சச்சின், பாண்டிங்கைவிட சிறந்த டெஸ்ட் சராசரி இருந்தும் சங்கக்காரா ஏன் அதிகம் கொண்டாடப்படவில்லை?

குமார் சங்கக்காரா, இலங்கை கிரிக்கெட் அணி, மஹேலா ஜெயவர்த்தனே, இலங்கை கிரிக்கெட், உலகக்கோப்பை, டெஸ்ட், விக்கெட் கீப்பிங்
படக்குறிப்பு, சதத்தை கொண்டாடும் சங்கக்காரா
    • எழுதியவர், தினேஷ் குமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

’’இலங்கை இதுவரை உருவாக்கிய பேட்டர்களிலேயே குமார் சங்கக்காராதான் மிகச் சிறந்தவர்’’ - மஹேல ஜெயவர்தனே

இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த பேட்டர்களில் முதலாமவர் சங்கக்காரா. அவருக்கு இன்று பிறந்தநாள்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின், பாண்டிங் ஆகியோரை விட சிறந்த சராசரி (57.40) வைத்துள்ளார். ஸ்டீவ் வாஹ், லாரா ஆகியோரை விட அதிகமுறை (16) ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார். இருப்பினும், அவருக்குக்கான அங்கீகாரம் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இலங்கை ரசிகர்களுக்கு உண்டு. ஏன் சங்கக்காரா பெரிதாக கொண்டாடப்படவில்லை?

"சங்கக்காராவின் பேட்டிங்கில் ஏதோவொரு அடக்கமான தன்மை இருக்கிறது. அவர் ஆக்ரோஷத்தின் உச்சிக்குச் செல்வதோ பதற்றத்துடன் பற்களைக் கடித்துக்கொள்வதோ இல்லை. அவர் புகழைத் தேடுவதில்லை. வெற்றியை நாடுகிறார். உணர்ச்சிப் பெருக்கை விட ஆட்டத்தின் நேர்த்திக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனாலோ என்னவோ அவருடைய ஆட்டம் அங்கீகரிக்கப்படாமல் போகிறது." என்று அவதானித்தார் மறைந்த கிரிக்கெட் எழுத்தாளர் பீட்டர் ரூபோக்.

கேப்டன்சியில் ஜெயவர்த்தனே எட்டிய உயரங்களை சங்கக்காராவால் எட்ட முடியவில்லை.

"சங்கக்காரா உள்ளுணர்வை விட பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஒருவகையில், இந்த அணுகுமுறை அவரது கேப்டன்சியை சற்றுக் கட்டுப்படுத்தியது. ஜெயவர்தனே ஆட்டத்தைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்குக் காரணம், பகுத்தறிவின் மீது அவர் குறைவான நம்பிக்கை வைத்திருப்பதுதான்." என்று கருதினார் பீட்டர் ரூபோக்.

சங்கக்காரா ஒழுங்கு மற்றும் திட்டமிடலில் அதீத கவனம் செலுத்துபவர் என்கிறார் கிரிக்கெட் பகுப்பாய்வாளர் சைமன் ஹியூஸ்.

"சங்கக்காரா தனது பயிற்சியை மிகத் துல்லியமாகத் திட்டமிடுவார். குறிப்பிட்ட பந்துவீச்சாளர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு, குறிப்பிட்ட முறையில் பந்துவீச வேண்டும் என்று கேட்டுக்கொள்வார். பயிற்சி முடிந்ததும், அதையெல்லாம் வீடியோவில் ஆய்வு செய்வார்." என்கிறார் அவர்.

மேலும்,"தனது கால்நகர்வில் கண்ணுக்கே எளிதில் புலப்படாத சிறிய மாற்றங்கள் இருந்தால்கூட அவற்றைக் கண்டறிய முயல்வார். ஒவ்வொரு அசைவும் மில்லி விநாடி அளவுக்குத் துல்லியமாகக் கண்காணிக்கப்படும்." என 'Who Wants to Be a Batsman?' என்ற தனது புத்தகத்தில் சைமன் ஹியூஸ் எழுதியுள்ளார்.

தந்தையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத சங்கக்காரா

குமார் சங்கக்காரா, இலங்கை கிரிக்கெட் அணி, மஹேலா ஜெயவர்த்தனே, இலங்கை கிரிக்கெட், உலகக்கோப்பை, டெஸ்ட்
படக்குறிப்பு, ரன் அவுட்டான சங்கக்காரா
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிறிய விவரங்களையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் சங்கக்காராவுக்கு அவரது தந்தை க்ஷேமாவிடம் இருந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. சங்கக்காராவின் அதிதீவிர விமர்சகர் என்று அவரைச் சொல்லலாம்.

வழக்கறிஞரான க்ஷேமாவின் அகராதியில் சிறந்த பேட்டர் என்றால் அது ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் மட்டும்தான்.

தன் மகன் சங்கக்காரா ஒருபோதும் தான் எதிர்பார்த்த உயரங்களை எட்டியதில்லை என்கிறார் க்ஷேமா.

"ஒரு பேட்டருக்கு சில அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டும். உதாரணமாக, டான் பிராட்மேன் ஒவ்வொரு இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் ஒரு சதம் அடித்தவர். ஒரு மிகச்சிறந்த பேட்டர் எப்போதும் அந்தத் தரத்தை எட்ட வேண்டும். பேட்டர், முதலில் ஆட்டமிழக்காமல் இருப்பதற்கான கலையை குமார் முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவை தானாகச் சரியாகிவிடும்." என்கிறார் அவர்.

பிராட்மேன் போல ஒவ்வொரு இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் சங்கக்காராவால் சதம் அடிக்க முடியவில்லை. என்றபோதும், சராசரியாக ஒவ்வொரு ஆறு இன்னிங்ஸ்களுக்கும் ஒரு சதம் அடித்தார். டெஸ்டில் அவருடைய சராசரி 57.40. இந்தப் புள்ளிவிவரங்களே அவரது திறமைக்குச் சான்று.

முரளிதரனின் தூஸ்ராவை கணித்த விக்கெட் கீப்பர்

குமார் சங்கக்காரா, இலங்கை கிரிக்கெட் அணி, மஹேலா ஜெயவர்த்தனே, இலங்கை கிரிக்கெட், உலகக்கோப்பை, டெஸ்ட், விக்கெட் கீப்பிங்
படக்குறிப்பு, ஸ்டம்பிங் செய்த மகிழ்ச்சியில் சங்கக்காரா

சங்கக்காராவின் பேட்டிங் கொண்டாடப்பட்ட அளவுக்கு அவருடைய விக்கெட் கீப்பிங் கொண்டாடப்படவில்லை என்கிறார் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் மார்க் நிக்கோலஸ்.

"முரளிதரனுடன் இணைந்து அவர் ஆற்றிய பணிக்கான முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கைகளில் அபாரமான லாவகமும், கால்களில் மின்னல் வேகமும் கொண்ட அவர், முரளிதரனின் விரல்களுக்கு ஏற்ற கையுறையாகச் செயல்பட்டார். ஒரு மாயாஜாலப் பந்துவீச்சாளருக்குப் பின்னால் விக்கெட் கீப்பிங் செய்வது என்பது மிகக் கடினமான உழைப்பைக் கோரும் பணி" என்கிறார் அவர்.

பந்துவீசும் போது அடுத்து என்ன பந்து என்பது தொடர்பாக ஒரு சிறிய தடயத்தைக் கூட முரளிதரன் வெளிப்படுத்த மாட்டார். ஆனால், அவர் எப்போது தூஸ்ரா வீசப் போகிறார் என்பதைத் தன்னால் முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக சங்கக்காரா கூறியுள்ளார். இந்தக் கணிப்பு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான பேட்டிங்கின் போது அவருக்கு பெரிதும் கைகொடுத்தது.

சிறந்த பேட்டர்களிடம் ஒருவிதமான காட்சிசார் முன்னெச்சரிக்கை உணர்வு உள்ளது. அது பந்து எப்படிச் செல்லும் என்பதை முன்கூட்டியே கணிக்க அவர்களுக்கு உதவுகிறது என்கிறார் சைமன் ஹியூஸ்.

'பேட்டிங் கலையின் தலைசிறந்த பிரதிநிதி'

குமார் சங்கக்காரா, இலங்கை கிரிக்கெட் அணி, மஹேலா ஜெயவர்த்தனே, இலங்கை கிரிக்கெட், உலகக்கோப்பை, டெஸ்ட், கிரிக்கெட்
படக்குறிப்பு, குமார் சங்கக்காரா

பிட்ச் ஆகும் இடத்தை நோக்கிக் கால்களை நகர்த்தி, பந்தைச் சந்திப்பது சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதற்கான பாலபாடம். இந்தக் கலையில் தனது நெருங்கிய நண்பரான ஜெயவர்தனேவுக்கு இணையாக சங்கக்காராவும் 'கால்'தேர்ந்தவராக இருந்தார். கால்களைப் பயன்படுத்துவது தாக்குதல் ஆட்டத்துக்கு எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்குத் தற்காப்பு ஆட்டத்துக்கும் முக்கியம் என்கிறார் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் மார்க் நிக்கோலஸ்.

குமார் சங்கக்காரா பேட்டிங் கலையின் தலைசிறந்த பிரதிநிதி என்று புகழாரம் சூட்டினார் மறைந்த நியூசிலாந்து பேட்டிங் மேஸ்ட்ரோ மார்ட்டின் குரோ.

" சங்கக்காரா எல்லா வகையிலும் முழுமையான பேட்டர். ஸ்விங் ஆகும் சூழலில் பந்தைத் தாமதமாக விளையாடும் திறன் கொண்டவர். சுழலும் ஆடுகளங்களில் கால்களைப் பயன்படுத்தி விளையாடக்கூடியவர். தேவைக்கேற்ப வேகத்தில் ரன் குவிக்கவும், விக்கெட்டைக் காப்பாற்றி நிதானமாக ஆடவும் அவரால் முடியும். " என்று தனது For the Love of the Game புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் வரம்பை அறிந்திருந்த சங்கக்காரா

குமார் சங்கக்காரா, இலங்கை கிரிக்கெட் அணி, மஹேலா ஜெயவர்த்தனே, இலங்கை கிரிக்கெட், உலகக்கோப்பை, டெஸ்ட், விக்கெட் கீப்பிங்
படக்குறிப்பு, சச்சினுடன் சங்கக்காரா

"நான் பள்ளி அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கவில்லை. முதல் தர கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராகத் திகழவில்லை. திடீரென்று இலங்கை ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடித்தேன். முதல் மூன்று டெஸ்ட்களில் எனது அதிகபட்ச ஸ்கோர் 25 ரன்கள்தான். அந்த அனுபவம் எனக்குப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 'இது கொஞ்சம் கடினமான விஷயம்தான்' என்று உணர்ந்தேன்." என்று பேட்டி ஒன்றில் கூறுகிறார் சங்கக்காரா.

அதேபோல, சர்வதேச கிரிக்கெட்டில் 63 சதங்கள் குவித்த போதும், சங்கக்காரா என்றுமே தன்னைச் சிறந்த பேட்டர் என்று கருதிக் கொண்டதில்லை. இது தன்னை அறிதலா இல்லை தன்னடக்கமா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

ஒரு கிரிக்கெட் வீரர் தன்னுடைய வரம்பு என்னவென்பதை அறிந்திக்க வேண்டும் என்கிறார் சங்கக்காரா. "தலைசிறந்த வீரர்களிடம் பேசும் போது, அவர்களைப் போலவே விளையாட முயல கூடாது. அவர்களிடமிருந்து உங்கள் ஆட்டத்துக்குப் பொருந்துவதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை ஒதுக்கி விட வேண்டும். சச்சின், பாண்டிங், லாரா ஆகியோருக்குப் பலனளித்த விஷயங்கள் எனக்குப் பலனளிக்காமல் போகலாம்" என்கிறார் அவர்.

ஸ்டைலைப் பற்றிக் கவலைப்படாத பேட்டர்

குமார் சங்கக்காரா, இலங்கை கிரிக்கெட் அணி, மஹேலா ஜெயவர்த்தனே, இலங்கை கிரிக்கெட், உலகக்கோப்பை, டெஸ்ட், விக்கெட் கீப்பிங்
படக்குறிப்பு, சங்கக்காரா

கவர் டிரைவ் விளையாடுவதில் உலகின் தலைசிறந்த பேட்டர்களில் ஒருவர் சங்கக்காரா. ஆனால், அரவிந்த டி சில்வா, ஜெயவர்த்தனே போன்றவர்கள் அளவுக்கு நளினமான பேட்டர் என்று அவரைச் சொல்லி விட முடியாது.

"நான் களமிறங்குவதே ரன்களைக் குவிப்பதற்காகத்தான். ஸ்டைலாக விளையாட வேண்டும் என்பதற்காகவோ, சில நேரங்களில் நன்றாக உணர வேண்டும் என்பதற்காகவோ நான் களமிறங்குவதில்லை." என்கிறார் அவர்

"ஸ்டைலா? அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ரன்களைக் குவிப்பது மட்டுமே என் நோக்கம்" என்று கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்டர் டான் பிராட்மேன் கூறியது இங்கே நினைவுகூறத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு