இந்தியா வந்து மதம் மாறி காதலரை மணந்த வங்கதேச பெண்ணை 10 ஆண்டுக்கு பின் சிக்க வைத்த 'போன் கால்'

இந்தியா, வங்கதேசம், எல்லை, சட்டவிரோத குடியேற்றம்

பட மூலாதாரம், Tarun Patel

படக்குறிப்பு, தருண் படேல் மற்றும் காஜல் முகநூலில் சந்தித்தனர்
    • எழுதியவர், தேஜஸ் வைத்யா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

காதலுக்கு எல்லைகள் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் குஜராத்தில் ஆனந்த் மாவட்டத்தின் லம்பவேல் பகுதியைச் சேர்ந்த தருண் படேலுக்கு இப்போது 'எல்லை' தான் மிகப்பெரிய எதிரியாக மாறியுள்ளது.

வங்கதேசப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய தருண், இன்று தனது குடும்பம் சிதறிவிடாமல் காப்பாற்றப் போராடி வருகிறார்.

கிட்டத்தட்ட பத்தாண்டுக்கு முன் நடந்த இந்த எல்லை கடந்த திருமணம், இப்போது குடும்பத்திற்கு ஒரு சட்டப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

வங்கதேசப் பெண் இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்தது தங்களுக்குத் தெரியவந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக இப்போது அவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.

குஜராத் காவல்துறையின் 'ஆபரேஷன் டெல்டா ஹன்ட்' நடவடிக்கைக்கு முன்பு வரை அனைத்தும் சாதாரணமாக இருந்தது, ஆனால் இந்த நடவடிக்கை திடீரென குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

இப்போது தருணின் ஒரே நோக்கம், தனது குழந்தைகள் தாயின் அரவணைப்பை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதுதான்.

ஒரு போன் காலால் சிக்கியது எப்படி?

இந்தியா, வங்கதேசம், எல்லை, சட்டவிரோத குடியேற்றம்

பட மூலாதாரம், Tarun Patel

படக்குறிப்பு, திருமணம் செய்ய முடிவெடுத்த பிறகு காஜல் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தார்

காவல்துறையினர் தனது வீட்டிற்கு வந்த ஜூன் 2-ஆம் தேதியை தருணால் இன்றும் மறக்க முடியாது. இதற்கு ஒரு சாதாரண தொலைபேசி அழைப்புதான் காரணம்.

"காஜலின் தாய் வங்கதேசத்தில் வசிக்கிறார். அங்கு நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக அவள் தன் தாயைப் பற்றி கவலையடைந்தாள். அவள் தன் தாயின் நலம் விசாரிக்க தொலைபேசியில் அழைத்திருந்தாள். அந்த அழைப்புதான் டிரேஸ் செய்யப்பட்டு பின்னர் காவல்துறை என் வீட்டிற்கு வந்தது," என அவர் விளக்குகிறார்.

"காவல்துறையினர் அவளது தொலைபேசியைச் சோதித்தனர், அதில் சேமிக்கப்பட்டிருந்த 'காஜல்ஸ் மாம்' என்ற எண்ணைப் பார்த்து இது யாருடைய எண் என்று கேட்டனர். தான் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்த அழைப்பு தனது தாய்க்குச் செய்யப்பட்டது என்றும் என் மனைவி கூறினார். இதன் பிறகு காஜலிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்," என்றார் தருண்.

அவரிடம் பாஸ்போர்ட் அல்லது திருமணப் பதிவுக்கான ஆதாரம் போன்ற முறையான ஆவணங்கள் இல்லை என்பதால், அவருக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூறியது.

இந்தியா, வங்கதேசம், எல்லை, சட்டவிரோத குடியேற்றம்

பட மூலாதாரம், NACHIKETA MEHTA

படக்குறிப்பு, தருண் படேல் மற்றும் காஜலின் இரு குழந்தைகள்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

காஜல் வழக்கமாக வங்கதேசத்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தாரா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த தருண் படேல், "காஜல் எப்போதாவதுதான் தன் தாயுடன் பேசுவாள். கண்காணிக்கப்பட்ட அந்தத் தொலைபேசி அழைப்பு, அவளது தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வங்கதேசத்தில் சூழ்நிலை மோசமானதாக இருந்தது, தாயும் நோய்வாய்ப்பட்டிருந்தார், அதனால் காஜல் மிகவும் கவலையடைந்தாள்," என்றார்.

"அவள் அழத் தொடங்கினாள், என்னிடம் தன் தாயுடன் பேச வேண்டும் என்று கூறினாள். அதனால் நான் என் கைபேசியில் இருந்து அவளுக்காக ஒரு ஐஎஸ்டி அழைப்பை மேற்கொண்டேன். உரையாடலின் போது அவள், 'அம்மா, எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது? தீவிரமான விஷயம் எதுவும் இல்லையே?' என்று மட்டும்தான் கேட்டாள்," என தருண் கூறினார்.

"அவ்வளவுதான். அந்த ஒரு அழைப்புதான் கண்காணிக்கப்பட்டது. அவள் ஒருபோதும் எந்தவொரு தவறான இடத்திற்கும் அழைக்கவில்லை."

"காஜல் குஜராத்தில் சட்டவிரோதமாக வசித்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் வங்கதேசத்திலிருந்து குஜராத்திற்கு வந்தபோது, அவரிடம் கடவுச்சீட்டோ அல்லது திருமணப் பதிவுக்கான ஆதாரமோ இல்லை," என ஆனந்த் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.ஜி. ஜசானி, பிபிசி குஜராத்தியின் நசிகேத் மேத்தாவிடம் கூறினார்.

முகநூல் நட்பில் இருந்து காதல் முதல் திருமணம் வரை

இந்தியா, வங்கதேசம், எல்லை, சட்டவிரோத குடியேற்றம்

பட மூலாதாரம், NACHIKETA MEHTA

படக்குறிப்பு, காஜலிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று காவல்துறை கூறுகிறது

2012-ஆம் ஆண்டில், வங்கதேசத்தின் கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 'காஜுலி' முகநூலில் தருணைச் சந்தித்தார். நட்பு காதலாக மாறியது, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

தருண் அவரை பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு குஜராத்திற்கு வருமாறு கூறினார். ஆனால் அவரது குடும்பத்தினர் ஒரு வங்கதேச இளைஞரைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்தனர்.

காஜுலி பாஸ்போர்ட் எடுப்பதற்காக ஒரு முகவரிடம் 12-13 ஆயிரம் ரூபாய் கொடுத்தார், ஆனால் அவர் ஏமாற்றப்பட்டார்.

குடும்பத்தின் வற்புறுத்தல் காரணமாக அவர் வங்கதேசத்திலிருந்து தப்பி முதலில் கொல்கத்தாவை அடைந்தார், அங்கிருந்து ஆனந்த் நகருக்கு வந்து சேர்ந்தார். இதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு காஜுலி தனது பெயரை 'காஜல்' என்று மாற்றிக்கொண்டார்.

இருப்பினும், ஆவணங்கள் இல்லாததால் இவர்களது திருமணம் ஒருபோதும் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை.

"இது எதிர்காலத்தில் ஒரு பிரச்னையாக மாறும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. அந்தச் சூழ்நிலையில் அவளால் எந்த ஆவணத்தையும் கொண்டு வர முடியவில்லை," என தருண் கூறுகிறார்,

அடிப்படையில் இஸ்லாமியரான காஜல், திருமணத்திற்குப் பிறகு இந்து மதத்திற்கு மாறினார். அவர் வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அங்குள்ள குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தருண் பயப்படுகிறார்.

குடும்பத்தினர் அதிர்ச்சி

இந்தியா, வங்கதேசம், எல்லை, சட்டவிரோத குடியேற்றம்

பட மூலாதாரம், Tejas Vaidya/BBC

படக்குறிப்பு, காஜல் தங்களுக்கு மருமகள் என்பதைத் தாண்டி மகள் போன்றவர் என்று காஜலின் மாமியார் இந்துபென் படேல் கூறுகிறார்

காஜல் காவலில் வைக்கப்பட்டதில் இருந்து தருணும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது காஜல் ஒரு பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

"என் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் அழுகிறார்கள், அம்மா எப்போது திரும்புவார் என்று கேட்கிறார்கள். என்னிடம் இதற்குப் பதில் இல்லை. அவர் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டால், எங்கள் குடும்பம் சிதறிவிடும்," என தருண் கூறுகிறார்.

"காஜல் சென்ற பிறகு எங்களால் சரியாகச் சாப்பிடக் கூட முடியவில்லை. குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார்கள். காஜல் எனக்கு மருமகள் மட்டுமல்ல, மகள் போன்றவள்," என்றார் காஜலின் மாமியார் இந்துபென்.

"நடந்தது தவறாகிவிட்டது. காஜல் சென்ற பிறகு வீட்டில் யாரும் சரியாகச் சாப்பிடவில்லை. குழந்தைகள் தொடர்ந்து அழுகிறார்கள். அவர்களின் நிலையைப் பார்க்கும்போது என் இதயமே வலிக்கிறது. காஜல் இல்லாமல் வீடே பாழடைந்து கிடப்பது போல் உள்ளது. அவள் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் என்று மட்டுமே நான் பிரார்த்தனை செய்கிறேன்."

இந்தியா, வங்கதேசம், எல்லை, சட்டவிரோத குடியேற்றம்
படக்குறிப்பு, தற்போது காஜல் ஒரு பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்

ஜாக்ருதி பெண்கள் அமைப்பின் தலைவர் ஆஷா தலால் பிபிசி குஜராத்தியுடனான உரையாடலில், "காஜல் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கிறார், அடிக்கடி அழுகிறார். அவர் எப்போதும் தனது குடும்பத்தை, குறிப்பாகத் தனது இரு மகன்களையும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டால், மீண்டும் இந்தியாவிற்கு வர முடியாமல் போய்விடுமோ என்பதுதான் அவரது மிகப்பெரிய பயமாக உள்ளது," என்றார்.

"அதிகாரிகளின் அனுமதி கிடைக்கும்போது, நாங்கள் சில சமயங்களில் அவரைத் தூரத்திலிருந்து குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கிறோம். இது அவருக்குச் சற்று நிம்மதியைத் தருகிறது."

"ஆனால் அவர் இன்னும் சோகமாகவே இருக்கிறார். நாங்கள் அவருக்குத் தொடர்ந்து புரிய வைக்கவும், அவரை அமைதிப்படுத்தவும் முயற்சி செய்கிறோம், ஆனால் அவரும் ஒரு மனிதர்தானே, சில சமயங்களில் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது."

"காப்பகத்தில் அவர் அனைவருடனும் பழகுகிறார் மற்றும் மற்றவர்களுக்கு உதவுகிறார். தற்போது நாங்கள் காஜலை முழுமையாகக் கவனித்து வருகிறோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி எடுக்கப்படும்," என்றார் ஆஷா தலால்.

சட்டப் போராட்டம்

இந்தியா, வங்கதேசம், எல்லை, சட்டவிரோத குடியேற்றம்

பட மூலாதாரம், Tejas Vaidya/BBC

படக்குறிப்பு, அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவு தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது மற்றும் இது வெளிநாட்டு குடிமக்களுக்கும் பொருந்தும் என்று தருண் படேலின் வழக்கறிஞர் ஜைனப் சையத் கூறுகிறார்

தற்போது தருணின் ஒரே நோக்கம், என்ன விலை கொடுத்தேனும் காஜல் வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவதைத் தடுப்பதுதான்.

இதற்காக அவர் அனைத்து மட்டங்களிலும் கோரிக்கை விடுத்து வருகிறார். நீதிமன்றக் கதவுகளையும் தட்டியுள்ளார்.

அவரது வழக்கறிஞர் ஜைனப் சையத் பிபிசி நியூஸ் குஜராத்தியிடம் கூறுகையில், "காஜலுக்கு இந்தியக் குடியுரிமை கிடைப்பதற்காக, நீதிமன்றத்தில் அரசியலமைப்பு விதிகளையே மேற்கோள் காட்டுவோம். அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவு வாழ்வாதாரம் மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது," என்றார்.

"இந்த உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் பொருந்தும், எனவே இந்த அம்சங்களை நாங்கள் நீதிமன்றத்தின் முன் வைப்போம்."

"ஒரு நபர் இந்திய குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்து பல ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தால், சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு அவர் குடியுரிமைக்குத் தகுதியானவராகலாம்," என ஜைனப் மேலும் கூறினார்.

"காஜல் வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்படாமல் இருப்பதும், அவருக்கு இந்தியக் குடியுரிமை கிடைப்பதும்தான் எங்களது முயற்சியாக இருக்கும்."

ஆனந்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மிதேஷ் படேலிடமும் தருண் கோரிக்கை விடுத்துள்ளார்.

"நான் டெல்லிக்குச் செல்லும்போது, இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன் வைப்பேன்," என பிபிசி குஜராத்தியிடம் படேல் கூறினார்.

ஆபரேஷன் டெல்டா ஹன்ட்

இந்தியா, வங்கதேசம், எல்லை, சட்டவிரோத குடியேற்றம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கடந்த மாதம் சண்டோலா ஏரிப் பகுதியில் எஞ்சியிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன, இங்கு சட்டவிரோதமாக வங்கதேச குடிமக்கள் வசித்து வந்ததாக நிர்வாகம் கூறுகிறது.

குஜராத் அரசின் கூற்றுப்படி, "குஜராத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக" காவல்துறை 'ஆபரேஷன் டெல்டா ஹன்ட்' என்ற பெயரில் ஒரு விரிவான நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

ஜூன் 2026-இன் முதல் வாரத்தில், "சட்டவிரோத வங்கதேச" குடியிருப்பாளர்கள் என்று கூறப்படும் 362 பேர் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் 103 ஆண்கள், 188 பெண்கள் மற்றும் 71 குழந்தைகள் அடங்குவர்.

இது தவிர, 782-க்கும் மேற்பட்ட "சந்தேகத்திற்குரிய வங்கதேச" குடிமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

குஜராத் அரசின் செய்திக்குறிப்பின்படி, தொழில்நுட்பம் மற்றும் மனித உளவு அமைப்பின் உதவியுடன், இந்த மக்களுக்குப் போலி ஆவணங்களை வழங்கியதாகக் கூறப்படும் உள்ளூர் முகவர்கள் மற்றும் உதவியாளர்கள் குறித்தும் காவல்துறையின் களப் பிரிவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்பும் குஜராத்தில் வங்கதேச குடியிருப்பாளர்கள் என்று கூறப்படுபவர்கள் காவலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமதாபாத்தின் சண்டோலா ஏரிப் பகுதியில் காவல்துறை ஒரு பெரிய ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையையும் நடத்தியிருந்தது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு