ஆர்.டி.ஐ-யில் சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்த சில மணி நேரத்தில் அரசாணை வாபஸ் - அதில் என்ன இருந்தது?

ஆர்.டி.ஐ-யில் சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்த சில மணி நேரத்தில் அரசாணை வாபஸ் - அதில் என்ன இருந்தது?
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாடு அரசின் கீழ் வரும் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்கிற அரசாணை வெளியான சில மணி நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசாணையில், பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை மாநில அரசால் நிறுவப்பட்ட 'உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக' குறிப்பிடப்படுவதாகவும் அந்தத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24-இன் கீழ் வரும் உள்பிரிவு 4-இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் எக்ஸ் தளப் பதிவின் மூலம் தெரிவித்தார்.

அரசாணையில் என்ன இருந்தது?

சட்டம் மற்றும் ஒழுங்கு துறையின் கீழ் வரும் பணிகளும் அரசாணையில் பட்டியலிடப்பட்டிருந்தன.

சாதிய மற்றும் வகுப்புவாத மோதல்கள், விசாரணை ஆணையங்கள், தடுப்பு காவல், காவல் மரணங்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அறிக்கைகள், வழக்குகளைப் திரும்பப் பெறுவது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் அவதூறு வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த அறிவிப்பால் சட்டம் மற்றும் ஒழுங்கு துறையிடம் எந்தத் தகவலையும் பெற முடியாது என்ற நிலை உருவானதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கூறினார்.

எதிர்ப்பு ஏன்?

சட்டம் ஒழுங்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், தவெக அரசு, ஆர்.டி.ஐ

"வெளிப்படையான அரசு" என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்று கூறுவதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்.

அந்தப் பதிவில், "சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி ஆர்.டி.ஐ உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது. இது தான் மாற்றமா?" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது தமிழ்நாட்டை "போலீஸ் ஸ்டேட்டாக" மாற்றத் துணியும் வெளிப்படையான முயற்சி என்று ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சட்டம் ஒழுங்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், தவெக அரசு, ஆர்.டி.ஐ
படக்குறிப்பு, மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்

"இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள். காவல் மரணங்கள் நடக்கின்றன. மாணவர் போராட்டங்களை ஒடுக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுகிறது. கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்கிறது காவல் துறை.

நியாயமான உரிமைக்கான போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கப்படுகின்றன. இந்நிலையில் சட்டம் & ஒழுங்கு விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிப்பது கடும் கண்டனத்துக்குரியது." என்று அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

சட்டம் ஒழுங்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், தவெக அரசு, ஆர்.டி.ஐ
படக்குறிப்பு, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த கவலைகளை ஏற்படுத்தியதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

"ஆர்டிஐ சட்டத்தின் அடிப்படை நோக்கமே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்வதாகும். அதேநேரத்தில், தேசிய பாதுகாப்பு, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட தகவல்களுக்கு சட்டத்தின் பிரிவு 8 ஏற்கெனவே விலக்குகளை வழங்குகிறது. எனவே, "சட்டம்–ஒழுங்கு" என்ற பரந்த சொல்லைக் காரணம் காட்டி காவல்துறை தொடர்பான தகவல்களை ஒட்டுமொத்தமாக ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்குவது நியாயமானதல்ல," என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆர்டிஐ சட்டத்தின் வரம்பைக் குறைக்கும் இந்த நடவடிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டார்.

சட்டம் ஒழுங்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், தவெக அரசு, ஆர்.டி.ஐ
படக்குறிப்பு, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தவெக அரசின் நகர்வு நல்ல முன்னுதாரணமாக அமையாது என்று கூறியிருந்தார்.

"சட்டம் ஒழுங்கு துறையின் கீழ் வரும் முக்கியமான தகவல்கள் தற்போது பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளன. இது வெளிப்படையான நிர்வாகத்திற்கு ஏற்றது அல்ல. ஆர்.டி.ஐ வரம்பை விரிவுபடுத்த வேண்டும், கட்டுப்படுத்தப்படக்கூடாது." என்று அவர் அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர் அச்சம் தெரிவித்தார்.

அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த அறிவிப்பு உண்மையை மறைக்கும் நகர்வு என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், தவெக அரசு, ஆர்.டி.ஐ
படக்குறிப்பு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர்.

"தகவல்களை மறைப்பது குற்றங்களைக் குறைக்காது. இது அரசாங்கத்திற்கு, அதிகாரிகளுக்கு விலக்கு (impunity) வழங்கும் நடவடிக்கையாக உள்ளது. காவல்துறையால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தகவல் பெறுவதற்கான வெளியை இது குறைக்கிறது," என்றார் எவிடென்ஸ் கதிர்.

"ஆர்.டி.ஐ-இன் கீழ் பொதுமக்கள் எந்தத் தகவலைக் கேட்டுப் பெற வேண்டும் என அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. இறையாண்மை, ராணுவம் மற்றும் தனிநபர் தகவல்கள் என விலக்குகள் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒட்டுமொத்த தகவல்களை வழங்குவதற்கு தடையில்லை. அதைத்தான் இந்த புதிய அறிவிப்பு கட்டுப்படுத்துகிறது.

ஏற்கெனவே அரசாங்கத்திடம் முழுமையான தகவல்கள் இருப்பதில்லை. கடந்த காலங்களிலும் அரசாங்கம் வழங்கிய அதிகாரப்பூர்வ தகவல்களில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன. தற்போது அந்தத் தகவல்களும் கூட கிடைக்காது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது." என்று எவிடென்ஸ் கதிர் கூறினார்.

அமைச்சர் நிர்மல்குமார் பதில்

சட்டம் ஒழுங்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், தவெக அரசு, ஆர்.டி.ஐ
படக்குறிப்பு, தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்

இந்த விலக்கு எல்லாவற்றுக்குமானது அல்ல என்று சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "மாவட்ட அளவில் வகுப்புவாத மோதல் தொடர்பாக நடைபெறும் விசாரணை பற்றிய தகவல்களைக் கேட்கிறார்கள். இதில் சிலவற்றுக்கு ஏற்கெனவே விலக்கு உள்ளது. சட்டம் - ஒழுங்கு துறையின் கீழ் 20 பிரிவுகள் உள்ளன.

அதில் ஒரு சில விஷயங்கள் மட்டும் தான் வாங்க முடியாது. வகுப்புவாத மோதல்கள் தொடர்பான தகவல்களால் மேலும் சர்ச்சையாகிறது. இதில் ஏதாவதொரு விதத்தில் பொதுமக்களுக்கு சங்கடம் ஏற்படுமானால் அது முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பொதுமக்களின் கருத்தைக் கேட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்

அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பின்னர் தனது எக்ஸ் பதிவின் மூலம் தெரிவித்தார்.

'நடுநிலையோடு அணுக வேண்டும்'

சட்டம் ஒழுங்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், தவெக அரசு, ஆர்.டி.ஐ
படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளரான கருணாநிதி.

இந்த அறிவிப்பை அது வெளியிடப்பட்ட காரணத்தின் அடிப்படையில் கையாள வேண்டும் என்றார் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளரான கருணாநிதி.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சில சந்தர்ப்பங்களில் முக்கியமான தகவல்கள் கசிவது வழக்குகளின் விசாரணை மற்றும் உரிய முன்னேற்றப்பாதையை பாதிக்கிறது. ஒரு தரப்பு மற்றும் அரைகுறையான தகவல்களால் செய்யப்படும் பரப்புரை சில நேரங்களில் நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகவும் முடிந்துவிடுகிறது. எனவே திசைதிருப்புதல் அல்லது விவாதங்களைத் தவிர்க்க சில கட்டுப்பாடுகள் அவசியம்." என்கிறார்.

ஆனால் அதே வேளையில் காரணமற்ற ஒட்டுமொத்த தடை என்பதும் கூடாது என்று கூறும் அவர், இந்த விவகாரத்தை நடுநிலையோடு அணுக வேண்டும் என்றார்.

'தவெக அரசின் அறியாமையைக் காட்டுகிறது' - பத்திரிகையாளர் ப்ரியன்

இந்த நகர்வுகள் தவெக அரசின் அறியாமையைக் காட்டுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

தொடர்ந்து பேசிய அவர், "ஊழலற்ற ஆட்சி என தவெக சொல்கிறது. அதற்கு வெளிப்படைத்தன்மை தான் அடிப்படையான ஒன்று. ஆனால் இந்த உத்தரவும் அதை உடனடியாக திரும்பப்பெற்றதும் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. மத்திய அரசின் உளவுத் துறை மற்றும் ரா போன்ற அமைப்புகள் மற்றும் மாநில அரசின் உளவுத் துறை இயல்பாகவே ஆர்டிஐ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை. ஆனால் சட்டம் - ஒழுங்கு துறையை இதில் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.

ஏற்கெனவே இதுபோன்ற சில உத்தரவுகள் எதிர்ப்புகளுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டன. இது தொடர்கதையாகி வருவது தவெகவுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது." என்றார்.

ஆர்.டி.ஐ சட்ட விதி என்ன சொல்கிறது?

சட்டம் ஒழுங்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், தவெக அரசு, ஆர்.டி.ஐ
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆர்.டி.ஐ சட்டத்தின் பிரிவு 24 'குறிப்பிட்ட அமைப்புகளுக்கு இச்சட்டம் பொருந்தாது' எனக் கூறுகிறது.

'உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு' என மத்திய அரசால் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளுக்குப் பொருந்தாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.டி.ஐ சட்டத்தின் பிரிவு 24(2) இந்தப் பட்டியலில் புதிய அமைப்புகளைச் சேர்ப்பது மற்றும் ஏற்கெனவே அதில் உள்ள அமைப்புகளை நீக்குவது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

பிரிவு 24(3)-இன் படி, மத்திய அரசால் அப்படி வெளியிடப்படும் ஒவ்வொரு அறிவிப்புகளும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோரப்படும் தகவல்கள் மத்திய தகவல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு தான் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

பிரிவு 24(4) படி, இந்தச் சட்டம் மாநில அரசால் நிறுவப்பட்ட உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்குப் பொருந்தாது என்றும் அது தொடர்பாக மாநில அரசு தனி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கூறுகிறது.

அதன்படி தான், மாநில அரசின் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையை ஆர்.டி.ஐ-இல் இருந்து விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் சில மணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்ள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு