எச்.ஐ.வி.க்கு எதிராக இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பெண் - அவரது உடலில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், amfAR
- எழுதியவர், டேவிட் காக்ஸ்
- பதவி, பிபிசி பியூச்சர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சாக்ரமெண்டோ நகரில் வசித்து வந்த 71 வயதான இயற்கை நிலப்பரப்பு வடிவமைப்பாளர் லொரீன் வில்லன்பெர்க், எச்.ஐ.வி ஆராய்ச்சி நிபுணர்களிடையே கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வியக்கத்தக்கதாகவும் விசித்திரமாகவும் அறியப்பட்டு வந்தார்.
வில்லன்பெர்க்கிற்கு கடந்த 1992 ஆம் ஆண்டு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அந்த வைரஸ் அவரது நோய் எதிர்ப்புச் சக்தியைச் சிதைத்து அவரைக் கொல்லாமல், அவரது உடலில் செயலிழந்து செயலற்ற நிலையில் இருந்தது. எந்தவொரு மருத்துவச் சிகிச்சையையும் பெறாமலேயே அவர் பல தசாப்தங்களாக இயல்பான வாழ்க்கையை வாழ முடிந்தது.
"எச்.ஐ.வி தொற்றுக்கு எதிரான எனது உடலின் நோய் எதிர்ப்புத் திறன் மிகவும் தனித்துவமானது என்று எனது மருத்துவர்கள் எப்போதுமே என்னிடம் கூறுவார்கள்" என்று அவர் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளித்த பேட்டியில் என்னிடம் தெரிவித்தார்.
"பல ஆண்டுகளாக அவர்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும், நான் மற்றவர்களை விட வித்தியாசமானவள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்."
நடப்பாண்டு ஏப்ரல் மாதம் காலமான வில்லன்பெர்க், உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற "எலைட் கண்ட்ரோலர்" என்று பரவலாக அழைக்கப்படுபவர் ஆவார். எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட மிகச் சிறிய எண்ணிக்கை அளவிலான நபர்களைக் குறிக்கப் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது; இவர்கள் எத்தகைய மருத்துவத் தலையீடும் இன்றித் தங்களது உடலின் மூலமாகவே வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த நபர்களில் தோராயமாக 0.5 சதவீதத்தினர் இந்த அரிய குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் எச்.ஐ.வி தொற்றிலிருந்து மீள்வதற்கு இவர்கள் ஒரு முக்கியத் தீர்வாக அமையக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
வில்லன்பெர்க்கிற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நுரையீரல் பகுதியில் தொடங்கி மூளை வரை பரவிய நான்காம் நிலை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொள்ளும்போது, எச்.ஐ.வி வைரஸுடன் அவர் வாழ்ந்த விதம் அதைவிட மிகவும் வியப்புக்குரியது. அவர் அளித்த சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்தது; அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் அவரது கட்டியின் அளவைக் குறைத்தன.
இருப்பினும், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அவரது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும்போது, அந்த மருந்துகள் அவரது உடலில் உறங்கிக் கொண்டிருந்த எச்.ஐ.வி வைரஸ் மீண்டும் வெளிப்பட்டுச் செயல்பட வழிவகுத்திருக்க வேண்டும். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் வில்லன்பெர்க்கின் செல்களை எச்.ஐ.வி வைரஸிற்காகத் தீவிரமாகப் பரிசோதித்துப் பார்த்தபோதும், வைரஸின் தடயங்கள் எதையும் அவர்களால் கண்டறிய முடியவில்லை.
இதனால்தான், மாஸ் ஜெனரல் பிரிகாம் , எம்.ஐ.டி மற்றும் ஹார்வர்ட் ஆகியவற்றுக்குச் சொந்தமான ராகன் நிறுவனத்தின் மருத்துவப் பேராசிரியரான சூ யூ (Xu Yu), 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் சங்க மாநாட்டில் விஞ்ஞானிகள் முன்னிலையில் ஓர் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார். வில்லன்பெர்க்கின் உடலில் எச்.ஐ.வி தொற்றின் அடையாளங்களைத் தேடித் துருவிய அவர், அந்தப் பெண்ணின் உடலில் இருந்து எச்.ஐ.வி முழுமையாக நீக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கூறினார்.
இனிப்பும் கசப்பும் கலந்த செய்தி

பட மூலாதாரம், Getty Images
இந்த வியக்கத்தக்க செய்தி ஒரு கலவையான உணர்வையே தந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, புற்றுநோய் பாதிப்பு காரணமாக வில்லன்பெர்க் காலமானார். இருப்பினும், அவர் விட்டுச் சென்றுள்ள மரபு மிகவும் ஆழமானது; கடந்த நூற்றாண்டில் உருவான மிக மோசமான தொற்றுகளில் ஒன்றான எச்.ஐ.வி-யை வெல்ல முடியும் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.
"லொரீனைப் போன்ற சில எலைட் கண்ட்ரோலர்களின் உடலில் உயிருள்ள வைரஸ் தொற்றின் தடயங்கள் எஞ்சியிருப்பதில்லை" என்று சூ யூ கூறுகிறார். "பில்லியனுக்கும் அதிகமான செல்களைப் பகுப்பாய்வு செய்து பார்த்த பிறகும் அங்கே எதுவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது." இது மிகவும் குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறுகிறார்; ஏனெனில், மிக அரிய சூழ்நிலைகளில், மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியே சொந்தமாக எச்.ஐ.வி வைரஸை முற்றிலுமாக ஒழிப்பது சாத்தியம் என்பதை இது குறிக்கிறது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த மற்றொரு 'எலைட் கண்ட்ரோலர்' குறித்தும் இதேபோன்ற நம்பிக்கைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 'பேஷன்ட் எஸ்பெராசா' என்று அழைக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரும் எச்.ஐ.வி தொற்றிலிருந்து குணமடைந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.
இதுபோன்ற வியக்கத்தக்க நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட சூ யூ போன்ற ஆய்வாளர்கள், எலைட் கண்ட்ரோலர்களின் உயிரியல் அமைப்புகள் குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். உலகளவில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 40.8 மில்லியன் பேருக்கும் அதிநவீன சிகிச்சைகளைக் கண்டறிய இந்த நபர்களின் அசாதாரண நோய் எதிர்ப்புச் சக்திகள் முக்கியத் துப்புகளை வழங்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
வரும் ஆண்டுகளில், எச்.ஐ.வி-க்கான ஒரு தீர்வை எட்ட இது பெரிதும் உதவும்.
மரபணு பாலைவனங்கள்

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக, ஒருவருக்கு முதன்முதலில் எச்.ஐ.வி தொற்று ஏற்படும் போது, அது அவரது உடல் முழுவதும் வேகமாகப் பரவுகிறது. தனது மரபணுப் பொருளை செல்களின் டிஎன்ஏ-வுடன் (DNA) ஒருங்கிணைப்பதன் மூலம் பல்படியாகும் இந்த வைரஸ், இரத்த ஓட்டத்தில் இருந்து நிணநீர் சுரப்பிகளுக்கு பரவுகிறது. பின்னர், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மிக முக்கியப் பகுதியான வெள்ளையணுக்களைத் தாக்கி அழித்து, நோயெதிர்ப்புச் சக்தியை முடக்கத் தொடங்குகிறது.
இந்த வைரஸுக்குச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நோயாளிகளுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கம் ஏற்படக்கூடும்; இந்த நிலையில் அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலத்தால் பிற தொற்றுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போகிறது.
1990களின் நடுப்பகுதியில், ஆன்டிசிரோவைரல் எனப்படும் எச்.ஐ.வி தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த மருந்துகள் எச்.ஐ.வி வைரஸ் பல்படியாக்கலைத் தடுத்து, இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முழுமையான வீழ்ச்சியைத் தவிர்க்கின்றன.
இதன் மூலம் மில்லியன்கணக்கான மக்கள் தொற்றுடன் கூட ஒப்பீட்டளவில் இயல்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடிகிறது.
தென் ஆப்பிரிக்காவின் குவாஜுலு-நடால் போன்ற எச்.ஐ.வி தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ஆன்டிசிரோவைரல் மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியையே மாற்றியமைத்துள்ளதாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பல உயிர்களைக் காப்பாற்றுவதன் மூலம், இயற்கைத் தேர்வு காரணமாக இல்லாவிட்டால் மனித மரபணுவில் நிகழ்ந்திருக்கக் கூடிய மாற்றங்களை இந்த மருந்துகள் தடுத்து நிறுத்தியுள்ளன.
ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த மருந்துகள் வைரஸை ஒருபோதும் முழுமையாக அழிப்பதில்லை. இரத்தம், நிணநீர் சுரப்பிகள், மூளை மற்றும் குடல் போன்ற பல்வேறு திசுக்களில் எச்.ஐ.வி தனது இருப்பிடங்களை தொடர்ந்து உருவாக்குகிறது. இது பல ஆண்டுகளுக்கு மறைந்திருக்கும் நிலையில் இருக்க வழிவகுக்கிறது, மேலும் நோய் எதிர்ப்பு செல்களால் கண்டறிந்து அழிக்கப்படுவதைத் தவிர்க்க அடிக்கடி உருமாற்றம் அடைகிறது.
இருப்பினும், வில்லன்பெர்க் மற்றும் பேஷன்ட் எஸ்பெராசா போன்ற எலைட் கண்ட்ரோலர்களின் விஷயத்தில் இந்த விதிகள் பொருந்தவில்லை என்று தெரிகிறது.
எலைட் கண்ட்ரோலர்கள் எந்தவொரு மருந்தின் உதவியும் இன்றி வைரஸை கட்டுப்படுத்த முடிகிறது என்பதை முதல் கட்ட ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. ஏனெனில், வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகளுக்கு எதிரான உடலின் நீண்டகால நினைவாற்றலான தகவமைப்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பெரிதும் மேம்படுத்தும் தனித்துவமான மரபணுக்கள் அவர்களிடம் உள்ளன.
குறிப்பாக, எலைட் கண்ட்ரோலர்களில், சிடி8+ டி செல்கள் (CD8+ T cells) எனப்படும் அவர்களது பாதுகாப்பு கட்டமைப்புகளில் ஒன்று எச்.ஐ.வி வைரஸைத் தடுக்கும் வகையில் சிறப்பாகத் தகுதியடைந்துள்ளது.
ஆனால், இந்த "டர்போசார்ஜ் செய்யப்பட்ட" CD8+ டி செல்கள் எச்.ஐ.வி வைரஸை எப்படி காலவரையின்றி அடக்கி வைக்க முடியும் என்ற கேள்வி எஞ்சியிருந்தது. 2020 ஆம் ஆண்டில், யூ மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் 64 எலைட் கண்ட்ரோலர்களைக் கொண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில், மரபணுப் பாலைவனங்கள் எனப்படும் பெரிய டிஎன்ஏ பிரிவுகளுக்குள் வைரஸ் பூட்டி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது; அங்கே அதனால் எந்தப் பெரிய தீங்கும் விளைவிக்க முடியாது.
நம் அனைவரிடமும் மரபணுப் பாலைவனங்கள் உள்ளன. இவை மரபணுவின் எந்தவொரு முக்கியமான தகவலையும் கொண்டிருக்காத பகுதிகள் போலத் தோன்றுகின்றன. வெளிப்படையாகச் சொன்னால், எலைட் கண்ட்ரோலர்களின் நோய் எதிர்ப்புச் செல்கள், உடலில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு தீவிர மரபணுக்களிலிருந்தும் விலகி, மரபணு குறியீட்டின் இந்தப் பகுதிகளுக்குள்ளேயே வைரஸைத் தள்ள முடிகிறது.
இதன் காரணமாக, எச்.ஐ.வி வைரஸ் நகலெடுத்துப் பரவுவதற்குத் தேவையான மரபணு இயந்திரங்களைத் தன்வசப்படுத்த முடியாமல் தடுக்கப்படுகிறது.
"முழுமையான வைரஸ்கள் அங்கே இருக்கின்றன, ஆனால் அவை எதையும் செய்ய முடியாத ஒரு மண்டலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன" என்று யூ கூறுகிறார். "இது... ஒரு செயல்பாட்டுக்கான சிகிச்சை முறை எப்படி இருக்கக்கூடும் என்பதற்கான மாதிரியை உண்மையில் எங்களுக்கு வழங்கியுள்ளது."
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றொரு சிறப்புப் பிரிவினரான 'சிகிச்சைக்குப் பின் கட்டுக்குள் வந்தவர்கள்' என்பவர்களிடமும் இதே போன்ற நிகழ்வு ஏற்படுவதை அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் காட்டியுள்ளன.
எலைட் கண்ட்ரோலர்களைப் போலன்றி, இந்த நபர்களுக்கு ஆரம்பத்தில் வைரஸை அடக்க ஆன்டிசிரோவைரல் மருந்து தேவைப்பட்டது. இருப்பினும், இரண்டு தசாப்தங்களாக மருந்து உட்கொண்ட பிறகு, எச்.ஐ.வி பாதிப்பு மீண்டும் ஏற்படாத வகையில் சிகிச்சையை அவர்களால் நிறுத்த முடிந்தது.
இந்தச் சந்தர்ப்பங்களில், எச்.ஐ.வி வைரஸை கட்டுப்படுத்த மருந்துகளும் உதவுகின்றன, நோய் எதிர்ப்பு மண்டலமானது வைரஸை மரபணுப் பாலைவனங்களுக்குள் சுருக்கி வைக்க அவை வழிவகுக்கின்றன என்று நம்பப்படுகிறது.
இயற்கையான கொலையாளி செல்கள்

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், சிடி8+ டி செல்கள் என்பவை இந்தக் கதையின் ஒரு பகுதி மட்டுமே. எச்.ஐ.வி வைரஸை மரபணுப் பாலைவனங்களுக்குள் முடக்கி வைப்பதில் முக்கியப் பங்காற்றக்கூடிய மற்றொரு வகையான நோய் எதிர்ப்புச் செல்களைப் பற்றிய புதிய ஆய்வுகள் கடந்த ஆண்டுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'விஸ்கோண்டி கோஹார்ட்' (Visconti cohort) என்று அழைக்கப்படும் நோயாளிகள் குழுவிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு சில முக்கியத் தரவுகளை வழங்கியுள்ளது. உலகிலேயே சிகிச்சைக்குப் பின் குணமடைந்தோரின் மிகப்பெரிய குழுவான இதில், 30 பேர் ஆரம்பத்தில் ஆன்டிசிரோவைரல் மருந்துகள் மூலம் சிகிச்சைப் பெற்றனர். இருப்பினும், அவர்கள் எந்தவித மருந்தும் இல்லாமலேயே பல சந்தர்ப்பங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வைரஸ் தொற்றுடன் இயல்பாக வாழ்ந்து வருகின்றனர்.
விஸ்கோண்டி குழுவைச் சேர்ந்த நோயாளிகள், தங்களது இயற்கையான கொலையாளி செல்களின் செயல்பாட்டைத் தீர்மானிக்கக் கூடிய மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளனர் என்பதை இந்த ஆய்வு காட்டியுள்ளது. வைரஸ் தொற்றிய செல்களைக் கண்டறிந்து அழிக்கக்கூடிய ஒரு வகை நோய் எதிர்ப்புச் செல்களே இயற்கையான கொலையாளி செல்கள் ஆகும்.
சிடி8+ டி செல்களைப் போலன்றி, இயற்கையான கொலையாளி செல்கள் பிறப்பிலிருந்தே உடலில் இருக்கும் பிறவி நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்புச் செயலாக்கத் துறையின் தலைவரும், தென் ஆப்பிரிக்க தேசிய சுகாதார ஆய்வக சேவையின் அதிகாரியுமான கிறிஸ்டினா தொபாக்காலே கூற்றுப்படி, எலைட் கண்ட்ரோலர்களின் உடலில் இயற்கையான கொலையாளி செல்கள் மிகவும் வீரியமுடன் செயல்படுவது தெரியவந்துள்ளது.
எலைட் கண்ட்ரோலர்களின் உடலில், சிடி69 எனப்படும் மூலக்கூற்றை வெளிப்படுத்தும் இயற்கையான கொலையாளி செல்கள் அதிக அளவில் இருப்பதாகக் காட்டும் ஆய்வு ஒன்றை தொபாக்காலே தலைமையிலான குழு நடத்தியது. இந்த செல்கள் எப்போதும் எச்சரிக்கையுடனும், எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடிய வகையிலும் தயாராக உள்ளன என்பதை இந்த பயோமார்க்கர் குறிக்கிறது.
இந்த இயற்கையான கொலையாளி செல்கள் எலைட் கண்ட்ரோலர்களின் உடல் முழுவதும் பரவலாகக் காணப்படலாம் என்று தொபாக்காலே கூறுகிறார். "எச்.ஐ.வி வைரஸ் மறைந்து பெருகுவதற்கு உகந்த இடங்களான குடல், நிணநீர் சுரப்பிகள் அல்லது இனப்பெருக்கப் பாதை போன்ற உடலின் ஆழமான பகுதிகளில் கூட அவை உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம்" என்று அவர் விளக்குகிறார்.
எதிர்கால ஆராய்ச்சி இந்த அனுமானத்தை உறுதிப்படுத்தினால், எலைட் கண்ட்ரோலர்களின் உயிரியல் அமைப்பைப் பின்பற்றும் நோக்கில், இரத்தத்தில் மட்டுமல்லாமல் நிணநீர் சுரப்பிகள் மற்றும் பிற திசுக்களிலும் இயற்கையான கொலையாளி செல்களைச் செயற்படுத்தும் சிகிச்சைத் தடுப்பூசிகளை உருவாக்க முயற்சிக்கலாம்.
"எச்.ஐ.வி நோயைக் குணப்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று, உடல் உறுப்புகளின் ஆழமான பகுதிகளில் உள்ள மறைவிடங்களில் வைரஸ் பதுங்கியிருப்பதுதான்" என்று தொபாக்காலே கூறுகிறார். "அதிக வீரியமும் செயல்திறனும் கொண்ட இயற்கையான கொலையாளி செல்கள், எச்.ஐ.வி-யின் இந்த மறைவிடங்களைக் கண்டறிந்து அழிக்க உதவும்."
பெண்களின் பங்கு

பட மூலாதாரம், Getty Images
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு இந்தச் சிகிச்சைகள் ஆரம்பத்தில் அதிகப் பலனளிக்கக்கூடும் என்று யூ கூறுகிறார்.
எலைட் கண்ட்ரோலர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள்தான். எச்.ஐ.வி வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குரிய மேம்பட்ட இயற்கையான கொலையாளி செல்களைப் பெண்பால் பிறவி நோய் எதிர்ப்பு மண்டலம் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இருப்பினும், வரலாற்று ரீதியாக, வைரஸை முற்றிலுமாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட பெரும்பாலான பரிசோதனைகள் ஆண்களிடத்தில்தான் நடத்தப்பட்டுள்ளன.
"எங்கள் பரிசோதனைகளிலும் சிகிச்சை தொடர்பான ஆய்வுகளிலும் பெண்களை நாங்கள் போதுமான அளவு ஆய்வு செய்யவில்லை" என்று யூ கூறுகிறார்.
"ஆனால், பெண்கள் எலைட் கண்ட்ரோலர்களாக மாறுவதற்கான வாய்ப்பு இரண்டிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது."
தன்னைப் போன்ற எலைட் கண்ட்ரோலர்களை ஆய்வு செய்வதன் மூலம் பெறப்படும் அறிவை, இப்போதும் வைரஸுடன் வாழ்ந்து வருபவர்களின் நலனை மேம்படுத்த எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைத் தனது வாழ்நாளில் பார்க்க வில்லன்பெர்க் விரும்பினார்.
"தொற்றுநோய் முடிவுக்கு வருவதைக் காணும் அளவுக்கு நான் உயிருடன் இருக்க விரும்புகிறேன்" என்று தனது மறைவுக்குச் சில மாதங்களுக்கு முன்பு வில்லன்பெர்க் தெரிவித்தார்.
"எனது பங்களிப்புகள் அறிவியலை முன்னெடுத்துச் சென்றிருந்தால், அது எனக்கு மிகப்பெரிய பெருமையாகும். என்னால் முடிந்தவரை மக்களுக்கான நம்பிக்கையின் ஒளியாகத் தொடர முயல்வேன்."
தொற்றுநோய் முடிவடைவதைக் காணும் அளவுக்கு அவர் உயிருடன் இருந்திருக்க முடியாது, ஆனால் அவர் விதைத்துச் சென்ற நம்பிக்கை இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































