You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு மறுமதிப்பீடு - 'பாகிஸ்தானியர்' என கேலி செய்யப்பட்ட மாணவருக்கு என்ன நடந்தது?
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவரான வேதாந்த் ஸ்ரீவஸ்தவாவின் இயற்பியல் விடைத்தாள் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டதுடன் சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டது.
மறுமதிப்பீட்டுச் செயல்பாட்டின் போது தான் பதிவிறக்கம் செய்த ஸ்கேன் செய்யப்பட்ட நகல் தன்னுடையது அல்ல என்றும், அது வேறொருவருடையது என்றும் வேதாந்த் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தச் சர்ச்சைக்குப் பிறகு, பலர் வேதாந்திற்கு ஆதரவளித்த அதே வேளையில், ஒருபுறம் அவர் கடுமையாகக் கேலி செய்யப்பட்டார் பலர் அவரை தேசவிரோதி என்று அழைத்தனர்.
ஆனால் தற்போது இந்தச் சர்ச்சையில் சிபிஎஸ்இ தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதுடன், வேதாந்திற்கு அவரது சரியான விடைத்தாள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ திங்கள்கிழமை இது தொடர்பாக பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வேதாந்த், இயற்பியல் விடைத்தாள் தொடர்பான உங்களது கவலைகளை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. மறுபரிசீலனைக்குப் பிறகு, இப்பிரச்னை சரிசெய்யப்பட்டு, உங்களது விடைத்தாளின் சரியான நகல் உங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், உங்கள் தேர்வு முடிவுகளை மாற்றியமைக்க தேவையான பணியும் நடைபெற்று வருகிறது. உங்களது பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம், தொடர்ந்து உங்களுக்கு ஆதரவளிப்போம்" என்று எழுதியிருந்தது.
செய்தி நிறுவனமான பிடிஐ -யிடம் பேசிய வேதாந்தின் சகோதரர் சித்தாந்த் ஸ்ரீவஸ்தவா, "வேதாந்த் தனது இயற்பியல் தேர்வு முடிவில் திருப்தி அடையவில்லை. இயற்பியலுடன் சேர்த்து கணிதம், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றின் மறுமதிப்பீட்டிற்கும் நாங்கள் விண்ணப்பித்திருந்தோம். ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பார்த்தபோது, இயற்பியல் விடைத்தாள் அவனுடையது இல்லை என்பதைக் கண்டறிந்தோம்" என்று கூறினார்.
தனது கருத்தை வெளிப்படுத்துவதற்காக, இந்த விவகாரம் குறித்து சிபிஎஸ்இ-க்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாகவும், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்ததாகவும் சித்தாந்த் தெரிவித்தார்.
"எங்களுடைய இந்தப் பதிவு வைரலானது, ஆனால் பலர் எங்களை மிகவும் கேலி செய்தனர். எங்களை பாகிஸ்தானியர் என்று கூட அழைத்தனர். பல செய்தித் தொகுப்பாளர்கள் கூட சரிபார்க்காமல் எங்களைப் பாகிஸ்தானியர் என்று அழைக்கத் தொடங்கினர்" என்றார் சித்தாந்த் .
தற்போது இப்பிரச்னை முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சித்தாந்த் கூறினார்.
அரசாங்கம் கள அளவில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் களைந்து, மாணவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
சர்ச்சையின் பின்னணி என்ன?
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட்ட பிறகு, ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் அதாவது 'ஓஎஸ்எம்' ('OSM') முறை காரணமாக தங்களுக்குக் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகச் சில மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
மாணவர் வேதாந்திற்கும் இதுதான் நடந்தது. மறுமதிப்பீட்டுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அவர் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பதிவிறக்கம் செய்தார். பின்னர் , பதிவிறக்கம் செய்யப்பட்ட நகல் தன்னுடையது அல்ல என்றும், அதில் உள்ள கையெழுத்துத் தன்னுடைய கையெழுத்துடன் பொருந்தவில்லை என்றும் குற்றம் சாட்டி வேதாந்த் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் பதிவிட்டார்.
அவர், "நான் ஒரு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவன். இயற்பியலில் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றதால், சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுச் செயல்முறையின் கீழ் எனது விடைத்தாளின் நகலுக்கு விண்ணப்பித்திருந்தேன். அந்த நகல்கள் இன்று எனக்குக் கிடைத்தன. சிபிஎஸ்இ பதிவேற்றியுள்ள இயற்பியல் விடைத்தாள் என்னுடையது அல்ல என்பதால் நான் மிகவும் மன வருத்தமடைந்துள்ளேன்" என்று எழுதியிருந்தார்.
இந்த பதிவைத் தொடர்ந்து, வேதாந்தின் கணக்கு பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வேதாந்த் "தேசவிரோதி" என்று அழைக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்தார்.
''17 வயது சிறுவன் நீதிக்கான நம்பிக்கையில் சமூக ஊடகங்களுக்கு வந்தான். ஆனால் பாஜக அவனை ஒரு 'துரோகி' என்று அழைத்தது'' என்று அவர் கூறினார்.
ராகுல் காந்தி சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், "மோதி -பிரதான் கூட்டணி மேலும் ஒரு நிறுவனத்தை முறைகேடுகளின் அடையாளமாக மாற்றியுள்ளது. பல ஆண்டு காலங்களில் முதல்முறையாக, சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் குறித்து இவ்வளவு தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 18.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஒரு வாரமாக ஓஎஸ்எம், தவறான மதிப்பெண் வழங்கல் மற்றும் தேர்வு முறைகேடுகள் குறித்த புகார்கள் எதுவும் கேட்கப்படாமல் உள்ளன." என்று எழுதியுள்ளார்.
மேலும், "தனது விடைத்தாளுக்கு தவறான மதிப்பெண் வழங்கப்பட்ட 17 வயது சிறுவன், நீதிக்கான நம்பிக்கையில் சமூக ஊடகங்களை நாடினான். ஆனால் உதவிக்கு பதிலாக, அவனுக்கு வசவுகளே கிடைத்தன. பாஜகவின் ஐடி செல் அவனைத் தேசவிரோதி, சொரோஸ் ஏஜென்ட் மற்றும் டீப் ஸ்டேட்டின் ஒரு பகுதி என்று அழைத்தது. ஒரு 17 வயது சிறுவன் தனது எதிர்காலத்திற்காகக் குரல் எழுப்புகிறான். இந்த பாஜக அவனுக்குத் துரோகி என்று முத்திரை குத்துகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரோல் செய்த மக்கள்
வேதாந்தின் எக்ஸ் கணக்கின் ஸ்கிரீன்ஷாட்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. அதில் அவரது இருப்பிடம் "தெற்காசியா" என்று காட்டப்பட்டிருந்தது.
இதை குறிப்பிட்டு, பலர் அந்த 17 வயது சிறுவனை "பாகிஸ்தானியர்" என்று அழைத்து கேலி செய்தனர்.
டிடி நியூஸ் செய்தி வாசிப்பாளர் அசோக் ஸ்ரீவஸ்தவா, வேதாந்தின் சுயவிவரப் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, "பாகிஸ்தானியர்களும் சிபிஎஸ்இ தேர்வுகளில் எழுதுகிறார்களா?" என்று எழுதியிருந்தார்.
இருப்பினும், வேதாந்தின் புகாரைச் சரியானது என்று சிபிஎஸ்இ ஏற்றுக்கொண்ட போது, அசோக் ஸ்ரீவஸ்தவா வேதாந்திடமும் அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
வேதாந்தின் சகோதரர் சித்தாந்த் ஸ்ரீவஸ்தவா தனது எக்ஸ் பக்கத்தில், "எக்ஸ் தளத்தில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, எங்களால் இருப்பிடத்தை மாற்ற முடியவில்லை." என்று எழுதியுள்ளார்.
சித்தாந்த் ஸ்ரீவஸ்தவா பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "எங்கள் எக்ஸ் கணக்கின் இருப்பிடம் தெற்காசியா என்று காட்டியது, அதனால் எங்களை பாகிஸ்தானியர் என்று அழைத்து கேலி செய்தனர்." என்று கூறினார்.
மேலும், "பாகிஸ்தானைத் தவிர, தெற்காசியாவில் இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் அடங்கும் என்று நான் படித்துள்ளேன். பிரபல செய்தி வாசிப்பாளர்கள் கூட இதைச் சரிபார்க்காமல் எங்களைக் கேலி செய்தனர்" என்றும் அவர் அப்பேட்டியில் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு