டாஸ்மாக் கடை மூடிய பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புழங்கும் மது - தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், Getty Images
''தமிழகத்தில் தற்போது வரை 863 எஃப்எல்-2 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் பாரம்பரியமான கிளப்கள் தவிர, 400 முதல் 500 வரையிலான எஃப்எல்-2 உரிமங்கள் முந்தைய ஆட்சிகளில் வழங்கப்பட்டுள்ளன''
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் பார்கள் போல செயல்படுவதற்கு, முந்தைய அரசுகளால் எஃப்எல்-2 உரிமங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷின் வார்த்தைகள் இவை.
எஃப்எல்-2 உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், புதிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தங்கள் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளும் உண்மையில்லை என்று கூறும் எஃப்எல்-2 சங்க நிர்வாகிகள், சிறு நகரங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்காகவே இந்த மன்றங்களை நடத்துவதாக தெரிவித்தனர்.
ஆனால் இவற்றுக்கு அபராதம் விதிப்பதா, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக உரிமத்தை ரத்து செய்வதா என்பது குறித்து இன்னும் ஒரு மாதத்தில் முடிவெடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக அரசு புதிதாகப் பொறுப்பேற்றதும், 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் தற்போது 500-க்கும் அதிகமான மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பின்படி, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டாலும், அங்கு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப்எல்-2 உரிமம் பெற்றுள்ள 'லெவன் டூ லெவன்' பார்கள் மூடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து, கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரத்தில் வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்த தகவலின்படி, தமிழகத்தில் 863 எஃப்எல் 2 உரிமங்கள் (மனமகிழ் மன்றங்கள்–RECREATION CLUB) வழங்கப்பட்டுள்ளன.
மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்படும் எஃப்எல்-2 உரிமம் என்பது என்ன?
தமிழகத்தில் வெளிநாட்டு மதுபானங்களை விற்கவும், சேமித்து வைக்கவும் வெவ்வேறு விதமான உரிமங்கள் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகத்தால் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) 1981 விதிகளின்படி வழங்கப்படுகின்றன.
இவற்றில் எஃப்எல்-2 உரிமம் என்பது, தனியுரிமை அல்லாத மனமகிழ் மன்றங்களில் மதுபான வகைகளை இருப்பு வைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களின் விருந்தினர்களுக்கும் வழங்குவதற்கான உரிமம் என்று ஆணையரகத்தின் குறிப்பு தெரிவிக்கின்றது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் காஸ்மோபாலிடன் கிளப், தி இங்கிலீஷ் கிளப், ஜிம்கானா கிளப், கேரளா கிளப், சோஷியல் கிளப் போன்ற பழமையான குறிப்பிட்ட அளவு உறுப்பினர்களைக் கொண்ட மனமகிழ் மன்றங்களுக்கு மட்டுமே எஃப்எல்-2 உரிமம் வழங்கப்பட்டு, ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வந்தது.
சென்னையின் மிகப் பழமையான கிளப் ஒன்றின் நிர்வாகியாகவுள்ள ஒருவர், தனது பெயரைக் குறிப்பிட விரும்பாமல் இந்த எஃப்எல்-2 உரிமம் எப்படி வழங்கப்பட்டு வந்தது என்பதை விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
''எங்களுடைய கிளப் நூறாண்டு பழமையானது. பொழுதுபோக்கு, விருந்தோம்பல், உணவு, விளையாட்டு அம்சங்களுக்குத் தனித்தனி கட்டமைப்புகள் உள்ளன. டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், மதுக்கூடம், உணவுக்கூடம், தங்கும் அறைகள் இருக்கின்றன. இதற்கு ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் சொத்து வரி செலுத்துகிறோம். குறிப்பிட்ட அளவு உறுப்பினர்கள்தான் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கும் விதிமுறை, சேர்க்கைக் கட்டணம் உள்ளது. இத்தகைய அம்சங்களைக் கொண்டே அந்த உரிமம் வழங்கப்பட்டது.'' என்றார் அவர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஓய்வு பெற்ற துணை ஆட்சியரும், கலால் துறையில் பணியாற்றியவருமான முருகன், ''2011-ஆம் ஆண்டு வரையிலும் தமிழகத்தில் பாரம்பரியமாக இருந்த கிளப்களுக்கு மட்டுமே, இந்த உரிமம் வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது. அதற்குப் பின்பே, இந்த உரிமத்தைப் பயன்படுத்தி, தனியார் சிலர் பெரியளவிலான பார்களை செயல்படுத்தத் துவங்கினர். அது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, இப்போது தனியார் மதுக்கடைகள் என்பது போன்று பெருகிவிட்டன.'' என்றார்.
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் வழங்கப்படும் மது விற்பனை உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, இதுவரை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் வழக்கறிஞர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலமனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டில், எஃப்.எல்- 2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் உரிய விதிகளின்படி இயங்குவதை உறுதி செய்வது அரசின் கடமை என்று சுட்டிக்காட்டியது.
''மனமகிழ் மன்றங்களில் விளையாட்டு அம்சங்கள் இருக்க வேண்டும். ஆனால் பல மன்றங்களில் இவை எதுவுமில்லை. மது விற்பனை மட்டுமே நடக்கிறது. எஃப்.எல்-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் டாஸ்மாக் கடை போல் செயல்படக் கூடாது. உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.'' என்றும் நீதிபதிகள் அந்த உத்தரவில் குறிப்பிட்டு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, காவல்துறை அதிகாரிகளுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.
ஆனால் இப்போதும் சில எஃப்எல்-2 பார்களில் யார் சென்றாலும் மது விற்பனை செய்யப்படுவது பிபிசி தமிழின் களஆய்வில் தெரியவந்தது. சமீபத்தில் மதுக்கடை மூடப்பட்ட பகுதிகளிலும் இந்த மனமகிழ் மன்றங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் கோவை மாவட்டத் தலைவர் தமிழ், ''கோவையில் பல பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், அதே பகுதிகளில் எஃப்எல்-2 பார்கள் மட்டும் திறந்திருக்கின்றன. இதனால், அரசின் வருவாய் தனியாருக்குச் செல்கிறது.'' என்றார்.

பட மூலாதாரம், TN Government
எஃப்எல்-2 உரிமம் பெறுவதற்கான விதிகள்
எஃப்எல்-2 உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து, டாஸ்மாக் நிர்வாகத்திடம் இருந்து சில தகவல்களை பிபிசி பெற்றது. அதிலுள்ள தகவல்களின்படி, இத்தகைய மனமகிழ் மன்றங்களுக்கு சொந்தமாகக் கட்டடம் அல்லது நிலம் இருக்க வேண்டுமென்பது அவசியமாகக் குறிப்பிடப்படவில்லை. மாறாக வாடகை ஒப்பந்தப் பத்திரம் நகல் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது.
- மனமகிழ் மன்றம் ஏதாவது ஒரு பெயரில் பதிவு செய்யப்பட்டு, 3 ஆண்டுகள் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மொத்தம் 12 பேர் உறுப்பினர்களாக இருந்தாலே மனமகிழ் மன்றத்துக்குப் பெயரிட்டு சங்கம் என்ற முறையில் பதிவுத்துறை சட்டம் சங்கப் பதிவுகள் விதி 13-இன் கீழ் பதிவு செய்ய பதிவுத்துறை அனுமதிக்கிறது.
- செயலாளர் வாக்குமூலம், சங்கப்பதிவுச் சான்று, மன்றத்தின் உறுப்பினர் பட்டியல், உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து பெறப்பட்ட சொத்துவரி ரசீது, வாடகை ஒப்பந்தப் பத்திரம், தீயணைப்புத் துறை தடையின்மைச் சான்று, சங்கத்தின் நோக்கங்கள், பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டட உறுதித்தன்மைச் சான்று, வட்டாட்சியர் வழங்கிய கட்டட உரிமம், உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணம், காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கடிதம் அல்லது காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் கடிதம், தணிக்கை அறிக்கை, வருமான வரித்துறை மதிப்பீடு, ஒருங்கிணைக்கப்பட்ட கட்டட வரைபடம், கலால் உதவி ஆணையர் குறிப்பு போன்றவை மட்டுமே கோரப்பட்டுள்ளன.
- மனமகிழ் மன்றங்களுக்கான விதிகளின்படி, சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு அல்லது அவர்களின் விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படவேண்டும்.
- ஓர் ஊரில் பதிவு செய்யப்படும் சங்கம் தமிழ்நாட்டில் வேறு எந்தவொரு இடத்திலும் எஃப்எல்-2 உரிமம் பெறலாம்.
ஆனால் இந்த எஃப்எல்-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களில் எந்தக் கட்டுப்பாடும், விதிமுறைகளும் இன்றி, ஒரே நேரத்தில் உறுப்பினர்களாக இல்லாத பல நூறு பேருக்கும் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதைத்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் தங்களுடைய உத்தரவுகளின் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மனமகிழ் மன்றங்கள் பதிவு செய்யப்பட்ட ஊரையும் தாண்டி வேறு எந்த நகரத்திலும் எஃப்எல்-2 உரிமம் பெறலாம் என்பதால் தமிழ்நாட்டின் பிற ஊர்களில் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் கூட சென்னையில் எஃப்எல்-2 உரிமம் பெறலாம் என்ற நிலை இருக்கிறது.
எஃப்எல் 2 உரிமம் பெற்றுவிட்டால், வெறும் 12 பேர் உறுப்பினர்களாக இருக்கும் சங்கத்துக்கும் கூட, 'இத்தனை பேருக்கு இவ்வளவுதான் மது விற்பனைக்கு அனுமதி' என்ற அளவின்றி, 3 ஆயிரம் யூனிட் அல்லது அதற்கும் மேலாகவே மது வழங்கப்படுகிறது என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர்.
"இதில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு வழங்கப்படும் விலையில்தான் மனமகிழ் மன்றங்களுக்கும் மது வழங்கப்படுகிறது. அவற்றை எவ்வளவு விலைக்கு விற்க வேண்டுமென்ற கட்டுப்பாடும் எதுவுமில்லை. அரசு மதுக்கடையை விட, 10 ரூபாய், 20 ரூபாய் மட்டுமே கூடுதல் விலைக்கு விற்பதால் அத்தகைய எஃப்எல்-2 மதுக்கூடங்களுக்கும் பலர் படையெடுக்கிறார்கள்" என்று சொல்கிறார் அந்த அதிகாரி.

இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது எஃப்எல்-3 உரிமம் பெற்றுள்ள ஓட்டல் உரிமையாளர்கள்தான் என்று கோயம்புத்தூர் போர்டிங் அண்ட் லாட்ஜிங் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அண்ணாமலை சிவகுமார் தெரிவித்தார்.
தனியார் நட்சத்திர விடுதிகளில் (ஓட்டல்) மதுக்கூடங்களுக்கு வழங்கப்படுவதே எஃப்எல்-3 உரிமம் ஆகும்.
எஃப்எல் 3 உரிமம் குறித்து விளக்கிப் பேசிய அண்ணாமலை சிவகுமார், ''டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்துதான் எல்லோருக்கும் மதுபானம் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் ஓட்டல்களுக்கு வழங்கப்படும் (எஃப்எல் 3) மதுபானங்களுக்கு மட்டும் வாட் எனப்படும் மதிப்பு கூடுதல் வரி 14.5 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புதிய அரசு இதில் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. செஸ் வரி ஒரு சதவீதம், வாட் 14.5 சதவீதம் என எல்லாம் சேர்த்து மதுபானங்களை விற்க வேண்டியுள்ளது.'' என்றார்.
அதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''ஓட்டல்களுக்கு சொந்தக்கட்டடம், அறைகள், தனியாக மதுக்கூடம், உணவுக்கூடம் எல்லாம் வேண்டும். ஆண்டுதோறும் சொத்துவரி செலுத்த வேண்டும். அதற்கு மேல் இவ்வளவு வரியும் செலுத்தி, மதுபானத்துடன் தின்பண்டங்களும் சேர்த்துத்தர வேண்டியிருப்பதால் அதிக விலைக்கு மதுபானங்களை விற்க வேண்டியிருக்கிறது.'' என்றார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையால் வழங்கப்படும் இந்த உரிமங்களுக்கு ஆண்டுதோறும் உரிமக்கட்டணமும் செலுத்தி அதைப் புதுப்பிக்க வேண்டும். இன்றைய நிலையில், எஃப்எல்-2 எனப்படும் மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.10 லட்சத்து 40 ஆயிரமும், எஃப்எல்-3 எனப்படும் ஓட்டல் மதுக்கூடங்களுக்கு ரூ.6 லட்சத்து 40 ஆயிரமும் கட்டணமாகவுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகள், மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகின்றன. எஃப்எல்-2 மதுக்கூடங்கள் பிற்பகல் 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படுகின்றன. ஓட்டல்களில் உள்ள எஃப்எல்-3 மதுக்கூடங்கள் இரவு 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
அவற்றிலும் அரசு அறிவிக்கும் மது விற்பனைக்கான தடை நாட்கள் (Dry Day) தவிர மற்ற நாட்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் 5 நட்சத்திர விடுதிகளுக்கான எஃப்எல்-3 உரிமத்துக்கான கட்டணம் ரூ.32 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உரிமம் பெற்ற ஓட்டல்கள் மட்டுமே, வெளிநாட்டு மதுபானங்களை டீலரிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யும் உரிமை பெற்றுள்ளன. மற்ற ஓட்டல் மதுக்கூடங்கள் அனைத்தும் டாஸ்மாக் மதுபானங்களை மட்டுமே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது.
"ஓட்டல் மதுக்கூடங்களுக்கு (எஃப்எல் 3) இவ்வளவு முதலீடு மற்றும் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ள நிலையில், எஃப்எல் 2 உரிமம் பெறுவதற்கு, நிரந்தர கட்டடம் கூட தேவையில்லை, வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்ட 1500 சதுரஅடிக்கான ஒரு ஆர்சி கட்டடம் மற்றும் காலியிடம் காண்பித்தால் போதும் என்ற நிலை உள்ளது" என்கிறார் சிவகுமார்.
''மனமகிழ் மன்றங்கள் அடித்தட்டு மக்களுக்கானவை''

எஃப்எல்-2 உரிமங்கள் பெற்று, தனியார் பார்களாக செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு எஃப்எல்-2 உரிமதாரர்கள் சங்கத்திடம் சில கேள்விகளை பிபிசி முன்வைத்தது.
அதற்கு பதிலளித்த சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் பரணி, ''விதிமீறல்களே இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் எல்லாக் குற்றச்சாட்டுகளும் உண்மையில்லை. இதுதொடர்பாக விவாதிக்க சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம், கடந்த 26-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடந்தது. அதில் தற்போதுள்ள சூழ்நிலையை விளக்கி, விதிமுறைகளின்படி மன்றங்களை நடத்த அறிவுறுத்தியுள்ளோம்.'' என்றார்.
''டில்லி ஜிம்கானா கிளப் தொடர்பான ஒரு வழக்கில், அந்தச் சங்கத்தில் உறுப்பினராக 30 ஆண்டுகளாக பலரும் காத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாருக்கும் வாய்ப்பே வழங்கவில்லை. தமிழகத்திலுள்ள பாரம்பரிய கிளப்களுக்கு அக்காலத்தில் அரசின் பல ஏக்கர் இடங்கள், மிகக்குறைந்த தொகைக்கு விலைக்கும், குத்தகைக்கும் தரப்பட்டுள்ளன. நாங்கள் சிறு நகரங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்காக இந்த மன்றங்களை நடத்துகிறோம். அதனால் அந்த கிளப்களுடன் இவற்றை ஒப்பிடுவது சரியாக இருக்காது. அதேபோன்று அரசு குறைந்த குத்தகைக்கு நிலங்களை வழங்கினால் அதை விட சிறப்பான சேவையுடன் இந்த மனமகிழ் மன்றங்களை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறோம்.'' என்றார் பரணி.
இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகத்தால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி, புதிய அரசின் மக்கள் நல முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது எனவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள எஃப்எல்-2 உரிமதாரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுக்காமல் செயல்படுவதெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையும் சங்க நிர்வாகிகள் பகிர்ந்தனர்.
எஃப்எல்-2 உரிமம் பற்றி கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய துறை அமைச்சர் விக்னேஷ், ''தமிழகத்தில் 863 எஃப்எல்-2 பார்கள் தனியார் பார்கள் போல இயங்கி வருகின்றன. இவற்றில் பாரம்பரியமான கிளப்கள் தவிர, மற்றவற்றை நிரந்தரமாக மூடுவதா அல்லது அபராதம் விதித்து வரைமுறைப்படுத்துவதா என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்.'' என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































