ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து - குறைந்தது 10 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து: குறைந்தது 10 பேர் உயிரிழப்பு – இதுவரை என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஸ்பெயினில் மாட்ரிட் நகருக்குத் தெற்கே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காஸ்டில்லா-லா மஞ்சா பிராந்திய அரசின் செய்தித் தொடர்பாளர் எஸ்தர் படில்லா, இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய ரயில்களில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாட்ரிட் நகரிலிருந்து ஸ்பெயின் நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு அதிவேக ரயில், அங்கு நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படும் மற்றொரு ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது. இந்த மோதலின் தாக்கத்தால் குறைந்தது இரண்டு ரயில் பெட்டிகள் சரிவான பள்ளத்தில் உருண்டு விழுந்தன.

ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து: குறைந்தது 10 பேர் உயிரிழப்பு – இதுவரை என்ன நடந்தது?

எஸ்தர் படில்லா, டிவிஇ தொலைக்காட்சியிடம் பேசுகையில், இரயோ நிறுவனத்தால் இயக்கப்படும் ரயிலில் 146 பயணிகளும் ஒரு குழந்தையும் இருந்ததாகவும், ரென்ஃபே நிறுவனம் இயக்கிய ரயிலில் 397 பயணிகள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

"ரயில் விபத்து நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து: குறைந்தது 10 பேர் உயிரிழப்பு – இதுவரை என்ன நடந்தது?

மாட்ரிட் – செவில்லா வழித்தடத்தில் இயக்கப்படும் இரயோ நிறுவனத்தின் ரயிலுக்கும், ரென்ஃபே நிறுவனத்தின் மற்றொரு ரயிலுக்கும் இடையே இந்த விபத்து நிகழ்ந்ததாக ரயில்வே இயக்குநரான அடிஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"தற்போது அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று ஸ்பெயின் அவசரகால சேவைகள் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பல தீயணைப்புப் படைக் குழுக்கள், மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்டவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பயணம் தொடங்கி சுமார் 40 நிமிடங்களான நிலையில் பலத்த அதிர்வுடன் விபத்து நிகழ்ந்ததாக ரயிலில் இருந்த பயணி ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

சமிக்ஞை (சிக்னல்) தொடர்பான மனிதத் தவறே இந்த விபத்துக்கு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என அரசு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்களில் பயணித்தவர்களின் உறவினர்களுக்காக, தேசிய ரயில் சேவை நிறுவனமான 'ரென்ஃபே' உதவி எண் ஒன்றை அமைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், இதே வழித்தடத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு