குடும்பத்தில் ஒரு மகனாக வளர்ந்த கரடி எதிர்பாரா நிகழ்வால் சர்வதேச நட்சத்திரமான கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிபிசி நியூஸ் முண்டோ
- பதவி,
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஸ்காட்லாந்தில் உள்ள டன்ப்ளேன் நகருக்கு அருகிலுள்ள ஷெரிப்முயரில் உள்ள ஆண்டி மற்றும் மேகி ராபின் ஆகியோரின் வீட்டிற்கு ஹெர்குலஸ் வந்ததிலிருந்து, அவர்கள் மூவரும் பிரிக்க முடியாதவர்களாக மாறினர்.
அவர்கள் சமையலறையில் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டு (பால் மற்றும் சர்க்கரை சேர்த்த காபி, முட்டை, சாஸேஜ்) நாளைத் தொடங்கினர். மீதமுள்ள நாளை விளையாடுவதிலும், பயிற்சி பெறுவதிலும் அல்லது ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதிலும் செலவிட்டனர்.
ஆனால் அவர்கள் தெளிவாக ஒரு குடும்பத்தைப் போல நடந்து கொண்டாலும், அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு விசித்திரமான மூவர் ஆவர்.
ஹெர்குலஸ் - அல்லது 'ஹெர்க்' என்று அழைக்கப்பட்ட அவர் - ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு கரடி.
ஆம், ஒரு கிரிஸ்லி கரடி (Ursus arctos horribilis), அதை இந்தத் தம்பதியினர் ஒன்பது மாதக் குட்டியாக இருந்தபோது தத்தெடுத்தனர். அது வளர்ந்து பெரிதானபோது 2.50 மீட்டருக்கும் அதிகமான உயரத்தையும், 190 கிலோவுக்கும் அதிகமான எடையையும் கொண்டிருந்தது.
ஒரு மகனைப் போலவே
மேகிக்கு எப்போதுமே விலங்குகள் மீது ஆர்வம் அதிகம். ஸ்காட்லாந்தில் ஒரு பண்ணையில் வளர்ந்த அவர், தனது முதல் காதல் குதிரைகள் என்று கூறுகிறார். குழந்தையாக இருந்தபோதே அவர் குதிரை சவாரி செய்யக் கற்றுக்கொண்டார் மற்றும் குதிரை தாண்டுதல் போட்டிகளில் பரிசுகளை வென்றார்.
அவரை விட 15 வயது மூத்தவரான, மரம் வெட்டும் தொழிலாளியும் மல்யுத்த சாம்பியனுமான அவரது கணவர் ஆண்டி ஒரு கரடிக்குட்டியைத் தத்தெடுக்கலாம் என்று பரிந்துரைத்தபோது, அவர் ஒரு நொடி கூட தயங்கவில்லை.
"ஆண்டி என்னிடம் முதன்முதலில், 'ஒரு கரடிக்குட்டியை வாங்கலாம் என்று நினைப்பதாகச் சொன்னால் நீ என்ன சொல்வாய்?' என்று கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. நான் ஒருபோதும் கற்பனை செய்யாதது என்னவென்றால், எங்களுக்கு அமையப்போகும் வாழ்க்கைதான்; இது ஒரு மாயாஜால உறவாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை," என்று மேகி பிபிசியிடம் கூறுகிறார்.
ஆண்டிக்கு இந்த யோசனை கனடாவில் கிடைத்தது, அங்கு "டெட் தி டெரிபிள்" என்று செல்ல பெயரிடப்பட்ட ஒரு கிரிஸ்லி கரடியுடன் சண்டையிட அவருக்கு 1,000 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. அந்த விலங்குடனான நேருக்கு நேர் மோதல் அவருக்குள் ஒரு கரடியை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.

பட மூலாதாரம், Getty Images
அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் - நியாயமான காரணங்களுடன் - இந்த யோசனை நடைமுறைக்கு சாத்தியமற்றது, பைத்தியக்காரத்தனம் என்று நம்பினர். ஆனால் ஆண்டியும் மேகியும் தங்கள் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினர். ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் தங்கள் கனவு குட்டியை அவர்கள் கண்டுபிடித்தனர்.
கரடிக்குட்டியைத் தங்க வைப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தனர், பின்னர் 67 அமெரிக்க டாலர் செலுத்தி, ஆகஸ்ட் 31, 1975 அன்று முறையாக அதைத் தத்தெடுத்தனர்.
அவர்கள் அதற்கு ஹெர்குலஸ் என்று பெயரிட்டனர். மிருகக்காட்சி சாலையில் அதன் தாயுடன் தங்கியிருந்த அதன் இரண்டு சகோதரர்களுக்கு அட்லஸ் மற்றும் சாம்சன் என்று பெயரிடப்பட்டது.
அவர்கள் ஹெர்குலஸைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அதன் இரண்டு சகோதரர்களுடன் ஒப்பிடும்போது, அது மிகவும் அமைதியாகவும், அன்பாகவும், தன் தாயுடன் அதிக ஒட்டுதல் கொண்டதாகவும் இருந்தது.
இருப்பினும், அது வந்தபோது மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது, மேகியால் இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் அதைத் தடவிக் கொடுக்க முடிந்தது. மேகிக்கு, ஹெர்க் ஒரு மகனைப் போல இருந்தது.
"உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்போது, அது ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி, அவை முற்றிலும் அப்பாவித்தனமானவை. யாரும் அவற்றை காயப்படுத்தவில்லை. அதை அப்படியே வைத்திருப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது."
திசைமாறிய பயணம்
ஒன்றாக வாழ்வது அற்புதமாக அமைந்தது. ஹெர்க், ஆண்டியுடன் சேர்ந்து அவரது மல்யுத்த நிகழ்ச்சிகளில் பணியாற்றினார் மற்றும் அவரது மற்ற நடவடிக்கைகளிலும் உடன் சென்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஆண்டியும் மேகியும் நடத்தி வந்த மதுக்கடையிலும் ஹெர்குலஸ் இருந்தது. அவர் (கரடி) வாடிக்கையாளர்களுடன் எளிதாகப் பழகினார், மதுவின் சுவைக்குக் கூட பழகியிருந்தார். ஆண்டியைப் போலவே அவருக்குப் பிடித்த பானம் - அதிக எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சொட்டு பீர் கலந்து தயாரிக்கப்பட்ட ஒரு கலவையாகும்.
அவரது பிரமாண்டமான உருவத்திற்கும், இனிமையான, தீங்கற்ற நடத்தைக்கும் இடையிலான முரண்பாடு உள்ளூர் சமூகத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் இதயங்களை வென்றது, அங்கு அவர் ஒரு பிரபலமானவராக இருந்தார். "அவர் டன்ப்ளேனின் சமூகக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்தார்," என்கிறார் மேகி.
அவரது புகழின் காரணமாக, ஹெர்குலஸ் 1980 கோடையில் மேற்கு ஹெப்ரைட்ஸில் ஒரு பிரபலமான கழிப்பறை காகித (Toilet paper) பிராண்டிற்கான விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன், ஆண்டி இந்த ஸ்காட்டிஷ் தீவுக் கூட்டத்தின் குளிர்ந்த நீரில் ஹெர்க்குடன் நீந்தச் சென்றார்.
எப்போதும் போல கழுத்தில் ஒரு கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், அவர்கள் தண்ணீரில் குதித்தனர். ஆனால் ஒருவேளை குளிரின் காரணமாக, கயிறு சுருங்கியது, முடிச்சு நழுவியது, ஹெர்க் தனது உரிமையாளருடன் இருந்த தொடர்பை இழந்ததை உணராமல் தொடர்ந்து நீந்தினார்.
இந்தச் சம்பவம் விரைவாக ஒரு சோகமாக மாறியது. ஹெர்க் கண்ணில் இருந்து மறையும் வரை தொடர்ந்து நீந்தினார்.
"ஒரு காலியான உரோம கோட்"
அவரைக் கண்டுபிடிக்க 24 நாட்கள் ஆயின. நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் கலந்துகொண்ட வான்வழி மற்றும் தரைவழித் தேடுதல் நடவடிக்கை அது.
ஊடகங்கள் இந்த நடவடிக்கையின் ஒவ்வொரு அடியையும் உன்னிப்பாகக் கவனித்தன, ஹெர்க்கின் இருப்பிடம் குறித்த துப்புகளைத் தரக்கூடிய எந்தவொரு முன்னேற்றத்தையும் அளிக்கத் தயாராக இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
இறுதியில் அவர்கள் அவரைக் கண்டபோது, "ஹெர்குலஸ் ஒரு காலியான உரோம கோட் போலத் தெரிந்தார்," என்று மேகி நினைவு கூர்கிறார். "அவர் மிகவும் மோசமான நிலையில் இருந்தார், மிகமிக பலவீனமாக இருந்தார்."
அவர் தனது எடையில் பாதியை இழந்திருந்தார்.
"அன்றிரவு முழுவதும் மற்றும் அடுத்த நாள் காலையிலும், தீவுவாசிகள், அவர்களில் பெரும்பாலானோர் பசுக்களை வைத்திருந்தனர், பால் கறந்து அவருக்கு 50 லிட்டருக்கும் அதிகமான பாலைக் கொண்டு வந்தனர். அதுதான் ஹெர்குலஸை உயிர்ப்பித்தது," என்று மேகி பிபிசியிடம் கூறுகிறார்.
ஹெர்க் கவனமாக வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் படிப்படியாக குணமடைந்தார்.
அவரது எதிர்பாராத சாகசத்திற்குப் பிறகு அவரது புகழ் பன்மடங்கு பெருகியது, இதன் மூலம் ஹெர்க் ஒரு சர்வதேச நட்சத்திரமானார்.
எல்லோரும் ஹெர்க் கதையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினர். அவர் அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தார். அரசியல் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்களுடன் (மார்கரெட் தாட்சர், பாப் ஹோப் போன்றவர்கள்) பழகினார், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும், ராபர்ட் மூருடன் இணைந்து ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் ("ஆக்டோபுசி") தோன்றினார்.
நோய்
2000 ஆம் ஆண்டளவில், ஹெர்க்கின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது முதுகில் ஏற்பட்ட காயம் அவரது பின்னங்கால்களைச் செயலிழக்கச் செய்தது.
மிகுந்த முயற்சியுடன், ஆண்டி அவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார்.
"ஒவ்வொரு நாளும், நான் அவரை நீச்சல் குளத்தில் நீந்தச் செய்தேன். குளத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு அவர் முன்னும் பின்னுமாக நடந்து செல்வார், தனது காலணிகளின் அடிப்பாகம் தேயும் வரை அவர் அப்படி நடப்பார்," என்கிறார் மேகி.

பட மூலாதாரம், Getty Images
நிலைமை முன்னேறியது, அது உண்மைதான். ஆனால் பின்னர் அது மீண்டும் மோசமடைந்தது.
அவரது முதுகில் ஒரு சீழ் கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. பிப்ரவரி 2001 இல், அவருக்கு சுமார் 25 வயதாக இருந்தபோது, குடும்பத்தின் செல்லமான, ஆண்டியின் சாகச மற்றும் மல்யுத்த கூட்டாளியான ஹெர்குலஸ் இறந்துபோனார்.
ஆண்டி 2019 இல், 84 வயதில் காலமானார்.
இருவரும் ஹெர்க் காணாமல் போன இடத்திற்கு அருகில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டியின் ஓய்விடத்தைக் குறிக்கும் ஒரு பலகையும், ஹெர்குலஸின் உடல் எஞ்சியிருக்கும் இடத்தில் ஒரு முழு உருவச் சிற்பமும் அங்கு உள்ளது.
"நான் இங்கே பார்க்க வரும்போது, என்னால் புன்னகைக்காமல் இருக்க முடியாது. நான் நிறைய யோசிக்கிறேன். இது பார்க்க ஒரு அழகான இடம்," என்கிறார் மேகி.
"ஆண்டிக்கும் ஹெர்குலஸுக்கும் இடையிலான பிணைப்பு அசாதாரணமானது. யாராவது ஒரு கரடியாகப் பிறக்க வேண்டும் என்று விதி இருந்தால், அது ஆண்டி தான். யாராவது ஒரு மனிதராக இருக்க வேண்டும் என்று விதி இருந்தால், அது ஹெர்க் தான்."
"ஹெர்குலஸ் அனைத்துத் துயரங்களையும், சொல்லப்பட்ட அனைத்தையும் சவாலாகக் கொண்டார். கனிவு மற்றும் அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































