ஜி.வி. பிரகாஷ் பிறந்த நாள்: இவரது இசையில் பிரபலங்களின் விருப்பமான பாடல்களின் பட்டியல்

ஜி.வி. பிரகாஷ்

பட மூலாதாரம், @gvprakash

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி மகனான இவர், சிறுவயதில் அவரின் இசையில் சிக்குபுக்கு ரயிலே' பாடல், 'உழவன்', 'பம்பாய்', 'இந்திரா' உள்ளிட்ட படங்களிலும் பாடியிருந்தார். 19 வயதிலேயே வசந்த பாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர், சூரரைப்போற்று , வாத்தி படங்களுக்கு இரண்டு தேசிய விருதுகள் பெற்றார். டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவானவர் தொடர்ச்சியாக நடித்தும் வருகிறார். மதயானை கூட்டம் உட்பட சில படங்களை தயாரித்து இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் இதுவரை 120க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். 500க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கி, கிட்டத்தட்ட 100 பாடல்களை பாடியிருக்கிறார். 20க்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார்.

தனது படங்களில் மட்டுமல்ல, நண்பர்களுக்காக மற்ற இசையமைப்பாளர் இசையிலும் பாடியிருக்கிறார். இன்று அவருக்கு பிறந்தநாள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நண்பரும், அவருடைய குழுவில் 40க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவரும், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன், மஞ்சப்பை உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளருமான ரகுநந்தனிடம் பிபிசிதமிழ் சார்பில் பேசினோம்

"ஜி.வி.பிரகாஷுக்கு 13 வயது இருக்கும் காலகட்டத்தில் இருந்து அவரை அறிவேன். ஒரு பக்தி ஆல்பத்துக்காக அவர் வீட்டுக்கு சென்றபோது நட்பானார். அந்த நட்பு 26 ஆண்டுகளுக்கு மேலாக, இன்றும் தொடர்கிறது. 2000ம் ஆண்டுகளில் இருந்தே அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்." என்றார்.

மேலும், "நான் இசையமைப்பாளரான போது என் படங்களிலும் எனக்காக பாடி கொடுத்து இருக்கிறார். அப்படி பாடியதில் நீர்ப்பறவை படத்தில் 'பற பற பறவை' பாடலும், மதயானை கூட்டம் படத்தில் 'கோண கொண்டைக்காரி', சுந்தரபாண்டியன் படத்தில் 'றெக்கை முளைத்தேன்' பாடலை பிடிக்கும். அவர் இசையமைத்து பாடிய படங்களில் உருகுதே மருகுதே (வெயில்), பூக்கள் பூக்கும் தருணம் ( மதராசபட்டினம்), உன்னாலே என் ஜீவன் (தெறி) , யாத்தே யாத்தே (ஆடுகளம்), பிறைதேடும் இரவிலே (மயக்கம் என்ன) ஆகிய பாடல்கள் பிடிக்கும்'' என்றார்

ஜி.வி. பிரகாஷ்

பட மூலாதாரம், @gvprakash

'எத்தனை சாமி வந்ததய்யா' பாடிய அனுபவம்

''ஜி.வி.பிரகாஷ் இசையில் இட்லிகடை படத்தில் இடம் பெற்ற 'எத்தனை சாமி வந்ததய்யா' பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடலை பாடிய புஷ்பவனம் குப்புசாமியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"சென்னை தி.நகரில் உள்ள ஜி.வி.பிரகாஷ் ஸ்டுடியோவுக்கு பாட உள்ளே அடி எடுத்து வைத்தேன். என் அப்பா கீழே விழுந்துவிட்டார், தலையில் அடி, வாந்தி எடுக்கிறார் என போன் வந்தது. நான் திக்கித்து நின்றேன். அதற்குள் ஸ்டிடியோவில் உள்ளவர்கள் என்னை அழைத்து பாட ஏற்பாடுகள் செய்தனர். 'அப்பாவுக்கு என்ன ஆனதோ' என்ற மனக்குழப்பம். 'எத்தனை சாமி' பாடலை பாட ஆரம்பிக்க, இப்படி வேணாம். குரலில் சோகம் தெரிகிறது என ஹீரோ தனுசும், ஜி.வி.பிரகாசும் சொன்னார்கள்.

நான் என் நிலைமையை சொல்ல, உடனே ரிக்கார்டிங்கை நிறுத்தி என்னை போனில் பேச வைத்தார்கள். அப்பாவுக்கு பிரச்னை இல்லை என மருத்துவர்கள் சொல்ல, மீண்டும் பாட வந்தேன். அப்போது ஜி.வி.பிரகாஷ் 'இந்த தருணத்தில் வேண்டாம். நாளைக்கு வாங்க, அப்பாவை பாருங்க' என்றார்.

மறுநாள் எல்லாம் சரியானவுடன் பாடிய அப்பா பாடல் 'எத்தனை சாமி வந்ததய்யா'. அம்மா, மகன் பற்றி ஏகப்பட்ட பாடல் இருக்கின்றன. இது, அப்பா பாச பாடல். நான் எந்த கச்சேரி சென்றாலும் அந்த பாடலை பாட சொல்லி கேட்கிறார்கள். பலரின் செல்போனில், பல கோவில்களில் அந்த பாடல் ஒலிக்கிறது.' என்கிறார்.

இயக்குனர் சுதா கொங்கராவுக்குபிடித்த பாடல்கள்

சுதா கொங்கரா
படக்குறிப்பு, இயக்குனர் சுதா கொங்கரா

ஜி.வி.பிரகாஷ் இசையில் உங்களுக்கு பிடித்த பாடலை சொல்ல முடியுமா என்று, சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவிடம் பிபிசி சார்பில் கேட்டபோது, "அவர் இசையை கேட்டுக்கொண்டே இருப்பேன். அதில் ஏகப்பட்ட பாடல்கள் பிடிக்கும். எப்போதும் என் 'பிளே லிஸ்ட்'டில் முதலில் இருப்பது 'இது என்ன மாயம்' பட பாடல்கள். 'அய்யோ, நெஞ்சு அடிக்குதடி' (ஆடுகளம்), ரத்னமாலா (பராசக்தி), எள்ளுவய பூக்கலையே (அசுரன்), கையிலே ஆகாசம் (சூரரைப் போற்று) ஆகிய பாடல்களை ரசித்து, ரசித்து கேட்பேன்." என்கிறார்

உருகுதே மருகுதே, கண்கள் நீயே

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த பேச்சுலர் பட இயக்குனர் சதீஷ் செல்வகுமார் பிபிசியிடம் பேசுகையில், ''அவர் மெலோடியிலும் கலக்குவார். நாட்டுப்புற, மேற்கத்திய இசையிலும் மிரட்டுவார். அவர் பாடல்களில், வரிகளில் ஒருவித மென்மை இருக்கும். பலமுறை கேட்டாலும் சலிக்காத தன்மை இருக்கும். அந்த வகையில் 'பூக்கள் பூக்கும் தருணம் (மதராசப்பட்டினம்) , உருகுதே மருகுதே (வெயில்), ஒரு பாதி கதவு (தாண்டவம்), பிறைதேடும் (மயக்கம் என்ன?) , கண்கள் நீயே (முப்பொழுதும் உன் கற்பனைகள்) பாடல்களும் மிகவும் பிடிக்கும்" என்கிறார்.

'ஒத்த சொல்லால' பாடல் பதிவில்

பாடலாசிரியர் ஏகாதசி
படக்குறிப்பு, பாடலாசிரியர் ஏகாதசி

ஜி.வி.பிரகாஷ் இசையில் பல பாடல்களை எழுதிய பாடலாசிரியர் ஏகாதசி பிபிசி தமிழிடம் பேசுகையில், "அவர் இசையமைத்த முதல் படமான வெயில் படத்தில் ஒரு சிறிய பாடல் எழுதியிருக்கிறேன். அவரின் 100வது படமான பராசக்தியிலும் பாடல் எழுதியது எனக்கு பெருமை. நான் ஏகப்பட்ட சரணம், பல்லவி எழுதிக்கொண்டு சென்றாலும் அவர் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். நாம் எழுதியதை பாடிப் பார்ப்பார்.

ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற 'ஒத்த சொல்லால' பாடலை முதலில் முடித்துவிட்டோம். ஆனாலும், அவருக்கு திருப்தி இல்லை. சில மாதங்கள் கழித்து மீண்டும் என்னை வரவழைத்து இன்னும் சில சரணம் எழுத சொல்லி, வேல்முருகனை பாட வைத்தார். அந்த ஈடுபாடு அவர் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

அசுரன் படத்தில் இடம்பெற்ற 'கத்தரி பூ அழகி' பாடலை அவ்வளவு ரசித்தார். அதை எளிதில் முடித்துவிட்டோம். அவர் பாடல்களில் நான் எழுதிய பாடல்களில் மண் உருண்ட மேல (சூரரைப் போற்று), ஒத்த சொல்லால (ஆடுகளம்), கத்தரி பூவழகி (அசுரன்), நான் பிடிச்ச மொசக்குட்டி (ஈட்டி) ஆகிய பாடல்கள் விருப்பம் என்றார்." என்கிறார்.

ஜி.வி.பிரகாசுக்கு பிடித்த 10 பாடல்கள்

உங்கள் இசையில் உங்களுக்கு விருப்பமான பாடல்கள் சிலவற்றை சொல்லமுடியுமா என்று ஜி.வி.பிரகாசிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். அவர் பட்டியலிட்ட பாடல்கள்:

1) வெயிலோடு விளையாடி (வெயில்)

முதல் படமான வெயில் படத்தில் இடம்பெற்ற பாடல். இயக்குனர் வசந்த பாலன், நா.முத்துக்குமார், பாடகர்கள் திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர் கூட்டு முயற்சியில் உருவான பாடல்.

2) பூக்கள் பூக்கும் தருணம் (மதராசபட்டினம்)

விஜய் இயக்கிய மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்றது இந்த மெலோடி பாடல். நா.முத்துகுமார் வரிகளும், அதை படமாக்கிய விதமும், ஆர்யா, எமி நடிப்பும் வரவேற்பை பெற்றது.

3) உன் பேரை சொல்லும் போதே.. (அங்காடித் தெரு)

அங்காடித் தெரு படத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் பிடித்தமான பாடல். நா.முத்துகுமார் வரிகளில் நரேஷ், ஸ்ரேயா கோஷல், ஹரிசரண் பாடி பெரும் வரவேற்பை பெற்றது.

4) உயிரே உயிரே (அமரன்)

சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்த அமரன் படத்தில் இடம்பெற்ற பாடல். விவேக் எழுத, நகுல், ரம்யா பாடியிருந்தனர்.

ஜி.வி. பிரகாஷ்

பட மூலாதாரம், @gvprakash

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

5) கதைகளை பேசும் விழி அருகே… (அங்காடித் தெரு)

வசந்த பாலன் இயக்கிய அங்காடித் தெரு படத்தில் இடம்பெற்ற அழகான பாடல். பென்னி தயால், ஹன்சிகா ஐயர் பாடியிருந்தனர்.

6) ஆருயிரே ஆருயிரே… (மதராசபட்டினம்)

மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற இந்த மெலோடி, பாடலை எழுதியவர் நா.முத்துக்குமார்.

7) மாலை நேரம் மழைத்தூறும் காலம்… (ஆயிரத்தில் ஒருவன்)

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இந்த பாடல் இடம்பெற்று இருந்தது. செல்வராகவன் எழுத, ஜி.வி. பிரகாஷும் ஆன்ட்ரியாவும் இணைந்து பாடியிருந்தனர்.

8) விழிகளில் ஒரு வானவில்… (தெய்வத் திருமகள்)

"விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, சாரா நடித்த தெய்வத் திருமகள் படத்தில் இடம் பெற்றது. பாடலை எழுதியவர் எனக்கு மிகவும் பிடித்த மறைந்த நா.முத்துகுமார்" என்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

9) பிறை தேடும் இரவிலே உயிரே… (மயக்கமென்ன)

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கமென்ன படத்தில் இடம்பெற்ற பாடல். இந்த மென்மையான வரிகளை எழுதியவர் தனுஷ்.

10) எத்தன சாமி வந்ததய்யா (இட்லி கடை)

தனுஷ் இயக்கி நடித்த இட்லிகடை படத்தில் ராஜூமுருகன் வரிகளில், புஷ்பவனம் குப்புசாமி குரலில் உருவான உணர்வுப்பூர்வமான பாடல், தந்தை-மகன் பாசத்தை அழகாக சொல்லும் பாடல்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு