டெல்லியில் உணவகத்தில் தீ விபத்து - 4 பேர் சடலமாக மீட்பு

மால்வியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள 'லெமன் கிரீன்' என்ற உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பத்து பேர் உயிரிழந்ததாக பிடிஐ முகமை கூறியுள்ளது. இருப்பினும், இதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்(SDM) ஜிதேந்திர குமார், நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் 7 முதல் 8 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அனைத்துப் பிரிவுகளும் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டதாக ஜிதேந்திர குமார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமரின் அலுவலகம் (PMO), எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் அறிவித்துள்ளது.

அந்த பதிவில், "டெல்லியின் மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் நிகழ்ந்த மரணங்கள் துயரமானவை" என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

மேலும்,"தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றனர்." என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் SDM

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஜிதேந்திர குமார் கூறுகையில், "கட்டிடத்திற்குக் கீழே ஒரு உணவகம் இயங்கி வந்தது, தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அந்த உணவகமே தீ விபத்தை ஏற்படுத்தியிருக்க அதிக வாய்ப்புள்ளது. எங்களிடம் சரியான விவரங்கள் இல்லை. ஆனால் இதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த ஏழு அல்லது எட்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்." என்றார்.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜிதேந்திர குமார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "சட்டவிரோதமாகச் செயல்படுபவர்கள் மற்றும் மற்றொரு உரிமத்தின் பெயரில் ஹோட்டல்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நான் உத்தரவிடுவேன். சிலர் தங்கள் அறைகளிலிருந்து வெளியே குதித்துள்ளனர். ஒரே ஒரு கட்டிடத்தில் மட்டுமே தீப்பிடித்துள்ளது." என்றார்.

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

"மால்வியா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் நான் மிகவும் சோகமடைந்துள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து பற்றி தகவல் கிடைத்த உடன் டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை, டிடிஎம்ஏ, கேட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர சேவை முகமைகள் சம்பவ இடத்திற்குச் உடனடியாக அனுப்பப்பட்டன.

அவர்களின் துரித நடவடிக்கையால் பலரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்." என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

டெல்லி துணை நிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து, இந்த விபத்து மிகவும் சோகமானது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மால்வியா நகரில் உள்ள விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் நான் மிகவும் சோகமடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என அனைவருடனும் இணைந்து பிரார்த்திக்கிறேன். காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு படைகள் களத்தில் வேலை செய்து வருகின்றன. உடனடியாக மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரணங்கள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்தச் சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

தீயணைப்புத் துறை அதிகாரி கூறியது என்ன?

டெல்லி, தீ விபத்து

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தீயணைப்புத் துறை அதிகாரி ஏகே மாலிக் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசினார்.

தீயணைப்புத் துறை அதிகாரி ஏகே மாலிக் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் காலை 08:50 மணிக்கு கிடைத்தது. தொடக்கத்தில் ஏழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதன் பின்னர் தேவையான அனைத்து வாகனங்களும் அனுப்பப்பட்டன. சம்பவ இடத்தை அடைந்த உடனேயே கட்டடத்தில் இருந்து 37 பேரை பாதுகாப்பாக மீட்டோம். விபத்து நடைபெற இடம் கீழ் தளம், தரைத் தளம் மற்றும் அதற்கு மேல் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடம்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சம்பவ இடத்தில் இருந்த மக்களை கேள்வி கேட்டதில் இருந்து அந்தக் கட்டடம் வெறும் குடியிருப்பு வளாகமாக மட்டும் பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவந்தது. அங்கு தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் அல்லது உடன் வந்தவர்களாக இருந்தனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு தங்கியுள்ளனர். தீ விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது கட்டடம் முழுவதையும் காலி செய்து அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்." என்றும் தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு