'சிபாரிசில் வந்தவர் என மூத்த வீரர் திட்டினார்' - இன்சமாமின் பதில் என்ன? அவர் பற்றி சச்சின், கங்குலி கூறியது என்ன?

பட மூலாதாரம், JEWEL SAMAD/AFP via Getty Images
- எழுதியவர், ரஷீத் ஷகூர்
- பதவி, கராச்சியைச் சேர்ந்த மூத்த விளையாட்டு பத்திரிகையாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
பரிந்துரையின் பேரில் அணியில் சேர்ந்தவர் என்று தனது சொந்த அணியைச் சேர்ந்த மூத்த வீரரால் பேசப்பட்ட 21 வயது இளம் கிரிக்கெட் வீரர் என்னவெல்லாம் அனுபவித்திருப்பார் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, அதே இளம் கிரிக்கெட் வீரர் அபாரமாக பேட்டிங் செய்து, தனது அணியை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
இந்தக் கதை வேறு யாரைப் பற்றியும் அல்ல; இன்சமாம் உல் ஹக் பற்றியது. இவை அனைத்தும் 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையின்போது நடந்தவை.
இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்ற தொடர் அது. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 60 ரன்களும், இறுதிப்போட்டியில் 42 ரன்களும் எடுத்து இன்சமாம் உல் ஹக் முக்கியமான பங்களிப்பை வழங்கினார்.
இந்த இன்னிங்ஸ்கள் மூலம், தனது காலகட்டத்தின் சிறந்த இளம் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் என்ற இம்ரான் கானின் கூற்றை அவர் நிரூபித்தார்.
ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது? இன்சமாம் சிபாரிசின் பேரில் அணியில் இடம்பிடித்தவர் என்று குற்றம் சாட்டியதுடன், அவரைத் திட்டவும் ஒரு மூத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தூண்டப்பட்டதற்குக் காரணம் என்ன?
'பரிந்துரையால் அணிக்குள் வந்துள்ளீர்கள் என்று ஒரு மூத்த வீரர் கூறினார்'
ஒரு நேர்காணலின்போது இன்சமாம் உல் ஹக் என்னிடம் இதைத் தெரிவித்தபோது, நானும் அதிர்ச்சியடைந்தேன். இப்படியெல்லாம் நடக்குமா என்று என்னால் நம்பவே முடியவில்லை.
"உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது. அந்தப் போட்டியில் என்னால் ஐந்து ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது"என்று இன்சமாம் கூறியிருந்தார்.
"நாங்கள் அனைவரும் நல்ல மனநிலையில், குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தோம். அப்போது, அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவர் திடீரென என்னிடம் வந்து என்னைத் திட்டத் தொடங்கினார். அவரது பெயரைக் குறிப்பிடுவது சரியல்ல என்று நினைக்கிறேன்.
'நீ பரிந்துரையின் பேரில் தான் அணியில் இடம்பிடித்திருக்கிறாய்' என்று அவர் கூறினார். அவர் சொன்னது எனக்கு மிகவும் வேதனையளித்தது. அதனால், நான் குளித்துக்கொண்டிருந்த நேரம் முழுவதும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன்."
"பரிந்துரையின் மூலமாகவா நான் அணியில் இடம்பிடித்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்"என்கிறார் இன்சமாம்.
"உலகக் கோப்பைக்கு வருவதற்கு முன்பு, இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்திருந்தேன். பாகிஸ்தானில் நடைபெற்ற இரண்டு முதல் தர கிரிக்கெட் சீசன்களில் 10 சதங்களையும் அடித்திருந்தேன்.
"அந்த மூத்த கிரிக்கெட் வீரர் மீது இப்போதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவர் கூறிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியவில்லை" என்றார்.
அதே உலகக் கோப்பையில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் இன்சமாம் நினைவுகூர்கிறார்.
அணியில் புதிதாக இடம்பிடிக்கும் வீரர்களை மூத்த வீரர்கள் சிலர் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. அவர்களது நடத்தை பொறாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
இதுகுறித்து இன்சமாம் கூறுகையில், "உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விருந்தில் பங்கேற்றது. அப்போது, இம்ரான் கான் என்னைச் சுட்டிக்காட்டி, அந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தவரிடம், 'இந்த இளம் வீரர் மிகுந்த திறமைசாலி' என்று கூறினார்.
"'இவரது பேட் ஒருநாள் ரன்களைக் குவிக்கத் தொடங்கிவிட்டால், நிச்சயமாக நமக்கு வெற்றியைத் தேடித்தருவார்' என்று அவர் கூறினார்.
"இம்ரான் கானின் இந்தக் கருத்து சில கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் என்னை மிகவும் கோபத்துடன் பார்த்தனர்" என்றார்.
உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்தபோது, இன்சமாமை அணியில் சேர்ப்பதற்கு ஒரு தேர்வாளர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார் என்பது வெகு சிலருக்கே தெரியும்.
அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்திருந்தார்.
ஆனால், இன்சமாமின் திறமையால் ஈர்க்கப்பட்ட இம்ரான் கான், அவரை எப்படியாவது அணியில் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இன்சமாம் மீது இம்ரான் கான் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை மூத்த இந்திய விளையாட்டுப் பத்திரிகையாளர் அயாஸ் மேமனின் வார்த்தைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
இன்சமாம் தனது அபாரமான பேட்டிங்கால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பட மூலாதாரம், MAX NASH/AFP via Getty Images
அயாஸ் மேமன் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "1992-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பு, இன்சமாம் உல் ஹக் குறித்து எங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் அபாரமாக பேட்டிங் செய்ததன் மூலம் கவனம் ஈர்த்தார்"என்றார்.
"இறுதிப்போட்டிக்கு முன்பு மெல்போர்னில் இம்ரான் கானைச் சந்தித்தபோது, 'தற்போது உலகிலேயே சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் இன்சமாம் தான்' என்று அவர் கூறினார். இன்சமாம் அதுவரை அதிகமான இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கவில்லை என்பதால், கேப்டன் அவரைப் புகழ்ந்து சற்று மிகைப்படுத்திப் பேசுவதாக நாங்கள் நினைத்தோம்.
ஆனால், இறுதிப்போட்டியில் 42 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸை விளையாடி, தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியபோது, அவரது திறமையை நாங்கள் உணர்ந்துகொண்டோம். அவரிடம் திறமை மட்டுமல்லாமல், கிரிக்கெட் விளையாட்டுக்குத் தேவையான பொறுமையும் இருந்ததை நான் கண்டேன்."
"அந்தக் காலகட்டத்தில், சச்சின் டெண்டுல்கரும் திறமையான, உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தார். அது அவருடைய முதல் உலகக் கோப்பைத் தொடரும் கூட. ஒவ்வொரு வீரருக்கும் அவருக்கெனத் தனித்துவமான இடம் இருக்கிறது. இருவரும் சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்டிருந்தனர். நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடினர்."
இம்சமாம் மீது மரியாதை வைத்திருக்கும் இந்திய வீரர்கள்

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images
இன்சமாம் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில், மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.
ஆனால், மைதானத்துக்கு வெளியே இரு நாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் மரியாதையும் அன்பும் கொண்டிருந்தனர்.
இந்த விஷயத்தில் இன்சமாம் தனித்துவமானவராக இருந்தார்.
அவருக்கு எதிராக விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் பார்த்தனர். அதேபோல, இன்சமாமும் இந்திய வீரர்களுக்கு மிகுந்த மரியாதை அளித்தார்.
2004-ம் ஆண்டு தொடரின்போது நடந்த அந்தச் சம்பவத்தை யாரால் மறக்க முடியும்? அப்போது, சச்சின் டெண்டுல்கரை சந்திப்பதற்காகத் தனது மகன் இப்திசாம் உல் ஹக்கை இன்சமாம் மைதானத்துக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது சச்சினிடம், "இந்தப் பையன் என்னுடைய மகன்; ஆனால், அவர் உங்களுடைய ரசிகர்" என்று அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தை சச்சின் டெண்டுல்கர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
இன்சமாம் எப்போதுமே தன்னைப் பொறுத்தவரை மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரராக இருந்து வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியும் ஒரு நிகழ்ச்சியில் இன்சமாம் முன்னிலையில் அவரைப் பாராட்டினார்.
அப்போது அவர், "இன்ஸி பாய் எங்களுக்கு எதிராக விளையாடும்போது, சதத்துக்குக் குறைவான எதையும் பற்றி ஒருபோதும் பேசமாட்டார். தூக்கத்திலிருந்து எழுந்தவுடனேயே சதமடித்துவிடுவார் போலத் தோன்றும். அவரைப் பொறுத்தவரை அது பெரிய விஷயமே இல்லை என்பது போல இருக்கும்" என்று கூறினார்.
மற்றொரு முன்னாள் இந்திய கேப்டனான ராகுல் டிராவிட், ஐபிஎல் நிகழ்ச்சி ஒன்றின்போது, உலகின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இன்சமாம்தான் என்று கூறியிருந்தார்.
இன்சமாமை விடச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வேறு யாரும் இல்லை என்பது அவரது கருத்தாக இருந்தது.
2004-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இன்சமாம் அடித்த சதத்தின் பதிவை, ஹோட்டலுக்குத் திரும்பிய பிறகு மூன்று முறை பார்த்ததாக ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார்.
வீரேந்திர சேவாக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஆசியாவின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இன்சமாம் என்று பாராட்டினார்.
மைதானத்தில் இன்சமாமுடன் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தையும் சேவாக் நினைவுகூர்ந்தார்.
அப்போது அவர் பேசுகையில், "டேனிஷ் கனேரியா பந்து வீசிய போது நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது இன்சமாமிடம், 'இன்ஸி பாய், எல்லைக்கோட்டுக்கு அருகில் நிற்கும் ஃபீல்டரைச் சற்று முன்னால் வரச் சொல்லுங்கள். எனக்கு சிக்ஸர் அடிக்க வேண்டும் போல இருக்கிறது' என்று கூறினேன்.
"இன்சமாம் அந்த ஃபீல்டரை முன்னால் வரச் சொன்னார். அடுத்த பந்திலேயே நான் சிக்ஸர் அடித்தேன். இதனால் கனேரியா மிகவும் கோபமடைந்தார்"என்றார்.
இதுபோன்ற சம்பவங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் இன்சமாம் எந்த அளவுக்குப் பிரபலமாக இருந்தார் என்பதை உணர்த்துகின்றன.
1992-ம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாக இன்சமாம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அந்தக் காலகட்டத்தில், சுனில் கவாஸ்கர் இங்கிலாந்தில் அவருடன் ஒரு தொண்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இன்சமாம் அவரிடம் உதவி கேட்டார்.
சுனில் கவாஸ்கர் வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றியதன் மூலம் தனது பிரச்னையைச் சமாளித்ததாக இன்சமாம் தெரிவித்திருந்தார்.
இன்சமாமின் குழந்தைப் பருவம் எப்படி இருந்தது?

பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP via Getty Images
இப்போது, இன்சமாமின் குழந்தைப் பருவத்தைப் பற்றிப் பார்ப்போம். அவரது ஆரம்பகால வாழ்க்கை எப்படியிருந்தது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
இதற்காக, அண்மையில் அவரது தந்தை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசினேன்.
இன்சமாமின் தந்தை பிர் இன்ட்ஸாம் உல் ஹக் என்னிடம் பேசுகையில், "உடன்பிறந்தவர்களில் இன்சமாம்தான் இளையவர். அதனால், அனைவருக்கும் அவர் செல்லப்பிள்ளையாக இருந்தார். அதே நேரத்தில், மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவராகவும் இருந்தார்".
"அவரது சகோதரர் இன்திசார் உல் ஹக்குடன் அவ்வப்போது சிறிய வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்படும். ஆனால், கேலியாகப் பேசிக் கொள்ளும் போதுகூட இருவரும் கண்ணியத்தைக் கடைப்பிடித்தனர்".
"எனது மூத்த மகன் இன்திசார் உல் ஹக், இன்சமாமின் கிரிக்கெட் மீது எப்போதும் மிகுந்த ஆர்வம் காட்டினார். கிளப் கிரிக்கெட்டில் விளையாடவும் அவரை ஊக்குவித்தார். இன்சமாம் முல்தானில் கிளப் கிரிக்கெட் விளையாடிய காலமும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போது அவருக்குப் பொறுப்பாளராக இருந்தவர் என்னிடம், 'பிர் சாஹிப், அவர் மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுகிறார். ஆனால், இங்கேயே இருந்தால் அவரது திறமை வீணாகிவிடும். எனவே, அவரை லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் சேர்த்துவிடுங்கள்' என்று கூறினார்.
"அதன்பிறகு, இன்சமாமை அங்கு அனுப்பினேன். அங்கும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். பின்னர், தனது பயணத்தில் அடுத்த கட்டத்துக்குச் சென்றார்"எனத் தெரிவித்தார்.
'கையெழுத்து பலவீனமாக உள்ளது, ஆனால் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது'
இன்சமாம் படித்த பள்ளியின் ஆசிரியரான முகமது ஹாஷிம் கான் என்னிடம் பேசுகையில், "இன்சமாம் மிகச் சிறந்த மாணவராக இருக்கவில்லை. அவரது கையெழுத்தும் மோசமாக இருந்தது. ஆனால், ஆசிரியர்கள் மீது அவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்".
"அவருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒருநாள், எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசிம் அகமது, இன்சமாமின் வலிமையான, பெரிய கைகளைக் கவனித்தார்.
"'பேட்டை வலுவாகப் பிடிக்கும் திறன் இருந்தால், நீ ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உருவாக முடியும்' என்று அவர் கூறினார். அதன்பிறகு, இன்சமாம் பள்ளி அணியில் விளையாடத் தொடங்கினார்."
முஸ்லிம் உயர்நிலைப் பள்ளிக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான் இருந்தது.
அந்த மைதானத்தைப் பராமரித்து வந்தவர், முல்தான் மக்களால் 'சாச்சா பர்கத்' என்று அழைக்கப்பட்டார்.
நான் அவரைச் சந்தித்தபோது, அவருக்கு 70 வயதைக் கடந்திருந்தது. ஆனால், இன்சமாமின் குழந்தைப் பருவத்தைப் பற்றிக் குறிப்பிட்டவுடன், அவரே ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார்" என்றார்.
"இன்சமாம் தினமும் பள்ளி முடிந்ததும் மைதானத்திற்கு வந்து விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவிப்பார்" என்று பர்கத் என்னிடம் கூறினார்.
"அப்போது அவர் மிகவும் இளையவராக இருந்தார். அதனால், அவரை விட வயதில் மூத்த சிறுவர்கள் அவரைப் பேட்டிங் செய்ய அனுமதிக்கத் தயங்குவார்கள். ஆனால், கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் ஒருபோதும் குறையவில்லை.
"சிறு வயதிலேயே அவர் நல்ல உடல்வாகுடனும் கொழுகொழுவென்றும் இருந்தார். ஆனால், அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது"என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP via Getty Images
பள்ளி கிரிக்கெட் விளையாடிய காலத்தில், இன்சமாமின் அணிக்குத் தலைவராக இல்யாஸ் பிரு இருந்தார்.
இதுகுறித்து இல்யாஸ் கூறுகையில், "இன்சமாம் ஒரு ஆல்ரவுண்டர். பேட்டிங்கில் அவர் அற்புதமாக விளையாடுவார். பேட்டிங் சரியாக அமையாத நாட்களில், இடது கைப் பந்துவீச்சாளராக இருந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார்" என்றார்.
உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக இன்சமாமை உலகமே அறிந்துகொண்ட பிறகு, அவரைச் சந்திக்கச் சென்றதையும் இல்யாஸ் பிரு நன்றாக நினைவுகூர்கிறார்.
அப்போது, இன்சமாமின் வீட்டில் இருந்த விருந்தினர்கள், இல்யாஸைத் தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு இன்சமாமிடம் கேட்டனர்.
அதற்கு இன்சமாம், "இவர் நான் பள்ளியில் படித்த காலத்தில் எனது அணிக்குத் தலைவராக இருந்தவர்" என்று கூறினார்.
இதைக் கேட்ட இல்யாஸ், இன்சமாம் தனது பழைய காலத்தை மறக்காமல் நினைவில் வைத்திருந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
நண்பர்களுக்காக ஆம்லெட் தயாரிப்பார்
இன்சமாமின் நகைச்சுவை உணர்வு அனைவரும் அறிந்ததது தான்.
செய்தியாளர் சந்திப்புகளில்கூட அவர் பலமுறை தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களுடன் இருக்கும்போது, அவர் முற்றிலும் மாறுபட்ட மனிதராக இருந்திருக்கிறார்.
இன்சமாமுக்கும் முஜ்தபா கோக்கருக்கும் இடையே நீண்டகாலமாக வலுவான நட்பு இருந்து வந்தது. இன்சமாமின் நண்பர் சலூன் நடத்தி, மக்களுக்கு முடி திருத்தும் தொழில் செய்து வந்தார்.
இன்சமாமும் முஜ்தபாவும் இரவு முழுவதும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்தக் காலம் எவ்வளவு இனிமையானது. அப்போது இன்சமாம் ஆம்லெட் தயாரிப்பார்.
ரொட்டி தயாரிக்கும் பொறுப்பு முஜ்தபாவுடையதாக இருக்கும்.
உலகக் கோப்பையை வென்ற பிறகு இன்சமாம் முல்தானுக்குத் திரும்பியபோது, அவரை வரவேற்க முஜ்தபா செல்லவில்லை.
ஆனால், இன்சமாமின் பெருந்தன்மையைப் பாருங்கள்! அவரை வரவேற்று அழைத்துச் சென்ற வாகன அணிவகுப்பு முஜ்தபாவின் கடைக்கு முன்னால் சென்றபோது, இன்சமாம் காரை நிறுத்தி, தானே இறங்கிச் சென்று நண்பரைச் சந்தித்தார்.
ஹாஷிம் கான், அவரது மாமா பர்கத் மற்றும் முஜ்தபா கோக்கர் ஆகிய மூவரும் இப்போது உயிருடன் இல்லை. கோக்கர் 2024 பிப்ரவரியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தூக்கம் மற்றும் மறதிப் பழக்கங்கள்
இஷாக் படேல், பாகிஸ்தானின் முதல்தர கிரிக்கெட் உலகில் நன்கு அறியப்பட்ட நபர்.
பல கிரிக்கெட் வீரர்கள் அறியப்படாத நிலையில் இருந்தபோதே அவர்களுக்குப் பயிற்சியளித்து வழிகாட்டியவர் அவர். அந்த வீரர்களில் இன்சமாமும் ஒருவர்.
இஷாக் படேல் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசுகையில், "இன்சமாம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்த காலத்தில், யுனைடெட் பேங்க் லிமிடெட் அணியில் இணையுமாறு அவரிடம் கூறினேன். ஆனால், நான் விளையாட்டாகச் சொல்வதாக அவர் நினைத்தார்"
"நான் அவரைக் கராச்சிக்கு அழைத்து, எனது வீட்டில் தங்கவைத்தேன். அங்கு அவர் யுனைடெட் பேங்க் லிமிடெட் அணிக்காகவும், மியான் அஸ்மத் புரொஃபஷனல் கிளப் அணிக்காகவும் கிளப் கிரிக்கெட் விளையாடினார். அந்தக் கிளப்பின் பொறுப்பாளர் நான் தான்"என்றார்.
தொடர்ந்து பேசிய இஷாக் படேல், "அந்தக் காலத்தில் ரமலான் மாதத்தில் கராச்சியில் ஏராளமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். ரமலான் மாதத்தில் நடத்தப்படும் போட்டிகளில் இன்சமாம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பங்கேற்றார். போட்டிகள் முடிந்ததும், ஈத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிடுவார்.
"ஒரு போட்டியில் அவர் 'தொடரின் சிறந்த வீரர்' விருதையும் வென்றார். அதற்குப் பரிசாக அவருக்கு லண்டனுக்குச் செல்வதற்கான விமானப் பயணச்சீட்டு கிடைத்தது" என்றார்.

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images
இஷாக் படேல் கூறுகையில், "இன்சமாம் ஒருபோதும் தனது தூக்கத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டார். ரமலான் மாதத்தில், ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கு ஒலிப்பதற்கு முன்பே சஹர் உணவைச் சாப்பிடுவதற்காக அவர் எழுந்திருக்க வேண்டும். ஆனால், அவர் எழுந்திருக்க மாட்டார். அப்படியிருந்தும், எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் நோன்பைக் கடைப்பிடிப்பார்.
"இன்சமாமுக்கு ஒரு விஷயத்தை மறந்துவிடும் பழக்கமும் இருந்தது. ஒருநாள், துணிகளை இஸ்திரி செய்வதற்காக குளிர்சாதனப் பெட்டியின் மின்சார இணைப்பைத் துண்டித்துவிட்டார். ஆனால், இஸ்திரி செய்த பிறகு மீண்டும் மின்சார இணைப்பைக் கொடுக்க மறந்துவிட்டார்.
"இதன் விளைவாக, குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பனிக்கட்டிகள் அனைத்தும் உருகி, தரை முழுவதும் தண்ணீர் பரவியது. பலமுறை வெளியே சென்றுவிட்டு, வீட்டுச் சாவியை மறந்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, அவர் பெரியவர்களுக்கு மரியாதை அளிக்கும் இளைஞராக இருந்தார்" என்றார்.
கிரிக்கெட் வீரர்களுடனான பழைய நட்பு
கிரிக்கெட் வீரர்களில், லெக் ஸ்பின்னர் முஷ்டாக் அகமதுவுடன் தான் இன்சமாமுக்கு மிக நீண்டகால நட்பு இருந்து வருகிறது.
இருவரும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடியபோது இந்த நட்பு தொடங்கியது. பின்னர், வக்கார் யூனிஸும் இந்த நட்பில் இணைந்துகொண்டார்.
பழைய நினைவுகளை பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பகிர்ந்துகொண்ட முஷ்டாக் அகமது, "இன்சமாம் ஆரம்பத்திலிருந்தே திறமையான கிரிக்கெட் வீரராக இருந்தார். அவரது நகைச்சுவை உணர்வும் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக இருந்தது. ஆனால், அவர் எல்லோரிடமும் நகைச்சுவையாகப் பேசமாட்டார். யாருடன் சௌகரியமாக உணர்கிறாரோ, அவர்களிடம் மட்டுமே நகைச்சுவையாகப் பேசுவார்.
"இன்சமாமின் நகைச்சுவை உணர்வைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வது அவசியம். கிரிக்கெட் வீரராக, ஆட்டத்தைப் பற்றிய ஆழமான புரிதல் அவருக்கு இருந்தது. ஸ்கோர் போர்டைப் பார்த்து தனது இன்னிங்ஸை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்.
"அவர் அடித்த பெரும்பாலான சதங்கள், அணியின் வெற்றிக்குப் பங்களித்தவை. எப்போதும் ஒரு பெரிய நோக்கத்துடன் கிரிக்கெட் விளையாடினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சேர்த்த ரன்கள் அடிப்படையில் ஜாவேத் மியான்தத்தை முறியடிக்க வேண்டும் என்று விரும்பினார்; அதற்காக முயற்சியும் செய்தார். ஆனால், சில ரன்கள் வித்தியாசத்தில் அவரால் அந்தச் சாதனையை முறியடிக்க முடியவில்லை.
"வலைப்பயிற்சியைத் தவிர்க்க அவர் ஒருபோதும் முயன்றதில்லை.
வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்ற கடினமான பந்துவீச்சாளர்களை வலைப்பயிற்சியின் போது எதிர்கொண்டார்.
"பந்து தங்களைத் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில், இப்போதெல்லாம் பல வீரர்கள் இதுபோன்ற பயிற்சிகளைத் தவிர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சை எதிர்கொண்ட அதே எளிதான முறையில், சுழற்பந்து வீச்சாளர்களையும் இன்சமாம் எதிர்கொண்டார். சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில்கூட, பின்காலில் நின்று கட், புல் மற்றும் ஸ்வீப் ஷாட்களை முழு நம்பிக்கையுடன் விளையாடினார்" என்றார் முஷ்டாக் அகமது.
'இன்சமாம் நிதானமாக விளையாடுவார்'
மூத்த பத்திரிகையாளர் அயாஸ் மேமன் கூறுகையில், "இன்சமாமின் பேட்டிங் பாணி மிகவும் நிதானமானதாக இருந்தது. அவர் தனது ஷாட்களை விளையாடுவதற்குப் போதுமான நேரம் எடுத்துக்கொள்வார். வேறுவிதமாகக் கூறினால், அவர் பேட்டிங்கை எளிதாகத் தோன்றச் செய்தார். தொடக்கத்திலிருந்தே வேகப்பந்து வீச்சுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோல், சுழற்பந்து வீச்சுக்கு எதிரான அவரது பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது."
"அவர் கண்ணியமான ஆளுமை கொண்டவர். அவரது நகைச்சுவை உணர்வும் அற்புதமானது. செய்தியாளர் சந்திப்புகளில் ஒவ்வொரு கேள்விக்கும் புன்னகையுடன் பதிலளிப்பார்.
நெருக்கடியான சூழலில் அவர் பதற்றமடைந்ததை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. மைதானத்தில் அவர் யாரிடமும் தவறாக நடந்துகொண்டதையும் நான் பார்த்ததில்லை" என்றார் மேமன்.
சர்வதேச நடுவரான அலீம் தார் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "நீங்கள் நடுவராகச் செயல்படும்போது, உங்கள் முழுக் கவனமும் பணியின் மீதுதான் இருக்கும். ஆனால், ஸ்கொயர் லெக்கில் நின்று கொண்டிருக்கும்போது, முழுக் கவனத்துடன் இருந்தாலும், சில தருணங்களில் பேட்ஸ்மேனையும் பந்துவீச்சாளரையும் கவனிக்க முடியும்.
"என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் கண்டு ரசித்த பேட்ஸ்மேன்களில் இன்சமாமும் ஒருவர்".
"இன்சமாம் பல மறக்க முடியாத இன்னிங்ஸ்களை விளையாடியிருந்தாலும், முல்தான் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக அவர் எடுத்த 138 ரன்களை என்னால் மறக்க முடியாது. அந்த இன்னிங்ஸ் மூலம், அவர் தனி ஒருவராகப் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அந்த டெஸ்ட் போட்டியில் நான் தொலைக்காட்சி நடுவராகப் பணியாற்றினேன்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































