ஆமதாபாத் விமான விபத்து: உறவுகளின் உடல் பாகங்களை பெற ஓராண்டாக போராடும் குடும்பங்கள்

பட மூலாதாரம், Family handout
- எழுதியவர், ஆசாதே மோஷிரி
- பதவி, தெற்காசிய செய்தியாளர்
- எழுதியவர், சார்லோட் ஸ்கார்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனை ஊழியர்கள், தன் பெற்றோரை அடையாளம் காண உதவுவதற்காக அவரிடமிருந்து இரண்டு குப்பி ரத்தத்தை எடுத்த நாளை மித்தென் படேல் நினைவுகூர்கிறார்.
அசோக் மற்றும் சோபனா படேலின் பற்கள் தொடர்பான மருத்துவப் பதிவுகளை எடுத்துக்கொண்டு, அவரும் அவரது சகோதரரும் சில மணி நேரத்துக்கு முன்பு தான் ஆமதாபாத்தில் தரையிறங்கியிருந்தனர்.
"நாங்கள் அங்கு செல்வதற்கு ஏர் இந்தியா விமானத்தில் தான் பறக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் வேறு விமானங்கள் எதுவும் இல்லை" என்று கூறுகிறார் மித்தேன்.
மித்தெனுக்கு இந்தியாவில் யாரையும் தெரியாது.
ஆனால் அவரது பெற்றோர் அவருக்கு ஆமதாபாத்தின் உள்ளூர் மொழியான குஜராத்தியைக் கற்றுக் கொடுத்ததற்காக அவர் நன்றியோடு இருந்தார்.
அது, அவர்களின் உலகையே மாற்றிய அந்தத் துயரத்தின் குழப்பமான பின்னணியைக் கையாள்வதற்கான வழியை அவருக்கும் அவரது சகோதரருக்கும் அளித்தது.
"உடலை சொந்த நாட்டிற்கு அனுப்புதல் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை"என்கிறார் மித்தேன்.
ஓராண்டுக்கு முன்பு, ஜூன் 12 அன்று, அவரது பெற்றோர் லண்டனில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட 32 விநாடிகளிலேயே அவர்கள் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
இந்தியாவின் வரலாற்றிலேயே மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றான இதில், விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். அதில் அவரது பெற்றோரும் அடங்குவர்.
இந்த விபத்தில் ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.
படேல் தம்பதியினரின் உடல்கள் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கும் மேலாக ஆனது.
நான்கு நாட்களுக்குப் பிறகு, மித்தெனுக்கு காலையில் லண்டன் காவல்துறையிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர்கள் அன்றிரவு அவரைச் சந்திக்க கோரினர்.
ஆனால், அதற்கான காரணத்தை தொலைபேசியில் சொல்ல மறுத்துவிட்டனர்.
ஒரு சிடி ஸ்கேன் பரிசோதனையில், அவரது தாயாரின் சவப்பெட்டியில் வேறொருவரின் உடலும் இருந்தது தெரியவந்தது.
அதில் கூடுதலாக சில "எலும்புப் பாகங்களும்" இருந்ததாக மித்தெனிடம் கூறப்பட்டது.
இதனை வாரக்கணக்கில் தன் குடும்பத்தினர் உட்பட யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று காவல்துறை மித்தெனிடம் கேட்டுக்கொண்டது.
அவர் விசாரணை அதிகாரியைச் சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
"என் தாயாரை வேறு யாராக இருந்தாலும் அவரிடமிருந்து பிரித்து வைக்குமாறு நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர்களிடம் கூறினேன்" என அவர் சொன்னார்.
கூடுதல் சோதனைகளில், அவரது தாயாரின் உடல் பாகங்கள் அடையாளம் தெரியாத ஒரு மனிதனின் உடல் பாகங்களுடன் கலந்திருப்பது தெரியவந்தது.
படேல் குடும்பத்தினர் அவருடைய உடலைத் தகனம் செய்வதற்கு மேலும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது, அசோக்கின் இறுதிச் சடங்குகளை அவரோடு சேர்த்து செய்வதற்காக அவர்கள் இறுதி கடமைகளை ஒத்திவைத்தனர்.
சோபனா படேலின் சவப்பெட்டியில் இருந்த, இதுவரை அடையாளம் காணப்படாத அந்த மனிதனின் மரணம் குறித்து பிரிட்டனில் ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் நடந்த ஒரு விசாரணையில், பிரிட்டனைச் சேர்ந்த மரண விசாரணை அதிகாரி ஃபியோனா வில்காக்ஸ் பேசுகையில், "இந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் நாங்கள் உள்ளங்கை ரேகைகளையும் டிஎன்ஏவையும் இந்தியாவிற்கு அனுப்பியுள்ளோம், ஆனால் இன்றுவரை அவருடைய பெயர் என்ன என்பது குறித்து எங்களுக்கு எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் கிடைக்கவில்லை" என்று கூறினார்.
மரணம் நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு விசாரணையைத் தொடங்குவது "வெளிப்படையாகவே மிகவும் அசாதாரணமானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அடையாளம் தெரியாத அந்த ஆணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. விரைவில் அவர் அடையாளம் காணப்படுவார் என நம்புகிறேன்" என்று வில்காக்ஸ் கூறினார்.

பட மூலாதாரம், Reuters / Hannah Mackay
விபத்து நடந்த இடத்தில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் இருந்ததாலும், பல உடல்கள் கருகி, சிதைந்து போயிருந்ததாலும், அவசர கால பணியாளர்களுக்கு சவால் மிகக் கடுமையானதாக இருந்தது.
விமானம் மருத்துவ மாணவர்களின் தங்குமிடம் மீது மோதி உடைந்து சிதறியதால், அதன் இடிபாடுகள் ஐந்து கால்பந்து மைதானங்களுக்கு இணையாக சுமார் 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் சிதறிக்கிடந்தன.
உதவி செய்ய விரைந்த உள்ளூர்வாசி ஒருவர், இடிபாடுகளில் இருந்து உடல்களை வெளியே எடுக்கப் போராடியதை விவரித்தார். பாதிக்கப்பட்டவர்களைப் பிணைத்திருந்த சீட் பெல்ட்கள் தொட முடியாத அளவுக்கு மிகச் சூடாக இருந்துள்ளன.
விபத்தில் பலியானவர்களை அடையாளம் காண நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன தடயவியல் நிபுணரான மருத்துவர் தீபக் வெங்கடேஷ் பிபிசியிடம் பேசுகையில், இந்த பேரிடரின் அளவு பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதை இன்னும் கடினமாக்கியது என்று கூறினார்.
இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்களில் 90% பேரின் உடல்கள் கருகியிருந்தன. "தீவிரமான வெப்பச் சேதம் கைரேகைகள், முக அமைப்புகள் மற்றும் பிற காட்சி அடையாளங்களை அழித்துவிட்டது".
இந்த ஏர் இந்தியா விபத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது. ஜனவரியில் வெளியிடப்பட்ட புதிய அடையாள வழிகாட்டுதல்களில் இதை ஒரு ஆய்வு உதாரணமாகப் பயன்படுத்தியுள்ளது.
"இது ஒரு படிப்பினை" என டாக்டர் வெங்கடேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
பிபிசி இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம், குஜராத்தில் உடல்களை அடையாளம் காணும் செயல்முறைக்கு பொறுப்பான மருத்துவமனை மற்றும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றைத் தொடர்பு கொண்டது.
ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், விபத்து நடந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சகம் பிபிசியிடம் பேசியது. அப்போது, "இந்த கவலைகளும் பிரச்னைகளும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட கணத்திலிருந்தே பிரிட்டன் தரப்புடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்" என்று தெரிவித்தது.
"துயரமான விபத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுவப்பட்ட நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளின்படி பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டனர். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் மிகுந்த தொழில்முறைத் திறனுடனும், அவர்களின் கண்ணியத்திற்கு உரிய மரியாதையுடனும் கையாளப்பட்டன." என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
பிரிட்டனில், ஒரு குடும்பத்திடம் தவறான உடல் வழங்கப்பட்டது போன்ற மற்றொரு சம்பவமும் உள்ளது.
அமண்டா டோனகி, தனது 39 வயது மகன் ஃபியோங்கல் கிரீன்லா-மீக்கின் உடல் தான் அது என்று நம்பி பிரிட்டனுக்கு எடுத்து வந்தார்.
ஆனால், தான் பெற்றது 70 வயதான இந்தியப் பெண்மணியான வாசுபென் நரேந்திரசிங் ராஜின் உடல் என்பதை அவர் பின்னர் கண்டறிந்தார்.
இந்த வாரம், பிரிட்டனின் மரண விசாரணை அதிகாரி வில்காக்ஸ், "சமீபத்தில் தான் எங்களால் திருமதி ராஜின் மகனைத் தொடர்பு கொள்ள முடிந்தது" என்று கூறினார்.
டோனகி இன்னும் தனது மகனின் உடற்பாகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
டோனகி மற்றும் மித்தென் படேல் ஆகிய இருவர் தரப்பிலும் ஆஜராகும் வழக்கறிஞரான ஜேம்ஸ் ஹீலி-பிராட் பிபிசியிடம் பேசுகையில், பேரிடரின் அளவு உடல்களை அடையாளம் காண்பதில் சவால்களை உருவாக்கிய போதிலும், "இன்னும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் இருக்க வேண்டும், ஏனெனில் அதைப் பெற குடும்பங்கள் தகுதியானவர்கள்" என்றார்.
கடந்த வருடம் முழுவதும், "எந்தவொரு கட்டத்திலும் இந்தியாவில் அதிகாரத்தில் உள்ள எவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை" என்றும் அவர் கூறினார்.
"இது மிகவும் சங்கடமளிக்கிறது. இது அவர்களைத் செயல்திறன் இல்லாதவர்களாக காட்டுகிறது."
உடல்களை அடையாளம் காண உதவும் பணியில், விபத்து நடந்த சில நாட்களிலேயே மருத்துவர் வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார். இன்றும் தன்னை வாட்டி வதைக்கும் காட்சிகளை அவர் விவரித்தார்.
பல மாதங்களாக, குழுக்கள் இடிபாடுகள் மற்றும் சிதறல்களுக்கு இடையே, 40 டிகிரி செல்சியஸிற்கு மேல் வெப்பமிருந்த சூழலில், அழுகிக்கொண்டிருந்த உடல்களுக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
உடல் பாகங்கள் எண்களிடப்பட்டு, இறுதியில் அவை பரிசோதனைக்காக உள்ளூர் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டதாக அவர் எங்களிடம் கூறினார்.
உயிரிழந்தவர்களின் உடலை முழுமையாகவே திரும்பப் பெற விரும்புகிறீர்களா என்று குடும்பத்தினரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு, கிடைத்த அனைத்து உடல் எச்சங்களையும் பரிசோதித்து, அவை யாருடையது என்பதை உறுதிப்படுத்தும் நடைமுறை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்; இதனால் உடலை ஒப்படைக்கும் செயல்முறை பல மாதங்கள் தாமதமாகலாம்.
விபத்து நடந்த நேரத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) கவனம், "நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு" ஆகியவற்றில் மட்டுமே இருந்தது என்று மருத்துவர் வெங்கடேஷ் கூறினார்.
விபத்து நடந்த உடனேயே, அவசர கால பணியாளர்கள் உயிர்களைக் காப்பாற்றுவதில் தான் கவனம் செலுத்தினரே தவிர, உடல்களை அடையாளம் காண்பதில் இல்லை.

பட மூலாதாரம், Family
"உடல்கள் மீட்கப்பட்ட சூழல், உடல் பாகங்களைத் தனித்தனியாகப் பராமரிப்பதில் சவால்களை ஏற்படுத்தியது, இது உடல்கள் ஒன்றோடு ஒன்று கலப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்" என்று மருத்துவர் வெங்கடேஷ் கூறினார்.
உடல்கள் ஒன்றோடு ஒன்று கலப்பது என்பது பல நபர்களின் உடல் பாகங்கள் ஒன்றாகக் கலப்பதைக் குறிக்கிறது.
முதற்கட்ட அவசர கால மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, விபத்து நடந்த பகுதியைத் தனித்தனி மண்டலங்களாகப் பிரித்து, குழுக்கள் ஒரு "மிக நுணுக்கமான" மற்றும் "முறையான" தேடுதல் வேட்டையைத் தொடங்கின என்று அவர் கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், "பேரிடர் மேலாண்மை கட்டமைப்பில், பாதிக்கப்பட்டவர்களை விரிவாக அடையாளம் காணுதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு இதுவரை முறையான மற்றும் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை" என்பதை ஒப்புக்கொண்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் அடையாளம் காண பற்கள் தொடர்பான மருத்துவப் பதிவுகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழியாகும் என்று மருத்துவர் வெங்கடேஷ் கூறிய போதிலும், அதிகாரிகள் தங்களின் முந்தைய நெறிமுறைகளின்படி டிஎன்ஏ சரிபார்ப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.
என்டிஎம்ஏ-வின் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இது ஆமதாபாத்திற்கு அருகிலுள்ள காந்திநகரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் ஒரு "முடக்கத்தை" ஏற்படுத்தியது.
"சவாலான டிஎன்ஏ மாதிரிகளின் திடீர் வரவு, ஆய்வகத்தின் திறனைத் தாண்டிக் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியது" என்று அந்த அறிக்கை கூறியது.
இந்தியாவிற்கு இன்னும் கூடுதலான பிராந்திய டிஎன்ஏ பரிசோதனை வசதிகளும், பற்கள் மூலமாக அடையாளம் காணும் முறையின் அதிகப்படியான பயன்பாடும் தேவை என்று அது முடிவு செய்தது.
"போராட்டம் தொடர்ந்தது " என்று கூறும் மித்தென், "நாளின் முடிவில், என் தாய் வேறொருவருடன் தான் வீட்டிற்குத் திரும்பி வந்தார்"என்கிறார்.
பெரும்பாலான நேரங்களில், மித்தென் தன் துக்கத்தை ஒதுக்கி வைக்கிறார்.
பின்னர், இரவு 11 மணிக்கு, அவர் ஒரு அறைக்குள் தனியாகச் சென்று, மறைந்த தன் பெற்றோரின் வீடியோக்களைப் பார்க்கிறார்.
தனக்காகவும் மற்ற குடும்பங்களுக்காகவும் அவர் நடத்தும் இந்தப் போராட்டம், அவர்களுக்குச் செய்யும் மிகக் குறைந்தபட்ச மரியாதை என்று அவர் நம்புகிறார்.
"நான் இறந்து மேலே என் பெற்றோரைச் சந்திக்கும் போது, அவர்கள்..."என்று கூறி பேச்சை நிறுத்திய மித்தென்,
"அவர்கள் என்னிடம், 'மகனே, உன்னை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். நாங்கள் சென்ற பிறகு உன்னால் முடிந்த அனைத்தையும் செய்தாய்' என்று கூற வேண்டும் என நான் விரும்புகிறேன்"என்கிறார்.
கூடுதல் தகவல்: ஆமதாபாத்தில் இருந்து பிரேம் பூமிநாதன்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























