'மன்றம் வந்த தென்றலுக்கு': இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில் பிடித்த பாடல்களை பகிரும் திரை பிரபலங்கள்

இளையராஜா, மணிரத்னம் கூட்டணியில் உருவான படங்கள்

பட மூலாதாரம், Facebook/ Maniratnam, X/Ilayaraja

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் இளையராஜா, மணிரத்னம் கூட்டணியில் பல ஹிட் படங்கள் வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் மட்டுமே இந்த கூட்டணி நீடித்தது. ஆனாலும், அந்த பத்தாண்டை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். இவர்கள் இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் இன்றும் கொண்டாடப்படுகிறது. இன்று இளையராஜா, மணிரத்னம் இருவருக்கும் பிறந்தநாள்.

இருவர் கூட்டணியில் வந்த படங்களில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் பற்றி பேச முடியுமா என்று திரை பிரபலங்களிடம் பிபிசி சார்பில் பேசினோம்.

Ilayaraja, Manirathnam, Birthday, songs, movies, MounaRagam

பட மூலாதாரம், RJS Music

படக்குறிப்பு, இளையராஜா இசையமைப்பில் மெளனராகம் திரைப்படத்தில் வெளியான மன்றம் வந்த தென்றலுக்கு பாடல்.

'மன்றம் வந்த தென்றலுக்கு' - சுகாசினி

நடிகையும், இயக்குனர் மணிரத்னம் மனைவியுமான சுகாசினி பிபிசி தமிழிடம், '' இதயகோயில் படத்தில் இடம் பெற்ற 'வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்' பாடல் பிடிக்கும். அதேபோல், மெளனராகம் படத்தில் வரும் 'மன்றம் வந்த தென்றலுக்கு…மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…அன்பே என் அன்பே…' என்ற பாடல் ரொம்ப இஷ்டம்.

அடுத்ததாக, அக்னிநட்சத்திரம் படத்தில் வாலி எழுதிய நின்னுக்கோரி வர்ணம் பாடலை பலமுறை ரசித்து கேட்டு இருக்கிறேன். தளபதி படத்தில் வரும் 'சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே' ரொம்பவே டச்சிங் ஆன பாடல். இந்த பாடல்களை போலவே, நாயகனில் இடம் பெற்ற 'தென்பாண்டிசீமையிலே' மிக மிக விருப்பமான பாடல்.'' என்கிறார்.

'இந்த கூட்டணி தோற்றதே இல்லை' - கேபிள் சங்கர்

Ilayaraja, Manirathnam, Birthday, songs, movies, Thalapathi

பட மூலாதாரம், Ayngaran

படக்குறிப்பு, மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த தளபதி திரைப்படம்

மணிரத்னம், இளையராஜா கூட்டணி குறித்து நடிகரும், இயக்குநரும், இசை விமர்சகருமான கேபிள் சங்கர், ''தமிழ்சினிமாவில் அந்த பத்தாண்டு திரும்ப வராதா என்று சொல்லும் அளவுக்கு இரண்டு பேரும் முத்திரை பதித்து இருக்கிறார்கள். மணிரத்னம் படங்களுக்கு முன்பு இளையராஜா ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தாலும், தனித்துவமான பின்னணி இசையை தந்து இருந்தாலும் மணிரத்னம் படங்களுக்கு அதிலிருந்து மாறுபட்டு அல்லது புதுமையான இசையை கொடுத்தார் என்ற சொல்லலாம்.

மணிரத்னம் முதல் படமான 'பல்லவி அனுபல்லவி'யில் வரும் பின்னணி இசை, பாடல்கள் அவ்வளவு பிரஷ். முதல் படத்தில் இருந்தே இவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி செட்டாகி இருந்தது. தமிழில் மெளனராகம், தளபதி, அஞ்சலி, நாயகன், அக்னிநட்சத்திரம் என பல படங்களில் அது எதிரொலித்தது. இந்த கூட்டணியில் வந்த படங்கள் சுமாராக போய் இருக்கலாம். ஆனால், இவர்கள் இணைந்து கொடுத்த பாடல்கள் தோற்றதே இல்லை.

முதலில் இருந்து கடைசியாக இணைந்த படம் வரை இருவரும் வெற்றிகரமான பாடல்களை கொடுத்தார்கள். தனக்கு வழக்கமான இசையை மணிரத்னம் படத்துக்கு இளையராஜா கொடுக்கவில்லை. கொஞ்சம் ஸ்பெஷலாக அல்லது வித்தியாசமாக கொடுத்தார். அந்த பத்தாண்டில் ஒரு சகாப்தத்தை கொடுத்தார்கள். நாயகன் படத்தின் பல காட்சிகளை இளையராஜாவின் இசை பிரமாதப்படுத்தியது.

அஞ்சலியை நான் முக்கியமான படம் என்பேன். அது, இளையராஜாவின் 400வது படம். ஆனாலும், அஞ்சலி இன்றும் ரசிக்கப்படுகிறது. அந்த காலத்திலேயே இசையில் அவ்வளவு புதுமைகள் செய்து இருந்தார். அக்னிநட்சத்திரம், நாயகன், மெளனராகத்தில் அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும். பகல்நிலவு படத்தில் வரும் பூமாலையே தோள் சேர வா பாடலை உன்னிப்பாக கவனித்தால் அது புது விதமான முயற்சியாக தெரியும்.

அக்னி நட்சத்திரம் படத்தில் அண்ணன், தம்பி பிரச்னையை கூட தனது இசையால் வேறுபடுத்தி காண்பித்து இருப்பார் இளையராஜா. நாயகன் படத்தில் போலீஸ் கமிஷனர் கமல் வீட்டுக்கு வந்து பேசும்போது ஓர் இசை வரும். இது தென்பாண்டி சீமையிலே இன்னொரு வெர்சன் வரும். அதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும். இந்தியாவை தாண்டியும், உலக அளவில் தளபதி பாடல், பின்னணி இசை கொண்டாடப்பட்டது'' என்கிறார் கேபிள் சங்கர்

'அனைத்திலும் கலக்கியிருக்கிறார்கள்' - சுப்பு பஞ்சு

Ilayaraja, Manirathnam, Birthday, songs, movies, Nayagan

பட மூலாதாரம், Ayngaran

படக்குறிப்பு, மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான நாயகன்.

இளையராஜாவை அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர், கதாசிரியர் பஞ்சு அருணாசலத்தின் மகனும் தயாரிப்பாளர், நடிகருமான சுப்புபஞ்சு, ''நான் சின்ன வயதில் அதிகம் பார்த்த படம் அக்னி நட்சத்திரம், பகல்நிலவு, தளபதி. இளையராஜா மாமாவின் பெரும்பாலான படங்களை ரிலீசுக்கு முன்பே பார்த்துவிடுவேன். சிறப்பு காட்சிக்கு அழைப்பு வரும்போது நான் பிரிவியூ தியேட்டரில் தவறாமல் ஆஜராகிவிடுவேன். அந்த வகையில் மணிரத்னம், இளையராஜா கூட்டணியில் வந்த பாடல்களில் தளபதி படத்தில் வரும் காட்டுக்குயிலே மனசுக்குள்ள, நாயகன் படத்தில் வரும் அந்திமழை மேகம், மெளனராகத்தில் வரும் மன்றம் வந்த தென்றலுக்கு, அஞ்சலி படத்தில் வரும் அஞ்சலி அஞ்சலி, அக்னிநட்சத்திரத்தில் நின்னுக்கோரி வர்ணம் எனக்கு விருப்பமான பாடல்கள். இந்த கூட்டணி வெஸ்டன், போக், மெலோடி என எல்லா ஜானரிலும் கலக்கியிருக்கிறார்கள்.'' என்கிறார்

'அடி ராக்கம்மா கையை தட்டு' - சிவா அனந்த்

தயாரிப்பாளர், பாடலாசிரியர் சிவா அனந்த்
படக்குறிப்பு, தயாரிப்பாளர், பாடலாசிரியர் சிவா அனந்த்

மணிரத்னம் படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவரும், பாடலாசிரியருமான சிவா அனந்த், '' தென்பாண்டி சீமையிலே(நாயகன்), அடி ராக்கம்மா கையை தட்டு(தளபதி), தூங்காத விழிகள் இரண்டு (அக்னி நட்சத்திரம்), பூமாலையே தோள் சேரவா (பகல்நிலவு), சின்ன சின்ன வண்ணக்குயில்(மெளனராகம்) பாடல்களை பிடிக்கும்'' என்கிறார்

Ilayaraja, Manirathnam, Birthday, songs, movies, AgniNatchathiram

பட மூலாதாரம், LeoMusicTamil

படக்குறிப்பு, அக்னிநட்சத்திரம் திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான ஒரு பூங்காவனம் புதுமணம் பாடல்.

'ஒரு பூங்காவனம் பாடலை கச்சேரியில் பாடியிருக்கிறேன்' - பாடகி அனிதா

இளையராஜா இசைக்குழுவில் பாடுபவரும், பாடகியுமான அனிதா, '' சின்னதாய் அவள்(தளபதி), இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது (அஞ்சலி), ஒரு பூங்காவனம்(அக்னிநட்சத்திரம்), பனிவிழும் நிலவு(மெளனராகம்), தென்பாண்டி சீமையிலே (நாயகன்) பாடல்கள் பிடிக்கும். இந்த பாடல்களில் ஒரு பூங்காவனம் பாடலை நான் இளையராஜா சார் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன், அது மறக்கமுடியாத தருணம்'' என்கிறார்

பாடலாசிரியர் மோகன்ராஜன்
படக்குறிப்பு, பாடலாசிரியர் மோகன்ராஜன்

'மணிரத்னத்துக்கு விபத்தை ஏற்படுத்திய பாடல்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

''இளையராஜா இசையமைத்த ஆயிரமாவது படமான தாரை தப்பட்டையில் வதன வதன என்ற பாடலை நான் எழுதியிருக்கிறேன். அதை நான் பெருமையாக கருதுகிறேன். இளையராஜா, மணிரத்னம் கூட்டணியில் உருவான படங்கள், பாடல்கள், அந்த பாடல்களை கவிஞர் வாலி உள்ளிட்டோர் எழுதியது தமிழ் சினிமாவின் முக்கியமான பதிவுகள். இந்த கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக நான் பார்ப்பது ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கிற நம்பிக்கை, நட்பு. குறிப்பாக, காட்டுக்குயிலே மனசுக்குள்ளே பாடல் ரொம்ப பிடிக்கும். அந்த பாடலுக்கு மிக அருமையான விஷூவல் எடுத்து இருப்பார் மணிரத்னம்.

'என் நண்பன் போட்ட சோறு

நிதமும் தின்னேன் பாரு

நட்பைக் கூட கற்பைப்போல

எண்ணுவேன்' என்ற வரி படத்தின் கருவை சொல்லும். ரஜினி சார் கேரக்டரை இந்த வரிகளை அழகாக சொல்லியிருப்பார் கவிஞர் வாலி. அதை வெகுவாக ரசித்து இருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் சுகாசினியுடன் பணியாற்றியபோது இந்த பாடல் பின்னணி குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை சொன்னார். இந்த பாடலை கேட்டு மிகவும் மகிழ்ந்து போன மணிரத்னம், பாடலை ரசித்துக்கொண்டே காரை எடுக்கும்போது பின்னால் இடித்து விபத்தை ஏற்படுத்திவிட்டாராம். மணிரத்னம் மாதிரியான அமைதியான மனிதரையே விபத்து ஏற்படுத்திய பாடல் இது.'' என்கிறார் பாடலாசிரியர் மோகன்ராஜன்

''அஞ்சலி படத்தில் இரவு நிலவு பாடல், அந்த சிச்சுவேஷன் பிடிக்கும். நாயகன் படத்தில் வரும் நிலா அது வானத்து மேல பாடலை நாம் கமர்ஷியல் பாடலாக கொண்டாடினோம். சமீபத்தில் அது ஒரு தாலாட்டு பாடல் என்ற உண்மை வந்தது. நானும் வியந்தேன். நாயகன் படத்திற்கு உயிராக வரும் தென்பாண்டி சீமையிலே பாடலுக்கு மாற்றாக, இந்த பாடலை, ட்யூனை வைத்து இருக்கிறார்கள். தென்பாண்டி சீமையிலே செட்டாகி விட்டால், அந்த தாலாட்டை இந்த பாடலை இப்படி மாற்றி இருக்கிறார்.

பொதுவாக இளையராஜாவிடம் எந்த இயக்குனரும் பிரஷர் கொடுத்து, உரிமையுடன் கேட்டு வாங்கவது கஷ்டம். ஆனால், மணிரத்னம் சார் அந்த இடத்தை, பாடலை மிஸ் பண்ண மனசு இல்லாமல், நிலா அது வானத்து பாடலை கொண்டு வந்து இருக்கிறார்.

சினிமாவை சுத்தி நிறைய பேர் இருப்பார்கள். சினிமா சிலரை சுத்தி இருக்கும். அதில் ரஜினி, கமல் போன்றவர்கள் வரிசையில் இளையராஜா, மணிரத்னத்திற்கு தனி இடம் உண்டு. இப்போதும் கார்த்திக் சுப்பராஜ், மாரிசெல்வராஜ், தியாகராஜன் குமாரராஜா படங்களுக்கு இளையராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார். இன்றைக்கும் மணிரத்னம் அழைத்தால் அவர் வீட்டுக்கு வாசலுக்கு ஓடக்கூடிய ஹீரோக்கள் இருக்கிறார்கள். இது யாருக்கும் அமையாது.'' என்கிறார் மோகன்ராஜன்

Ilayaraja, Manirathnam, Birthday, songs, movies, idhayakoyil

பட மூலாதாரம், Raj4Ksongs

படக்குறிப்பு, இளையராஜா இசையில் உருவான இதயம் ஒரு கோயில் பாடலில் நடித்த மோகன் - அம்பிகா.

'சின்ன ரோல்தான், ஆனால் பாடல்களால் பிரபலம் ஆனேன்'

பிபிசி தமிழிடம் நடிகை அம்பிகா பேசுகையில், ''மணிரத்னம், இளையராஜா கூட்டணியில் உருவான இதய கோயில் படத்தில் நான் நடித்தேன். மோகன் காதலியாக வருவேன். கதைப்படி எனக்கு சின்ன ரோல்தான், ஆனால் பாடல்களால் நானும் பேசப்பட்டேன். குறிப்பாக, வானுயர்ந்த சோலையிலே பாடலை யார்தான் மறக்க முடியும். இதயம் ஒரு கோவில் அவ்வளவு இனிமையாக இருக்கும். இசையை மலராக நானும் சூட்டுவேன் அந்த பாடல் வரிகள் இன்னும் அழகு.

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ பாடல் உணர்ச்சிபூர்வமாக இருக்கும். இளையராஜாவின் ட்யூனும், இசைக்கருவிகள் செய்த மாயமும், பாடல் படமாக்கப்பட்ட விதமும் அந்த பாடலை இன்றும் ரசிக்க வைக்கின்றன. அந்தவகையில் எனக்கு ஒருவகையில் பெருமை.'' என்றார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு