10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட அப்பாவுக்கு என்ன பலன் கிடைக்கும்?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில், தோல்வியடைந்ததாக கூறப்பட்ட முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெற்றி பெற்றார் என்றும், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இன்பதுரை தோல்வியடைந்ததாகவும் 10 ஆண்டுகளுக்குப் பின்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பத்தாண்டுகளுக்குப் பின்பு இந்த தீர்ப்பு வந்தாலும், இதில் தனக்கு நியாயம் கிடைத்திருப்பதால் வரவேற்கிறேன் என்று கூறிய அப்பாவு, இந்த தீர்ப்பு தேர்தல் தொடர்பான பல வழக்குகளுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்றார்.

அப்பாவுக்குக் கிடைத்த தபால் வாக்குகள் செல்லாது என்ற தனது வாதம் முக்கியமானது எனவும் அதைக் கருத்தில் கொள்ளாமல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதால் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்தார் இன்பதுரை.

ராதாபுரம் தொகுதி வழக்கும், தற்போது வந்துள்ள தீர்ப்பும்!

தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, அதிமுக சார்பில் இன்பதுரை உள்ளிட்ட பலரும் போட்டியிட்டனர். அதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து, அவருக்கு சான்று வழங்கியது.

ஆனால் தனக்குக் கிடைத்த தபால் வாக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறி, இன்பதுரை வெற்றியை எதிர்த்து அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் தேதியன்று நீதிமன்ற வளாகத்திலேயே மறு வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வென்றதாகத் தெரியவந்தது.

அந்த வாக்கு எண்ணிக்கை முடிவை நிறுத்தி வைக்க வேண்டுமென்று இன்பதுரை, உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார். அந்த வழக்கில்தான் தற்போது ''ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்றும், அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.'' என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இவ்வழக்கில் அப்பாவுக்கு விழுந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தபால் வாக்குகளில் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் கையெழுத்திட வேண்டிய படிவங்களில், அதற்குரிய அதிகாரமில்லாத நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கையெழுத்திட்டிருப்பதால் அவை செல்லாது என்பதே இன்பதுரை வாதமாக இருந்தது. அதற்கு எதிராக அப்பாவு தரப்பு சில ஆவணங்களை வழங்கியது.

அதன் அடிப்படையில், ''நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளே என்று உயர்நீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை'' என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர்களால் சான்றளிக்கப்பட்ட தபால் வாக்குகள் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தார்.

பதவிக்காலம் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டதால், இந்த விவகாரத்தை விசாரிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் குறிப்பிட்டிருந்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

"எத்தகைய சூழலிலும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் நிலைநிறுத்துவதும் இந்த நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சார்ந்த கடமை; அதிலிருந்து இந்த நீதிமன்றம் விலக விரும்பவில்லை'' என்று கூறியுள்ள நீதிபதி, தேர்தல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை அவை தாக்கல் செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 86(7)-ஐ சுட்டிக்காட்டியுள்ளார்.

''சட்டரீதியான கட்டாயம் இருந்தபோதிலும் இத்தகைய வழக்குகளை விசாரிப்பதில் ஏற்படும் தாமதங்கள், ஜனநாயகத்தின் சாராம்சத்தையே சிதைத்துவிடும்" என்றும் நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதற்கான ஓய்வூதியத்தை இன்பதுரைக்கு உரிமையில்லை என்றும், 2016 முதல் 2021 வரையிலான சட்டப்பேரவை ஆவணங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற இடங்களில் இன்பதுரையின் பெயருக்குப் பதிலாக அப்பாவு பெயரைச் சேர்க்க வேண்டுமென்றும் சட்டப்பேரவை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பை வரவேற்கும் அப்பாவு - மேல் முறையீடு செல்லும் இன்பதுரை

இந்த தீர்ப்பு குறித்து பிபிசியிடம் பேசிய முன்னாள் சபாநாயகர் அப்பாவு, ''இது மிகப்பெரும் தாமதம்தான். நம்முடைய அரசியல் அமைப்பும் ஜனநாயகமும் அப்படித்தான் இருக்கிறது. இதற்கிடையில் இதுபோன்ற அக்கறையும் ஆளுமையும் கொண்ட நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புதான் நம் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அந்த வகையில் இது ஓர் அற்புதமான தீர்ப்பு.'' என்றார்.

வழக்கின் சாராம்சத்தை பிபிசியிடம் விளக்கிய அவர், '' அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் அல்லாத நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கையெழுத்திட்டதாகக் கூறி 203 தபால் வாக்குகளை நிராகரித்தனர். அதன் அடிப்படையில் வாக்குகள் குறைந்து நான் தோற்றதாக அறிவித்தனர். அதை எதிர்த்து வழக்குத்தொடுத்தேன். அவர்களுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தேன். அதை ஏற்று 2019-ஆம் ஆண்டு நீதிபதி முன்னிலையில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.'' என்றார்.

''அந்த தபால் வாக்குகளில் எனக்கு 153 வாக்குகள் கிடைத்ததில், இன்பதுரையை விட 104 வாக்குகள் எனக்கு அதிகம் கிடைத்து. ஆனால் வாக்குகளை எண்ணினாலும் முடிவை அறிவிக்காதீர்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர். அதில் தீர்ப்பு வர ஏழாண்டுகள் ஆகியிருக்கிறது. கடந்த மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கில், 'நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகளா இல்லையா என்பதை வேறு சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொள்ளலாம். அதற்குப் பின் 10 ஆண்டுகளில் 2 ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. இப்போது இந்த வாக்கு எண்ணிக்கையை அறிவிப்பதால் ஒரு பயனுமில்லை.'' என்று கூறிய நீதிபதி நாகரத்னா அமர்வு இந்த வழக்கை முடிக்க உத்தரவிட்டது.'' என்றார் அப்பாவு.

''தேர்தல் வழக்கை இவ்வளவு காலம் தாமதப்படுத்தியது, ஜனநாயகத்தின் ஆன்மாவையே அழித்துவிடும்'' என்று கூறிய நீதிபதி ஜெயச்சந்திரன், ''2016–2021 வரை சட்டப்பேரவை ஆவணங்களில் உறுப்பினர் என்ற பெயரில் என் பெயரை எழுத உத்தரவிட்டுள்ளனர். அதனால் தாமதமாக கிடைத்தாலும் இந்த தீர்ப்பு, எல்லோருடைய கண்களையும் திறந்து வைத்திருக்கிறது.'' என்றார் அப்பாவு.

ஆனால் இந்த வழக்கில் தனது முக்கியமான வாதம் ஏற்கப்படாததால்தான் இந்த தீர்ப்பு வந்துள்ளதாகத் தெரிவித்தார் இன்பதுரை.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, பி கிரேடு ஆபீசர்களாகவுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் இல்லை என்பதே என் வாதம் என்ற அவர், அப்பாவுக்குக் கிடைத்த தபால் வாக்குகளில் இத்தகைய நிலையிலுள்ள குறிப்பிட்ட 3 அரசு அதிகாரிகள்தான் ஒன்றாகச் சேர்ந்து கையெழுத்துப் போட்டதால் அது செல்லாது என்பதை தான் சுட்டிக்காட்டியதாகக் கூறினார்.

வழக்கு பற்றி மேலும் விளக்கிய இன்பதுரை, ''நீதிமன்றத்தில் 2 குற்றச்சாட்டுகளை அப்பாவு முன் வைத்தார். கையெழுத்திட்டவர்கள் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள்தான் என்றார். கடைசி 3 சுற்றுக்களில் தன்னை அடித்து வெளியே துரத்திவிட்டு அவர்களாக எண்ணினார்கள் என்றும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறினார். தமிழகத்தில் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் குறித்த அரசாணையில்லை என்று கூறி, அப்பாவு வாதத்தை ஏற்று, அவர் வென்றதாக இடைக்காலத் தீர்ப்பு வழங்கினர். '' என்றார்.

ஆனால் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் யார் என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும்வரை, இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு பெற்றதாக அவர் விளக்கினார். கோவிட் காலமாக இருந்ததால் காணொளி வழியில் வழக்கு நடந்துவந்தபோது, 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க அப்பாவு கோரியதாக அவர் தெரிவித்தார்.

''கோவிட் காலத்தில் 2021 தேர்தலில் வாக்களிக்க முதியோர் வாக்குச்சாவடிக்கு வரமுடியாது என்று பி கிரேடு ஆபீசர்களும் தபால் வாக்கில் கையெழுத்திட அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. 2016 வழக்கிற்கு 2021 ல் போட்ட அந்த அரசாணையை அப்பாவு கொடுத்தபோது நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. அப்பாவு தரப்பு தொடர்ந்து வாய்தா வாங்கியதால் உச்சநீதிமன்றம் நிரந்தரத் தடை வழங்கியதே ஏழாண்டுகள் தாமதத்திற்குக் காரணம். யார் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் என்பதில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்காத நிலையில், இதில் என் தவறு எதுவுமில்லை. இந்த தீர்ப்புக்கு எதிராக நான் மேல் முறையீடு செய்வேன்.'' என்றார் இன்பதுரை.

இந்த தீர்ப்பை அப்பாவு தரப்பு வரவேற்றாலும், தாமதமாக வந்த இந்த தீர்ப்பு, சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது.

தன்னுடைய 20 ஆண்டுகால வழக்கறிஞர் பணியில் பணம் பிடித்தது, விதி மீறியது உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில் தீர்ப்பே வரவில்லை என்கிறார் திராவிட தமிழர் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான வெண்மணி.

பிபிசியிடம் பேசிய வழக்கறிஞர் வெண்மணி, ''இந்த வழக்கில் ஓய்வூதியம் கிடைக்காது என்பது மட்டும்தான் இன்பதுரைக்கான பாதிப்பு. ஆனால் இவர்தான் வெற்றி பெற வேண்டுமென்று அப்பாவுக்கு வாக்களித்த மக்கள் இதில் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டதாகவே அர்த்தம். அவருடைய சட்டப்பேரவை பங்களிப்பு 5 ஆண்டு இல்லாமல் போனதற்கு யார் காரணம்...மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் அடிப்படையில்தான் தாக்கல் செய்யப்படும் இந்த வழக்குகளில் தீர்ப்பு வராமலிருப்பது மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதுதான்.'' என்றார்.

தாமதத்திற்கு யார் காரணம்?

தேர்தல் வழக்குகளை உடனடியாக விசாரித்து முடித்தால் இந்த சங்கடங்கள் வராது என்று கூறுகிறார் முன்னாள் நீதிபதி சந்துரு.

''மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தான் தேர்தல் நடைமுறைகளை வகுத்துள்ளது. வெற்றிபெற்ற வேட்பாளருக்கு எதிராக ஒரு மாதத்தில் மனு போடவும் அதை தேர்தல் தீர்ப்பாயம் 6 மாதத்தில் முடிக்கவேண்டும் என்றும் விதி உள்ளது. முதலில் தனி தீர்ப்பாயங்கள் அமைக்கும் முடிவை மாற்றி உயர்நீதிமன்றங்களையே தேர்தல் தீர்ப்பாயம் களமாக அறிவித்து விட்டனர். நீதிமன்றம் இத்தகைய வழக்குகளை தினமும் விசாரிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் பத்தோடு பதினொன்றாகத்தான் இவ்வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.'' என்றார் முன்னாள் நீதிபதி சந்துரு.

''கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் போடப்பட்ட 2 வழக்குகளை (ராமநாதபுரம் & திருச்சி) நான் ஆறு மாதத்தில் முடித்தேன். அதேசமயத்தில் போடப்பட்ட சிவகங்கை (ப.சிதம்பரம்) மதுரை (மு.க.அழகிரி) தொடர்பான வழக்குகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. இதற்கான சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்கும் கோரிக்கையை யாரும் ஏற்கவில்லை. அவை ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படும் என்ற காரணத்தால் ஏற்காமல் இருக்கலாம். உயர் நீதிமன்றங்கள் சுயேச்சையென்றாலும் அந்த காலக்கெடு மீறப்படுகிறது.'' என்றார் சந்துரு.

தபால் வாக்குகளை கணக்கில் சேர்க்கவில்லை என்பதுதான் வழக்கு எனும்போது, அதை எண்ணுவதற்கு பத்தாண்டு தாமதப்படுத்தி, 2 தேர்தல்கள் முடிந்த பின், தோற்றவர் வென்றதாகக் கூறுவதை ஏற்க முடியவில்லை என கூறிய முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் இது நீதிமன்றத்தின் தோல்வி என்றார்.

''இந்த வழக்கின் மனுதாரரான அப்பாவு இதுதொடர்பாக மேல் முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது, தனது வழக்கை விரைவாக எடுக்காதது குறித்து ''நான் கோஸ்வாமி இல்லை. அப்பாவு'' என்றார். அதற்குள் பல விஷயங்கள் இருக்கின்றன. தேர்தல் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும். அதை வேறு எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது. இது போன்ற வழக்குகளை தினமும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுபற்றி உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பவேண்டும்.'' என்றார் ஹரி பரந்தாமன்.

''இதை இரு நீதிமன்றங்களும் செய்யாமலிருப்பதால்தான் அசாத்தியமான தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்குகளை கூடுமானவரை விரைவாக முடிப்பதை தலைமை நீதிபதிகளும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்'' என்றார் அவர்.

அப்பாவு வழக்கு முடிவதற்குள் மூன்றாவது தேர்தல் வந்து விட்டதைப் போல, இப்போது ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள பெரிய கருப்பன் வழக்கில் நிவாரணம் கிடைப்பதற்குள்ளும் பதவிக்காலம் முடிந்துவிட வாய்ப்பு உள்ளது என்று பிபிசியிடம் தெரிவித்தார் சந்துரு.

அதுபற்றி விளக்கிய அவர், ''ஒரு தபால் வாக்கில் தோற்ற பெரியகருப்பன் தேர்தல் மனு போடாமல் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதை விசாரிக்க முற்பட்ட மதுரை நீதிபதியை உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டதுடன் அவரை தேர்தல் மனு போடச்சொல்லிவிட்டது.'' என்றார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு