ஆஸ்துமா முதல் பாலியல் பிரச்னை வரை: நரி இறைச்சி, தக்ஷக் பல்லி தீர்வு தருமா? அறிவியல் உண்மைகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மரியம் சுல்தானா
- பதவி, பிபிசி வங்க சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நரி இறைச்சியைச் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும், தக்ஷக் (ஒரு வகை மரப்பல்லி) ஆஸ்துமா முதல் பாலியல் கோளாறுகள் வரையிலான பல்வேறு பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, மற்றும் அட்டை எண்ணெய் வலிகளையும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது என்பன போன்ற நாட்டுப்புற நம்பிக்கைகள் வங்கதேசத்தின் பல பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வருகின்றன.
ஒரு காலத்தில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இவை பெருமளவில் காணப்பட்டன. பாரம்பரிய மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாக இவற்றின் தேவை மற்றும் பயன்பாடு பற்றி பல நம்பிக்கைகள் நிலவி வந்தன. அதன் காரணமாக, சீனா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இவை கடத்தப்பட்டன.
இதனால் இந்த விலங்கினங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக காட்டுயிர் நிபுணர்களின் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், அட்டை எண்ணெய் போன்ற பொருட்கள் இன்னமும் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த எண்ணெய்கள் மூட்டு வீக்கம், மூட்டு வலி மற்றும் முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்த வல்லவை என்று வியாபாரிகள் கோருகின்றனர்.
இதேபோல், பல்வேறு பகுதிகளில் நரி இறைச்சி பற்றிய நாட்டுப்புற நம்பிக்கைகளும் நிலவுகின்றன.
ஆனால் இந்த நம்பிக்கைகளின் பின்னால் உள்ள அறிவியல் அடிப்படை என்ன? இந்த விலங்குகள் அல்லது அவற்றின் உடலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் உண்மையிலேயே மனித நோய்களைக் குணப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
நரிகள் கொல்லப்படுவதற்கான காரணங்கள் என்ன?
வங்காள நரியாக இருந்தாலும் சரி அல்லது சாதாரண குள்ளநரியாக இருந்தாலும் சரி, வங்கதேசத்தில் நரிகள் கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. நரிகள் தீயவை, தந்திரமானவை மற்றும் ஆபத்தான உயிரினங்கள் என்று பலர் நம்புகிறார்கள்.
கிராமப்புறங்களில், நரிகள் கோழிகளையும் கால்நடைகளையும் பிடித்துச் சென்றுவிடுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. அதனால்தான் மக்கள் நரிகளைக் கண்டதும் அடித்துக் கொல்கிறார்கள்.
ஜஹாங்கீர்நகர் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியரான முனைவர் முகமது அப்துல் அஜீஸ் பிபிசி வங்க மொழி சேவையிடம் பேசுகையில், நரியைப் பற்றி மக்களிடையே பல்வேறு தவறான கருத்துக்கள் நிலவுவதாகத் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, "விவசாயிகள் நரிகள் தங்களது கோழிகளைச் சாப்பிடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் எங்கள் ஆராய்ச்சியில் அதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நரிகள் அரிதாகவே இதைச் செய்கின்றன."
நரிகள் இயல்பாகவே பெரிய அளவில் இருப்பதால் அவை ஒப்பிட்டளவில் பெரிய இரைகளைப் பிடிக்கக்கூடும். இதனால் அவை கால்நடைகளைத் தாக்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது என்று அவர் கூறினார்.
கூடுதலாக, இரவில் நரிகள் ஊளையிடும் சத்தம் இன்னமும் வங்கதேசத்தின் பல பகுதிகளில் கெட்ட சகுனமாகப் கருதப்படுகிறது, இருப்பினும் இதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.
நரிகள் கொல்லப்படுவதற்கான மிகப்பெரிய காரணம், நரி இறைச்சியின் மருத்துவ குணங்கள் பற்றிய பல்வேறு நாட்டுப்புற நம்பிக்கைகளே ஆகும்.
நரி இறைச்சியைச் சாப்பிடுவது ஆஸ்துமா, மூட்டுவலி அல்லது பிற நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் என்று பலர் நம்புகிறார்கள். இந்தக் கூற்றுக்களை ஆதரிப்பதற்கு நம்பகமான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.
சமீபத்தில், பரிசால் பகுதியில் ஏழு நரிகள் அடித்துக் கொல்லப்பட்டன. அந்த நேரத்தில், பிற காரணங்களுடன் நரி இறைச்சியைச் சாப்பிடுவதால் பல நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையிலும் சிலர் இரவில் நரி இறைச்சியைச் சமைத்து சாப்பிட்டதாக உள்ளூர்வாசிகள் பல்வேறு ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதைப் பார்க்க முடிகிறது. இருப்பினும், ஜஹாங்கீர்நகர் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியரும் வனவிலங்கு நிபுணருமான முனைவர் மோனிருல் எச் கான், "நரி இறைச்சிக்கு எந்த மருத்துவ குணமும் இல்லை. அதைச் சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும் என்பது ஒரு தவறான நம்பிக்கையாகும்." என்றார்.
நரி இறைச்சியைச் சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும் என்ற கூற்றுக்கு எந்த அறிவியல் சான்றும் இல்லை என்கிறார் டாக்கா பல்கலைக்கழகத்தின் கிளினிக்கல் பார்மசி மற்றும் பார்மகாலஜி துறையின் பேராசிரியர் மருத்துவர் முகமது அப்துல் முஹித்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், " மருத்துவ வரலாற்றுக்கோ அல்லது நவீன மருந்தியல் துறைக்கோ இத்தகைய தகவல்கள் எங்குமே கிடைக்கவில்லை.இவை முக்கியமாக மூடநம்பிக்கை அல்லது நாட்டுப்புற நம்பிக்கைகளிலிருந்தே வருகின்றன."
வங்கதேசத்தில் உள்ள ஹம்தார்ட் பங்களாதேஷ் பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத மருத்துவத் துறையின் உதவிப் பேராசிரியரான மருத்துவர் முகமது மோனிர் அகமதும் நரி இறைச்சியின் மருத்துவ குணங்கள் குறித்து தங்களிடம் எந்த அறிவியல் தகவலும் இல்லை என்று கூறினார்.
தக்ஷக் பல்லி விலை உயர்ந்ததா?

பட மூலாதாரம், Getty Images
நீண்ட காலமாக, தக்ஷக் பல்லி விற்பனை தொடர்பாக கோடிக்கணக்கான டாகா (வங்கதேசத்தின் நாணயம்) மதிப்பிலான பல்வேறு மோசடி வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
பல்வேறு காலகட்டங்களில், புற்றுநோய் உள்ளிட்ட குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்துதல் அல்லது பாலியல் திறனை அதிகரித்தல் போன்ற பல மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டு தக்ஷக் பல்லியின் விலை பல கோடி டாகா என்று கோரப்பட்டது.
இதனை வாங்குபவர்களிடமிருந்து முன்பணம் பெற்ற சம்பவங்கள் உள்ளன. இருப்பினும், இந்த கூற்றுக்கு நம்பகமான அறிவியல் அடிப்படையோ அல்லது செல்லுபடியாகும் சந்தை விலை தகவலோ இல்லை.
மாறாக, இதுபோன்ற வதந்திகளைப் பயன்படுத்தி மோசடி மற்றும் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போக்கு அதிகரித்துள்ளது.
நீண்ட காலமாக, குறிப்பாக மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த விலங்குகள் சீனா, தைவான் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் கடத்தப்பட்டு வருகின்றன.
இதன் விளைவாக, ஒரு காலத்தில் வங்கதேசத்தில் பெருமளவில் காணப்பட்ட இந்த விலங்குகளின் எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு, பிபிசி வங்க சேவையில் வந்த ஒரு செய்தியில், அன்றைய அரசு அதிகாரிகள் தக்ஷக் எனப்படும் காட்டு விலங்கில் எட்டு இனங்கள் இருப்பதாகவும், அவை வங்கதேசத்தில் இன்னும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவற்றின் இருப்பு ஆபத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தனர்.
வெளிநாடுகளில் உள்ள அதிக தேவை காரணமாக, அது அழிக்கப்பட்டு வரும் வேகத்தில் விரைவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்படும் என்று அவர்கள் அப்போது கூறியிருந்தனர்.
இது குறித்து முனைவர் மோனிருல் எச் கான் கூறுகையில், "தக்ஷக் பற்றிய இந்த வதந்தி ஒரு மோசமான சுழற்சியை உருவாக்கியுள்ளது. இது கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இருப்பினும், முன்பு மக்கள் அதிக அளவில் தக்ஷக் பல்லிகளைப் பிடித்தனர், ஆனால் இப்போது அது குறைந்துள்ளது. ஏனென்றால் தாங்கள் ஏமாற்றப்படுவதை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர்," என்றார்
இது குறித்து மருத்துவர் முகமது அப்துல் முஹித் கூறுகையில், "எங்கோ ஒரு தக்ஷக் பல்லி இருக்கலாம். அதனால்தான் அதன் விலை திட்டமிட்டு உயர்த்தப்பட்டிருக்கலாம்" என்றார்.
சிகிச்சைக்கு அட்டைப் பூச்சிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
நரி இறைச்சி மற்றும் அட்டைகள் மருத்துவ குணங்களை ஆதரிக்க எவ்வித சான்றுகளும் இல்லை. இருப்பினும், அட்டைகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பது இந்திய துணைக் கண்டத்தின் பழங்கால யுனானி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும் கருதப்படுகிறது.
உயிருள்ள அட்டைகளைப் பயன்படுத்தி உடலில் இருந்து மாசுபட்ட ரத்தம் அல்லது திரவங்களை அகற்றும் முறையைப் பற்றி யுனானி மருத்துவ முறை குறிப்பிடுகிறது.
இது குறித்து மருத்துவர் முகமது மோனிர் அகமது கூறுகையில், "மூட்டு போன்ற உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் ரத்த உறைவு ஏற்பட்டால், உடலிலிருந்து அந்த ரத்தத்தை அகற்ற நாங்கள் அட்டைச் சிகிச்சையைப் பயன்படுத்துகிறோம்."
ஆனால் இந்தச் சிகிச்சைக்கு குறிப்பிட்ட அட்டைகள் தேவை என்று அவர் கூறினார்.
"மருத்துவ குணமுள்ள அட்டைகள் மட்டுமே அந்த ரத்தத்தை உறிஞ்சுகின்றன. இது அனைத்து அட்டைகளாலும் செய்யப்படுவதில்லை. சாதாரண அட்டைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை, எனவே நாங்கள் அவற்றை வழங்குவதில்லை. அவை வளர்க்கப்படுகின்றன. அவை முக்கியமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இப்போது பலர் நாட்டிலும் இவற்றை வளர்க்கிறார்கள்."
''ஒரு 'மருத்துவ' அட்டையை சுத்திகரித்த பிறகு மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்திய பிறகு, அதை மஞ்சள் தண்ணீரில் ஊறவைத்தால், அட்டை வாந்தி எடுக்கும். பின்னர் அது சுத்தமாகிவிடும். மூன்று மாதங்களுக்குப் பிறகு அதை மீண்டும் பயன்படுத்தலாம்," என்று அவர் மேலும் கூறினார்.
உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளைக் குணப்படுத்துவது தவிர, சர்க்கரை நோயினால் ஏற்படும் கால் புண்கள் மற்றும் முகப்பருவுக்குக்கூட அட்டைச் சிகிச்சையைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், மூட்டுவலி, வலி மற்றும் பாலியல் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அட்டை எண்ணெய் மூலம் சிகிச்சை அளிக்கும் கூற்றுக்கள் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. ஆனால் அவற்றின் செயல்திறன் குறித்து கேள்விகள் உள்ளன.
"அட்டையெண்ணெய் போலி மருத்துவர்களால் விற்கப்படுகிறது. ஆனால் அட்டையெண்ணெய்க்கு எந்த மருத்துவ குணமும் இல்லை," என்று மருத்துவர் முகமது அப்துல் முஹித் கூறினார்.
சுகாதார ஆபத்துகள் எங்கே உள்ளன? சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
நவீன மருத்துவப் பாதுகாப்பு பரவிய பிறகும், வங்கதேசத்தின் பல்வேறு நகரங்களின் நடைபாதைகளிலும் கிராமப்புற சந்தைகளிலும் அட்டை எண்ணெய் சிகிச்சை விளம்பரப்படுத்தப்படுவதைக் காண முடிகிறது.
இருப்பினும், பொது இடங்களில் பிரசாரம் செய்து இதுபோன்ற சிகிச்சையை வழங்குவது சட்டப்பூர்வமானது அல்ல.
இதற்கிடையில், நரிகள் மற்றும் பல்லிகள் தொடர்பாக சட்டம் தெளிவாக வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
வங்கதேசத்தின் 'காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், 2026' இன் அட்டவணை I (B) மற்றும் (C) இன் படி, நரிகள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சி அல்லது அறிவியல் தேவைகளுக்காகவோ அல்லது உரிமம் அல்லது உடைமைச் சான்றிதழ் இல்லாமல் இந்த இரண்டு விலங்குகளையும் வேட்டையாடவோ, துன்புறுத்தவோ, கொண்டு செல்லவோ, வாங்கவோ, விற்கவோ, இறக்குமதி செய்யவோ அல்லது ஏற்றுமதி செய்யவோ முடியாது என்று அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கம் தக்ஷக் பல்லியையும் அட்டவணை ஒன்றின் (C) கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவித்துள்ளது.
இது குறித்து வனத்துறையின் காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவின் காட்டுயிர் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு அதிகாரி ரதிந்திர குமார் பிஸ்வாஸ், "நரிகளைப் பற்றி மூடநம்பிக்கைகள் உள்ளன. அதன் எண்ணெயை உடலில் தடவினால் நோய்கள் குணமாகும் என்று பலர் கூறுகிறார்கள். தக்ஷக் பல்லிகளைப் பொருத்தவரை, அண்டை நாடுகளுடன் விவாதிக்கப்பட்டது. அதில், சர்வதேச அளவில் அதற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதைக் கண்டறிந்தோம்." என்றார்.
ஆனால் சட்டப்படி இந்த விலங்குகள் பாதுகாக்கப்பட்டவை என்று கூறிய அவர், சட்டத்தை மீறினால் வனத்துறை, காவல்துறை, சுங்கம், கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை ஆகிய முகமைகளும் சம்பந்தப்பட்ட காட்டுயிர்கள் அல்லது ஆதாரங்களைக் பறிமுதல் செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், வங்கதேசத்தில் இது தொடர்பாக சட்டம் இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று காட்டுயிர் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் வங்கதேச சிவப்பு பட்டியல் 2015-இல்' நரிகள் பாதுகாக்கப்பட்டவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐயுசிஎன் பங்களாதேஷ் 2026-ஆம் ஆண்டில் தக்ஷக் பல்லியின் பாதுகாப்பு நிலையையும் மதிப்பீடு செய்தது.
"இந்த விலங்கு இன்னும் கவலைக்குரிய பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், வங்கதேச சூழலில் உள்ள கவலை என்னவென்றால், இது காடுகளிலிருந்து வணிக ரீதியாக சேகரிக்கப்படுகிறது," என்று ஐயுசிஎன் பங்களாதேஷ் திட்ட மேலாளர் சர்வார் ஆலம் பிபிசியிடம் தெரிவித்தார்.
"நரி இறைச்சி அல்லது தக்ஷக்கை சமைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டால், அவற்றில் உள்ள அறியப்படாத நச்சுப் பொருட்கள் மனித உடலில் நுழைந்து பின்னர் ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும்," என்று மருத்துவர் முகமது அப்துல் முஹித் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































