'தினசரி 50 லட்சம் லிட்டர் நீர் தேவை': மகாராஷ்டிராவில் கோகோ கோலா புதிய ஆலைக்கு எதிர்ப்பு

மகாராஷ்டிரா, கோகோ-கோலா, புதிய ஆலை, தண்ணீர்
படக்குறிப்பு, ஜாம்னர் எம்ஐடிசி பலகை மற்றும் கோகோ கோலா கேன்கள் (மாதிரிப் படம்)
    • எழுதியவர், ஆஷய் யெட்கே
    • பதவி, செய்தியாளர், பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் ஜாம்னர் எம்.ஐ.டி.சி (MIDC) பகுதியில் ஹிந்துஸ்தான் கோகோ-கோலா பெவரேஜஸ் நிறுவனத்தின் சார்பில் முன்மொழியப்பட்டுள்ள 'பாட்டிலிங்' (பானங்களை புட்டிகளில் அடைப்பது) ஆலைத் திட்டம் இன்னும் கோப்புகளில் தான் உள்ளது.

ஆலைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இருப்பினும், தண்ணீர், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய மூன்று முக்கியப் பிரச்னைகளின் அடிப்படையில் இத்திட்டம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

ஒருபுறம் உள்ளூர் சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்; மறுபுறம், இது ஒரு மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியதாகவும் இருப்பதாக மாநில அரசு வாதிட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக 'பிபிசி மராத்தி' ஜாம்னருக்கு நேரில் சென்றது.

நிறுவனத்தின் தரப்பு வாதங்களையும் புரிந்துகொள்ள பிபிசி மராத்தி முயன்றது; எனினும், பலமுறை முயற்சித்த போதிலும் அவர்களது தரப்பைத் தொடர்புகொள்ள இயலவில்லை.

கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தில் உள்ள கோகோ-கோலா 'பாட்டிலிங்' ஆலைக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதாகவும் நீரை மாசுபடுத்துவதாகவும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர்.

பல வருடப் போராட்டங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அந்த ஆலை மூடப்பட்டது.

இன்றும் கூட, தொழில்துறை வளர்ச்சிக்கும் நீருரிமைக்கான போராட்டத்திற்கும் பிளாச்சிமடா ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

'தேவைப்படும் நீரின் அளவை கண்டு அதிர்ச்சியடைந்தேன்'

மகாராஷ்டிரா, கோகோ-கோலா, புதிய ஆலை, தண்ணீர்
படக்குறிப்பு, முன்னாள் பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான அஜய் பாட்டீல், கடந்த சில மாதங்களாக ஜாம்னர் தாலுகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்தத் திட்டம் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தற்போது, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் மற்றொரு பெரிய கோகோ-கோலா 'பாட்டிலிங்' ஆலை திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. ஜல்கான் மாவட்டம் ஜாம்னர் எம்.ஐ.டி.சி பகுதியில் ஒரு புதிய திட்டத்துடன் சேர்த்து, சுமார் ரூ. 1,200 கோடி முதலீட்டை ஈர்ப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

நாளிதழ் ஒன்றின் மூலம் இத்திட்டம் குறித்த தகவலை அறிந்த சமூக ஆர்வலர் அஜய் பாட்டீல், அதற்கு எதிராகப் பிரசாரத்தைத் தொடங்கினார். "கோகோ-கோலா நிறுவனத்திற்கு வாக்ஹூர் அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட உள்ளதாக நாளிதழில் படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த நீரின் அளவைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்" என்கிறார் அவர்.

அஜய் பாட்டீலின் கூற்றுப்படி, தங்களது எதிர்ப்பு தொழிற்சாலைக்கு அல்ல, மாறாக நீரின் பயன்பாட்டிற்கு மட்டுமே.

"நாங்கள் இத்திட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், ஜாம்னர் தாலுகாவில் உள்ள 160 கிராமங்களில் சுமார் 100 கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. பருவமழை காலத்தில்கூட மக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் சூழல் உள்ளது. சில கிராமங்களில் வறண்ட நதிகளில் குழி தோண்டி மக்கள் தண்ணீர் எடுக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சூழலில், இவ்வளவு அதிக தண்ணீரைப் பயன்படுத்தும் ஒரு திட்டத்தைக் கொண்டுவருவது ஏன்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

தன்னை முன்னாள் பத்திரிகையாளராகவும் சமூக ஆர்வலராகவும் அடையாளப்படுத்திக் கொள்ளும் அஜய் பாட்டீல், கடந்த சில மாதங்களாக ஜாம்னர் தாலுகா முழுவதும் பயணம் செய்து, இத்திட்டம் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் ஆவணங்களைக் கோருவதுடன், கிராமம் கிராமமாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

அவரது கூற்றுப்படி, பல அடிப்படைக் கேள்விகளுக்கு இன்னும் முறையான பதில்கள் கிடைக்கவில்லை.

"எவ்வளவு நிலம் வழங்கப்படும், எவ்வளவு தண்ணீர் வழங்கப்படவுள்ளது, மின்சார கட்டணம் எவ்வளவு இருக்கும், சுத்திகரிக்கப்பட்ட பிறகு வெளியேறும் கழிவுநீர் எங்குச் செல்லும் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறுகிறார்கள், ஆனால் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்படும் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. அதனால்தான் நாங்கள் ஆவணங்களைச் சேகரித்து வருகிறோம். நம்மிடம் தரவுகள் இருந்தால் மட்டுமே உண்மைகளை பொதுமக்கள் முன்பாக எடுத்துவைக்க முடியும்" என்று அவர் கூறுகிறார்.

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள்

மகாராஷ்டிரா, கோகோ-கோலா, புதிய ஆலை, தண்ணீர்
படக்குறிப்பு, ஜல்கானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிபுணரான ராஜேந்திர கட்கில்

ஜாம்னரில் நிலவும் எதிர்ப்பு அஜய் பாட்டீலுடன் மட்டும் நின்றுவிடவில்லை. விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இத்திட்டம் குறித்துக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களின் கூற்றுப்படி, இந்த விவாதம் ஒரு நிறுவனத்தைப் பற்றியது அல்ல, மாறாக உள்ளூர் நீர் வளங்களின் பயன்பாடு தொடர்பானது.

ஜல்கானில் நீர்ப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து வரும் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ராஜேந்திர காட்கிலின் கூற்றுப்படி, வாக்ஹூர் அணையின் கட்டமைப்பு மற்றும் அதன் நீரின் தன்மையைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

"வாக்ஹூர் அணையின் பிரதான நீராதாரம் அஜந்தா மலைத்தொடரிலிருந்து வருகிறது. மராத்வாடா பகுதியில் எப்போதும் கடுமையான நீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. மகாராஷ்டிராவின் பெரும்பகுதி மழை மறைவுப் பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது. எனவே, வாக்ஹூர் அணை ஒவ்வோர் ஆண்டும் இயற்கையாகவே முழுமையாக நிரம்புவதில்லை" என்கிறார் அவர்.

காட்கிலின் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளாக அணை நிரம்பி வழிந்தாலும், அதுவும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே நிகழ்கிறது.

"தற்போது கடுமையான மழை பெய்து வருவதால் மட்டுமே அணை நிரம்புகிறது. இது பருவநிலை மாற்றத்தின் விளைவுதான். எனவே அணை நிரம்புகிறது என்பதற்காக, எப்போதும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் என்று அர்த்தமல்ல" என்று கட்கில் குறிப்பிடுகிறார்.

கோகோ-கோலா போன்ற நிறுவனங்களை முதலீட்டுக் கோணத்தில் மட்டும் பார்க்காமல், நீரின் பயன்பாடு மூலமாகவும் பார்க்க வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

காட்கிலின் கருத்துப்படி, ஜல்கான் நகரின் பல பகுதிகளில் இன்றும் சீரான குடிநீர் விநியோகம் இல்லை.

"அணை எழுபது சதவீதம்தான் நிரம்பியுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், சில சமயங்களில் ஐந்தாறு நாட்களுக்குப் பிறகும்தான் தண்ணீர் வருகிறது. அப்படியானால் நிர்வாகம் எங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்" என்று அவர் வாதிடுகிறார்.

மகாராஷ்டிர அரசு கூறுவது என்ன?

மகாராஷ்டிரா, கோகோ-கோலா, புதிய ஆலை, தண்ணீர்
படக்குறிப்பு, ஜாம்னர் சட்டமன்ற உறுப்பினரும், மகாராஷ்டிர நீர்வளத்துறை அமைச்சருமான கிரிஷ் மகாஜன், தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்று கூறினார்.

இதற்கிடையே, ஜாம்னர் எம்எல்ஏவும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான கிரீஷ் மகாஜன் இதனை மறுத்துள்ளார். அவரது கூற்றுப்படி, 'ஜாம்னரில் எந்தவிதமான நீர்ப் பற்றாக்குறையும் இல்லை, வேலைவாய்ப்புக்கு இத்திட்டம் மிகவும் அவசியமானது'.

"எந்த இடத்திலும் எங்களுக்கு நீர்ப் பற்றாக்குறை இல்லை. எங்களிடம் 11.5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை உள்ளது. தொழில்துறைக்குத் தேவையான தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது" என்றார் மகாஜன்.

மகாஜனின் கூற்றுப்படி, ஜாம்னர் எம்ஐடிசி பகுதியில் தொழில்துறைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே தயாராக உள்ளன.

"அங்கு நீர்வழங்கல் கட்டமைப்பு உள்ளது, மின்சார இணைப்புக்கான வசதி உள்ளது, நெடுஞ்சாலைக்கு அருகில் நிலமும் உள்ளது. மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது ஒரு முக்கியமான பிரச்சினையாகும், எனவேதான் இத்திட்டம் மிகவும் முக்கியமானது" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஜல்கான் எம்ஐடிசி பிராந்திய அதிகாரி தீபாலி ரசாவே இத்திட்டம் குறித்த விரிவான தகவல்களைப் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, "ஹிந்துஸ்தான் கோகோ-கோலா பெவரேஜஸ் நிறுவனம் இத்திட்டத்திற்காக 5 எம்.எல்.டி, அதாவது ஒரு நாளைக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கோரியுள்ளது. வாக்ஹூர் அணையிலிருந்து இந்தத் தண்ணீரைக் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார் அவர்.

இதுவரை நிறுவனத்தின் அதிகாரிகள் இத்திட்டத் தளத்திற்கு 4 முதல் 5 முறை வந்து சென்றுள்ளனர் என்று குறிப்பிட்ட ரசாவே, இத்திட்டத்திற்குச் சாலை மற்றும் மின்வசதிகளை ஏற்படுத்தித் தருவது எம்ஐடிசி-இன் பொறுப்பு என்றார்.

இந்நிறுவனம் 33 கேவி (KV) மின் இணைப்பைக் கோரியுள்ளதாகவும், இது தொடர்பாக எம்ஐடிசி கூட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கோகோ-கோலா நிறுவனம் 'சிவப்புப் பிரிவு' தொழில்துறையைச் சேர்ந்தது என்பதால், இத்திட்டத்திற்கு மகாராஷ்டிர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என்றார்.

அதுமட்டுமின்றி, நிறுவனம் 'பூஜ்ஜிய திரவ வெளியேற்றக் கொள்கையை' செயல்படுத்த வேண்டும். அதாவது, ஆலையில் உருவாகும் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் முழுப் பொறுப்பும் அந்த நிறுவனத்தினுடையதே ஆகும்.

ரசாவேயின் கூற்றுப்படி, நிறுவனம் வாக்ஹூர் அணை மட்டுமின்றி தபதி நதியிலிருந்தும் தண்ணீர் வழங்குமாறு கோரியுள்ளது.

இது உண்மையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குமா?

மகாராஷ்டிரா, கோகோ-கோலா, புதிய ஆலை, தண்ணீர்
படக்குறிப்பு, 2026 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி, முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் கோகோ கோலா அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

ஹிந்துஸ்தான் கோகோ-கோலா பெவரேஜஸ் நிறுவனம், இரத்தினகிரி லோட்-பரசுராம் எம்ஐடிசி பகுதியில் அமைக்கப்பட உள்ள புதிய ஆலை குறித்து 2023 டிசம்பர் 12 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ பத்திரிகைக் குறிப்பில் தகவல்களைத் தெரிவித்திருந்தது.

நிறுவனத்தின் தகவல்படி, இந்த ஆலை 88 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 1,387 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 350 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஜாம்னர் திட்டத்தைப் பொறுத்தவரையிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இத்திட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

சமூக ஆர்வலர் கௌரவ் கோத்பே இது குறித்து கேள்வி எழுப்புகிறார்.

"கோகோ-கோலாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலேயே, இந்தியா முழுவதும் உள்ள அதன் அனைத்து ஆலைகளிலும் சேர்த்து மொத்தம் 6,000 பேர் தான் பணியில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்க, இவ்வளவு பெரிய அளவிலான நிலம், நீர் மற்றும் வளங்களைப் பயன்படுத்தும் ஒரு நிறுவனத்தால் ஜாம்னருக்கு என்ன மாதிரியான பெரிய பலன் கிடைக்கப் போகிறது?" என்று அவர் வாதிடுகிறார்.

அதேவேளையில், ஜாம்னரில் இத்திட்டத்தை ஆதரிப்பவர்களும் உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் மிகவும் அவசியமானது என்று சில உள்ளூர்வாசிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த மிகப்பெரிய முதலீடு அப்பகுதியை மேம்படுத்துவதுடன், புதிய தொழில்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

இத்திட்டத்தின் நீர்ப் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து ஹிந்துஸ்தான் கோகோ-கோலா பெவரேஜஸ் நிறுவனத்திடம் 'பிபிசி மராத்தி' விளக்கம் கோரியிருந்தது. எனினும், இக்கட்டுரை வெளியிடப்படும் வரை நிறுவனத்திடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.

ஜாம்னரில் ஆலையின் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், தண்ணீர், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சர்ச்சைகள் இப்போதே எழத் தொடங்கிவிட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு