பெண் இருசக்கர வாகன ஓட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் - என்ன நடந்தது?

விபத்து, இன்ஸ்டாகிராம், ஹரியானா, குருகிராம், சொகுசு கார், காவல்துறையினர்

பட மூலாதாரம், rebelwheels_sia_/Instagram

படக்குறிப்பு, விபத்துக்குள்ளான பெண் இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணாவின் குருகிராம் நகரில் உள்ள 'கோல்ஃப் கோர்ஸ்' சாலையில், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் மீது சொகுசு கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து குருகிராம் காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட நபரைத் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரைப் பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர், தனது நண்பர் ஒருவர் இரு தினங்களுக்கு முன்பாக காரை இரவலாக வாங்கிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இந்தக் கொடூர விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதுடன், நகரில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலையுடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அந்தப் பெண் பைக் ஓட்டுநர் யார்?

இருசக்கர வாகன ஓட்டியான சியா என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அவர் ஓட்டிச் சென்ற பைக் மீது கார் ஒன்று அதிவேகமாக மோதும் காட்சிகள், அந்த பைக்கில் பொருத்தப்பட்டிருந்த 'ஆக்‌ஷன் கேமரா'வில் துல்லியமாகப் பதிவாகியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கார் தங்களைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்ததாகவும், பின்னர் எதிர்பாராதவிதமாகத் தங்கள் மீது மோதியதாகவும் சியா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து, இன்ஸ்டாகிராம், ஹரியானா, குருகிராம், சொகுசு கார், காவல்துறையினர்

பட மூலாதாரம், rebelwheels_sia_/Instagram

படக்குறிப்பு, இருசக்கர வாகன ஓட்டியான சியா என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சியா இச்சம்பவம் குறித்து விவரிக்கையில், "நான் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே, அந்த கார் என்னை பின்தொடர்ந்து வந்தது. காரில் இருந்தபடி அதன் ஓட்டுநர் ஏதோ சைகை செய்தபோது, 'விலகிச் செல்லுமாறு' நான் கூறினேன். ஆனால் அவரோ, 'பைக்கை ஓரமாக நிறுத்து!' என்று உரக்கக் கத்தினார். நிச்சயமாக அவர் மதுபோதையில் தான் இருந்தார்." என்றார்.

"அவர் என் பைக் குறுக்கே வந்து ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க, நான் பைக்கின் வேகத்தை அதிகரித்துச் சற்று முன்னால் செல்ல முயன்றேன். அப்போது என் நண்பர் ஒருவரும் எனக்குப் பாதுகாப்பாக என் பைக் அருகில் வந்தார். இருப்பினும், அந்த கார் எங்களை விடாமல் பின்தொடர்ந்து வந்தது. இறுதியில் என் பைக் மீது வேண்டுமென்றே காரை மோதிவிட்டு அங்கிருந்து அவர் அதிவேகமாகத் தப்பிச் சென்றுவிட்டார்."

"அவர் மோதிய உடனேயே, காரை நிறுத்துமாறு என் நண்பர் சத்தமிட்டார். அடுத்து வந்த சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்தபோது, அந்த காரை என் நண்பர் மறித்து, ஓட்டுநரைக் கீழே இறங்குமாறு கூறினார். ஆனால் அவரோ, 'இதில் என் தவறு எதுவுமில்லை' என்று அலட்சியமாகப் பதிலளித்துவிட்டு, அங்கிருந்து காரில் தப்பிவிட்டார்."

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு குருகிராம் காவல்துறையிடம் சியா கோரிக்கை விடுத்துள்ளார்.

குருகிராம் காவல்துறை கூறியது என்ன?

விபத்து, இன்ஸ்டாகிராம், ஹரியானா, குருகிராம், சொகுசு கார், காவல்துறையினர்

பட மூலாதாரம், rebelwheels_sia_/Instagram

படக்குறிப்பு, அந்தக் காணொளியில், காரை ஓட்டியதாகக் கூறப்படும் நபர் பெண் இருசக்கர வாகன ஓட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காண முடிகிறது
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, குருகிராம் காவல்துறை அப்பதிவுகளின் கீழ் பதிலளித்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குருகிராம் காவல்துறை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரப்பெறவில்லை. இருப்பினும், வைரலாகி வரும் வீடியோவின் அடிப்படையில் குருகிராம் காவல்துறை தாமாக முன்வந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. குற்றவாளி விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்; அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்."

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மற்றொரு பதிவில், "இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் பதுங்கியிருக்கக்கூடிய இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்புகொண்டு பேசி உள்ளதாகத் தெரிவித்த குருகிராம் உதவிக் காவல் ஆணையர் அபிலாஷ் ஜோஷி, இது தொடர்பாகக் குருகிராம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "காரின் பதிவு எண்ணைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணையும் விசாரணைக்கு உட்படுத்திய பிறகு, வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வீடியோவில் அப்பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

விபத்து, இன்ஸ்டாகிராம், ஹரியானா, குருகிராம், சொகுசு கார், காவல்துறையினர்

பட மூலாதாரம், rebelwheels_sia_/Instagram

படக்குறிப்பு, பைக் ஓட்டிச் சென்ற பெண்ணின் நண்பர் ஒருவர் போக்குவரத்து சிக்னலில் காரை நிறுத்த முயன்றார்

காரின் உரிமையாளர் என்று கூறப்படுபவர் என்ன கூறுகிறார்?

பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள கார், 'மாருதி சுசுகி சியாஸ்' மாடல் என்பது தெரியவந்துள்ளது.

அந்தக் காரின் உரிமையாளரான மனீஷ் என்பவரை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தொடர்புகொண்டு பேசிய போது, அவர் அந்த காரைத் தனது நண்பரான கல்யாண் சிங் என்பவருக்கு இரவலாகக் கொடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

"அந்த கார் என்னுடையதுதான். நான் வேலையில் இருந்தபோது என் நண்பர் கல்யாண் சிங் ஏதோ அவசர வேலை காரணமாக இரண்டு நாட்களுக்குக் காரைக் கேட்டு வாங்கிச் சென்றார்" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "இன்று காலையில்தான் இந்த விபத்தைப் பற்றிய தகவல் எனக்குத் தெரியவந்தது. உடனே நான் அவருக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன்; அவர் என் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் என் தந்தையையும் மற்றவர்களையும் அவரது வீட்டிற்கு அனுப்பியுள்ளேன். அவர் ஹரியாணா மாநிலத்தின் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்" என்று தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு