ஹஜ் பயணத்தில் பந்துவீச்சு பாணியில் சாத்தான் மீது கல் எறிந்த வசீம் அக்ரம் - வைரல் வீடியோ குறித்து விளக்கம் என்ன?

வசீம் அக்ரம் தனது நண்பர்களான மிஸ்பா, ஃபகர் ஆகியோருடன் ஹஜ் செய்யச் சென்றிருந்தார்.

பட மூலாதாரம், fakhar alam

படக்குறிப்பு, வசீம் அக்ரம் தனது நண்பர்களான மிஸ்பா, ஃபகர் ஆகியோருடன் ஹஜ் செய்யச் சென்றிருந்தார்.
    • எழுதியவர், ரஷீத் ஷகூர்
    • பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாத்தின் முக்கிய அடிப்படை கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு தங்களது வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், இதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் 'சுல்தான் ஆஃப் ஸ்விங்' என்று பிரபலமாக அழைக்கப்படுபவருமான வசீம் அக்ரம், ஒரு வைரல் வீடியோ காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதோடு இது குறித்து முடிவற்ற விவாதமும் கிளம்பியுள்ளது.

இந்த வீடியோவில், வசீம் அக்ரம் மினாவில் சாத்தான் மீது கல் எறிவதைக் காண முடிகிறது. இது 'ரமி' என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் வசீம் அக்ரம் சாத்தான் மீது கல் எறியக் கையாண்ட முறை சாதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. அவர் தனது பந்துவீச்சு பாணியில் இந்தச் செயலைச் செய்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளராக வசீம் அக்ரம் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தனது பந்துவீச்சு பாணியில் கல் எறிந்த அவரது இந்த விதம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஒருபுறம் இது சுவாரசியமான விதம் என்று கூறப்பட்டாலும், மறுபுறம் சாத்தான் மீது கல் எறியும் இந்தச் செயல் தீவிரத்தன்மை, கண்ணியமான விதம் மற்றும் மரியாதையுடன் செய்யப்பட வேண்டும் என்று விமர்சனம் எழுந்தது. எனவே, பந்துவீச்சு பாணியில் கல் எறிய வேண்டிய அவசியம் இல்லை என பலரும் கூறினர்.

இந்த விவாதத்தில் வெளிவந்த எதிர்வினைகளில், சாத்தான் மீது கல் எறியும்போது வசீம் அக்ரமுக்குத் தனது கிரிக்கெட் காலம் நினைவுக்கு வந்திருக்கும் என்று பலர் கூறினர், அப்போது அவர் பெரிய பெரிய பேட்ஸ்மேன்களைத் தனது ஸ்விங் பந்துவீச்சால் நிலைகுலையச் செய்தார். மேலும் அவர் ரமியின் இந்தச் செயலிலும் அதே பாணியைக் கையாண்டுவிட்டார் என்றனர்.

சமூக ஊடகங்களில் சில எதிர்வினைகள், ஹஜ் என்பது பொழுதுபோக்கு அல்ல, இதில் மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றவாறு இருந்தன. வசீம் அக்ரமின் இந்தச் செயலை ஆதரிப்பவர்கள், கல் எறிவதன் நோக்கம் எதுவோ, அதை வசீம் அக்ரம் நிறைவேற்றிவிட்டார் என்று பதிலடி கொடுத்தனர்.

பாகிஸ்தான் உலமா கவுன்சில் என்ன சொல்கிறது?

பாகிஸ்தான் உலமா கவுன்சிலின் தலைவரான ஆலிமா தாஹிர் அஷ்ரஃபி இது பற்றிக் கூறும்போது, "வசீம் அக்ரமின் அனைத்து ஹஜ் வழிபாடுகளையும் விட்டுவிட்டு, எல்லாரும் அவரது பந்துவீச்சு பாணியில் சாத்தான் மீது கல் எறிந்ததை மட்டுமே விமர்சிக்க விரும்புகிறார்கள், ஏதோ அவர் ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டது போல. இதை கூறுகிறார்கள்" என்கிறார்.

"ஹஜ் என்பது ஒரு தீவிரமான செயல் மற்றும் ரமி நேரத்திலும் தீவிரத்தன்மை இருக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு நபர் தடையோ அல்லது அதனால் எந்தப் பாவமும் ஏற்படாத ஒரு செயலைச் செய்திருக்கும்போது, இதுபோன்ற விமர்சனங்கள் எந்தப் பொருளும் அற்றவை."

"ஒருவேளை தவறு ஏதேனும் செய்திருந்தாலும் கூட, அதைச் சீர்திருத்தும் முறை இதுவல்ல, இதைத்தான் பலர் கையாண்டுள்ளனர். மற்றவர்களின் சிறிய சிறிய தவறுகளையும் குறைபாடுகளையும் நாம் மன்னிக்க அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக" என்று கூறுகிறார் அஷ்ரஃபி.

இந்த வீடியோ உருவான கதை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த ஹஜ் பயணத்தில் வசீம் அக்ரமுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னாள் கேப்டனான மிஸ்பா-உல்-ஹக் மற்றும் பிரபல விளையாட்டுத் தொகுப்பாளர் ஃபகர் ஆலம் ஆகியோரும் இருந்தனர்.

ஃபகர் ஆலம் இந்த வீடியோவைப் பற்றி பிபிசி ஹிந்தியிடம் பேசும்போது, "நாங்கள் மூவரும் அதிகாலையிலேயே ரமிக்காகச் சென்றுவிட்டோம், அந்த நேரத்தில் அதிகக் கூட்டமும் இல்லை. நாங்கள் மிகுந்த நிம்மதியுடனும் அமைதியுடனும் சாத்தான் மீது கல் எறிந்தோம். இந்த நேரத்தில், மக்கள் பொதுவான முறையிலிருந்து மாறியும் கல் எறிந்துள்ளனர் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது," என்கிறார்.

"யாரோ துப்பாக்கியால் சுடுவது போன்ற பாணியில் கல் எறிவதையும், யாரோ ஓடி வந்து கல் எறிவதையும் போன்ற பல வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் ஒவ்வொரு முஸ்லிமின் ஆர்வமும் உணர்வும் மிகவும் நிறைந்து காணப்படும். நான் தான் வசீம் அக்ரமிடம், நான் வீடியோ எடுப்பதற்காக நீங்கள் உங்கள் பந்துவீச்சு பாணியில் கல் எறியுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன்."

ஃபகர் ஆலம் மேலும் கூறுகையில், "வசீம் அக்ரம் முதலில் நன்றாக இருக்காது, மக்கள் என்ன சொல்வார்கள் என்று கூறினார். ஆனால் நான் அவரிடம், இதன் நோக்கம் எந்த வகையான விளம்பரமும் இல்லை என்று கூறினேன். நமது துணைக்கண்டத்தில் உங்களுக்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பதால், அவர்களுக்கு இந்த விஷயம் வித்தியாசமாகத் தெரியும் மற்றும் அவர்கள் இதனால் நிச்சயம் ஈர்க்கப்படுவார்கள் என்றேன். நான் அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது, அதன்பிறகு நான் இந்த வீடியோவை எடுத்தேன்" என்றார்.

"இதை பெரும்பாலான மக்கள் மிகவும் விரும்பினர். சில தரப்பிலிருந்து ஆட்சேபனைகள் வந்தன, அதற்கு நான் என்ன சொல்வேன் என்றால் அல்லாஹ் அனைவரின் இதயங்களையும் பெரிதாக்கி, அவற்றில் வெளிச்சத்தைப் பாய்ச்சட்டும். மனிதனால் தவறு நடக்கும் என்பதை அறிந்த அல்லாஹ், அதை மன்னிப்பார். அவன் தன் அடியாரின் எண்ணத்தையும் நன்கு அறிவான், அவனே தீர்ப்பு வழங்கும் ஆற்றல் கொண்டவன். தீர்ப்புகளைச் சொல்லிக் கொண்டு திரிய பூமியில் யாரும் இல்லை. இந்த வீடியோவின் பின்னணியில் இருந்த எண்ணத்தையும் அல்லாஹ் நன்றாக அறிவார். வசீம் அக்ரமை இந்த பாணியில் பார்த்துவிட்டு, பல மக்கள் ஹஜ்ஜின் பக்கம் ஈர்க்கப்படுவார்கள் என்பதுதான் இந்த வீடியோவின் நோக்கமாக இருந்தது."

ஹஜ் எண்ணம் எப்படி வந்தது?

மினாவில் வசீம் அக்ரம் பந்துவீச்சு பாணியில் சைத்தான் மீது கல் எறிந்ததற்காக அவர் விமர்சிக்கப்படுகிறார்.

பட மூலாதாரம், Bob Levey/Getty Images

படக்குறிப்பு, மினாவில் வசீம் அக்ரம் பந்துவீச்சு பாணியில் சாத்தான் மீது கல் எறிந்ததற்காக அவர் விமர்சிக்கப்படுகிறார்.

"இந்த ஹஜ்ஜில் எங்களுடன் இருந்த என் நண்பர் உஸ்மான், மூன்று நான்கு ஆண்டுகளாக என்னிடம் ஹஜ் செய்யுமாறு கூறிக்கொண்டிருந்தார். நான் அவரிடம், நேரம் வரும்போதெல்லாம் நான் நிச்சயம் செய்வேன் என்று கூறி வந்தேன். மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு மிஸ்பா, ஃபகர் மற்றும் நான் இந்த முறை ஹஜ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். எனக்கு இப்போது அறுபது வயதாகப் போகிறது என்பதால், நான் இந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியெடுத்தேன்." என்று வசீம் அக்ரம் கூறுகிறார்.

"இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. கடினமாக இருந்தபோதிலும், ஹஜ் என்பதே சிரமங்களைச் சகித்துக் கொள்வதன் பெயர் தான். நண்பர்களுடன் ஹஜ் செய்வதில் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கிறது. நீங்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் நிறையப் புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் கற்றுக் கொள்கிறீர்கள்," என்கிறார் வசீம் அக்ரம்.

வசீம் அக்ரம் ஹஜ் கடமையை முடித்த பிறகு தனது எக்ஸ் கணக்கிலும், தன்னைப்போன்ற பல சகோதர சகோதரிகளும் இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்ளத் துணிச்சல் பெற்று, ஹஜ்ஜின் பாக்கியத்தைப் பெற வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக எழுதினார்.

வசீம் அக்ரமின் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது, அதில் அவர் மதினாவில் முஹம்மது நபியின் புனித ரௌசா முன்பு நின்று கொண்டிருக்கிறார். அவரது கண்களில் கண்ணீர் வருவது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அனைவரும், இந்த இடம் அப்படிப்பட்டது தான், யாரும் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது மற்றும் கண்களில் கண்ணீர் வருவது இயல்பான விஷயம் என்று கருத்து தெரிவித்தனர்.

'ஸ்பான்சர் செய்யப்பட்ட ஹஜ் அல்ல'

வசீம் அக்ரம், மிஸ்பா-உல்-ஹக் மற்றும் ஃபகர் ஆலம் ஆகியோர் இந்த ஹஜ்ஜின் போது, அவர்களின் இந்த ஹஜ் பணம் செலுத்தப்பட்ட அல்லது ஸ்பான்சர் செய்யப்பட்டது என்ற பேச்சுகளையும் கேட்க நேரிட்டது.

ஃபகர் ஆலம் தனது ஒரு வீடியோவில் இதை மறுத்து, "அல்லாஹ்வின் பேரருளால் நாங்கள் மூவரும் இந்த ஹஜ்ஜை எங்கள் சொந்தச் செலவில் செய்தோம். அல்லாஹ் எங்களுக்கு நிறையக் கொடுத்துள்ளான், எங்களுக்கு ஏன் ஒரு ஸ்பான்சர் தேவைப்படப் போகிறது" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு