You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் மோதிய விமானம் - சீனாவில் 4 நாட்களாக நீடிக்கும் மர்மம்
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பெய்ஜிங்கின் மிக உயரமான வானளாவிய கட்டடத்தில் ஒரு சிறிய விமானம் மோதி, விமானத்தில் இருந்த ஒரே நபரான விமானி உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து நடைபெற்று நான்கு நாட்கள் கடந்துவிட்டன.
ஆனால், அது ஏன், எப்படி நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து சீனா இதுவரை வெளியிட்ட ஒரே அதிகாரப்பூர்வ அறிக்கை, அரசுக்கு சொந்தமான 'பெய்ஜிங் டெய்லி' பத்திரிகையில் வந்த 60 சொற்கள் கொண்ட ஒரு சிறிய செய்தி மட்டுமே.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஜொங்னான்ஹாயில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த இந்த விபத்தால் 109 மாடிகளைக் கொண்ட சிஐடிஐசி டவர் கட்டடத்தின் பக்கவாட்டில் துளைகள் ஏற்பட்டன. அவை தற்போது பலகைகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறிய ரக விமான செயல்பாடுகளை நிறுத்துமாறு தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறைந்தது மூன்று விமான நிறுவனங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.
ஆனால், இதுகுறித்து பேச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் கூடுதல் விவரங்களைக் கூற மறுத்துவிட்டனர்.
தகவல்கள் எதுவும் கிடைக்காத இந்தச் சூழ்நிலையில், உலகிலேயே மிகக் கடுமையான வான்வெளி கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு நகரத்திற்குள் அந்த விமானம் எப்படி நுழைந்தது என்பது பற்றிய ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.
சீனாவிற்கு தணிக்கை ஒன்றும் புதியதல்ல. கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் தலைவர்கள் அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பது அங்கு அரிதான ஒன்று.
மேலும் விமர்சனம் போன்றோ, அரசியல் ரீதியான தாக்கங்கள் கொண்டதாகவோ அல்லது உணர்வுப்பூர்வமான விஷயங்களைத் தொடுவதாகவோ இருக்கும் எந்தவொரு விவாதமும் அங்கு விரைவாக மறைந்துவிடும்.
ஆனால் இந்த முறை, இந்த தணிக்கை வழக்கமான இலக்குகளையும் தாண்டிச் சென்றுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்துடன் தொடர்பில்லாத, அந்த வானளாவிய கட்டடத்தின் சாதாரண புகைப்படங்களும் மீம்களும் கூட சீன சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
சீனாவின் பாரம்பரிய மதுபானக் கலசம் போன்ற வடிவம் கொண்ட இந்தக் கட்டடம், உள்ளூர் மக்களைப் பெரிதும் கவரக்கூடியது. பலர் இதை ஒரு அதிர்ஷ்டச் சின்னமாகப் பார்க்கிறார்கள்.
தேர்வு முடிவுகள் முதல் வேலை வாய்ப்பு வரை நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என விரும்பும் இளைஞர்கள், இந்த இடத்திற்கு நேரில் வந்தோ அல்லது இதன் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தோ பிரார்த்தனை செய்வது வழக்கம்.
சீன தலைமைக்கு "உண்மையில் என்ன நடந்தது என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை" என்பதால் தான் இந்த முறை தணிக்கை இவ்வளவு வேகமாகவும் முழுமையாகவும் செய்யப்பட்டுள்ளது என்கிறார் 'ஐ ஆன் டிஜிட்டல் சீனா' செய்திமடலை நடத்தும் மான்யா கோட்சே.
"இது மிகவும் அசாதாரணமான ஒரு சம்பவம்," என்று கூறும் அவர், இது அரசாங்கத்தின் திறமையைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, "கட்சியின் முக்கியக் கொள்கைகளுக்கே" அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் குறிப்பிடுகிறார்.
இச்சம்பவத்திற்குப் பிறகு, சிறிய ரக விமான செயல்பாடுகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதை பிபிசியிடம் உறுதிப்படுத்திய விமான நிறுவனங்கள் கூட, இது குறித்து மேலும் எதுவும் கூற விரும்பவில்லை.
"இதைப் பற்றி பேச வேண்டாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து மற்றவர்களிடம் கேளுங்கள்" என்று பெய்ஜிங்கில் உள்ள ஒரு விமான பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறினார்.
செங்டூவில் உள்ள மற்றொரு நிறுவனம், இந்த உத்தரவு எந்த அதிகார அமைப்பிடமிருந்து வந்தது என்பதைக் குறிப்பிட மறுத்து, உடனடியாக அழைப்பைத் துண்டித்தது.
பெய்ஜிங் நகரம் தனது அரசியல் மையப் பகுதியான தியனன்மென் சதுக்கம் மற்றும் நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் வசிக்கும், பணிபுரியும் பலத்த பாதுகாப்புடைய ஜொங்னான்ஹாயை உள்ளடக்கிய சுமார் 100 சதுர கிலோமீட்டர் (39 சதுர மைல்) பரப்பளவை நிரந்தரமான விமானப் பறப்புத் தடை மண்டலமாக அமல்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை, "மிகப்பெரிய பாதுகாப்பு மீறல்" என்று விவரித்துள்ள சீனப் பகுப்பாய்வாளர் பில் பிஷப் , எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், "இன்னும் சில நொடிகள் கூடுதலாகப் பறந்திருந்தால், அந்த விபத்து ஜொங்னான்ஹாயில் நடந்திருக்கலாம்... அது பெய்ஜிங்கின் பாதுகாப்பு அமைப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு, பெய்ஜிங் சமீபத்தில் ட்ரோன்களுக்கான விதிகளையும் கடுமையாக்கியுள்ளது.
இப்போது தலைநகருக்குள் ட்ரோன்களைக் கொண்டு வரவும், வெளியே கொண்டு செல்லவும் அவற்றை முன்பே பதிவு செய்ய வேண்டும்.
"பெரும்பாலான ட்ரோன்களை விட கணிசமாக அளவில் பெரிதாக உள்ள ஒரு சிறிய விமானம், நகரின் பெரும்பகுதியைக் கடந்து பறந்து, ஜொங்னான்ஹாய்க்கு மிக அருகில் செல்ல முடிந்தது என்பது அரசியல் ரீதியாக சங்கடமான ஒன்றாகும், அதே நேரத்தில் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடாகும்" என்று சிகாகோ குளோபல் அஃபேர்ஸ் கவுன்சிலின் ஆராய்ச்சித் துணைத் தலைவர் ரேமண்ட் குவோ கூறுகிறார்.
இது விமானியின் தவறாகவோ அல்லது இயந்திரக் கோளாறாகவோ இருக்கலாம் என்று கூறும் குவோ, ஆனால் இது "திட்டமிட்ட செயலாகவும் இருக்க வாய்ப்புள்ளது" என்றும் குறிப்பிடுகிறார்.
விமானக் கண்காணிப்பு சேவையான பிளைட்ரேடார்24 இன்படி, அந்த விமானம் சீன நிறுவனமான சன்வார்ட் ஏர்கிராப்ட் தயாரித்த, இரண்டு இருக்கைகள் மற்றும் ஒற்றை எஞ்சின் கொண்ட 'அரோரா எஸ்ஏ60எல்' ஆகும்.
6.9 மீட்டர் நீளமும், 8.6 மீட்டர் இறக்கை அகலமும் கொண்ட இது, சுற்றுலா, வான்வழிப் புகைப்படம் எடுக்க மற்றும் பொழுதுபோக்கு விமானப் பயணங்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே உள்ள சிலருக்கு, வெள்ளிக்கிழமை அன்று நடந்த இச்சம்பவம் 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்ட தருணத்தை நினைவுபடுத்தியுள்ளது.
அப்போது தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் அமெரிக்கப் பயணிகள் விமானங்களை நியூயார்க்கின் இரண்டு வானளாவிய கட்டடங்கள் மீது மோதச் செய்து, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.
"9/11 தாக்குதலின் போது முதல் கோபுரத்தில் ஒரு விமானம் மோதியபோது நான் பெற்ற அதே செய்தியைப் போலத்தான் இதுவும் இருந்தது" என்று ரெடிட் பயன்படுத்தும் ஒரு நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
கார்னகி சீனாவின் வெளிநாட்டு அறிஞரான சோங் ஜா இயன் இதுகுறித்துக் கூறுகையில், இதற்கு நெருக்கமான ஒப்பீடாக பனிப்போர் காலத்தின் இறுதியில், 1987 மே மாதத்தில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம் என்றார்.
அப்போது ஜெர்மனியைச் சேர்ந்த, முழுமையாகப் பயிற்சி பெறாத விமானி மத்தியாஸ் ரஸ்ட், தனது சிறிய விமானத்தை மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் தரையிறக்கினார்.
"அவரது விமானப் பயணமும், தரையிறக்கமும் சோவியத் வான் பாதுகாப்பு அமைப்பில் இருந்த கடுமையான குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. அந்தச் சம்பவம் வான் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பல உயர்மட்ட அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு வழிவகுத்தது" என்று சோங் கூறுகிறார்.
அதேபோல், இந்த பெய்ஜிங் விபத்து காரணமாகவும் சில அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து நீக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
"ஒரு சிறிய விமானம் சிஐடிஐசி டவர் மீது மோதுகிறது என்றால், ஒரு ட்ரோன் அல்லது ஏவுகணையாலும் அதைச் செய்ய முடியும் என்று அர்த்தம். பெய்ஜிங்கின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பாதுகாப்புப் பிரிவினருக்கு இது சற்று சங்கடமான விஷயம்தான்"என்கிறார் சோங்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு