தேனி சிறையிலிருந்து ஒரே நேரத்தில் தப்பிய 17 கைதிகள்: 4 பேரை பிடித்த காவல்துறை - என்ன நடக்கிறது?

'உடல்நலக் குறைவு' என நாடகமாடி தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?
படக்குறிப்பு, காவல்துறையினரால் பிடிக்கப்பட்ட 2 கைதிகள்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தேனி கிளைச் சிறையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தப்பியோடிய கைதிகளில் நால்வர் தேடுதல் நடவடிக்கையின்போது காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி தெரிவித்துள்ளார்.

''தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கத் தமிழ்நாடு காவல்துறையின் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளக் காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறோம். கேரளக் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தேடுதல் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்'' என விஜயேந்திர பிடாரி கூறியுள்ளார்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ஆம் தேதி) இரவு தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.

இந்த நிலையில் தேக்கம்பட்டி சிறையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி சிறை வளாகத்தில் ஆய்வு செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் கைதிகள் சிறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை பிடிக்கப்பட்ட ராஜ்குமார் மற்றும் ராஜா சிக்கந்தர்
படக்குறிப்பு, இன்று அதிகாலை பிடிக்கப்பட்ட கைதிகள் ராஜ்குமார் மற்றும் ராஜா சிக்கந்தர்

கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி, உடல்நிலை சரியில்லை என நாடகமாடி கைதிகள் தப்பித்து சென்றதாக கூறினார்.

கைதிகள் 17 பேரும் ஒரே சிறை செல்லில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதை தொடர்ந்து சிறை காவலர் செல்லுக்கு வந்தபோது அவரை தாக்கிவிட்டு இவர்கள் 17 பேரும் தப்பியதாகவும் காவல்துறையை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

'உடல்நலக் குறைவு' என நாடகமாடி தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?

இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டாம் நிலை சிறைக் காவலர் தங்கபாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் சில காவலர்களுக்கும் காயமடைந்துள்ளனர்.

தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அண்டை மாவட்டமான திண்டுக்கல்லில் 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சாவடிகள் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

 விஜயேந்திர பிடாரி
படக்குறிப்பு, விஜயேந்திர பிடாரி

தப்பி ஓடிய கைதிகள் யார்?

மதுரை மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (எ) மதன், ராஜ்குமார், திருப்பதி, பொன்முத்துச்செல்வம், மீனாட்சிசுந்தரம், நிசாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக்ராஜா, பிரசாந்த் (எ) லிங்க பிரசாத், ராஜா சிக்கந்தர் மற்றும் சோலைமுகிலீஸ்வரன்,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தருண்குமார்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி செல்வம்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரெஜின்

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு