் செய்த 'ர' வரிசை நாயகிகள் உள்ளிட்ட நடிகைகள் பலரும் தேசியவிருது போன்ற அங்கீகாரங்களைப் பெற்று, இப்போது வரையிலும் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் நடிகைகளாக வலம் வருகின்றனர்.

இவர்களில் சிலர் படங்கள் மற்றும் சீரியல்களை இயக்கியுள்ளனர்; தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளனர். கடந்த 1978 ஆம் ஆண்டில் தான் அறிமுகம் செய்த ராதிகா சமீபத்தில் நடித்த ''தாய்க்கிழவி'' படம் வரையிலும் பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பாரதிராஜா வாழ்த்தியுள்ளார். பாரதிராஜாவால்தான் தாங்கள் அடையாளம் பெற்றதாக இவர்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

பாரதிராஜாவிடம் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் பலரும், தமிழ்த்திரையுலகில் வெற்றிகரமான இயக்குநர்களாக வலம் வந்துள்ளனர். நடிகர்கள் கார்த்திக், நெப்போலியன், பாண்டியன், தியாகராஜன், ராஜா, நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர், ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்தான்.

இவர்களில் நடிகர் முத்துராமனின் மகனும், இன்றைய தலைமுறை நடிகர் கெளதம் கார்த்திக்கின் தந்தையுமான கார்த்திக் , 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி, பல ஆண்டுகள் தமிழ்த்திரையுலகில் வெற்றிகரமான நாயகனாக வலம் வந்தார். அவர் நடித்த பல படங்கள் பெரும் வெற்றி கண்ட படங்களாகும்.

அதேநேரத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச்சினிமாவில் மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாக்களிலும், அகில இந்திய அளவிலும் வெற்றிகரமான நாயகிகளாக வலம் வந்து இப்போதும் திரைக்களத்தில் நிலைத்துள்ளனர்.

இவர்களில் சிலரைப் பற்றிப் பார்க்கலாம்...

கிழக்கே போகும் ரயிலில் அறிமுகமான ராதிகா!

நடிகை ராதிகாவை 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் நாயகியாக பாரதிராஜா அறிமுகம் செய்தார்.

பட மூலாதாரம், Instagram/Radhika

படக்குறிப்பு, நடிகை ராதிகாவை 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் நாயகியாக பாரதிராஜா அறிமுகம் செய்தார்.

பாரதிராஜா தனது படங்களில் அறிமுகம் செய்யும் நாயகிகளுக்கு 'ர' வரிசையில் பெயர் வைப்பது வழக்கமாக இருந்தது. இது அப்போதும் இப்போதும் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டுள்ளது. ராதிகா துவங்கி, ரதி, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சனி, ரஞ்சிதா, ரமா என நடிகைகள் பலருக்கும் 'ர' வரிசையில் பாரதிராஜா பெயர் வைப்பதற்கு முழுமுதற்காரணமாக இருந்தது ராதிகாவுக்குக் கிடைத்த வெற்றிதான் என்பார்கள்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

'நடிகவேள்' என்று புகழப்பட்ட எம்.ஆர்.ராதாவின் மகள்களில் ஒருவரான ராதிகாவை, கடந்த 1978 ஆம் ஆண்டில் தன்னுடைய 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் நாயகியாக பாரதிராஜா அறிமுகம் செய்தார். அதன்பின்பு பாரதிராஜா படங்களில் மட்டுமின்றி, பல்வேறு பிரபலமான இயக்குநர்களின் படங்களிலும் நடித்து, தமிழ்த்திரையுலகின் வெற்றிகரமான நாயகியாக ராதிகா உயர்ந்தார்.

ரஜினி, கமல், விஜயகாந்த், சிவகுமார் என பலருடனும் நாயகியாக பல ஆண்டுகளாக வலம் வந்த ராதிகா, ஒரு கட்டத்தில் படத்தயாரிப்பாளரானார். சின்னத்திரையிலும் வெற்றிகரமான நடிகையாக, தயாரிப்பாளராக இருந்தார். ஏராளமான தேசிய, மாநில விருதுகளையும் வாங்கியுள்ளார்

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ராதிகா பேசுகையில், ''நான் அப்போதுதான் லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தேன். அப்போது நான் தான் 16 வயதினிலே இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, எங்கள் வீட்டிற்கு வந்து பாரதிராஜா என் அம்மாவிடம் பேசினார். என்னை நடிக்கச் சொன்னார். நான் யார் பார்ப்பார்கள் என்றேன். பேசிப்பேசி என்னை நடிக்க வைத்தார். அவர் அன்று எனக்கு வாய்ப்பு தராவிட்டால் இன்று நான் என்னவாக இருந்திருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை.'' என்று கூறியிருந்தார்.

''என்னை 2 மாத கைக்குழந்தையுடன் வத்தலகுண்டுக்கு அழைத்துச் சென்று விருமாயியாக (கிழக்குச் சீமையிலே) நடிக்க வைத்தார். அதற்காக நான் விருதுகளைப் பெற்றேன். என் வாழ்க்கையை மாற்றியவரே பாரதிராஜா சார் தான். சினிமாவை மாற்றியவரும் பாரதிராஜாதான். என்னை மாதிரியான நபர்களை எல்லாம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி சாதனை செய்தார். சினிமாவுக்கு புதிய அர்த்தம் கொடுத்தவர். தமிழ் சினிமாவை புதிய பரிமாணங்களால் புதிய உச்சத்துக் கொண்டு சென்றவர்.''என்று ராதிகா பேசியிருந்தார்.

சமீபத்தில் ராதிகா நடித்து வெளியான ''தாய்க்கிழவி'' படம், மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜாவை சந்தித்த ராதிகா சரத்குமார், அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட காணொளியைப் பகிர்ந்திருந்தார்.

அதில் பாரதிராஜாவிடம், ''தாய்க்கிழவி படம் பார்த்தீங்களாமே? நீங்க பார்க்கலைன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். நீங்க பார்த்ததுல ரொம்ப ஹேப்பி.'' என்கிறார் ராதிகா. அதற்கு பாரதிராஜா, மிக நன்றாக இருந்ததாக சைகை காட்டினார். பின்பு, ''உனக்கு நேஷனல் அவார்டு கிடைக்கும்.'' என்றும் கூறியிருந்தார். அதற்கு ராதிகா, ''எல்லாமே உங்களால்தான். அப்படிக் கிடைத்தால் உங்க காலடியில கொண்டு வந்து வைக்கிறேன்.'' என்று கூறியிருந்தார்.

ரசிகர்களை வென்ற ராதா!

நடிகை ராதாவை 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நாயகியாக பாரதிராஜா அறிமுகம் செய்தார்.

பட மூலாதாரம், Instagram/Radhanair

படக்குறிப்பு, நடிகை ராதாவை 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நாயகியாக பாரதிராஜா அறிமுகம் செய்தார்.

பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' படம்தான், 1980களில் இளைஞர்கள் கொண்டாடிய தமிழ்த்திரைப்படம். அந்தப் படத்தில் அறிமுகமான ராதா, அதன்பின் தமிழ்ச்சினிமாவில் மட்டுமின்றி, தென்னிந்திய திரையுலகம் முழுவதும் வெற்றிகரமான நாயகியாக பல ஆண்டுகள் நிலைத்து நின்றார். ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு என பிரபல நடிகர்கள் பலருடன் பல படங்களில் நடித்து, ஏராளமான வெற்றிப்படங்களில் தன்னுடைய பங்களிப்பை உறுதிப்படுத்தினார்.

எல்லாப் படங்களையும் விட, அவர் சிவாஜியுடன் இணைந்து நடித்த 'முதல் மரியாதை' படம் அவருடைய நடிப்புக்கு மிகப்பெரிய வேட்டையாக அமைந்தது. அந்தப் படத்துக்குப் பின், அவருக்கு 'சிறந்த நடிகை' என்ற நிலையான பெயரும் கிடைத்தது. பாரதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபல இயக்குநர் ஷங்கர், இந்தப் படத்தைக் குறிப்பிட்டு, என்றைக்கும் நிலைத்து நிற்கும் படம் என்றார்.

அந்தப் படத்தில் ராதா சிறப்பாக நடித்ததை சிவாஜியே பாராட்டியதாக பாரதிராஜா தன்னிடம் கூறியிருந்தது பற்றி பிபிசியிடம் சமீபத்தில் பகிர்ந்திருந்தார் கதாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார்.

கடந்த ஜூன் 3 ஆம் தேதியன்று தனது பிறந்தநாளின்போது பிபிசியிடம் பேசிய ராதா, ''நான் உதயசந்திரிகாவாக பிறந்தேன். ராதாவாக மாறியது இரண்டாவது பிறப்பு போன்றது. அப்படி மாற்றியது சினிமா, அதனால்தான் இவ்வளவு புகழ், பெருமை, சந்தோஷம் எல்லாமே. அதற்கு காரணமான இயக்குநர் பாரதிராஜா.''என்று கூறியிருந்தார்.

பாரதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த ராதா, செய்தியாளர்களிடம் பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். அதன்பின் பேசிய அவர், ''எனக்கு பிறப்பால் ஒரு தந்தை இருக்கலாம். ஆனால் எப்போதுமே எனக்கு காட்ஃபாதர் பாரதிராஜா சார்தான். எனக்கு சென்னையில் இருந்த ஒரே உறவு என்றால் அது பாரதிராஜா சார்தான். 10, 15 நாட்களுக்கு முன்னால் கூட பார்த்தேன். வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.'' என்றார்.

மண்வாசனையில் நாயகியாகி மெளனராகத்தில் ஜொலித்த நட்சத்திரம் ரேவதி!

மண்வாசனை திரைப்படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரேவதி.

பட மூலாதாரம், StillsRavi

படக்குறிப்பு, மண்வாசனை திரைப்படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரேவதி.

பாரதிராஜா அறிமுகம் செய்த நாயகிகளில் புகழின் உச்சத்தைத் தொட்டவர்களின் ரேவதி முக்கியமானவர். மண்வாசனை படத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்தாலும், அதற்குப் பின் தமிழ்த்திரையுலகின் அனைத்து பெரிய இயக்குநர்களின் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து, 1980, 90களில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகியாக இருந்தவர் ரேவதி.

தமிழ்ச்சினிமாவில் மட்டுமின்றி, அவருடைய தாய்மொழியான மலையாளப்படங்களிலும் அவர் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளிலும் நடித்து ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்ற ஒரே நடிகை என்ற பெருமையும் ரேவதிக்கு உண்டு. தேவர் மகன் படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர். இவற்றைத் தவிர்த்து ஏராளமான தேசிய, மாநில விருதுகளையும் ரேவதி பெற்றுள்ளார்.

தனது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தான் எதிர்பார்த்தபடி நடிக்காவிட்டால் அவர்களை பாரதிராஜா அடிப்பார் என்பதை பல மேடைகளிலும் பலரும் பகிர்ந்துள்ளனர். இதுபற்றி முன்பு நடிகை ரேவதி ஒரு பேட்டியின் பேசும்போது, ''மண் வாசனையில் ஒரே ஒரு காட்சியில் அறை வாங்கினேன். அதுகூட நான் சரியாக நடிக்கவில்லை என்று கோபத்தில் அவர் அறைந்ததாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில்தான் அந்த அறை இருந்தது.'' என்று கூறியிருந்தார்.

பாரதிராஜா மறைவுக்குப் பின், அவருடைய ஆன்மா அமைதியடைய வேண்டுமென்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ரேவதி, ''நான் நடிகையாக இருப்பதற்கு காரணமானவர் இயக்குநர் பாரதிராஜா" என்று கூறியிருக்கிறார்.

கடலோரக் கவிதைகளில் ஜெனிஃபர் டீச்சராக மாறிய ரேகா!

கடலோரக் கவிதைகள் படத்தில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக, ஜெனிஃபர் ஆசிரியர் பாத்திரத்தில் ரேகாவை அறிமுகம் செய்தார் இயக்குநர் பாரதிராஜா.

பட மூலாதாரம், instagram/jijomon_dqzzz

படக்குறிப்பு, கடலோரக் கவிதைகள் படத்தில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக, ஜெனிஃபர் ஆசிரியர் பாத்திரத்தில் ரேகாவை அறிமுகம் செய்தார் இயக்குநர் பாரதிராஜா.

அடிப்படையில் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்த சுமதி ஜோஸ்பின் என்ற பெண்ணை, தன்னுடைய கடலோரக் கவிதைகள் படத்தில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக, ஜெனிஃபர் ஆசிரியர் பாத்திரத்தில் அறிமுகம் செய்தார் இயக்குநர் பாரதிராஜா. ஏற்கெனவே ஜெமினி கணேசனின் மகள் ரேகா ஒரு பிரபலமான நடிகையாக இருந்தும் இவருக்கும் ரேகா என்று பெயர் சூட்டி நாயகியாக்கினார்.

அதற்குப் பின் பாலச்சந்தர் இயக்கிய 'புன்னகை மன்னன்' படத்திலும் கவனம் ஈர்த்த ரேகா, அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்தார். பிலிம்ஃபேர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள ரேகா, தற்போது வரையிலும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாரதிராஜாவைப் பற்றி ஒரு பேட்டியில் பேசியிருந்த ரேகா, ''அவர் ஒரு சரித்திரம். சினிமா என்றாலே என்னவென்றே தெரியாத ஒரு குடும்பத்திலிருந்து வந்த என்னை இவ்வளவு பெரிய உயரத்துக்குக் கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர். ஒவ்வொரு படத்தின்போதும் என்னை அவர் ஆசீர்வதிப்பார்.'' என்று கூறியிருந்தார்.

பாரதிராஜா மறைவுக்குப் பின் ஊடகங்களில் பேசிய ரேகா, ''ஒவ்வொரு ஷாட்டையும் அவர் எடுக்கும் விதம் பிரமிப்பாக இருக்கும். ஒரு காட்சியை எங்கே துவங்கி, எப்படி முடிப்பார் என்பதை கற்பனை செய்யவே முடியாது. 16 வயதினிலே படம் இன்று வரை பேசப்படக் காரணம் அவருடைய படைப்புத்திறன்தான். அப்படி ஒரு லெஜன்ட் இனிமேல் கிடைக்க மாட்டார்கள். அவரிடம் பணியாற்றியது பெரும் பாக்கியம்.'' என்று பேசியிருந்தார்.

'ர' வரிசையிலிருந்து விலகியும் வெற்றி பெற்ற சுகன்யா, பிரியா மணி!

'புது நெல்லு புது நாத்து' படத்தில் நாயகியாக சுகன்யாவை பாரதிராஜா அறிமுகம் செய்தார்.

பட மூலாதாரம், Instagram/Suganya

படக்குறிப்பு, 'புது நெல்லு புது நாத்து' படத்தில் நாயகியாக சுகன்யாவை பாரதிராஜா அறிமுகம் செய்தார்.

பாரதிராஜா அறிமுகம் செய்த 'ர' வரிசை நடிகைகளில் 'புதிய வார்ப்புகள்' நாயகி ரதி, பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்ததுடன் இந்திப்படங்களிலும் நடித்துள்ளார். பாரதிராஜா தனது 'முதல் மரியாதை' படத்தில் அறிமுகப்படுத்திய ரஞ்சனி, மலையாளப்படங்களில் முக்கியமான நாயகியாக வலம் வந்தார். பாரதிராஜா இயக்கிய 'நாடோடித்தென்றல்' படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு 'ர' வரிசை நாயகியான ரஞ்சிதாவும், தமிழ்ச்சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களைத் தவிர்த்து, சில நாயகிகளுக்கு அவர்களின் இயற்பெயர்களை மாற்றி வேறு வரிசையிலும் அவர் பெயர் சூட்டினார்.

பாரதிராஜா கதாநாயகனாக நடித்த 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அருணா. அவரும் சில படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் பாரதிராஜா 1990களுக்குப் பின் அறிமுகம் செய்த நடிகைகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர்கள் சிலரே. 1991 ஆம் ஆண்டில் 'புது நெல்லு புது நாத்து' படத்தில் நாயகியாக பாரதிராஜா அறிமுகம் செய்த சுகன்யா அதில் முக்கியமானவர்.

அந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறாவிட்டாலும், அதில் நடித்த சுகன்யா மட்டும், வெற்றிகரமான நாயகியாக சில ஆண்டுகள் தமிழ்த்திரையுலகில் தடம் பதித்தார். அவர் நடித்த 'சின்னக்கவுண்டர்', 'சின்ன மாப்ளே', 'சின்ன ஜமீன்', 'மகாநதி' போன்ற பல படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, அவருக்கு பெயர் வாங்கித்தந்தன. பல்வேறு தமிழ்த்தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.

பாரதிராஜா மறைவு குறித்து ஊடகங்களில் கருத்து பகிர்ந்த சுகன்யா, ''நான் திரைத்துறைக்கு வந்ததற்குக் காரணமே பாரதிராஜா சார்தான். முதலில் வந்த வாய்ப்பை வேண்டாமென்றேன். என்னைக் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். அவரால் அறிமுகப்படுத்தப்பட்டது பெருமை, அவருடைய மறைவு ஒரு மாபெரும் இழப்பு.'' என்று கூறியதுடன், அவருடன் பணியாற்றியபோது அவர் சினிமாவைக் கற்றுத்தந்த விஷயங்களையும் பகிர்ந்திருந்தார்.

''எந்த விஷயமாக இருந்தாலும் அவரே களமிறங்கிச் செய்வார். 'புது நெல்லு புது நாத்து' படத்தில் 'கருத்த மச்சான்' பாடலின் போது, கிணற்றுக்குள் இருந்து என்னைத் தூக்குவது போன்ற காட்சியில், அந்தக் கயிற்றில் இருமுறை அவரே இறங்கி ஏறிய பின்பே என்னை நடிக்க வைத்தார். அவருடைய ஹீரோயின்கள் எல்லோருமே பிரபலமாக இருக்கிறார்கள். அவருடைய படத்தில் ஒரு சின்ன கேரக்டராக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் இருக்கும். ஸ்டூடியோவில் இருந்த சினிமாவை வெளியே கொண்டு வந்தவர்.. புதுநெல்லு புதுநாத்து படத்துக்குப் பின் பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு சீரியல் இயக்கும்போதும் அதே உத்வேகத்துடன் ஓடினார். அவரைப் போல ஒரு உழைப்பாளியைப் பார்ப்பது கடினம்.'' என்று கூறினார் சுகன்யா.

இவர்களைத் தவிர்த்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் 'கண்களால் கைது செய்' படத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்த பிரியா மணியும் தமிழ்ச்சினிமாவில் முக்கியமான நடிகையாக தன்னைப் பதிவு செய்தவர். அமீர் இயக்கத்தில் 'பருத்தி வீரன்' படத்தில் முத்தழகுவாக நடித்த பிரியா மணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அது தமிழ்ச்சினிமாவில் 20 ஆண்டுகளுக்குப் பின்பு கிடைத்த விருதாகும். அதற்கு முன்பாக 'வீடு' படத்தில் நடித்ததற்காக அர்ச்சனா, கடைசியாக அந்த விருதைப் பெற்றிருந்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு